கடவுள் சக்தி எங்கே? ஆதிகேசவ பெருமாள் திருடப்பட்டார் காவல்துறையினர் மீட்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

கடவுள் சக்தி எங்கே? ஆதிகேசவ பெருமாள் திருடப்பட்டார் காவல்துறையினர் மீட்பு

சென்னை,டிச.13- உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 3  சிலைகள் சென்னையில் உள்ள ஒரு வீட்டில் மீட்கப்பட்டன. அங்கிருந்து ரூ.2 கோடி மதிப்பிலான மேலும் 4  சிலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந் தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இருந்த ஆதிகேசவ பெரு மாள், சிறீதேவி, பூதேவி ஆகிய 3  சிலைகள் கடந்த 2011ஆம் ஆண்டு திருடுபோயின. இதுகுறித்து உளுந்தூர் பேட்டை காவல் நிலையத்தில் கோயில் அர்ச்சகர் புகார் கொடுத்தார். பின்னர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. திருடுபோன சிலைகளின் ஒளிப்படங்கள், கோயிலில் இருந்தன. அதன் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, அய்.ஜி. தினகரன் மேற்பார்வையில் டிஎஸ்பி முத்துராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

ராஜா அண்ணாமலைபுரம்

இந்நிலையில், உளுந்தூர்பேட்டை கோயிலில் திருடப்பட்ட சிலைகள் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 7ஆவது பிரதான சாலை முதல் குறுக்கு தெருவை சேர்ந்த சோபா துரைராஜன் என்பவரது வீட்டில் இருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, தனிப் படை காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து கொள்ளைபோன 3 கடவுளர் சிலைகளும் அங்கு இருந்தன. இதுதவிர, அஸ்திரதேவர், அம்மன், வீரபத்ரா, மகாதேவி ஆகிய4   சிலைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, சோபா துரைராஜ னிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரித்தபோது, ‘‘பழங்கால கலைப் பொருட்களை சேகரிப்பது எனது பொழுதுபோக்கு. கடந்த 2008-2015 காலகட்டத்தில் அபர்ணா கலைக்கூடத்தில் இருந்து இவற்றை வாங்கினேன். இவைகோயில் சிலைகள் என தெரியாது’’என்றார். பின்னர், அனைத்து சிலைகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

300 ஆண்டுகள் பழைமையானவை

இதில், உளுந்தூர்பேட்டை ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து திருடப்பட்ட 3 சிலைகளும் 300 ஆண்டுகளுக்கு மேல் பழைமை யானவை. அவற்றின் தற்போதைய பன்னாட்டு சந்தை மதிப்பு ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும். மற்ற 4 சிலைகளின் மதிப்பு ரூ.2 கோடி என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த 4 சிலைகளும் எந்த கோயிலுக்கு சொந்தமானவை என்று கண்டறிவ தற்காக, அவற்றின் ஒளிப்படங்களை அறநிலையத் துறை அலுவலகத்துக்கு சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு கோயில்களில் திருடப் பட்ட பழைமை வாய்ந்த சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள அருங் காட்சியகங்களில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொன்மையான சிலைகள், தற்போது உள்நாட்டிலேயே, அதுவும் தமிழ் நாட்டிலேயே மீட்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீனதயாளனின் கலைக்கூடம்

அபர்ணா கலைக்கூடம் என்பது சமீபத்தில் காலமான பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு சொந்தமானது. எனவே, அவரது கும்பல்தான் உளுந்தூர்பேட்டை கோயிலிலும் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

இதுபற்றி அபர்ணா கலைக்கூட ஊழியர்களிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள் ளனர்.

No comments:

Post a Comment