நாடாளுமன்ற செய்திகள் இந்திய-சீனப் படைகள் மோதல் மாநிலங்களவையில் விவாதிக்க மறுப்பு எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 15, 2022

நாடாளுமன்ற செய்திகள் இந்திய-சீனப் படைகள் மோதல் மாநிலங்களவையில் விவாதிக்க மறுப்பு எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடில்லி,டிச.15- தவாங் பகுதியில் இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக நேற்று (14.12.2022)மாநிலங்களவையில் விவாதிக்க மறுப்புத் தெரிவித்ததால், 17 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ஸி பகுதி அருகே இந்தியப் படையினருடன், சீனப் படையினர் மோதினர். இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், எல்லையில் அமைதியை ஏற்படுத்த இருநாட்டு ராணுவத் தளபதிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று (14.12.2022) மாநிலங்களவை கூடியவுடன், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எல்லையில் நிகழ்ந்த இந்திய-சீன மோதல் குறித்து விவாதிக்க வேண்டும். இதற்காக கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார்.

ஆனால், மாநிலங்களவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்திக் கொண்டிருந்த ஹரிவன்ஷ், இதுகுறித்து விவாதிக்க அனுமதி இல்லை என்று தெரிவித்தார். மேலும், கேள்வி நேரத்தையும் அவர் தொடங்கினார்.

கேள்வி நேரத்தின்போது பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ஃபாஜியா கான், இந்திய-சீனத் துருப்புகள் மோதல் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட ஹரிவன்ஷ், இந்த விவகாரம் குறித்துப் பேச அனுமதி இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அய்க்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட 17 கட்சிகளின் உறுப்பினர்கள் அவையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, "வெளிநடப்பில் ஈடுபட்டுள்ள 17 எதிர்க்கட்சிகளும் நமது ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக உள்ளன. அதேநேரத்தில், எல்லைப் பிரச்சினையில் சமரசத்துக்கு இடமில்லை. அனைத்தையும்விட நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்" என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கூறும்போது, "இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த ஒன்றிய அரசு ஏன் தயாராக இல்லை என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என்றார்.


ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தரும் மோடி அரசின் லட்சணம்
ஒன்றிய அரசு துறைகளில் 9.79 லட்சம் பணியிடங்கள் காலி

புதுடில்லி, டிச.15 ஒன்றிய அரசுப் பணிகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மக்களவையில் ஒன்றிய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார். மக்களவையில் காலிப்பணியிடங்கள் தொடர்பான கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய ஒன்றிய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், 2021 மார்ச் செலவினத் துறையின் ஊதிய ஆய்வு அறிக்கையின்படி ஒன்றிய அரசுக்கு கீழ் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரத்து 327 பணியிடங்கள் காலியாக உள்ளன எனத் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர் நடவடிக்கை எனக் குறிப்பிட்ட ஒன்றிய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்திய குடிமைப் பணிகளில் 1472 காலிப்பணியிடங்கள் உள்ளது ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பதிலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


2017-2021 ஆண்டுகளுக்கிடையே 

35,493 வரதட்சணை இறப்புகள்   

புதுடில்லி. டிச, 15 2017-2021 ஆண்டுகளுக்கிடையே 35,493 வரதட்சணை இறப்புகள் பதிவாகியுள்ளன என்று ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.  கடந்த 2017-2021 ஆண்டுகளுக்கிடையே இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 20 வரதட்சணை இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் உத்தரப் பிரதேசத்தில் தினசரி ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன. மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 2017 முதல் 2021 ஆண்டுகளுக்கிடையே இந்தியாவில் 35,493 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. 2017-ஆம் ஆண்டில், 7,466 வரதட்சணை மரணங்களும் 2018-இல் 7,167 மரணங்களும் 2019-இல் 7,141 மரணங்களும் பதிவாகியுள்ளன. மேலும் 2020-இல் 6,966 மரணங்களும் 2021-இல் 6,753 வரதட்சணை மரணங்களும் பதிவாகியுள்ளன. அந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 11,874 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும் பீகாரில் 5,354, மத்தியப் பிரதேசத்தில் 2,859, மேற்கு வங்காளத்தில் 2,389 மற்றும் ராஜஸ்தானில் 2,244 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இந்தியாவில் பெண்களுக்கு 

எதிரான குற்றங்கள் அதிகரிப்பா...? ஒன்றிய அமைச்சர் விளக்கம்

புதுடில்லி. டிச. 15 தமிழ்நாடு, கேரளா,கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி கூறியுள்ளார்.  மாநிலங்களவையில் உறுப்பினர்கள் இந்தி யாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறதா? அதனை தடுப்பதற்கு ஒன்றிய அரசு எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர். 

இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு என்பது மாநிலத்திற்கு கீழ் வருகின்ற தனிப்பட்ட அங்கமாகும் இருப்பினும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து விசா ரணை நடத்துவதற்கு ஒன்றிய அரசு விரைவு நீதி மன்றங்கள்,1023 சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 389 போஸ்கோ நீதிமன்றங்களை அமைத்துள்ளது. 

மேலும்,புள்ளி விவரங்களின்படி தமிழ்நாடு, கேரளா, கருநாடகா உட்பட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கு எதிராக 2020ஆம் ஆண்டில் 3,71,503 குற்றங்கள் நடந்துள்ளதாகவும், 2021ஆம் ஆண்டில் 4,28,278 குற்றங்களாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்கள் 5,934-ஆக இருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு 6,630 ஆகவும், 2021ஆம் ஆண்டில் அவை மேலும் அதிகரித்து 8,501ஆக உயர்ந்துள்ளது என்றார்.

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை கிடையாது  

புதுடில்லி டிச.15 மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில்களில் கட்டண சலுகை அளிப்பது தொடர்பாக ரயில்வே அமைச்சர் விளக்கம் அளித்தார். பு, ரயில்களில் மூத்த குடி மக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம்வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கரோனா பரவலைத் தொடர்ந்து இந்த சலுகை நிறுத்தப்பட்டது. சுமார் 3 ஆண்டுகளாக சலுகை இல்லாத நிலையில், மீண்டும் எப்போது கட்டண சலுகை அளிக்கப்படும் என்று நாடாளுமன்ற மக்களவையில் சுயேச்சை உறுப்பினர் நவ்நீத் ராணா கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கட்டண சலுகை இப்போதைக்கு கிடையாது என்று சூசகமாக தெரிவித்தார். அவர் கூறியதாவது:- பயணிகள் சேவைக்காக ரயில்வே ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது. இது பெரிய தொகை. சில மாநிலங்களின் வருடாந்திர பட்ஜெட் தொகையை விட பெரியது. ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஆகிறது. ஊதியத்திற்குக்கு ரூ.97 ஆயிரம் கோடியும், எரிபொருளுக்கு ரூ.40 ஆயிரம் கோடியும் செலவிடப்படுகிறது.புதிய வசதிகள் அமல்படுத்தப்படுகின்றன. புதிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டி இருந்தால், அதை எடுப்போம். ஆனால், இப்போதைக்கு ரயில்வேயின் நிலைமையை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.தற்போது, 'வந்தே பாரத்' ரயில்கள் இருக்கை வசதியுடன் அதிகபட்சம் 500 அல்லது 550 கி.மீ. தூரம்வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. படுக்கை வசதி அமலுக்கு வந்த பிறகு நீண்ட தூரத்துக்கு 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடித்த பிறகு, நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் அயோத்தியுடன் ரயில்கள் மூலம் இணைக்கப்படும்.நாட்டில், 41 பெரிய ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மீதி ரயில் நிலையங்கள், படிப்படியாக சீரமைக்கப்படும். 2030-ம் ஆண்டுக்குள் ரயில்வேயை மாசு இல்லாததாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஹைட்ரஜன் ரயில் இயக்குவதும் அவற்றில் ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்


No comments:

Post a Comment