திரித்துப் பேசுவது ‘ஜி.யு.போப்'பா - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

திரித்துப் பேசுவது ‘ஜி.யு.போப்'பா - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியா?

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கேள்வி

சென்னை, அக்.27  ‘‘திரித்துப் பேசுவது ‘ஜி.யு.போப்'பா - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியா?'' என்று கேள்வி யெழுப்பினார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

‘‘திருவள்ளுவர்பற்றிய ஆளுநரின் அறியாமை'' காணொலி சிறப்புக் கூட்டம் 

கடந்த 21.10.2022 அன்று மாலை 6 மணியளவில்  ‘‘திருவள்ளுவர்பற்றிய ஆளுநரின் அறியாமை'' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலிக் கூட்டத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செய லாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

திராவிடர் கழகத்திற்கு நன்றி!

தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்.

‘‘திருவள்ளுவர்பற்றிய ஆளுநரின் அறியாமை'' என்னும் காணொலி சிறப்புக் கூட்டத்தை உரிய நேரத்தில் நடத்திக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத்திற்கு முத லில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடம் தமிழை மறைத்தது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றவர்கள், இன்றைக்கு ஆளுநர் திருக் குறளை மறைக்கிறபொழுது, உண்மைகளை மறைக்கிற பொழுது வாய் திறந்து பேசுபவர்களை எங்கேயும் காணவில்லை.

யார் பேசுகிறார்கள்?

பெரியார் திடல்தான் என்பது 

வரலாற்றின் உண்மை

தமிழுக்கு ஒரு தீங்கு வருகிறபொழுது, திருக்குறளுக்கு ஓர் அவமரியாதை வருகிறபொழுது, பெரியார் திடல் தான் எழுகிறது என்பது வரலாற்றின் உண்மை.

ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் பல்வேறு சிக்கல்கள் எழும்பொழுதெல்லாம் முதல் குரல் திடலில் இருந்துதான் எழுகிறது; இப்பொழுதும் எழுகிறது.

ஆளுநருக்குப் பல பணிகள் உண்டு. ஆனால், அவர் கவனமாக இருக்கிறார், அவருக்குரிய வேலை எதையும் செய்யாமல், அவருக்கு எது தொடர்பில்லையோ, அந்த வேலைகளையெல்லாம் மிகச் சரியாக செய்து கொண்டிருக்கிறார்.

ஆளுநர் எதற்காக நியமிக்கப்பட்டு இருக்கிறார்?

வருத்தத்திற்குரியது அல்ல - கண்டிக்கத்தக்கன!

திருக்குறள் ஆராய்ச்சி செய்வதற்காகவா?

ஆராய்ச்சி செய்யலாம், ஒன்றும் தவறில்லை. திருக்குறளைப் பரப்பலாம், நல்லதுதான். ஆனால், தமிழும் தெரியாது, திருக்குறளும் தெரியாத ஒருவர், திருக்குறளைப்பற்றிப் பேசுவதும், அதுவும் அந்தத் திருக்குறளின் சாரத்தைக் கொச்சைப்படுத்துவதும், இது எங்கிருந்து வந்தது தெரியுமா? என்று தொடர்பில்லாத இடத்தைச் சுட்டிக்காட்டுவது இவையெல்லாம் வருத்தத் திற்குரியது அல்ல - கண்டிக்கத்தக்கன.

மிகமிக கண்டனத்திற்குரிய சொற்களைத்தான் தொடர்ந்து தமிழ்நாட்டினுடைய ஆளுநராக இருக்கிற ஆர்.என்.ரவி என்று அறியப்படுகிற ஆர்.எஸ்.எஸ். ரவி பேசிக்கொண்டே இருக்கிறார்.

திருக்குறள்பற்றி 

திரித்துச் சொல்கிறார் ஆளுநர்!

அவர், திருக்குறள் தன் பொருளை இழந்துவிட்டது என்கிறார். பரிமேலழகரினுடைய நுண்மான் நுழை புலத்தை நாம் ஏற்கிறோம். ஆனால், அவர் திருக்குறள் கூறும் கருத்துகளை திரித்துச் சொல்லியிருக்கிறார்.

மக்கட்பேறு என்கிற அதிகாரத்தைக்கூட புதல்வரின் பேறு என்றுதானே பரிமேலழகர் சொல்கிறார். ஏன் புதல்வியைப் பெற்றால், அது மக்கட்பேறு ஆகாதா? புதல்வரைப் பெற்றால்தான், ஒருவரின் பிள்ளைகளா?

எதைப்பற்றியும் தரக்குறைவாகப் பேசலாம் என்று கருதுகின்றார் ஆளுநர்!

இப்படி பரிமேலழகர் பல இடங்களில், திருக்குறளின் கருத்தைச் சொல்லியிருக்கிறபொழுதும், நான் அவரு டைய உரையை ஏற்றுக்கொண்டு, விமர்சனம் செய்த வன். ஆனால்,  எதைப்பற்றியும் அறியாதவன், எக்கண மும் உணர்வு இல்லாதவன், எதனோடும் தொடர்பு இல்லாதவன் - நம்முடைய ஆளுநராக இருக்கிற ரவி அவர்கள், எதைப்பற்றியும் தரக்குறைவாகப் பேசலாம் என்று கருதுகின்றார்.

ஆளுநர் மாளிகை எதற்கெல்லாம் பயன்படுகிறது?

ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படுகிற கோப்புகள் அங்கே அப்படியே கிடக்கின்றன. நீங்கள் எந்தக் கோப்புகளை வேண்டுமானாலும் அனுப்புங்கள்; அவர் எல்லாவற்றையும் அடுக்கி வைத்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அது என்ன நியாயம்?

தமிழ்நாட்டிற்கு எதிராக, 

தமிழ் இனத்திற்கு எதிராக...

அந்த ஆளுநர் மாளிகை, 156 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள அந்த இடத்தில் அவர் அமர்ந்துகொண்டு, தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழ் இனத்திற்கு எதிராக கருத்துகளைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக் கின்றார்.

அய்யன் திருக்குறளை கொச்சைப்படுத்துவது என்பது இது முதல் தடவையல்ல. திரும்பத் திரும்ப அதனைச் செய்து கொண்டிருக்கிறார்.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்பு, பெரியார் திடலில், திராவிட இயக்கத் தமிழர்  பேரவையின் சார்பில், ஆளுநரின் திருக்குறள் மரியாதையைக் கண்டித்து, நானும், பேராசிரியர் கருணானந்தம் அவர்களும் உரையாற்றினோம்.

ஜாதி சாயத்தைப் பரவ வைக்கவேண்டும் என்பதற்காக உண்மைகளையெல்லாம் 

மாற்றி மாற்றிச் சொல்கிறார்

அப்பொழுது உரையாற்றும்பொழுது சொன்னேன், இப்படி உண்மைகளை எடுத்துரைத்ததால், அவர் அதனைப் புரிந்துகொண்டு, அடுத்த நொடியே திருந்தி விடக் கூடியவர் அல்ல. அவர் எதையும் அறியாமல் செய்யவில்லை; அறிந்து செய்கிறார்; வேண்டுமென்றே செய்கிறார். எந்த நிலையையும் அரசியல் ஆக்குகிறார்; கட்சி அரசியல் ஆக்குகிறார்; இங்கே ஜாதி சாயத்தைப் பரவ வைக்கவேண்டும் என்பதற்காக உண்மைகளை யெல்லாம் மாற்றி மாற்றிச் சொல்கிறார் என்று  நான் குறிப்பிட்டேன்.

ஜி.யு.போப் மொழி பெயர்த்த திருக்குறளில் என்ன குற்றம் கண்டார் நம்முடைய ஆளுநர்?

அதில் முதல் குறளிலேயே, வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் - ஆதிபகவன் என்பதற்கு, ஜி.யு.போப் உரை எழுதுகிறபொழுது, அவர் ‘காட்' என்ற சொல்லைத்தான் பயன்படுத்தி இருக்கிறார். அதில் ஒன்றும் பிழையில்லையே.

திரித்துப் பேசுவது ‘ஜி.யு.போப்'பா? அல்லது நம்முடைய ஆளுநரா?

ஆனால், எல்லாவற்றையும் மறைத்து, உரையின் தன்மையைக் குறைத்து, ‘‘இந்து மதத்திற்கே உரிய, சனாதன தர்மத்தை எடுத்துரைக்கிற, திருக்குறளை திரித்துப் பேசுகிறார் ஜி.யு. போப்'' என்று கூறுகிறார்.

திரித்துப் பேசுவது ‘ஜி.யு.போப்'பா? அல்லது நம்மு டைய ஆளுநரா? என்பதையெல்லாம் நாம் விரிவாகப் பேசலாம். எது என்னை தடுக்கிறது என்று கேட்டால், நான் மிகப்பெரிய திருக்குறள் ஆய்வாளன் இல்லை என்றாலும், திருக்குறளைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருப்பவன். திருக்குறளிலிருந்து மாறாத காதல் உடையவன். மிகச் சிறந்த தமிழாசிரியரிடமிருந்து திருக்குறளைக் கற்றுக்கொண்டவன். அத்தனை திருக் குறள் அறிவையும் இந்த ஆளுநருக்கு விடை சொல்லப் பயன்படுத்தினால், அது எனக்குத் திருக்குறள் கற்றுக் கொடுத்த தமிழ் அறிஞர்களுக்கும் அவமானம்; திருவள்ளுவருக்கும் அவமானம்.

திருக்குறளைப்பற்றி ஒன்றுமே அறியாதவரோடு....

ஏனென்றால், திருக்குறள் அறிந்தவர்களோடு நான் திருக்குறள்பற்றி பேசவேண்டும். திருக்குறளைப்பற்றி ஒன்றுமே அறியாதவரோடு நான் விவாதம் செய்தால், பார்ப்பவர்கள் நம்மையும் சேர்த்து அந்தக் களத்திலே வைத்துவிடுவார்கள்.

எனவே, ஆளுநர் செய்துகொண்டிருக்கின்ற இந்த தேவையற்ற வேலைகளை நிறுத்துவதற்கு - நண்பர்கள், தமிழ் அறிஞர்கள் எழவேண்டும்; தமிழ் உணர்வாளர்கள் எழவேண்டும். இப்படிப்பட்ட உளறல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று நாடு முழுவதும் எதிரொலி கேட்கவேண்டும் என்பதற்காகத்தான், இன்றைக்குப் பெரியார் திடலில் நம்முடைய ஆசிரியர் அவர்கள், அந்த அறியாமையை, ஆளுநருடைய அவசியமற்ற பேச்சுகளைக் கண்டித்து இந்தக் காணொலி கருத்தரங் கத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஆசிரியர் எடுத்த முதல் முயற்சியில் 

நாம் அத்துணை பேரும் துணை நிற்போம்!

எனவே, இந்தக் கருத்தரங்கம் ஒரு தொடக்கம். இது விரைவில் பல கிளைகள் என  புறப்படும். இது மறுபடியும், மறுபடியும் அவர் இப்படிப்பட்ட தவறான பேச்சுகளைப் பேசாமல் தடுக்க - அதற்கான முதல் முயற்சி இது. ஆசிரியர் எடுத்த முதல் முயற்சியில் நாம் அத்துணை பேரும் துணை நிற்போம் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் காணொலிமூலம் உரையாற்றினார்.


No comments:

Post a Comment