‘தீபாவளி'யால் ஏற்பட்ட காற்று மாசுபாடும் - பொருட்சேதங்களும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

‘தீபாவளி'யால் ஏற்பட்ட காற்று மாசுபாடும் - பொருட்சேதங்களும்!


சென்னை, அக்.25 தீபாவளியால் நாடெங்கும் காற்று மாசுபாடும் - பொருட்சேதங்களும் ஏற்பட்டன. 

அதன் விவரம் வருமாறு:

கடந்த ஆண்டை விட பல மடங்கு 

புகைமாசு சென்னையை சூழ்ந்தது

உலகத்திலேயே முதியவர்கள் சுவாசநோய் பிரச்சினை உள்ளவர்கள். குழந்தைகள் அச்சத்துடன் இருக்கும் ஒரே விழா தீபாவளி ஆகும். 

 ஆண்டுதோறும் அரசுகளும், நீதிமன்றமும் பல எச்சரிக்கைகளை விடுத்தும் மக்கள் சூழியல் அக்கறையின்றி சுயநலத்திற்காக வெடித்துத்தீர்க்கும் பட்டாசுகளால் இந்தியா வில் அனைத்து நகரங்களுமே கடுமையாக காற்று மாசு மற்றும் ஒலிமாசிற்கு ஆளாகின்றன.

தமிழ்நாட்டில் ‘தீபாவளி’யின் போது அதிகாலை மற்றும்  இரவில் மக்கள் அனைவரும் பட்டாசுகளை வெடித்தனர்.

வெடிக்கப்பட்ட பட்டாசுகள் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் நகர் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அம்பத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், கிண்டி, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், ஆழ்வார் பேட்டை என நகரின் பல பகுதிகளிலும் புகை மண்டலம் சூழ்ந்தது. சாலைகளே தெரியாத அளவிற்கு புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். முதியவர்கள் குழந்தைகள் மற்றும் சுவாசநோய்ப் பிரச்சினை உள்ளவர்கள், இரட்டை முகக்கவசம் அணிந்து வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை இறுக்கமாக மூடிக்கொண்டு தீபாவளியை கனத்த அச்சத்துடனே கழித்தனர். 

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒன்றரை மடங்கு காற்று மாசு ஏற்பட்டுள்ளதாகவும், எப்போதும் போல் பறவை மற்றும் மரங்களில் வாழும் அணில், உள்ளிட்ட ஊர்வனங்கள் அதிக அளவில் இறந்து சாலைகளில் கிடந்ததாக துப்புரவு தொழிலாளிகள் தெரிவித்தனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம்: அதிர்ச்சி தகவல்

தீபாவளியின் பெயரால் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் காற்று மாசு மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் எதிரொலியாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் காற்று தரக்குறியீடு 200 புள்ளிகளை கடந்து மோசமான காற்று மாசுவாக காணப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

அதில், மணலி கிராம பகுதியில் 250 புள்ளிகளையும், எண்ணூர் பகுதியில் 238 புள்ளிகளையும், இராயபுரத்தில் 232 புள்ளிகளையும் கடந்து காணப்படுகிறது. அதே போல் ஆலந்தூரில் 218 புள்ளிகளும், அரும்பாக்கத்தில் 212 புள்ளி களும், வேளச்சேரியில் 203 புள்ளிகளும், பெருங்குடியில் 190 புள்ளிகளும் காணப்படுகிறது.

மேலும் சென்னை மாநகரில் நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, இராயப் பேட்டை, மந்தைவெளி, கிண்டி, சென்ட்ரல், சேப்பாக்கம், பாரி முனை, திருமங்கலம், அண்ணாநகர், அமைந்தகரை, சூளை மேடு மற்றும் சென்னை புறநகர் பகுதியான முகப்பேர், பாடி, கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம், அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் வெடிகளை வெடித்த தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து மிகவும் அதிகப்படியான காற்று மாசு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

காற்று குறியீட்டை பொறுத்தவரையில் 50 புள்ளிகள் வரை நல்ல காற்று என்றும், 51 - 100 புள்ளிகள் வரை திருப்தி கரமான காற்று என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதே போல் 101 - 200 புள்ளிகள் வரை மிதமான காற்று மாசு என்றும், 200 - 300 புள்ளிகள் வரை மோசமான காற்று மாசு என்றும் காற்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறி யுள்ளது. அந்த வகையில் தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் 200 புள்ளிகளை தாண்டி இருப்பதால் மோச மான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

நாசமான அத்தியாவசியப் பொருட்கள். மருந்து குடோன் முற்றிலும் சாம்பல்

 சென்னை அசோக் நகர் 2 ஆவது அவென்யூ பகுதியில் மருந்து குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்  அப்பகுதியில் உள்ள அடுக்குமாடிக்குடியிருப்பில் பட்டாசுகள் வெடித்தனர். பட்டாசு தீப்பொறி அருகில் உள்ள மருந்து குடோனில் விழுந்தது, விடுமுறை நாள் ஆதலால் பல அத்தியா வசியப் பொருட்கள் வந்து இறங்கி உள்ளே எடுத்துச் செல்ல ஆட்கள் இல்லாமல் வளாகத்திலேயே வைக்கப்பட் டிருந்தது, இந்த பொருட்கள் மீது பட்டாசுகள் விழுந்து தீப்பற்றியது. 

 அதில் எளிதாக தீப்பிடிக்கும், சானிடைசர்கள் இருந்த காரணத்தால் தீப்பொறி பட்ட உடனேயே வெளியில் வைக்கப் பட்டிருந்த சரக்குகள் முழுவதுமே தீப்பிடித்த காரணத்தால் கட்டடம் முழுவதும் தீ பரவியது.

இதனை அடுத்து குடோன் மற்றும் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் கொளுந்து விட்டு எரிந்தன. தகவலறிந்து வந்த அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, தியாகராயர் நகர் மற்றும் தாம்பரம் பகுதியை சேர்ந்த தீயணைப்பு வாகனங் கள், கொளுந்து விட்டு எரிந்த கட்டடத்தின் தீயை அணைத் தனர். 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் பெரும் போராட்டத்திற்குப் பிறகு  தீயை அணைத்தனர்.

 தீ விபத்தில் மாஸ்க், கையுறை, சானிடைசர், கார், இருசக்கர வாகனம், மினி லோடு வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.  அருகில் இருந்த கட்டடங்களின் குளிர்சாதனம் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. காவல்துறையின் விசாரணையில், பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

 சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தீயணைப்புத்துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன், தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் தீ விபத்தின் சேதங்கள் குறித்து விசாரித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து நிகழ்வுகள் - தீயணைப்புத்துறை தகவல்

நாடு முழுவதும் தீபாவளியினால் தமிழ்நாடு முழுவதும் நேற்று  (24.10.2022) 280 தீ விபத்து நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.சென்னையில் மட்டும் 180 தீ விபத்து நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

பட்டாசு தீப்பொறியால்...

சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில், பட்டாசு தீப்பொறி விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. கொடுங்கையூர் பகுதியில் பட்டாசு வெடித்த போது, எதிர்பாராத விதமாகக் குப்பை கிடங்கில் தீப்பொறி விழுந்து எரியத் தொடங்கியது. தீ மளமளவென பரவி, குப்பை கிடங்கு முழுவதும் கொளுந்து விட்டு எரிந்தது. உடனடியாக, நிகழ்விடத்துக்கு விரைந்த தண் டையார்பேட்டை தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


No comments:

Post a Comment