எட்டாம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களின் பிரீமெட்ரிக் கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு நிறுத்தக் கூடாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 8, 2022

எட்டாம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களின் பிரீமெட்ரிக் கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு நிறுத்தக் கூடாது

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை,டிச.8- தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தொடக்கக் கல்வியை ஊக்கப்படுத்த முந்தைய கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு,

மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத் தின்கீழ், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த  கல்வி உதவித் தொகையினை 2022-_2023 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்துள்ளதைத் தொடர்ந்து வழங்கிட,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  இந்தியப் பிரதமர் மோடிக்கு நேற்று  (7-_12_-2022) கடிதம் எழுதியுள்ளார்.

29-_11_-2022 நாளிட்ட ஒன்றிய சிறு பான்மை விவகார அமைச்சகத்தின் கடிதத்தில்,  கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) வழங்குவதை அரசாங்கம் கட்டாய மாக்குகிறது என்று தெரிவித்துள்ளதால், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்,  பழங்குடியினர் விவகார அமைச் சகங்களின் முடிவின்படி, தற்போது 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே மெட்ரிக் கல்விக் கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் கல்வி உத வித்தொகை பெறத் தகுதியுடையவரா கிறார்கள் என்று  தமிழ்நாடு முதல மைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாடு, ஏழை சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த குழந்தைகளிடையே தொடக்கக் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு எதி ராக அமைவதோடு, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும் என்றும் தனது கடிதத்தில்  முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஒன்றிய அரசு 2008_-2009 ஆம் ஆண் டில் சிறுபான்மையின மாணவர்களுக்கு மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்றும்,  அரசு - அரசு உதவி பெறும் மற்றும் அங்கீ கரிக்கப்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. ஒரு இலட்சத்திற்குக் குறைவாக  இருந் தால் இந்த உதவித்தொகை வழங்கப் பட்டு வந்தது என்றும் தெரிவித்துள்ள  முதலமைச்சர், இத்திட்டத்தின்கீழ், 2021_-2022 ஆம் ஆண்டில் தமிழ் நாட் டைச் சேர்ந்த 4,49,559 மாணவர்களுக்கு 86.76 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட் டுள்ளது என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அரசின் இந்த முடிவினால், தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் அய்ந்து இலட்சம் ஏழை சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகையின் பயன்களை பெற இயலாமல் கடுமை யாகப் பாதிக்கப்படுவர் என்றும்,  ஏழை மக்கள் தங்களுக்கான அதிகாரத்தைப் பெறுவதற்கும், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கும் கல்வி மிகவும் பயனுள்ள கருவியாகும் என்றும் தெரிவித்துள்ள  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லா மியர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர் என்பதை பல்வேறு காலக்கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் நிரூ பித்து வருகின்றன என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதோடு, இந்த கல்வி உதவித்தொகை ஏழை, பின்தங்கிய மற்றும் பெண் குழந் தைகள் உட்பட, மிகவும் விளிம்புநிலையிலுள்ள மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கும் உதவிகரமாக இருப்பதால், இது தொடரப்பட வேண்டும் என்று தனது கடிதத்தில்  முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை திட்டத்தினைக் கை விடும் முடிவை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்து, உடனடியாக அத்திட்டத்தினை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்  வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment