நவ.26 (1957) ஜாதி ஒழிப்புக்காக அரசமைப்புச் சட்டத்தை திராவிடர் கழகத்தினர் எரித்த வரலாற்று நாள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 7, 2022

நவ.26 (1957) ஜாதி ஒழிப்புக்காக அரசமைப்புச் சட்டத்தை திராவிடர் கழகத்தினர் எரித்த வரலாற்று நாள்!

10 ஆயிரம் பேர் எரித்தனர்; மூவாயிரம் பேர் கைது; ஈராண்டுவரை தண்டனை - 18 தோழர்கள் உயிர்த் தியாகம்!

நவம்பர் 26 ஆம் தேதி நாடெங்கும் கழக சார்பில் 

ஜாதி ஒழிப்புப் பொதுக்கூட்டங்கள்!

சுடுகாட்டிலும் ஜாதி பேதம் கூடாது - பொது சுடுகாடு தேவை!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

1957 நவம்பர் 26 அன்று ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவை எரித்து 3000 கருஞ்சட்டைத் தோழர்கள் சிறையேகி, 18 தோழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். வரும் 26 ஆம் தேதியன்று தமிழ்நாடெங்கும் ஜாதி ஒழிப்புக் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்களை நடத்திட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நவம்பர் 26 ஆம் தேதி என்பது மிக முக்கியமான வரலாற்று நாள் ஆகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் செயலுருக் கொண்ட நாள்!  (1949) - அதை அரசியல் சட்ட நாளாகவும் இன்றும் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

ஜாதி ஒழிப்புப் போராட்டமும் - தந்தை பெரியாரும்!

நமது இயக்கத்தின் வரலாற்றில், ஜாதி ஒழிப்புப் போரை தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்த போதே தொடங்கினாலும், அதை விட்டு வெளியேறி - சுயமரியாதை இயக்கத்தை 1925 இல் தொடங்கிய பிறகு, ஜாதி - தீண்டாமை  ஒழிப்பிற்காக பலமுனைகளில், பல வடிவங்களில், பல கட்டங்களிலும் இடையறாத போராட் டங்களை அடுக்கடுக்காக - மக்களைத் திரட்டி - தொடர்ந்து நடத்திக் கொண்டே இருந்தார்கள்! தனது 95 வயதிலும்கூட இறுதியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும்; அதற்குமுன் கோவில் கரு வறையில் பாதுகாப்புடன் படமெடுத்தாடும் வருணா சிரமப் பாம்பின் பார்ப்பன விஷப்பல் பிடுங்கி எறியப் படவேண்டும் என்பதற்காகவே போராட்டக் களத்தினையும் கண்டவர்!

ஜாதியை ஒழிக்க அரசுக்கு தந்தை பெரியார் வேண்டுகோள்!

‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி பாதுகாக் கப்படுகிறது; 18 இடங்களில் ‘ஜாதி' (Caste)  என்ற சொல் பிரயோகம் உள்ளது. ‘தீண்டாமை' மட்டும் சட்டப்படி ஒழிந்தால் போதாது; அதன் வேராக உள்ள ஜாதியும், வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்து எறியப்பட வேண்டும் என்பதற்கு அன்றைய ஒன்றிய (காங்கிரஸ்) அரசிடம் வேண்டுகோள் வைத்தார்; அவகாசம் (கெடு) கொடுத்து பிறகு அந்த ஜாதியைப் பாதுகாக்கும் கூறுகள் (Articles) உள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அச்சிடப்பட்ட பகுதிகளைப் பொது இடங்களில் எரிக்கும் போராட்டத்தினை- நவம்பர் 26 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெறும் என்று துணிந்து அறிவித்தார்! அந்தப் போராட்ட அறிவிப்பு நாட்டையே ஒரு பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

சட்டத்தை எரித்தால் இரண்டாண்டு தண்டனை - அபராதம்!

அரசமைப்புச் சட்ட நகலை அப்படி எரித்தால், மூன்றாண்டு  கடுங்காவல் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் உண்டு என்ற அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வைத்தது அன்றைய டில்லி அரசு!

‘‘மூன்று ஆண்டு என்ன? 30 ஆண்டுகளானாலும், தூக்குத் தண்டனை என்றாலும் என் தோழர்களும், நானும் எரிப்போம்; அஞ்சமாட்டோம்'' என்று சூளு ரைத்தார் தந்தை பெரியார்.

உணர்ச்சிப் பிழம்பானார்கள் கருஞ்சட்டை அணி யினர், கடமை வீரர்கள், ஜாதி ஒழிப்புக் களத்தில் இறங்கினர்.

1957 நவம்பர் 26 அன்று 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தொண்டர்கள் சட்ட எரிப்பு!

1957 நவம்பர் 26 ஆம் தேதி சுமார் 10 ஆயிரம் பேர் அரசமைப்புச் சட்டப் பகுதியினை எரித்தனர் - அப்போராட்டத்தில் பல ஊர்களிலும்!

மூவாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்; ஆறு மாத கடுங்காவல் தொடங்கி, 2 ஆண்டு கடுங்காவல்வரை தண்டிக்கப்பட்டனர். கையளவு காகிதமான அரசமைப்புச் சட்டத்தின் படிகளை எரித்ததற்காக - ஜாதி ஒழிப்பை வலியுறுத்திப் போராடிய ‘‘குற்றத்திற்காக!''

உலகம் கேள்விப்பட்டிராத உன்னத லட்சியப் போராட்டம்; ‘‘லட்சியத்தை அடைய கஷ்ட நஷ்டம் என்ற கடும் விலையைக் கொடுக்க அஞ்சவே கூடாது என்ற தந்தை பெரியார் பாடத்தைச் சுவாசித்த தொண் டர்கள் - சிறைகளை நிரப்பினர்; வழிந்தன சிறைச் சாலைகள்.

திருச்சி மத்திய சிறையில் பட்டுக்கோட்டை இராம சாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் சிறைக்குள் தங்கள் உயிரை இழந்தார்கள்!

18 ‘‘கழகத் தோழர்கள்'' - உயிரைத் தியாகம் செய்தனர்!

அந்த உயிர்த் தியாகம் உள்ளேயும், வெளியிலும் தொடர்ந்தது - 18 உயிர்கள் 1. இடையாற்று மங்கலம் நாகமுத்து, 2. இடையாற்று மங்கலம் தெய்வானை அம்மாள் 3. மாதிரிமங்கலம் ரெத்தினம் 4. கோவில் தேவராயன்பேட்டை நடேசன் 5. திருவையாறு மஜித் 6. காரக்கோட்டை ராமய்யன் 7. புது மணக்குப்பம் கந்தசாமி 8. பொறையாறு தங்கவேலு 9. மணல்மேடு அப்பாதுரை 10. கண்டராதித்தம் சிங்காரவேலு 11. திருச்சி டி.ஆர்.எஸ்.வாசன் 12. தாராநல்லூர் மஜீத் 13. கீழவாளாடி பிச்சை, 14. லால்குடி நன்னிமங்கலம் கணேசன்,  15.திருச்சி சின்னசாமி, 16.வாளாடி பெரியசாமி போன்ற கருப்பு மெழுகுவத்திகள் எரிந்தன!

தங்கள் உடல்நலம், வாழ்வாதாரத்தையும்கூட இழந் தனர்; அதற்காக ஒரு துளி வருத்தமோ, சங்கடமோ பெறாது, வெளியில் வந்த பிறகும் அதே உணர்வை முன்னிலும் பல மடங்கு பெருக்கியே இயக்கத்திற்கு உழைத்த ஒப்பற்ற கொள்கை மாவீரர்கள் - தியாகத் திலகங்கள் கருஞ்சிறுத்தைகள் அவர்கள்!

 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய தமிழ்நாடு அரசு!

ஜாதி ஒழிப்புப் பணி ஒரு தொடர் போராட்டம் களப் பணிகளைத் தொடருகிறோம்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளினை அகற்றிய ‘திராவிட மாடல்' ஆட்சி, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் நடைபெறும் நிலை, பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகிவருகின்றனர்; பயிற்சி வகுப்புகளும் மீண்டும் தொடரயிருப்பது மகிழ்ச்சியே!

என்றாலும், அதிகாரப்பூர்வமாக ஜாதி ஒழிப்பு அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றாக வேண்டும்; தந்தை பெரியார், சென்னையில் டிசம்பர் 8, 9  (1973) ஆகிய நாள்களில் நடத்திய சமூக இழிவு ஒழிப்பு மாநாட்டில்  போட்ட தீர்மானம் - ஜாதி ஒழிப்புக்கானது.

வரும் நவம்பர் 26 அன்று  ஜாதி ஒழிப்புப் பொதுக்கூட்டங்கள்!

1. அரசமைப்புச் சட்டத்தில் ‘‘தீண்டாமை'' (Untouchability)  சொல்லுக்குப் பதில் அதனையும் உள்ள டக்கிய ‘ஜாதி' (Caste)  ஒழிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டாகவேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி ஜாதி ஒழிப்பினை மேலும் தீவிரமாக்கி, சபதமேற்கும் நாளாகட்டும் நவம்பர் 26!

எனவே, திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக மற்றும் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு லட்சியங்களில் ஈடுபாடு கொண்ட அனைவரும் நவம்பர் 26 அன்று நாடு தழுவிய ஜாதி ஒழிப்புக் கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்கள் (மழை பெய்தால், அரங்கினுள்) நடத்திட வலியுறுத்தவேண்டும்.

2. அதில் மற்றொன்றும் முக்கியம். பொது சுடுகாடு மட்டும் இனி இருக்கவேண்டும்; ஜாதிச் சுடுகாடுகள் கிராமங்களில்கூட இருக்கவே கூடாது.

பொது சுடுகாடு தேவை!

சுடுகாடுகளுக்கு இடுகாடுகளுக்கு இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லுகையில், வழி சரியான பொதுப் பாதையாக இருக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தடுத்து, மறுப்பவர்களை சட்டப்படி கடுமையான நட வடிக்கைமூலம் சிறையில் அடைக்க முன்வரவேண்டும்.

3. ஜாதி ஒழிப்பு, கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிப்பிரிவை காவல்துறையில் உருவாக்கவேண்டும்.

இது உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் வலியுறுத் தப்பட்டுள்ளது.

தலைமைக் கழகம் ஒரு பேச்சாளர் பட்டியலை வெளியிடும் - அதன்படி எங்கெங்கும் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீர வணக்கம், ஜாதி ஒழிப்புக்கான தீவிரப் பிரச்சாரம் சூறாவளியாக நடைபெற ஏற்பாடு செய்யுங்கள் தோழர்களே!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7.11.2022


No comments:

Post a Comment