தமிழ்நாட்டிற்கு சிறந்த சீர்திருத்த மாநில விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

தமிழ்நாட்டிற்கு சிறந்த சீர்திருத்த மாநில விருது

புதுடில்லி, நவ.11 டில்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுக்கு சிறந்த சீர்திருத்த மாநில விருது வழங்கப்பட்டது.   பீகார் மேனாள் துணை முதலமைச்சர் சுஷில் மோடி இந்த விருதை தமிழ்நாடு அரசுக்கு வழங்கினார். இதில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக் கொண்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மேனாள் நிதி அமைச்சர் மன்பிரித் சிங் பாதல் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.

நீட்டில் 13  சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கும் மருத்துவச் சீட்டு!

சென்னை, நவ.11 'நீட்' தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம் மருத்துவம் பயிலுகின்ற அவலம் குறித்து ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர், தலைவர் இரா. அதியமான் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தகுதி - திறமையாளர்களுக்கு மட்டுமே மருத் துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே 'நீட்' நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது என்று நம்பச் சொல்கிறார்கள். 

இதோ... இந்த ஆண்டும் ஒன்றிய அரசின் பிடிவாதத்தால், ஆதிக்கத்தால், நீட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்னும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான 'மேனேஜ்மெண்ட் கோட்டா' இடங்களில் மருத்துவ இடம் 'வாங்கியிருப்போரின்' மதிப்பெண் விவரம்!

நீட் தேர்வில் 720க்கு 94, 98, 99 வாங்கிய வர்களுக்கு இடம். அதாவது நூற்றுக்கு 13%, 13.6% வாங்கியோருக்கெல்லாம் மருத்துவக் கல்லூரியில் இடம். அவர்கள் மருத்துவம் படிக்கத் தகுதியான வர்கள். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 99% வாங்கிய மாணவர்கள் மருத்துவம் படிக்கத் தகுதி யற்றவர்கள். ஆனால், நீட் தேர்வில் 13, 14 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தகுதிவாய்ந்தவர்கள் என்ற பித்தலாட்டத்தை அரங்கேற்றி, 'சீட்' விற்பனை நடந்திருக்கும் அவலம்! 

நீட் தேர்வை ஏன் தமிழ்நாடு ஏற்க மறுக்கிறது? அது எப்படி கல்விக் கொள்ளையர்களுக்கும், கார்ப் பரேட்டுகளுக்கும் சாதகமானதாக இருக்கிறது என்ப தற்கு இன்னும் சான்று வேண்டுமா?

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெறும் சட்ட வரைவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், அதிகார வரம்புமீறலில் ஈடுபட்டி ருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்த நியாய மெல்லாம் புரியாதா?


அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்

சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் 

 சஞ்சய் ராவத்துக்கு பிணை

மும்பை, நவ. 11 "சஞ்சய் ராவத்தை கைது செய்தது சட்டவிரோதம்"  என்று அமலாக்கத் துறைக்கு  கடும் கண்டனம் தெரிவித்து பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனா நாடாளு மன்ற உறுப்பினர் சஞ்சய்ரவத்துக்கு மும்பை நீதிமன்றம் பிணை வழங்கியது.

மும்பை புறநகர் பகுதியான கோரிகோனில் குடியிருப்பு கட்டியதில் பணமோசடி செய்ததாக மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்ராவத் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. மோசடியில் சஞ்சய்ராவத்துக்கும் பங்கு இருப்பதாக கூறிய அமலாக்கத்துறை அவர் திரைமறைவில் இருந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டியது.இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அவரை கைது செய்த அமலாக்கத்துறை அவரை மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைத்தது. இந்த நிலையில் அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத்துறை தன் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிவருவதாக சஞ்சய் ராவத் பிணை மனு தாக்கல் செய்தார். இதில் மும்பை முதன்மை நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.

“சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் எந்த முகாந்திரமும் இன்றி, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்தது கண்டனத்துக்குரியது;

 சிவில் வழக்கை வெறும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை என்றும், பொருளாதார குற்றம் என்றும் கூறுவதால் அது குற்ற வழக்கு ஆகாது. காரணமே இன்றி அப்பாவிகளை கைது செய்து துன்புறுத்துவதா?" அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment