கோவை தாக்குதல்: ஆளுநருக்குத் தமிழ்நாடு அரசு பதிலடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

கோவை தாக்குதல்: ஆளுநருக்குத் தமிழ்நாடு அரசு பதிலடி

சென்னை, அக்.29  கோவையில் கடந்த 23 ஆம் தேதி சிலிண்டர் வெடித்து  கார் சிதறிய தில் இளைஞர் ஒருவர் பலியானார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் பற்றி என்.அய்.ஏ. விசாரணை நடத்த தமிழ் நாடு அரசு பரிந்துரை செய்தது. அதன்படி என்.அய்.ஏ. விசாரணை தொடங்கி உள்ளது. 

இந்நிலையில் கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கோவை கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் குறித்து பேசி னார். அப்போது இந்தச் சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என்றும், வழக்கு விசாரணை தாம தமாக என்.அய்.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். 

தமிழ்நாடு ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு களுக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழ்நாடு ஆளுநர் கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் பேசும்போது, வெளி யிட்டிருக்கக்கூடிய கருத்து குறித்து அரசின் சார்பில், சில விளக்கங்களை குறிப்பிட விரும்புகிறேன். 

தீபாவளிக்கு முந்தைய நாள் காலையில் நடைபெற்ற சம்பவத்தின் அடிப்படையில், இந்த சம்பவம் நடந்த 4 நாள்களுக்கு பிறகு தான் தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது குறித்து சில கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார். கோவை மாநகரத்துக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில், 23 ஆம் தேதி அதிகாலையில் ஒரு கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் நடந்ததை நன்றாக அறிவோம். அந்த சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று, ஆய்வு பணி மேற்கொண்டார்கள். அங்கு இருக்கக்கூடிய தடயங்களை அவர்கள் ஆய்வு செய்திருக் கிறார்கள். ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அளித்த தகவலின்படி, கோவை காவல்துறை ஆணையரும், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கே இருந்த சில தடயங்களை பார்த்துவிட்டு காவல்துறை தலைமை இயக்குநர், கூடுதல் காவல்துறை இயக்குநர், உளவுத்துறையில் இருக்கும் உயரதிகாரிகள், சட்டம்-ஒழுங்கில் இருக்கும் அதிகாரிகள் அனைவருக்கும் அந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே உடனடி யாக தகவல் தெரிவித்து, விசாரணை உட னடியாக தொடங்கப்பட்டது.

கூட்டாளிகள் கைது

இந்த சம்பவம் நடந்த அன்றைய தினமே இந்த வெடி விபத்தில் இறந்த ஜமேஷா முபின், உடனடியாக அடையாளம் காணப் பட்டு,, 24 மணி நேரத்துக்கு உள்ளாக அவ ருடைய வீடும் சோதனை செய்யப்பட்டி ருக்கிறது. 

அந்த வீட்டில் சோதனையிடப்பட்டதன் அடிப்படையில் இது சிலிண்டர் விபத்து அல்ல. இதற்கு பின்புலத்தில் பயங்கரவாத செயல்கள் இருக்கக்கூடும் என்பதை காவல் துறையால் உறுதி செய்யப்பட்டு, உடனடியாக விசாரணையை முடுக்கிவிட்டு அன்றைய தினமே ஜமேஷா முபினின் கூட்டாளிகளை யும் அடையாளம் கண்டு கைது செய்து, விசா ரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது. 

24 ஆம் தேதியன்று காலையிலேயே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ஒன் றிய உளவுப் பிரிவு அதிகாரிகள் அத்தனை பேரும் மாநில காவல்துறை அதிகாரிகளோடு இணைந்து அங்கு இருக்கக்கூடிய தடயங் களை ஆய்வுகள் செய்தார்கள். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் பொதுவாக மாநில காவல் துறைக்கு தனிச்சிறப்பு உண்டு. இத்தகைய பயங்கரவாத செயல்கள், குற்ற பின்னணிகள், வெடிமருந்து சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் எப் போதும் ஒன்றிய அரசில் இருக்கக்கூடிய உளவு அமைப்புகளோடு இணைந்து செயல்படக் கூடிய நடைமுறையை தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

இந்த வழக்கு 25 ஆம் தேதி பயங்கரவாத செயல்கள் தடை சட்டத்துக்கு (உபா) கீழ் கொண்டுவரப்பட்டு, உடனடியாக வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது. 25 ஆம் தேதியே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளான காவல்துறை துணைத்தலைவர், கண்காணிப் பாளர்கள், நம்முடைய காவல்துறை அதி காரிகள் கூட்டத்திலேயே பங்குபெற்று மேற் கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகளை நம்முடைய காவல் துறையினருடன் இணைந்தே மேற்கொண் டனர். 

இந்தக் கூட்டத்துக்கு பிறகு 26 ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ஒன் றிய உளவுத்துறை அதிகாரிகள் இணைந்து சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் விசா ரணை நடத்தினார்கள். 

பொதுவாக ஒரு மாநிலத்தில் இப்படி சம்பவம் நடந்தால், முதற்கட்ட விசார ணையை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அந்த மாநில காவல்துறையைச் சார்ந்ததாக இருக்கிறது. இந்த விசாரணையின் அடிப்படையில் இத்தகைய பயங்கரவாத தொடர்பு இருக்கிறது. வேறு ஏதோ மாநிலம் விட்டு மாநிலத்தில் இருக்கக்கூடிய பயங்கரவாத செயல் இருக்கிறது என்பது போன்ற நிலைகள் கண்டறியப்பட்டால், தேசிய புலனாய்வு முகமையே நேரடியாக இந்த வழக்கை எடுத்து விசாரிக்கக் கூடிய அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் முழுமையாக இந்த விசாரணையிலே நம்மோடு இணைந்து இருந்தார்கள். 

என்.அய்.ஏ. விசாரணை

இந்த சூழ்நிலையில்தான் தமிழ்நாடு அரசு கிடைத்திருக்கக்கூடிய தகவல்களையெல்லாம் ஒன்று திரட்டி இந்த வழக்கை அவர்களே (என்.அய்.ஏ.) விசாரிக்கலாம் என்று மாற்றி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, 26 ஆம் தேதியன்றே இந்த புலன் விசாரணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியிருக்கிறார்கள். எனவே, இந்த சம்பவம் நடந்தது முதல் தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை எடுத்துக்கொள்வது வரை அனைத்து விவரங்களும் தமிழ்நாடு காவல்துறையினரால் ஒன்றிய உளவுத் துறைக்கும், தேசிய புலனாய்வு முகமைக்கும் தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்து இருக்கிறது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். 

இந்த சூழ்நிலையில் இன்னொன்றையும் நான் தெரிவிக்க வேண்டும். வெடிவிபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு என்.அய்.ஏ.வால் விசாரிக்கப்பட்டு இருக்கிறார். என்.அய்.ஏ. விசாரணை வளையத்தில் கொண்டு வந்தவர், அதன் பிறகு ஏன் விடுவிக்கப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியாது. அது குறித்த விவரங்கள் எங்களிடத்தில் இல்லை. அது அப்போது விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு தான் தெரியும். தற்போது எந்தவொரு கட்டத்திலும் தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் சொல்லப்படாமலோ, ஒன்றிய உளவுப்பிரிவுக்கு செய்திகள் பகிர்ந்து கொள்ளபடாமலோ இல்லை. தொடர்ச்சியாக அவர்களும் நம்மோடு இணைந்துதான் பயணித்திருக்கிறார்கள். அவர்களும் விசாரணையில் பங்கு பெற்றிருக்கிறார்கள். அவர்களை விடுவித்துவிட்டு தமிழ்நாடு காவல்துறைதுறை மட்டும் ஏதோ செய்துவிட்டது போலவும், இந்த விசாரணையை தாமதப்படுத்த முயற்சி நடப்பதாகவும் ஒரு ‘மாய தோற்றத்தை' உருவாக்க நினைப்பது சரி அல்ல. 

முதலமைச்சர், இந்த சம்பவம் நடைபெற்ற 23 ஆம் தேதி அதிகாலையில் இருந்து ஒவ்வொரு நாளும் அவரே நேரடி கண்காணிப்பு, பார்வையில் இந்த விசாரணை சரியான பாதையில் செல்ல வேண்டும் என்று முடுக்கிவிட்டார். தீபாவளி அன்று தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் மக்களிடம் எந்தவிதமான பதற்றமான மனநிலை வந்துவிடாமல் இயல்பான நிலையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் வைத்திருப்பதற்கான நடவடிக்கையும் முதலமைச்சர் மேற்கொண்டிருந்தார். அவருடைய சீரிய வழிகாட்டுதலின் கீழ் இயங்க கூடிய தமிழ்நாடு அரசின் காவல்துறை இந்த விஷயத்தை மிகத்திறமையாக கையாண்டு புலனாய்வில் ஈடுபட்டிருக்கிறது. 

இந்த வெடிவிபத்து சம்பவத்தை பொறுத்தமட்டில் முழுமையாக என்.அய்.ஏ. மற்றும் ஒன்றிய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விசாரணையில் பங்கெடுத்து உள்ளனர். என்.அய்.ஏ.யின் உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் யார், யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், கூட்டாளிகள் யார்? வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்பது போன்ற முழு தகவல்களையும் முதலமைச்சரின் நேரடி உத்தரவின் பேரில் விசாரணை அதிகாரிகள் முழுமையாக திரட்டி அதனை என்.அய்.ஏ.க்கு அளித்துள்ளனர். 

தமிழ்நாட்டில் எந்தக் காலகட்டத்திலும், எந்த சூழலிலும் தீவிரவாத, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அதில், முதலமைச்சர் மிக உறுதியாக உள்ளார். 

இதுபோன்ற தீவிரவாத செயல்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழ்நாட்டில் அதற்கு அனுமதியில்லை. இதுபோன்ற செயல்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விரட்டி அடிக்கக்கூடிய உறுதிபடைத்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். 

தற்போது என்.அய்.ஏ. அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். 

இவ்வாறு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

No comments:

Post a Comment