ஒடுக்கப்பட்ட மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

ஒடுக்கப்பட்ட மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலமா?

புதுக்கோட்டை முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர் வேங்கைவயலில்  தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கு ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட நீரில் துர்நாற்றம் வீசியது.மேலும் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து நீர்த்தேக்க தொட்டியில் ஏறிப் பார்த்த போது குடிநீரில் மலம் கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது எத்தகைய அநாகரிகத்தின் உச்சம்!

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோரிடம் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு அதிகாரி களுடன் ஆட்சியரும், காவல்துறை அதிகாரியும் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது மக்கள் அடுக்கடுக்கான புகார்களைக் கூறினர். இதைக் கேட்டு ஆட்சியரும், காவல் துறைக் கண்காணிப்பாளரும் அதிர்ச்சி அடைந்தனர். 

 அங்குள்ள இறையூர் அய்யனார் கோயிலில் தலைமுறை தலைமுறையாக வழிபாடு நடத்த தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். மேலும் அங்குள்ள தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதாகவும் ஊர் மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து தேநீர்க் கடைக்காரர் மூக்கையா மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை அய்யனார் கோயிலுக்குள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அழைத்துச் சென்றார். அப்போது அங்கு கோயில் பூசாரி ராஜனின் மனைவி சிங்கம்மாள் சாமியாடி போல் வந்து தாழ்த்தப்பட்ட சமூக மக்களை மோசமான வார்த்தைகளால் விமர்சித்து அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்லக் கூடாது என்று  நாடகமாடினார். அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கோயில் நிர்வாகத்திடம் "நீங்க செய்வது நியாயமா" என  ஆட்சியர் கவிதா ராமு கேட்டார். 

இதையடுத்து அங்கிருந்த கோயில் நிர்வாகி, "நாங்கள் யாரும் அவர்கள் வருவதைத் தடுக்கவில்லை. தலைமுறை தலைமுறையாக யாரும் வராததால் இவர்களும் வருவதில்லை" என தெரிவித்தார். இந்த நிலையில் இறையூர் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட அய்யனார் கோயிலிலும் குடிநீர்த் தொட்டி உள்ள பகுதியிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து ஆட்சியர் கவிதா ராமு கூறுகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜாதி, மத, இன, வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். கோயில்களில் ஜாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப் பட்டாலோ, முடித்திருத்தகங்களில் ஜாதிய வேறுபாடு காணப்பட்டாலோ சட்ட ரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்; மேற்கண்ட குற்றங்கள் நடந்தால் 9443314417 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார். 

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோரின் இந்த நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலந்துள்ளதால் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் "குடிநீர் தொட்டியில் மலம் கலந்துள்ளது மிகப் பெரிய பிரச்சினையாகும். குற்றவாளிகள் யாரும் தப்பிக்கவே முடியாது. ஜாதிய பாகுபாடு கடைப்பிடித்து குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது" என கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் கூறுகையில், இரட்டைக் குவளை, கோயிலுக்குள் அனுமதி மறுப்பு, குடிநீர் தொட் டியில் மலம் கலப்பு ஆகிய நிகழ்வுகள் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது என்றனர்.

மேற்கண்ட குற்றங்கள் நடந்தால் 9443314417 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் காவல் காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோரின் இந்த நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலை தமிழ்நாட்டில் இருப்பது மாபெரும் தலைக் குனிவாகும். குற்றவாளிகளுக்குக் கொடுக்கும் கடுந் தண்டனை ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.

கருஞ்சட்டைத் தோழர்கள் இதுமாதிரி தீண்டாமை கடைப்பிடிக்கப்படும் தகவல்களை உடனடியாகத் தலைமைக் கழகத்துக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதன்மீது உரிய நடவடிக்கைகளை மேற் கொள்வோம்!  

No comments:

Post a Comment