பச்சைப்புளுகுப் பார்ப்பனர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

பச்சைப்புளுகுப் பார்ப்பனர்கள்

உண்மை அல்லாதவற்றை உண்மை போல் பேசுவதும், நிகழ்வுகளை திரித் துக்கூறுவதும், உரைகளை வெட்டி ஒட்டிப் பரப்புவதும் போன்ற அயோக் கியத்தனமான செய்கைகளையும் இன்று சங்பரிவார் கூட்டமும் பார்ப்பனர் களும் கூறுவது அனைவருக்கும் தெரியும். 

தெரிந்தே ஒரு பொய்யை சொல் வார்கள் அதன் உண்மைத்தன்மை பரவ ஆரம்பித்தவுடன் அடுத்த பொய்யை அவிழ்த்துவிடுவார்கள். இவை அனைத்தையும் தங்கள் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள். இப்போது தானா செய்கிறார்கள்?

தமிழக அரசியலில் நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம் இவை பற்றிய பச்சைப்  புளுகுகளை அவிழ்த்துவிட்டுப் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்ற பார்ப்பனர் பலர். அவருள் காங்கிரஸ்காரர் எஸ்.சத்தியமூர்த்தி அய்யர் முக்கியமானவர். சட்ட மன்றத்தில் கேள்வி கேட்பதற்கே காசு வாங்கிக்கொண்டு அதை நியாயப்படுத்திப் பேசிய  எஸ்.சத்தியமூர்த்தி அய்யரின் புளுகுகள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. இவரது புளுகுப் பிரச்சாரத்தையும் அந்நாளில் நீதிக்கட்சி சந்திக்க வேண்டியிருந்தது.

தாலி அறுத்த ராமசாமி

கவர்னர் கவுன்சிலின் நேர் பார்வையில் இருந்தது அன்றைய நீதித்துறை. நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புக்கும் நீதிக்கட்சி அமைச்சர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. 

1932ஆம் ஆண்டு தலைச்சேரி சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் திரு.டாட்வெல் அய்.சி.எஸ். என்ற ஆங்கிலேயர் திருமதி எல்.எஸ்.பிரபு என்ற பெண்ணைக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கம் குறித்த வழக்கொன்றில் விசாரித்தார். திரு.டாட்வெல் திருமதி பிரபுவுக்கு அபராதம் விதித்தார். திருமதி பிரபு அபராதத்தைச் செலுத்த மறுத்தார். எனவே அவர் தாலியை அகற்றுமாறு திரு. டாட்வெல் ஆணையிட்டார். அவருக்குத் தாலியின் ‘மகிமை’ தெரியாது. இதன் பின்னர் சென்னை அரசாங்கத்திடமிருந்து வந்த தந்திச் செய்தியின் மூலம் அந்தத் தாலியை அவரிடமே சேர்க்குமாறு அவருக்கு ஆணையும் பிறப்பிக்கப் பட்டது. ஆனால் திருமதி பிரபு அந்தத் தாலியைப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார் என்பது அரசு ஆணை  (பொது 312 நாள் 24.2.1932) தரும் செய்தி.

ஆனால் ஒரு வெள்ளைக்கார நீதிபதி அளித்த தீர்ப்பை நீதிக்கட்சி மீது சுமத்தி நச்சுப் பிரச்சாரம் செய்த கொடுமைக்குச் சொந்தக்காரர் எஸ்.சத்தியமூர்த்தி அய்யர். அவர் சர்.ஏ.இராமசாமி முதலி யாரை “ராட்சதன்” என்று குறிப்பிட்டே கூட்டங்களில் பேசுவார்; இச்செய்திகளை வைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் தாலியை அறுத்தது நீதிக்கட்சி ஆட்சி என்றும் அவ்வாறு தாலி அறுத்த ராமசாமி முதலிக்கா வாக்களிக்கப் போகிறீர்கள்? என்றும் பேசியவர் சத்தியமூர்த்தி அய்யர்.

பாரதியார் பாடல்களுக்குத் தடை

1928ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் ஆதரவுடன் சுப்பராயன் முதலமைச்சராக இருந்தபோது பாரதியார் பாடல்களுக்கு சென்னை அரசாங்கம் தடைவிதித்தது. தடையை விதித்தவர்கள் கவர்னர் கவுன்சிலில் இருந்தவர்கள். நீதிக்கட்சி யினர் அல்லர். இது காங்கிரஸ்காரர்களுக்கு நன்கு தெரியும். இருந்தபோதிலும் இது ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின் செயல் என்று கூறினர். டாக்டர் பி.வரதராஜூலு நாயுடுவை ஆசிரியராகக் கொண்ட “தமிழ்நாடு” இதழும் இப்பழியை நீதிக்கட்சி மீது சுமத்தி எழுதியது. நீதிக்கட்சி ஆட்சி செய்யாத ஒன்றுக்கு அதன்மீது இப்படி ஒரு பழி சுமத்தப்பட்டதைக் கண்ட தந்தை பெரியார் ஈ.வெ.ரா. 30.9.1928 நாளிட்ட “குடிஅரசு” இதழில் “பழி ஓரிடம் பாவம் ஓரிடம்” என்ற தலைப்பில் ஒரு மறுப்புக் கட்டுரை எழுதினார்.

- இறைவி


No comments:

Post a Comment