ராமேசுவரம் அக்னி தீர்த்தம்: பக்தர்கள் கழிவு நீரில் குளிக்க வருகிறார்களா? மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

ராமேசுவரம் அக்னி தீர்த்தம்: பக்தர்கள் கழிவு நீரில் குளிக்க வருகிறார்களா? மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை, அக்.27 ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரிய பொது நல வழக்கு குறித்து நகராட்சி நிர்வாக துறை செயலர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ராமேசுவரம் ராமநாதசுவாமி  கோவில் இணை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மார்க்கண்டன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு வினை தாக்கல் செய்திருந்தார். அதில், “ராமேசுவரத்தில் பழைமையான ராம நாதசுவாமி  கோவில் அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் உள்ள தீர்த்தங்கள் கங்கை தீர்த்தத்திற்கு சமமானது.

ராமேசுவரம் பகுதியில் உள்ளே மற்றும் வெளியே 64 தீர்த்தங்கள் உள்ளன. இதில், அக்னி தீர்த்தம் கோவிலின் வெளியே உள்ள கடல் பகுதியை குறிக்கும். ராமேசுவரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடுவதற்காக இந்தியா முழுவதும் இருந்து நாள்தோறும்   வந்து செல்கின்றனர்.

ராமேசுவரம் பகுதியில் பாதாளச் சாக்கடை அமைக்க ரூ.52.60 கோடி ஒதுக்கப்பட்டது. 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை 50% பணிகள் நடைபெற்று தற்போது எந்தப் பணிகளும் நடை பெறாமல் உள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, ராமேசுவரம் கோவில் அருகே உள்ள அக்னி தீர்த்தம் கடல் பகுதியில் சாக்கடைகள், குப்பைகள் மற்றும் பல்வேறு நகரின் கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்." என  கூறியிருந்தார்.

அப்போது ,மனுதாரர் தரப்பில் நிழற்படத்துடன் கூடிய ஆதாரங்கள்  தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையுடன் உள்ள மற்றொரு வழக்கில் வழக்குரைஞர் ஆணையர்  நியமனம் செய்து அளித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

வங்காள விரிகுடா கடலில் சாக்கடைத் தண்ணீர் கலப்பதை தடுக்க பல்வேறு வழிமுறைகள் கொடுக்கப்பட் டுள்ளது என பதில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், "இதனை சரி செய்ய யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்? பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து மக்கள் ராமேசு வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

ராமேசுவரம் அக்னித் தீர்த்தம் பகுதியில் சாக்கடை கலப்பதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முறையான நட வடிக்கையை ஏன்  மேற்கொள்ளவில்லை? இந்தியா முழுவதும் இருந்து ராமேஸ்வரம்  அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் 'புனித' நீராட வருகிறார்களா? அல்லது ராமேசுவரம் நகரில் இருந்து கடலில் கலக்கும்  சாக்கடை கழிவு நீரோடு சேர்ந்து  நீராட வருகிறார்களா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், “ இதற்கு தீர்வு காண வேண்டும். மனுதாரரின் வழக்கு குறித்து நகராட்சி  துறை செயலர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் இணை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தர விடுகிறேன்"  என்று கூறி வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.


No comments:

Post a Comment