அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநரை திரும்பப் பெறுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகைப் பேரணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநரை திரும்பப் பெறுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகைப் பேரணி

சென்னை,டிச.30- அரசியலமைப்பு, மதச் சார்பின்மை, மாநில உரிமைகளுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாகக் கூறி, அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை பேரணி நேற்று (29.12.2022) நடந்தது. பேரணிக்கு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து.ராஜா தலைமை தாங்கினார். மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு தொடங்கி வைத்தார். 

கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சட்டமன்ற உறுப் பினர்கள் மாரிமுத்து, டி.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.செல்வராஜ், கே.சுப்பராயன், கட்சியின் மாநில பொருளாளர் கோவை எம்.ஆறுமுகம், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.எச்.வெங்கடாசலம், மாநில துணைச் செயலாளர்கள் வீர பாண்டியன், நா.பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையிலிருந்து பேரணி தொடங்கியது. பேரணி கலைஞர் வளைவு அருகே வந்தபோது காவல் துறையினர்  கைது செய்தனர். 

ஆளுநர் பதவியே  நீக்கப்பட வேண்டும்

இப்பேரணி குறித்து து.ராஜா கூறியதாவது: ஆளுநருக்கென பிரத் யேகமாக அதிகாரம் கிடையாது என சக்காரியா ஆணையம் தெளிவுபடுத்தி யுள்ளது. இந்திய ஜனநாயகம், அரசிய லமைப்புச் சட்டம் காப்பற்றப்பட வேண்டுமானால் ஆளுநர் பதவியே நீக்கப்பட வேண்டும். ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறும்போது, "ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா விவகாரத்தில் சட்டத் துறை அமைச்சர், முதலமைச்சர், அரசியல் கட்சிகள் என யாரையும் மதிக்காமல் சூதாட்டம் நடத்துவோரை அழைத்து பேசுகிறார். மேலும் இந்தியா கெட்டுப்போனதற்கு காரணம் கார்ல் மார்க்ஸ் என்கிறார். சனாதனம் நாட்டை ஒற்றுமைப்படுத் துவதாகவும் கூறுகிறார். அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஆளுநர் வெளியேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.

மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு கூறும்போது, "தமிழக மக்களின் அரசியலை, ஜனநாயகத்தை, சமத்துவத்தை பாதுகாக்கவே இந்த போராட்டம். ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்’’ என்றார்.


No comments:

Post a Comment