கனடா நாட்டில் பெரியார் - சுயமரியாதைக்காரர்கள் சென்ற - கவின்மிகு சுற்றுலா (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

கனடா நாட்டில் பெரியார் - சுயமரியாதைக்காரர்கள் சென்ற - கவின்மிகு சுற்றுலா (2)

வீ.குமரேசன்

மாண்ட்ரீல் நகரத்திற்கு விமானப் பயணம்

சரியாக மாலை 6.15 மணிக்கு மாண்ட்ரீல் செல்லும் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் ஏறி அமர்ந்தோம்.  கைப்பொறுப்பு உடைமைகள் மட்டும் எங்களிடம் இருந்த நிலையில் இதர உடைமைகள் (சென்னையில் ஒப்படைத்தது) விமான நிறுவனத்தாரால் மாண்ட்ரீல் செல்லும் விமானத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.  மாலை நேரம் பயணம் தொடங்கி இரவு - பகல் - இரவு  என மாறி வந்து ஏறக்குறைய எட்டு மணிநேரப் பயணத்தில் கனடா நேரப்படி இரவு 8 மணி அளவில் மாண்ட்ரீல் பியர் எலியட் ட்ரூடோ (Pierre Elliot Trudeau)  பன்னாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.  பூமியின் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுழற்சியில் 19.09.2022 அன்று அதிகாலை 5.15 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு 18 மணி நேர விமானப் பயணம், 6 மணி நேர இடைவேளை என மொத்தம் 24 மணி நேரப் பயணத்தில் அதே நாளில் இரவு 8 மணிக்கு கனடா - மாண்ட்ரீல் வந்தடைந்தோம்.  விமான நிலை யத்தில் வழக்கமான பரிசோதனைகளுடன் கரோனா தொற்றுக்குத் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டதையும் பரிசோதித்து (சென்னையிலிருந்து புறப்படும் முன்னரே நாங்கள் பதிவு செய்திருந்த அதற்கான விவரங்களு டனான கிக்ஷீக்ஷீவீஸ்மீ சிணீஸீ பதிவினைக் காட்டி) விமான நிலையத்தின் வெளி வாயிலுக்கு வந்தபோது சுற்றுலா ஒருங்கிணைப்பாளரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு; ‘மாண்ட்ரீல் வந்து இறங்கி விட்டீர்களா? உங்களை அழைத்துச்செல்ல வாகனம் வெளியில் காத்திருக்கிறது’ எனத் தெரிவித்தார்.  ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் யுன் பியா வாங் எங்களையெல்லாம் அழைத்துச் சென்று (முன்னரே பதிவு செய்யப்பட்ட) விடுதியில் கொண்டு சேர்த்தார்.

கனடா

கனடா, நிலப்பரப்பில் உலகின் இரண்டாவது பெரிய நாடு. நாடாளுமன்றக் கூட்டாட்சி அடிப்படையில் உள்ள நாடு.  10 மாநிலப் பகுதிகளையும், 3 சிறு பகுதி களையும் உள்ளடக்கியது.  கொலம்பஸ்,  வட அமெரிக் காவிற்கு வந்து சேர்ந்த பின்னர், ஆங்கிலேய, பிரெஞ்சு வியாபார கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.  சில காலம் ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாட்டு ஆதிக்கத்திலும் இருந்துள்ளது.  பெரிய நிலப்பரப்பாக இருப்பதால் முழுமையான அந்நிய ஆதிக்கத்துள் வருவதற்கு நீண்டகாலம் ஆகியது. ஆதிக்குடிகளும் வாழ்ந்து வந்துள்ளனர்.  அவர்களது வழித்தோன்றல் களும் இன்றைக்கு சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர்.  1867 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் டொமினியன் நாடாக உதயமான கனடா, 1982இல் தான் தனக்கென தனியான அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி, காமன்வெல்த் நாடுகளில் ஒன்றாக மாறியது.  இன்றைக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் பிரதமரையும்,  கவர்னர் ஜெனரலையும் கொண்டிருந்தாலும் பிரிட்டன் அரசின் மீதான விசுவாசம் தொடர்ந்து வருகிறது.  பல நாடுகளைச் சார்ந்தவர்களும் இந்த நாட்டில் குடியேற்றம் பெற்று ஒரு பன்மைப் பண்பாடு  மிக்க நாடாக கனடா திகழ்ந்து வருகிறது.  கவர்னர் ஜெனரலாக பதவியில் உள்ள பெண்மணி, மேரி சைமன் ஆதிக்குடிமக்களின் வழித்தோன்றல்.  முதன்முறையாக அத்தகைய வாய்ப்பு ஆதிக் குடிகளில் ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,  ஸ்காட்டிஷ் - பிரெஞ்சு வழி கனடா வழித்தோன்றல் ஆவார்.  இப்படிப்பட்ட அரசியல் ஆட்சியின் தலைமையில் நாடு விளங்குவது,  கனடா நாட்டு மக்களின் நியாயமான, உண்மையான மக்கள் பிரதிநிதித்துவத்தை வெளிப் படுத்துவதாக உள்ளது. 

மாண்ட்ரீயல் நகரம்  (Montreal City)

கனடாவின் க்யூபெக் (Quebec ) மாநிலத்தின் மிகப் பெரிய நகரம் மாண்ட்ரீயல். புனித லாரன்ஸ் நதியில் ஒரு தீவாக அமையப்பெற்ற மாண்ட்ரீல் நகரமானது மவுண்ட்ராயல் என்னும் மும்மலைப் பகுதிகளின் மய்யப் பகுதியின் பெயரால் அமையப்பெற்றது.  நீர் நிலைகளை அதிகம் கொண்ட கனடா நாட்டின் பெரும் பகுதிகள் குளிர்காலத்தில் பனி உறைந்த பகுதிகளாகவே இருக்கும். இயற்கையாக அமையப்பெற்று இருக்கும் பல நீர் நிலைகளை புனித லாரன்ஸ் பகுதியுடன் இணைத்து உருவாக்கப்பட்ட நதி நீர் போக்குவரத்து காரணமாக வணிகத்தில் முன்னேறிய நகரம் மாண்ட்ரீல். முதல் நாள் விமானப்பயணத்தால் ஏற்பட்ட களைப் பினைப் போக்கிடும் வகையில் விடுதியிலேயே வழங் கப்பட்ட காலை உணவை முடித்து இளைப்பாறினோம்.  பகல் 12 மணிக்குக் கிளம்பி நகருக்குள் இருக்கும் ஓர் இந்திய உணவு விடுதியில் நண்பகல் உணவினை அருந்திவிட்டு நகரைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம்.  ஊரைச்சுற்றிக்காட்டிட  ஒரு பெண் வழிகாட்டி சிற்றுந் தில் எங்களுடன் இணைந்து கொண்டார். மாண்ட்ரீல் நகரம் பற்றிய குறிப்புகளை சுருக்கமாக எடுத்துக் கூறினார். முதலிடமாக மவுண்ட் ராயல் பகுதிக்குச் சென்றோம்.  அமைதியான புல்வெளியும், மரங்களும் நிறைந்தப் பகுதியாக இருந்தது.  மலையின் உச்சிப் பகுதியிலிருந்து மாண்ட்ரீயல் நகரின் பெரும் பரப்பைப் பார்த்து, அதுவரை பார்த்திடாத வெளிநாட்டு நகர்ப் பரப்பைப் பருந்துப் பார்வையில்  கண்டு மகிழ்ந்தோம்.  குளிர்காலத்தில் அப்பகுதி முழுவதும் பனித்துகள்களால் நிறைந்துவிடும் என சுற்றுலா வழிகாட்டி எடுத்துரைத் தார்.

மவுண்ட் ராயல் பகுதியிலிருந்து கிளம்பி மீண்டும் டவுன் டவுன் (Down  Town) நகரப்பகுதிக்கு  வந் தோம்.  வரும் வழியில் தொன்மை வாய்ந்த மாண்ட்ரீயல் பல்கலைக்கழகம் (1878) மற்றும் மெக்கில் (McGill) பல்கலைக்கழக (1821) வளாகத்தை சிற்றுந்தில் பயணம் செய்துகொண்டே பார்த்தோம்.

நாட்ரேடேம் பெசிலிகா

இது 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு புதுப்பிக் கப்பட்ட கிறிஸ்துவ ஆலயம்.  வழிபாடு இல்லாமல் நினைவுச்சின்னமாக பராமரிக்கப்படுகிறது.  நாங்கள் அங்கு சென்ற நேரம் பெசிலிகா மூடப்பட்டு விட்டதால் வெளியிலிருந்தே அந்த நினைவுச் சின்னத்தைப் பார்த்தோம்.  அந்த ஆலயத்திற்கு எதிரில் மாண்ட்ரீயல் நகரத்தை 1642 ஆம் ஆண்டில் நிர்மாணித்த பால் டி சோமெடி  டி மைசனோ  (Paul de Chomedey  de Maisonneuve)வின் சிலை, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது.

இயற்கைச் சூழலை மனித வாழ்விற்கு,  வணிகம் சார்ந்த வளர்ச்சிக்கு மாற்றி அமைத்ததில் மாண்ட்ரீயல் நகரின் நிர்மாணம் வியப்படைய வைக்கிறது.  குளிர்க் காலப் பனி நிறைந்த சூழலையும் வணிகத்திற்குப் பயன்படுத்திடும் வகையில், பெரிய பனிக்கட்டிகளை வெட்டியெடுத்து அதனைக் காத்திடும் வகையில் உரிய பெட்டியில் வைத்து வெப்ப நாடுகளான வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைத்த வணிக வரலாறு மாண்ட் ரீயல் நகருக்கு உண்டு.  அப்படி பனிக்கட்டிகளை பதப் படுத்திய தொழிற்சாலைகளை இன்றைக்கு நினைவுச் சின்னங்களாக மாற்றி இன்றைய, வருங்கால சந்ததியி னருக்கு ஒரு வரலாற்றுக் கூடமாக வடிவமைத்துள்ளனர்.

பின்னர் உலகின் விந்தைகளுள் ஒன்றாக விளங் கிடும், தரைப்பகுதிக்கு கீழே நிலத்தடி நகரத்தைப் பார்க்கச்சென்றோம்.  குளிர்காலத்தில் பனி மிகுந்து போக்குவரத்து தடைப்பட்டு மனித நடமாட்டமே முடங்கிப் போகும் நிலையில் மனித வளத்தை, உழைப் பைப் பயன்படுத்திட நிலத்தடி நகரை நிர்மாணித் துள்ளனர். அதில் நடந்து சென்று எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்தி தங்களது பணியிடங்களுக்கு மக்கள் சென்றிடும் வகையில் அந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு பணியிடமும் தரைப்பகுதியிலும், நிலத் தடியிலும் இணைக்கப்படும் வகையில் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது.  ஒரே ஒரு மாறுபாடு நிலத்தடி நகரத்தில், அங்கு வாகனப்பயன்பாடு எதுவுமில்லை.  நடந்து சென்றுதான் பயன்படுத்திட முடியும்.  குளிர்காலம் தொடக்கம் என்பதால் பனிப்பொழிவு இல்லாத நிலையில்,  நிலத்தடி நகரம் வெறும் பார்வைக் கூடமாகவே இருந்தது.  உலகிலேயே மிகவும் பெரிதான நிலத்தடி நகரம், மாண்ட்ரீயலில் உள்ளதுதான்.  நிலத்தடி யிலிருந்து தரைப்பகுதிக்கு வந்தபொழுது வழக்கத்திற்கு மாறாக கடும் குளிர்க்காற்று வீசத்தொடங்கியது.  

சுற்றிப்பார்க்கும் இடங்களை அத்துடன் நிறுத்தி விட்டு இரவு உணவை நகரத்திலேயே முடித்துவிட்டு புறநகர் பகுதியில் இருந்த விடுதிக்குத் திரும்ப முனைந்தோம்.  ஊரைவிட்டு வந்து இரண்டு நாள்கள் கூட முழுமை அடையாத நிலையில் நம்ம ஊர் உண வினை, அந்தச் சுவையுடன் அருந்திட  விரும்பினோம். விசாரித்த பொழுது நகரின் மய்யப்பகுதியில் ஒரு வணிக வீதியில் உள்ள உணவு விடுதியை கூறினார்கள். ‘அன்னபூரணி’ என்ற பெயருடன் இருந்த அந்த உணவகத்திற்குச் சென்றபொழுது நம் ஊர் இட்லி, தோசை, பொங்கல், பூரி, வடை என்பது வகையோடு மட்டுமல்லாமல் நம் ஊர் சுவையோடு - நம் ஊரில் உண்ணுவது போலிருந்தது.  ஆந்திரா மாநிலத்தைச் சார்ந்த சென்னையில் வசித்த ஒரு பெண்மணி அந்த உணவகத்தை நடத்திவருகிறார். வயிறார உணவு அருந்திவிட்டு உணவகத்தாருக்கு நன்றி கூறிவிட்டு, விடுதிக்கு இரவு 8 மணி அளவில் வந்து சேர்ந்தோம்.

(தொடரும்)


No comments:

Post a Comment