மருத்துவத் துறையில் 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

மருத்துவத் துறையில் 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திருச்சி,அக்.27 திருச்சி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டித்தரப்படும் என்றும், மருத்துவத் துறையில் காலியாக உள்ள 4 ஆயிரத்து 308 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.  

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதார பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத் தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணி யன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை பிரச்சினைகள் குறித்தும், அதற்கு தீர்வு காணும் வகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இதில் வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்படும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் குறித்தும் அதனை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 78 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களை அறிவித்தார். இந்த மய்யங்கள் 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் அமைவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அத்துடன் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சுகாதாரப் பணிகளுக்கான திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

 4,308 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் 

தமிழ்நாட்டில் இன்னும் 2 மாதத்தில் மருத்துவ துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும். இதில் ஒவ்வொரு துறையாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக சுகாதாரப் பணிகள் இணை இயக்கு நரிடம் அறிக்கையை கேட்கப்பட் டுள்ளது. அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்த நிதியாண்டில் அதற்கான பணிகள் மற்றும் நட வடிக்கைகள் தொடங்கும். தமிழ்நாட் டில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக கூறி ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். பொதுமக்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மருந்து இருப்பு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். அதற்கு எச் ஆர் மூலம் உரிய பதில் கிடைக்கும். 

 காஞ்சிபுரத்தில் சுமார் ரூ.300 கோடி செலவில் புற்றுநோய் ஆராய்ச்சி மய்யம் அமைப்பதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 6 லட்சத்து 90 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. முதல் டோஸ் தடுப்பூசி 96 சதவீதம் பேரும், 2-வது டோஸ் தடுப்பூசி 92 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக திருச்சி மாவட்டத்துக்கு என்று தயாரிக்கப்பட்ட தொலை நோக்கு திட்ட கையேட்டை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் மா.சுப்பிர மணியனிடம் வழங்கினார்.


No comments:

Post a Comment