மாமல்லபுரத்தில் பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு நிறைவு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

மாமல்லபுரத்தில் பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு நிறைவு விழா

காஞ்சிபுரம், டிச.5 பொது சுகாதாரத் துறை நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பன்னாட்டு சுகாதார மாநாடு மாமல்லபுரத்தில் இன்று  (5.12.2022) தொடங்குகிறது. தமிழ்நாட்டில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புக்கென பிரத்யேகத் துறை கடந்த 1922-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. போலியோ, காலரா போன்ற நோய்களை ஒழித்ததில் பொது சுகாதாரத் துறைக்கு முக்கியப் பங்கு உள்ளது.

அதேபோல், கரோனா உள்பட பல்வேறு தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பொது சுகாதாரத் துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் பன்னாட்டு மருத்துவ மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, மாமல்லபுரத்தில்  வரும் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதிவரை நடைபெறும் மாநாட்டில் சிறப்புஅமர்வுகளுக்கும், ஆய்வுக் கருத்தரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 250-க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள் 43 பேரின் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. முன்னதாக, இன்று மாலை 5மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. அதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்று மாநாட்டைத் தொடக்கிவைக்க உள்ளனர். சுகாதாரத் துறைச் செயலாளர் ப.செந்தில்குமார், பொது சுகாதாரத் துறைஇயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், தேசிய நல்வாழ்வுக் குழும இயக்குநர் சில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா, மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க திட்ட இயக்குநர் அரிஹரன், உணவுப் பாது காப்புத் துறை ஆணையர் லாவ்லேனா உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.


No comments:

Post a Comment