‘சப்கா சாத்; சப்கா விகாஸ்' என்ற கோஷம் கொடுத்து இளைஞர்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வந்த மோடி ஆட்சியின் நிலை என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

‘சப்கா சாத்; சப்கா விகாஸ்' என்ற கோஷம் கொடுத்து இளைஞர்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வந்த மோடி ஆட்சியின் நிலை என்ன?

கட்சிக்குள்ளேயே பொருளாதார வீழ்ச்சிபற்றி எதிர்க்குரல் வெடித்துக் கிளம்பிவிட்டதே!

‘குஜராத் மாடல்' ஏமாற்று; ‘திராவிட மாடலே' வளர்ச்சிக்கு மாடல்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த பிரதமர்  மோடி தலைமையிலான ஆட்சியில், மக்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் குரல் வெடித்துக் கிளம்பியது; ‘குஜராத் மாடல்' என்று மக்களை ஏமாற்றினர். ‘திராவிட மாடல்' என்பதே மக்கள் வளர்ச்சிக்கான திட்டம்  என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

2014 இல் ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் அன்றைய குஜராத் முதலமைச்சராக பல ஆண்டுகள் இருந்த நரேந்திர மோடியை, பிரதமர் பதவிக்குத் தயார்படுத்தி, களத்தில் இறக்கின.

காங்கிரஸ் இரண்டுமுறை தொடர்ந்து மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியில் இருந்ததை - ஆட்சிக்கு எதிரானப் போக்கு  (Anti incumbency)  பெருகிவிட்ட தெனவும், படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு - ‘குஜராத் மாடல்' அரசு மத்தியில் வந்தால், மேலும் அதிகரிக்கும் என்றும் இளைஞர்களை நம்பச் செய்தும், சமூக வலைதளங்களில் தீவிரப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டனர்.

இளம் வாக்காளர்களை நம்பும்படியும் செய்தார்கள்!

‘சப்கா சாத்; சப்கா விகாஸ்' என்ற வளர்ச்சி இலக்கு கோஷம் கொடுத்து நம்ப வைத்தனர்!

‘‘நான் பதவிக்கு வந்தவுடன் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வந்து விழும்.''

(இதைப்பற்றிக் கேட்டால், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘அது வெறும் ஜூம்லா'' (போகிற போக்கில் சொல்லும் ஏமாற்றுத்தனம்) என்கிறார்).

‘‘ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் உறுதியாகத் தரப்படும்.'' 

(இப்போது 8 ஆண்டுகளில் 16 கோடி வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும்).

‘‘காங்கிரஸ் ஆட்சி 60 ஆண்டுகளாகச் செய்யாததை ஆறே ஆண்டுகளில் செய்து காட்டுவேன்.''

- இப்படியெல்லாம் வாக்குறுதிகளை பஞ்சமில்லாமல் வாரி வாரி விட்டதோடு, இளம் வாக்காளர்களை நம்பும் படியும் செய்தார்கள். தேர்தல் நேர வித்தைகளாலும், தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெறாத மாநிலங்களிலும், வெற்றி பெற்ற கட்சிக்காரர்களை ‘‘விலைக்கு வாங்கி'' குதிரைப் பேரம் நடத்தி, ‘‘ஆயாராம்; காயாரம்'' நடத்தி நாட்டில் சுமார் 7, 8  மாநிலங்களில்  அதே முறையில் பா.ஜ.க. ஆட்சியையும் அமைத்து வருகின்றனர்.

கொடுத்த வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டனவா?

ஆனால், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட் டனவா?

‘‘தங்களுக்கே உரிய'' கோயபெல்ஸ் பிரச்சாரத்தி னாலும், ‘கார்ப்பரேட் கனதனவான்கள்' என்ற பணத்திமிலங்களின் தாராளத்தாலும், ஊடகங்களின் உதவியாலும் (அவைகளும் கார்ப்பரேட் முதலாளிகளின் கடை விரிப்புகள்தான்) இரண்டாவது முறையும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியை தக்க வைத்தனர்!

ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டனவா?

வரலாறு காணாத பணவீக்கம்!

அன்றைய நிதியமைச்சருக்கே (அருண்ஜெட்லி) தெரியாத பண மதிப்பிழப்பு  (Demonetisation) ஒரே இரவில் பிரதமரால் அறிவிக்கப்பட்டது.

‘‘கருப்புப் பண ஒழிப்பு'' என்று நம்ப வைத்தனர்; கருத்தரிக்கும் என்று நம்பிய தாயின் வயிற்றில் இருந்து குழந்தை பிறக்கவில்லை; கட்டிகள்தான் வெளியே வரும்படி அகற்றப்பட்டு, மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்து, கள்ள நோட்டுப் புழக்கம் பெருகியது என்று சொல்லப்படும் நிலையே ஏற்பட்டது! 2000 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் பெருமளவில் புழக்கத்திற்கு வந்ததுபற்றி செய்திகள் உலா வந்தன.

இன்று வரலாறு காணாத பணவீக்கம் (Inflation); வேலையில்லாத் திண்டாட்டம் - இளைஞர்களை மிகவும் அலைக்கழித்துக் கவலைக்குள்ளாக்குகிறது.

ரூபாயின் மதிப்பு - யு.எஸ். டாலருக்கு நிகராக இதுவரை எப்போதுமில்லாத கீழிறக்கம் - மதிப்புக் குறைவு ஏற்பட்டு, ஒரு யு.எஸ். டாலர்  வாங்க, இந்திய ரூபாயில், ரூ.81.40 அளவுக்குக் கொடுக்கவேண்டிய ‘கொடூரமான' நிலை!

விலைவாசிகளோ, விண்ணை முட்டுகின்றன; ஏற்றுமதிகள் குறைவு; இறக்குமதிகள் அதிகம். அந்நிய செலாவணி இருப்பு குறைவு.

மக்கள் உடைமைகள்- தனி மனிதர்களின் சொத்தாக கைமாறிக்கொண்டே உள்ளது!

நாட்டில் இதற்கு முந்தைய காங்கிரசின் கட்சியின் ஆட்சியை குறைகூறி பதவிக்கு வந்த பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். - மோடிக் கும்பல், நாட்டுடைமைகளான ரயில்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல்; விமானப் போக்குவரத்தும் தனியார்த் துறைக்குத் தாரை; விமான நிலையங்களும், விளையாட்டு மைதானங்களும்கூட அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும் விற்பனை; அல்லது குத்தகை!

மக்கள் உடைமை; ‘தனிப் பெரும் முதலாளி'களின் சொத்தாக நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் கைமாறிக்கொண்டே உள்ளது!

ஆனால், பிரதமர் தமது ஆட்சியில் ஏதோ பெரும் வளர்ச்சி ஏற்பட்டதுபோல் துள்ளுகிறார்; நிதியமைச் சரோ‘‘எல்லாம் சரியாக இருக்கிறது'' என்று முடிவெடுத்து, பொருளாதார நிலையின் உண்மை நிலவரத்தை ஒப்புக்கொண்டு, போதிய பரிகாரம் தேடும் மனநிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.

- மேற்காட்டிய கருத்துகளையும், கவலைகளையும் நாம் கூறுவதாகக்கூட நினைக்க வேண்டாம்.

ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல்!

பிரதமரின் அமைச்சரவையில் மிக முக்கியமான மூத்த அமைச்சரும், மேனாள் பா.ஜ.க. தலைவரும், நாக்பூரைச் சேர்ந்தவருமான நிதின்கட்காரி அவர்கள் (பிரதமருக்கும், இவருக்கும் ஏழாம் பொருத்தம் என்று கூறுகிறார்கள் - அரசியல் நோக்கர்கள்; அது நமக்கு முக்கியமல்ல...). இவர், மோடி அமைச்சரவையில் முக்கிய மூத்த அமைச்சராக, சுதந்திரமாகச் செயல்பட்டு வருபவர்.

அவர் சில நாள்களுக்குமுன் நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் - ‘‘பாரத் விகாஸ் பரிஷத்'' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

‘‘இந்தியா வளமான நாடாக இருந்தாலும், இங்குள்ள மக்களின் வறுமை, பட்டினி, வேலையில்லா திண்டாட் டம், ஜாதி வெறி, தீண்டாமை மற்றும் பண வீக்கம் முதலியவற்றை மக்கள் எதிர்கொள்கிறார்கள்.

இங்கே பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த இடைவெளியைக் குறைக்கவேண்டும்.

நாட்டின் நகர்ப்புறங்களில் நிறைய வளர்ச்சி; ஆனால், கிராமப் புறங்களில் வசதிகள், வாய்ப்புகள் போதிய அளவில் ஏற்படவில்லை. எனவே, ஏற்ற - தாழ்வு,

விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது;

பண வீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டை மோசமாகப் பாதித்துக் கொண்டுள்ளது.''

நிதின் கட்காரியின் இந்தப் பேச்சுகள் (நேற்றைய ‘விடுதலை'யிலும் வெளிவந்துள்ளது) பல சமூக வலைதளங்களில் உலா வருகின்றன!.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலேயின் கூற்று!

அதைவிட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய தலைவரும், மோகன் பகவத்திற்கு அடுத்து முக்கியத் துவம் வாய்ந்தவரும், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுபவருமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலே அவர்கள், ‘‘ஏழை - பணக்காரர் இடைவெளி எவ்வளவு வேகமாக நாட்டில் இப்போது (இந்த ஆட்சியில்) உருவாகி படமெடுத்தாடுகிறது'' என்று விளக்கியுள்ளாரே, அதற்கு காவிகள் என்ன பதில் கூறுவார்கள்?

‘‘இந்தியாவின் ஒரு சதவிகித (1%) பணக்காரர்கள், நாட்டின் 20 சதவிகித செல்வத்தைத் தம் வசம் வைத்துள்ளனர்; மற்ற 50 சதவிகிதத்தினர் 13 சதவிகித செல்வத்தை வைத்துள்ளனர்.

20 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழு கிறார்கள்; 23 கோடி மக்களுக்கு ஒரு நாள் வருமானம் வெறும் 375 ரூபாய்தான்.

வேலையில்லாத் திண்டாட்டம் 7.6 சதவிகிதம். அரசாங்கத்தின் கொள்கைகளை நாங்கள் வகுப்பதில்லை என்று கைகழுவுகிறார்!''

ஒருபுறம் நிதின்கட்காரி; மறுமுனையில் ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலே கூற்று.

ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் - மோடி அரசுக்கும் பனிப் போர் என்று எடுத்துக்கொள்வதா? இல்லையா என்பது தான் நம் கேள்வி!

முன்பு, இளம், புதிய வாக்காளர்களுக்கு நம்பிக்கைத் தேனைத் தடவி, ஆட்சியைப் பிடித்தவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் - ஹிந்துத்துவாவை நிலைப்படுத்தவே பல முறைகளைக் கையாண்டனர். 

இரண்டு நிகழ்வுகள்:

1. காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து ரத்து

2. இராமன் கோவில் - பாபர் மசூதி இடித்த இடத்தில். (மற்றொன்றும் நடைமுறையில்).

மற்றபடி மக்கள் நலன் சார்ந்து, நாட்டின் வளர்ச்சி சார்ந்த ‘அச்சேதின்' எந்த நிலையில் உள்ளது?

ஆட்சியைப் பிடிப்பதற்கு அதிகாரத் தூண்களைத் தம்வசப்படுத்தி விட்டால், வளர்ச்சி தானே வருமா?

இப்போது கேட்கப்படவேண்டிய மில்லியன் டாலர் கேள்வி!

எதிர்க்கட்சிகளிடம் இருந்துவரும் எதிர்ப்புக் குரலை விட, அவரது அமைச்சரவை, அவர்களை ஆட்சியில் அமர வைக்கும் ஆர்.எஸ்.எஸ்.கூட முன்வந்து இந்த வேதனையான பொருளாதார சமூக கீழிறக்கத்தைச் சுட்டிக்காட்டுகிற அளவுக்கு வந்துவிட்டதே!

அவர்களும் தேசபக்தியற்ற தேசத் துரோகிகளா? இதுதான் இப்போது கேட்கப்படவேண்டிய மில்லியன் டாலர் கேள்வி!

‘குஜராத் மாடல்' என்ன என்பது புரிந்து வருகிறது! 

அதேபோல், தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்' என்னவென்பது புரிந்தும், மற்ற மாநிலத்தவர் அதிசயிக்கும் வண்ணமும் தமிழ்நாட்டு வளர்ச்சி உள்ளது என்பதை எவரே மறுக்க முடியும்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.10.2022

No comments:

Post a Comment