மேட்டூர் அணை நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 14, 2022

மேட்டூர் அணை நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர்,அக்.14- கருநாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, நட்றாம்பாளையம், கேரட்டி, ராசிமணல் உள்பட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் (12.10.2022) 26 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று (13.10.2022) 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, அய்ந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதையடுத்து மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்வதால் நடைபாதை பூட்டப்பட்டுள்ளது. மேலும் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தொடர்ந்து 4ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment