கொலை வழக்குகளுக்கு தனிப்பிரிவு உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

கொலை வழக்குகளுக்கு தனிப்பிரிவு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, அக். 12- கொலை வழக்கு விசாரணைக்கு என தனிப்பிரிவை ஏற்படுத்துவது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் தரப்பில் அறிக்கையளிக்க உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டு உள்ளது. 

திருச்சி மாவட்டம்,  அரியமங்கலம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சதீஷ் குமார், சங்கர், மற்றொரு சதீஷ்குமார் ஆகியோருக்கு கடந்த 2017இல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 3 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தனர். அதை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை 3 பேரையும் விடுதலை செய்தது. மேலும் காவல்துறைக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியது. இந்த வழிகாட்டுதல்களை நிறைவேற்றியது குறித்து அறிக்கையளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்த மனுவை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 

கொலை குற்றங்கள் கடுமையானவை. சட்டம் - ஒழுங்கு காவல்துறையினரே தங்களின் வேலைப் பளு விற்கு இடையே கொலை குற்றங்களையும் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, கொலை குற்றங்களை விசாரிப்பதற்கென்று தனிப்பிரிவை ஏற்படுத்துவது தொடர்பாக அரசின் நடவடிக்கையை தீவிரமானதாக பார்க்கிறோம். சட்டம் - ஒழுங்கு காவல்துறையினரே கொலை வழக்கை விசாரிப்பதால் தொய்வு ஏற்படுகிறது.

எனவே, கொலை வழக்குகளை மட்டும் விசாரிக்கும் வகையில் அதற்கென தனிப்பிரிவை உருவாக்க வேண் டியது அரசின் கடமை. தனிப்பிரிவை உருவாக்குவது தான் சட்டம் - ஒழுங்கு காவல்துறையினருக்கு சுமையை குறைக்கும். இதன் மூலம் தான் கொலை வழக்குகளின் மீதான விசாரணையை திறம்பட மேற்கொள்ள முடியும். எனவே, காவல் துறையில் கொலை வழக்குகளை விசாரிப்பதற்கென்ற தனிப்பிரிவை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கை குறித்த அறிக்கையை, காவல்துறை டிஜிபி தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். 

-இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை 7.11.2022 தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment