தமிழர் தலைவர் பிறந்த நாளில் சிபிஅய் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் எழுச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

தமிழர் தலைவர் பிறந்த நாளில் சிபிஅய் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் எழுச்சியுரை

 என்றைக்கும் நமக்குப் பெரியார் தேவைப்படுகிறார் - 

அவர் கரம் பிடித்த ஆசிரியரும் நமக்குத் தேவைப்படுகிறார்!

சென்னை, டிச.6 என்றைக்கும் நமக்குப் பெரியார் தேவைப்படுகிறார் - அவர் கரம் பிடித்த ஆசிரியரும் நமக்குத் தேவைப்படுகிறார் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியரின் 

90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

கடந்த 2.12.2022 அன்று  மாலை சென்னை கலை வாணர் அரங்கில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் எழுச்சி யுரையாற்றினார்.

அவரது எழுச்சியுரை வருமாறு:

பெருமதிப்பிற்குரிய திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று சிறப்புற நடத்திக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் பேரன்பிற்குரிய கவிஞர் அவர்களே,

மிகச் சிறப்பான முறையில் வரவேற்புரையாற்றிய குமரேசன் அவர்களே,

ஆசிரியர் அவர்களை நிறைவாகப் பாராட்டி வாழ்த் துக் கூற வருகை  தரவிருக்கின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே,

பாராட்டி உரையாற்றிய வணக்கத்திற்குரிய மேயர் அன்பிற்குரிய சகோதரி ஆர்.பிரியா அவர்களே,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரன்பிற்குரிய தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

ஆசிரியர் அவர்களை வாழ்த்தி உரையாற்றவிருக் கின்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவர், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெரு மதிப்பிற்குரிய பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்களே,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் அன்பிற்குரிய திருமா அவர்களே,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர், திராவிட இயக்கப் போர்வாள் பேரன்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்களே,

காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில், இங்கே  உரை யாற்றி அமர்ந்திருக்கின்ற பெருமதிப்பிற்குரிய அண்ணன் கோபண்ணா அவர்களே,

மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்ற அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களே, பெரியோர் களே, நண்பர்களே, தோழர்களே, தாய்மார்களே, ஊடக நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துகள்!

ஆசிரியர் அய்யா அவர்களுக்கும், அம்மா அவர் களுக்கும் எங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆசிரியர் அவர்கள் இன்றைக்கு 89 வயதைக் கடந்து, 90 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றார். அவருக்கு வயது 90 என்று மேடையில் இருப்பவர்களும், எதிரில் அமர்ந்திருப்பவர்களும் குறிப்பிடுகின்றோம். ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்றைய ‘விடுதலை' பத்திரிகையின் தலையங்கத்தி லும் எழுதியிருக்கிறார்கள்; இங்கே கவிஞர் அவர்கள் உரையாற்றும்பொழுதும் சொன்னார்.

10 வயதாக இருக்கும்பொழுது ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியாரைப் பின்பற்றினார் என்று.

அந்தப் பத்து வயது பாலகனாகவே இன்றைக்கும் ஆசிரியர் திகழ்கிறார்.

நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இயக்கிக் கொண்டிருக்கலாம்; அலையவேண்டாம்!

நான் சென்ற முறை 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவின்போது, ஏராளமான தொண்டர்கள் இருக் கிறார்கள்; ஆகவே, நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இயக்கிக் கொண்டிருக்கலாம்; அலையவேண்டாம் என்று சொல்லி மாட்டிக் கொண்டேன். அதை அவர் ஏற்கவில்லை.

நான் எப்படி இயங்காமல் இருக்க முடியும்? என்று சொன்னார். இன்றைய தலையங்கத்திலும் அதைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

என்றைக்கும் தந்தை பெரியார் நமக்குத் தேவைப்படுகிறார்; அவர் கரம் பிடித்த ஆசிரியரும் தேவைப்படுகிறார்!

இங்கே மேடையில் வீற்றிருக்கின்ற அனைத்துக் கட்சிகள் சார்பில் பேரணிகள் நடைபெற்று இருக்கின்றன. அந்தப் பேரணிகளில் ஆசிரியர் அவர்களும் பங் கேற்பார். எல்லோரையும்விட முன்னால் மிக வேகமாக செல்வார். தோழர் பாலகிருஷ்ணன் கையைப் பிடித்துக் கொண்டு பின்னால் இழுத்துக்கொண்டே இருப்பார். நாங்கள் எல்லாம் வந்துகொண்டிருக்கின்றோம், நீங்கள் வேக வேகமாக செல்கிறீர்களே? என்று சொன்னவுடன், அப்படியா! அப்படியா!! என்று திரும்புவார்.

இதுபோன்று ஒருமுறை அல்ல பலமுறை நடை பெற்று இருக்கின்றது.

அந்த வேகம், அந்த சுறுசுறுப்பு தொடர்ந்திருக்கிறது - தொடரவேண்டும்.

என்றைக்கும் தந்தை பெரியார் நமக்குத் தேவைப் படுகிறார். அவர் கரம் பிடித்த ஆசிரியரும் தேவைப் படுகிறார். 

தந்தை பெரியாரின் கரம் பிடித்த ஆசிரியர், அவர் கரத்தை  விட்டபாடில்லை; கெட்டியாகப் பிடித்துக்கொண் டிருக்கின்றார்; பிடித்துக்கொண்டு அந்தப் பணியை மேற்கொண்டிருக்கின்றார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் உள்ள கொள்கை ரீதியான உறவு

இங்கே பாலகிருஷ்ணன் அவர்கள் பல நிகழ்வு களைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். கம்யூனிஸ்ட் இயக் கத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் உள்ள கொள்கை ரீதியான உறவு - தனிப்பட்ட நபரின் அடிப்படையில் அல்ல. கொள்கை ரீதியான உறவு இருக்கிறது என்று இங்கே குறிப்பிட்டார்.

நாடு விடுதலைப் பெற்ற பிறகு முதல் பொதுத் தேர்தல் 1952 இல் நடைபெற்றது. சென்னை மாகாணம் என்று இருந்தபொழுது நடைபெற்ற அந்தப் பொதுத் தேர்தலில், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி - பாலகிருஷ்ணனும், நானும் தனித்தனியாக இல்லை. ஒன்றாக இருந்த கட்சி.

அய்க்கிய முன்னணி  வெற்றிக்கு அரும்பாடுபட்டவர் தந்தை பெரியார்!

அந்த ஒன்றாக இருந்த கட்சிக்குத் தலைமை தாங்கி, அய்க்கிய முன்னணி அமைத்தது. அந்த அய்க்கிய முன்னணி  வெற்றிக்கு அரும்பாடுபட்டவர் தந்தை பெரியார். அரும்பாடுபட்டதோடு மட்டுமல்ல, அய்க்கிய முன்னணி வெற்றி பெற்று, ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகளும் கிட்டியது.

‘துக்ளக்' பத்திரிகையில் இன்றைக்கு இருக்கிற ஆசிரியர், அவரே எழுதியிருக்கிறார். ‘தினமணி' பத்திரி கையினுடைய முதலாளி கோயங்காவும், அதன் பத் திரிகை ஆசிரியராக இருந்த சிவராமனும், ராஜாஜி வீட்டிற்குச் சென்று இரண்டு பேரும், ராஜாஜி காலில் விழுந்தார்கள்.

ஏனப்பா? என்று ராஜாஜி கேட்டு, நேரு அனுப் பினாரா? என்று கேட்டார்.

நேரு அனுப்பவில்லை, நாங்கள்தான் வந்திருக் கின்றோம். உங்களைப் பார்த்துவிட்டுத்தான் நேருவைப் பார்க்கப் போகிறோம் என்று சொன்னார்கள்.

என்ன விஷயம் என்று சொன்னால், சென்னை மாகாணத்திற்குக் கம்யூனிஸ்டுகளால் ஆபத்து; பெரியார் ஆதரித்த கட்சி வெற்றி பெற்றுவிட்டது. ஆகவே, அதனைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

அப்படி தடுத்து நிறுத்தவேண்டும் என்று சொன்னால், நீங்கள் முதலமைச்சராகப் பொறுபேற்கவேண்டும் என்று,  அவரிடம் பேசி, ராஜாஜி கொல்லைப்புற வழியாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். (அந்தக் கால கட்டத்தில் காங்கிரசிலிருந்து கோபித்துக்கொண்டு ஒதுங்கியிருந்தார் ராஜாஜி).

பொதுவுடைமைச் சமுதாயம் மலரவேண்டும் என்பதற்காகத் தந்தை பெரியார் அரும்பாடுபட்டார்

ஆக, கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறவேண்டும்; பொதுவுடைமைச் சமுதாயம் மலரவேண்டும் என்பதற் காகத் தந்தை பெரியார் அரும்பாடுபட்டார். அவர் வழியைக் கொண்டு ஆசிரியர் இன்றைக்கு அந்தப் பணியை மிகச் சிறப்பான முறையில், எல்லோருக்கும் முன்மாதிரியாக மேற்கொண்டிருக்கின்றார்.

மிகப்பெரும் தலைவராக, வழிகாட்டியாக விளங்கியவர் நமது மரியாதைக்குரிய ஆசிரியர்!

இங்கே கவிஞர் அவர்கள் உரையாற்றும்பொழுது, பல நிகழ்வுகளைப்பற்றிக் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, இட ஒதுக் கீடு கொள்கை வருமான அடிப்படையில் என்று தீர்மானிக்கப்பட்டபொழுது, அதை எதிர்த்து மிகப்பெரிய கிளர்ச்சி நடைபெற்றது என்று சொன்னால், அதற்குரிய மிகப்பெரும் தலைவராக, வழிகாட்டியாக விளங்கியவர் நமது மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்கள் என்பதை நான் பெருமிதத்தோடு குறிப்பிட விரும்புகின்றேன்.

இணைந்துப் பணியாற்றினோம்; இணைந்து பணி யாற்றி, பிறகு இட ஒதுக்கீடு சதவிகிதம் 50 சதவிகிதமாக உயர்ந்தது என்று எல்லோருக்கும் தெரியும்.

சமூகநீதிக்கு ஆபத்து என்றால் முதல் குரல் பெரியார் திடலிலிருந்துதான் ஒலிக்கும்

இப்படி எந்த நேரத்தில் எல்லாம் சமூகநீதிக்கு ஆபத்து வருகிறதோ, அந்த நேரத்தில் எல்லாம் முதல் குரல் எங்கே இருந்து ஒலிக்கிறது என்று சொன்னால், பெரியார் திடலிலிருந்துதான் ஒலிக்கும் என்பது ஒரு மறுக்க முடியாத எதார்த்தமான உண்மை.

அங்கே இருந்து தொடங்குகின்ற குரலில், மேடையில் வீற்றிருக்கின்ற நாங்கள் எல்லோரும் இணைந்து, பக்கபலமாக சேர்ந்து, கரம் கோர்த்து, சமூகநீதி வெற்றி பெறக்கூடிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

இன்றைய சூழலில், இன்றைக்கு நம்முடைய நாட்டின் அரசியல் சூழல் எவ்வளவு மோசமாக, அபத்தமாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

பாசிச கொள்கையின்மீது நம்பிக்கை வைத்துள்ள ஓர் ஆட்சி ஒன்றியத்தில் நடைபெறுகிறது

ஒரு வேண்டாத கும்பல், ஏதோ ஒரு வகையில் ஜனநாயகத்தைப் பயன்படுத்தி  ஆட்சி அதிகாரத்திற்கு வந்து எட்டாண்டு காலம் ஆகிறன்றது. இந்த எட்டாண்டு கால ஆட்சியில், ஜனநாயகத்தின் நம்பிக்கையற்ற முறையில், சர்வாதிகாரத்தின்மீது நம்பிக்கை வைத்து, பாசிச கொள்கையின்மீது நம்பிக்கை வைத்துள்ள ஓர் ஆட்சி ஒன்றியத்தில் நடைபெறுகிறது. அந்த ஆட்சிப் பின்பற்றுகிற கொள்கை என்னவென்பது எல்லோருக்கும் தெரியும். 

ஆசிரியரின் இளமையின் ரகசியம்?

ஆசிரியர் அவர்கள் இளமையாக இருக்கிறார் என்று நாம் எல்லோரும் குறிப்பிடுகிறோம். இளமையின் ரகசியம் வேறொன்றுமில்லை. அவர் எந்த லேகியத்தை யும் சாப்பிடவில்லை. அவர் இளமையாக இருப்பதற்குக் காரணம், அவர் மேற்கொண்டிருக்கின்ற, ஏற்றுக் கொண்டிருக்கின்ற தத்துவம்தான் காரணமே தவிர, வேறு எதுவும் கிடையாது.

அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்ற தத்துவம் விஞ்ஞானம். விஞ்ஞானம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்குமே தவிர, விஞ்ஞானத்தை எவராலும் தடை செய்ய முடியாது. அஞ்ஞானம் ஒருபோதும் வெற்றி பெறாது. இந்தப் போராட்டம்தான் நாட்டில் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

விஞ்ஞானக் கொள்கை வெற்றி பெறவேண்டும் என்கிற காரணத்திற்காக, தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற ஆசிரியர், என்றைக்கும் இளமையாக இருக்கின்றார்.

அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிறீர்கள் என்று உச்சநீதிமன்றம் கண்டித்து வருகிறது

விஞ்ஞானத்திற்கு எதிரான கொள்கையுடைய மனு தர்மத்தை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பதற்காக, சனாதனத்தை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பதற்காக ஒரு கும்பல், பாசிச கும்பல், காவி உடை தரித்த கும்பல் ஆட்சியும், அதிகாரமும் தங்கள் கைகளில் இருக்கின்றது  என்கிற ஒரே காரணத்திற்காக, அதனை செயல்படுத்துவதற்காக ஏராளமான நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

உச்சநீதிமன்றம் கண்டிக்கிறது; தேர்தல் ஆணையத் தினுடைய தலைமை அதிகாரியாக. ஏற்கெனவே ஒரு பொறுப்பில் இருந்த அதிகாரி நியமிக்கப்படுகிறார்.  அந்தப் பொறுப்பிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்கிறார்; அடுத்த நாளே, அவர் தலைமை அதி காரியாக நியமிக்கப்படுகிறார், 24 மணிநேரத்திற்குள்ளாக.

இவ்வளவு அவசரம் ஏன்? என்று கேட்டது ஆசிரியர் அல்ல; மேடையில் வீற்றிருக்கின்ற தலைவர் அல்ல. உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது.

அதேபோல, ஒன்றரை ஆண்டுகாலம் ஆகிவிட்டது, நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு. ஒன்றிய அரசு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இவ் வளவு தாமதம் செய்வதால், அரசமைப்புச் சட்டத்தையே நீங்கள் அவமதிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுவதும் உச்சநீதிமன்றம்தான்.

ஆக, உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசை குட்டிக் கொண்டே இருக்கிறது. எத்தனைக் குட்டுகளைக் கொட் டினாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், தாங்கள் நினைத்ததை சர்வாதிகாரமாக நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள்.

காசியில் தமிழ்ச் சங்கமம் என்ற ஒரு நாடகம்

இப்பொழுது ஒரு புதிய நாடகத்தைத் தொடங்கி யிருக்கிறார்கள். ஏற்கெனவே பல நாடகங்களை நடத்திக் கொண்டிருப்பவர்கள், இப்பொழுது காசியில் தமிழ்ச் சங்கமம் என்ற ஒரு நாடகம், ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அந்த நிகழ்ச்சியை நாட்டினுடைய பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

அவர் தொடங்கி வைக்கும்பொழுது, அநேகமாக நாம் தமிழைப்பற்றி எந்த அளவிற்குப் பேசுவதைக் காட்டிலும், அவர் மிகச் சிறப்பாக உரையாற்றி இருக்கிறார்.

உலகத்திலேயே மூத்த மொழி தமிழ் மொழிதான் - சொல்வது நரேந்திர மோடி.

‘‘தமிழ் மரபை பாதுகாப்பது, 138 கோடி இந்தியர்களின் கடமை'' - இப்படிச் சொன்னவரும் பிரதமர்தான்.

‘‘அதனைப் புறக்கணிப்பது தேசத்திற்குச் செய்யும் பெரும் அவமதிப்பு'' என்கிறார்.

இவ்வாறு ஆசிரியர் அவர்கள் பேசியிருந்தால், வியப் பில்லை; அல்லது வருகை தரவிருக்கின்ற முதலமைச்சர் அவர்கள் பேசியிருந்தால் வியப்பில்லை. அல்லது மேடையில் இருக்கின்ற நம்முடைய தலைவர்கள் யார் பேசியிருந்தாலும், அதில் வியப்பில்லை.

தமிழைப்பற்றி பேசும் மோடி - 

தமிழ் மொழிக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு?

ஆனால், பேசியது நாட்டினுடைய பிரதமர். அதை சில பத்திரிகைகள் வரவேற்று, பாராட்டி, மகிழ்ந்து தலையங்கங்களை எழுதியிருக்கின்றன.

இப்படி பாராட்டிப் பேசுகின்ற பிரதமர், தமிழுக்குச் செய்கிற தொண்டைப் பற்றி நாம் பார்க்கவேண்டும்.

138 கோடி மக்களும் ஆதரிக்கவேண்டும் என்று சொல்கிறார்; அது கடமை என்றும் சொல்லுகிறார். அப்படி சொல்லுகிற பிரதமர், அவருடைய ஆட்சியில், 2017-2018 ஆம் நிதியாண்டில், சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கிய தொகை 198 கோடியே 31 லட்சம் ரூபாய். அதே ஆண்டில் தமிழ் மொழிக்கு ஒதுக்கிய தொகை 10 கோடியே 59 லட்ச ரூபாய்.

2018-2019 ஆம் நிதியாண்டில் சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கிய தொகை 214 கோடியே 38 லட்சம் ரூபாய். அதே நிதியாண்டில் தமிழ் மொழிக்கு ஒதுக்கிய நிதி வெறும் 4 கோடியே  65 லட்சம் ரூபாய்.

2019-2020 ஆம் நிதியாண்டில் சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 231 கோடியே 15 லட்சம் ரூபாய். அதே நிதியாண்டில் தமிழ் மொழிக்கு ஒதுக்கிய நிதி வெறும் 7 கோடியே 7 லட்சம் ரூபாய்.

மூன்றாண்டுகளில் சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப் பட்ட நிதி 643 கோடியே 38 லட்சம் ரூபாய். தமிழ் மொழிக்கு ஒதுக்கிய நிதி வெறும் 22 கோடியே 31 லட்சம் ரூபாய்.

எப்படி இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள்; நாடகத்தை எப்படி நடத்துகிறார் என்று பார்த்துக் கொள் ளுங்கள். இங்கே பாராட்டி பாராட்டி எழுதிக் கொண்டி ருக்கிறார்கள் பல பேர். பாராட்டி எழுதட்டும்; ஆனால், இந்த உண்மையையும் சேர்த்து எழுதவேண்டும் அல்லவா!

தமிழ்நாட்டில் வாழ்வது மட்டுமல்ல, உலகம் முழு வதும் வாழுகின்ற 10 கோடி தமிழ் மக்கள் - அவர்கள் தாய்மொழியான தமிழுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறை வான நிதி. 

கல்லோடு பேசிக் கொண்டிருக்கின்ற மொழியான சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு

கல்லோடு பேசிக் கொண்டிருக்கின்ற மொழி - எத்தனை கோடி பேர் சமஸ்கிருதம் பேசுகிறார்கள்? சமஸ்கிருதம் எங்கே பேசப்படுகிறது? கல்லோடு பேசப் படுகிறது. 

கல்லோடு பேசப்படுகிற மொழிக்கு 643 கோடி ரூபாய்.

தி.மு.க.விலிருந்து ஒருவர் வெளியேறி, பி.ஜே.பி.யில் சேர்ந்தவர், இதை ஆதரித்துப் பேசுகிறார்,  ‘‘சமஸ்கிருத மொழி மிகவும் பின்தங்கியிருக்கிறது. ஆகவே, சமஸ் கிருத வளர்ச்சிக்காக அந்த நிதி ஒதுக்கப்பட்டு இருக் கிறது'' என்று நியாயப்படுத்தி பேசுகிறார்.

எங்கே போனாரோ, அந்த இடத்திற்குத் தகுந்தவாறு பேசவேண்டும் அல்லவா! அதுபோன்று பேசிக் கொண் டிருக்கிறார், தி.மு.க.வில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

கல்லோடு பேசுகின்ற மொழிக்கு இவ்வளவு அதிக நிதி. 10 கோடி தமிழ் மக்கள், தங்களின் தாய்மொழியாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற மக்கள் மொழிக்கு மிகக் குறைவான நிதி.

அவர்களின் நாடகங்களைத் தோலுரித்துக்காட்ட ஒரு தலைவர் தேவை; அதற்குரிய தலைவர்தான் நம்முடைய ஆசிரியர்

இப்படி நாடகங்களை நடத்தி, தமிழ் மொழியைப்பற்றி சொன்னால்தான், தமிழ் மொழியை உயர்த்திப் பேசி னால்தான், தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்க முடியும் என்பதற்காக நாடகத்தை நரேந்திர மோடி மேற் கொள்கிறார்.

இந்த நாடகத்தை எல்லாம் தோலுரித்துக்காட்ட ஒரு தலைவர் தேவை. அதற்குரிய தலைவர்தான் நம்முடைய ஆசிரியர்.

ஏனென்றால், பல பணிகள் உள்ளவர்கள் நாங்கள் - திருமா, பாலகிருஷ்ணா, வைகோ, கோபண்ணா போன்றவர்களுக்கு பல வேலைகள் இருக்கின்றன.

அப்பா போராட்டத்திற்குப் போகிறார்; 

மகன் வழி அனுப்பி வைக்கிறார்!

அந்தப் பல வேலைகளில், சில நேரங்களில் இவற்றை யெல்லாம் கடந்து போய்க் கொண்டிருப்போம். ஆனால், அதை நுட்பமாக, காத்திருக்கும் கொக்குபோல் காத் திருந்து, எப்பொழுது இந்த சனாதனம் என்னென்ன தில்லுமுல்லுகளை செய்கின்றது என்று அவ்வப்பொழுது கண்டுபிடித்து, கண்டுபிடித்து உடனுக்குடனே, அறிக்கை விடுவது, போராட்டங்களை அறிவிப்பது என, எல்லா பணிகளையும் செய்து, நீங்களும் வாருங்கள் என்று எங்களையும் சேர்த்து - ‘‘ஹிந்தி மொழித் திணிப்பா? நான் தார்ச் சட்டியைத் தூக்கிக் கொண்டு போய் அழிப் பேன். அந்தப் போராட்டத்திற்காக, தார்ச் சட்டியைத் தூக்கிக் கொடுப்பதற்கு நீ வா!'' என்று என்னை அழைத் தார். அதாவது, அப்பா போராட்டத்திற்குப் போவார்; மகன் வழி அனுப்பி வைக்கிறார்.

ஆசிரியர் அவர்கள், தார்ச் சட்டியைத் தூக்கிக் கொண்டு, பிரசை வைத்து ஹிந்தி எழுத்தை அழிப்ப தற்காகப் போவாராம்; அதை மகன் போன்று இருக்கும் நான்  தொடங்கி வைக்கவேண்டும் என்றார்.

நான் சொன்னேன், ‘‘இது நியாயமல்ல; மகன் போருக் குப் போகவேண்டும்; தந்தை தான் வழியனுப்பி வைக்க வேண்டும். ஆனால், இங்கே தந்தை போருக்குப் போகி றார்; மகன் வழியனுப்பி வைக்கிறேன். அடுத்த முறை யாவது எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்''  என்று ஆசிரியர் அவர்களிடம் கேட்டேன்.

வகுப்புவாதத்தை எதிர்ப்பதில், ஆசிரியர் அவர்கள் எந்த நேரத்திலும் அதில் சமரசம் செய்துகொள்வதில்லை, இது சத்தியம். எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும்!

இன்றைக்கு ‘தமிழ் இந்து'ப் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது; ‘விடுதலை'  பத்திரிகை யிலும் ஏராளமான செய்திகள் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் பார்த்தாலே  நன்றாகத் தெரியும்.

இப்படி தொடர்ச்சியாக, மிகுந்த விழிப்புணர்வோடு இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார் நமது ஆசிரியர்.

இங்கே ஒரு ஆளுநர் இருக்கிறார்; திருவாளர் ரவி - அவர் தமிழ் மொழியை வடக்கே கொண்டு போகப் போகிறாராம்.

தமிழ்நாட்டில் இருப்பவர்களையெல்லாம் ‘கேனயன்' என்று நினைக்கிறாரா என்று தெரியவில்லை.

விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கும் 

விளங்காத ஆளுநர்!

வடநாட்டில் நான் தமிழை பரப்பப் போகிறேன் என்கிறார். அவர் வடநாட்டில், தமிழைப் பரப்புவது என்பது பிறகு இருக்கட்டும்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுப்ப தற்காக தமிழ்நாடு அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருக்கிறது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல், அந்த மசோதாவிற்கு விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்கிறார். இவர் எப்பொழுது ‘‘விளங்கப்'' போகிறார் என்று தெரிய வில்லை. விளங்காத ‘கேசு' இதெல்லாம்.

அண்ணாமலை என்ற ஒரு தீவட்டி இருக்கிறது இங்கே - அந்த அண்ணாமலை, இரண்டு நாள்களுக்கு முன்பு, பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது, பாது காப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு சரி வர மேற் கொள்ளவில்லை என்று, இந்தத் தீவட்டி, அந்தத் தீவட்டிக்கு ஒரு மனுவைக் கொடுக்கிறது.

அந்தத் தீவட்டி அந்த மனுவை வாங்கிய அடுத்த நாளே, தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு விளக்கம் கேட்டு, கடிதம் அனுப்புகிறது.

ஆன்லைன் சூதாட்டத்தின்மூலமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த படித்தவர்கள், நல்ல பொறுப்பில் உள்ளவர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள், நல்ல வருமானத்தை உடையவர்கள் - அந்த சூதாட்டத்திற்கு அடிமையாகி, நிறைய பேர் தற்கொலைகளை செய்துகொள்கிறார்கள்.

அந்த சாவிலிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசு ஒரு மசோதாவை ஆளு நருக்கு அனுப்பினால், அதற்கு விளக்கம் கொடுங்கள், விளக்கம் கொடுங்கள் என்று விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால், அண்ணாமலை கொடுத்த பெட்டிசனை உடனே தலைமைச் செயலாளருக்கு அனுப்பி, உடனே விளக்கம் கொடுங்கள் என்று கேட்கிறார்.

எதிரே டி.கே.எஸ்.இளங்கோவன் அண்ணன் அமர்ந் திருக்கிறார்; நேற்றைய தினம் ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையை, அண்ணாமலையோ அல்லது ரவியோ படிப்பார்களோ, படிக்கமாட்டார்களோ என்று எனக்குத் தெரியவில்லை. 

கொலை வழக்குகளிலிருந்து 

விடுவிக்கப்பட்ட நபர்!

நாட்டினுடைய குடியரசுத் தலைவரோ, பிரதமரோ வந்தால், அந்தப் பாதுகாப்புப் பொறுப்பை யார் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்கிறது.

அமித்ஷா என்கிற ஒருவர் இருக்கிறார் அல்லவா - கொலை வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்ட நபர். எல்லோரும் கிரிமினல் பயல்கள். அவர்தான் பொறுப்பு.

தமிழ்நாட்டிற்குப் பிரதமர் வந்தார் என்றால், அங்கே தமிழ்நாட்டு முதலமைச்சருக்கோ, தமிழ்நாட்டு காவல் துறைக்கோ வேலை கிடையாது.

அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார், முதலமைச் சரே அவர்களுடைய பாதுகாப்பு வளையத்தை மீறிப் போக முடியாது என்று.

ஆக, பிரதமருக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய அனைத்துப் பொறுப்புகளையும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்கிறது.

அண்ணாமலை, அமித்ஷாமீது 

புகார் கொடுத்திருக்கவேண்டும்!

அதில் ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால், அதற்கு யார் பொறுப்பு?

அமித்ஷாதானே! விளக்கம் அவரை கேள்!

விளக்கத்தை அங்கே கேட்காமல், இங்கே ஏன் தலைமைச் செயலாளருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புகிறாய்?

அண்ணாமலை யார் மேல் புகார் கொடுக்கவேண்டும்?

அமித்ஷாமீது புகார் கொடுக்கவேண்டும்.

‘‘தானைத் தலைவர், தன்னிகரில்லா தலைவர், நம்முடைய பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்த பொழுது, அவர் பக்கத்திலேயே நாற்காலியில் அமர்ந்திருக்கும் அமித்ஷா, பாதுகாப்பு கொடுப்பதில் தவறிவிட்டார். ஆகவே, அதனை விசாரித்து நடவடிக்கை எடு'' என்று அண்ணாமலை புகார் கொடுத்திருந்தால், அது சரியாக இருந்திருக்கும்.

விவசாய சங்கத் தலைவர்களைத் திருப்பி அனுப்புகிற ஒரு தரங்கெட்ட ஆளுநர்!

ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 26 ஆம் தேதி திரண்டு, ஒன்றிய அரசாங்கத்திற்கு, ஆளுநர் மூலமாக மனு கொடுக்கப் போகிறார்கள்.

ஒன்றிய அரசாங்கம், விவசாயிகளுடைய போராட் டத்தில், ஏறத்தாழ ஒன்னே கால் ஆண்டிற்குப் பிறகு, 700 பேரை சாகடித்த பிறகு, அவர்கள் கொண்டு வந்த சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாகக் கொடுத்தார்கள். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அந்த வாக்குறுதிகள் நிறை வேற்றப்படவேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து, அனைத்து சங்கங்களையும் சேர்ந்த ஆயிரக் கணக்கான விவசாயிகள், ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலமாகப் போகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை ஒரு குறிப்பிட்ட தூரம் அந்த ஊர்வலத்தை அனுமதித்து, சங்கங்களை சேர்ந்த தலைவர்கள், ஆளுநரை சந்திப்பதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதிமொழி அளித்து, ஒரு குறிப்பிட்ட  இடத் தோடு அந்தப் பேரணியை நிறுத்திவிட்டு, சங்கங்களை சேர்ந்த 10 தலைவர்களை, காவல்துறையினுடைய வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, ஆளுநரை சந்திக்கச் சென்றால், அவர்களை ஆளுநர் சந்திக்க மறுக்கிறார்; அப்படி மறுப்பதோடு மட்டுமல்ல, எனது அலுவலகத்தில் உள்ள யாரும், அந்தக் கோரிக்கை மனுக்களை வாங்கக் கூடாது என்று சொல்லிவிட்டு,  தமிழ்நாடு அரசிடம் கோரிக்கைகளை கொடுங்கள்  என்று அந்த விவசாய சங்கத் தலைவர்களைத் திருப்பி அனுப்புகிற ஒரு தரங்கெட்ட ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கிறார்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் கோரிக்கை மனுவை நாங்கள் கொடுக்க வருகிறோம் என்று சொல்ல வில்லை; அந்த மனுவை பிரதமருக்கு அனுப்புங்கள் என்று சொல்கிறார்கள்.

அந்த மனுவை அவர் பெற்றுக்கொள்ளலாம்; அல்லது அந்த மனுவைப் பெறுவதற்கு அவருக்கு வாய்ப்பில்லை என்று சொன்னால், அவருக்குக் கீழுள்ள அதிகாரிகளிடம் அந்த மனுவைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லலாம். அது தவறில்லை.

ஆனால், அந்த மனுவை யாருமே வாங்கக்கூடாது என்று சொன்ன ஆளுநர், அண்ணாமலையை வா, வா என்று அழைத்து, கொண்டா மனுவை என்று வாங்கி, அதைத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்கு உடனே அனுப்பி வைத்து விளக்கம் கேட்கிறார் என்றால், அதற்கு என்ன பொருள்?

ஆளுநர் செல்கிற இடங்களில் எல்லாம் அவருக்குக் கருப்புக் கொடி

ஆளுநர் ராஜினாமா செய்யவேண்டும் என்று பால கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.

ஆசிரியர் அவர்கள், ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால், ஆளுநர் செல்கிற இடங்களில் எல்லாம் அவருக்குக் கருப்புக் கொடி காட்டுவோம் என்று சொல்லியிருக்கிறார்.

கருப்பு என்றால், அவருக்கு ஒரே மகிழ்ச்சி. தமிழ் நாட்டில் ஆளுநர் நடமாட முடியாது என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

‘‘மோடி அரசாங்கமே, 

ஆளுநரைத் திரும்பப் பெறு!’’

வருகின்ற டிசம்பர் 29 ஆம் தேதி, ‘‘மோடி அரசாங் கமே, ஆளுநரைத் திரும்பப் பெறு!'' என்று பல்லாயிரக் கணக்கான மக்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடு வது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய் திருக்கிறது.

கருப்புக் கொடி காண்பிப்பதற்கு முன்னால், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்கு முன்னால், ஆளுநர் அவராகத் திரும்பிச் செல்லவேண்டும்; அல்லது அவரை நியமித்த மோடி, அவரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும். அதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது. 

ஆசிரியர் அவர்கள் இந்தப் போராட்டத்தைத் தீவிரப் படுத்தவேண்டும்; நாங்களும் உங்களோடு வருகிறோம்.

உங்கள் கரம் கோர்த்து வருவோம்!

நம்முடைய ஆசிரியர் பல்லாண்டு, பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து, தமிழ்நாட்டிற்கும், நாட்டிற்கும் - சனாதனத்திற்கும் எதிரான அந்தப் போர்க் குரலை ஓங்கி ஒலிப்பதற்கு பல்லாண்டு காலம் வாழ்க, வாழ்க என வாழ்த்தி, உங்களோடு சேர்ந்து துணையாக இருப்போம்; உங்களை விடமாட்டோம், கரம் கோர்த்து வருவோம் என்பதையும் தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி கூறி, என்னுரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உரையாற்றினார்.

No comments:

Post a Comment