சமூகத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் வங்கிகள் கடன் வழங்குக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

சமூகத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் வங்கிகள் கடன் வழங்குக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேண்டுகோள்

சென்னை,டிச.22- சமூகத்தில் அனை வரும் பயன்பெறும் வகையில் வங்கிகள், கடன் வழங்குவதை பரவலாக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) சார்பில், மாநில அளவிலான கடன் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. நபார்டு வங்கியின் பொதுமேலாளர் கே.இங்கர்சால் வரவேற்புரை ஆற்றி னார். தமிழ்நாடு நிதியமைச்சர் பழனி வேல் தியாகராஜன் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று, 2023-2024ஆம் ஆண்டுக்கான வளம் சார்ந்த மாநில அறிக்கையை வெளியிட்டார்.

தொடர்ந்து விழாவில் அமைச்சர் பேசியதாவது:

வளரும் பொருளாதாரத்துக்கு கடன் என்பது மிகவும் அவசியமாக உள்ளது. வங்கிகள் கடன்வழங்குவதில் தங்களது இலக்கைஅடைந்துள்ளன. அதேசமயம், சமூகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் வங்கிகள் கடனைபரவலாக்க வேண் டும். இதன்மூலம், அனைத்துத் துறை களையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்படும்.

கடன் கொடுப்பதில் தொழில்நுட்பம் இன்றைக்கு பெரும் பங்குவகிக்கிறது. கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள் ளுபடி செய்யப்பட்டது. தொழில்நுட்ப வசதி காரணமாக தமிழ்நாடு அரசு தகுதியானவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி செய்தது. இதன் மூலம், அரசுக்கு பெரும் செலவு மிச்ச மானது.

தமிழ்நாடு அரசு வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தி வருகிறது. கிரா மப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நபார்டு வங்கி கடன் வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சமூக நீதியும், பொருளாதார நீதியும் வெவ்வேறானவை. சமூக நீதி என்பது அனைவரையும் சமமாகப் பார்ப்பது. ஆனால், பொருளாதார நீதி என்பது கண்களைத் திறந்து பார்க்க வேண்டும். பொருளாதார நீதியை அடைய தரவு களைத் தொடர்ந்து மேம்படுத்தி வரு வது அவசியம். இதன்மூலம் சரியான நபருக்கு சரியான முறையில் சரியான திட்டங்கள் சென்றடையும் என்றார்.

நபார்டு வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் டி.வெங்கட கிருஷ்ணா பேசும்போது, ‘‘தமிழ்நாட் டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு கடன் வழங்கலாம் என்பது குறித்த வளம் சார்ந்த அறிக்கையை நபார்டு வங்கி தயாரித்து வெளியிட்டுள்ளது. இதன்மூலம், வங்கிகள் அடுத்த ஆண் டுக்கான தங்களது கடன்திட்டங்களை தயாரிக்க முடியும்.

வரும் 2023-_2024ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள முன்னுரிமை துறைகளுக்கு ரூ.4.93 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது கடந்த 2022-_2023ஆம் ஆண்டுக்கான ரூ.4.13 லட்சம் கோடி யுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிக மாகும்.

குறிப்பாக, விவசாயத்துக்கு ரூ.2.18 லட்சம் கோடியும் (46%), சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.1.68 லட்சம் கோடியும்(36%) மற்றும் பிற துறைகளுக்கு ரூ.1.06 லட்சம் கோடி யும் (18%) கடன் வழங்க வாய்ப்புகள் உள்ளன. நபார்டு வங்கி தமிழ்நாடு அரசுக்கு கடந்த 2021-_2022ஆம் ஆண்டு ரூ.32,500கோடி கடனுதவி செய்தது. இதுநடப்பாண்டில் ரூ.40 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது’’ என்றார்.


No comments:

Post a Comment