அக்டோபர் 29இல் தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

அக்டோபர் 29இல் தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை

சென்னை, அக்.27 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 29-ஆம் தேதி  தொடங்க வாய்ப்பு இருப்ப தாக வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை காலம் கடந்த 23-ஆம் தேதியுடன்  இந்திய பகுதிகளில் இருந்து விலகிவிட்டதாக வானிலை ஆய்வு மய்யம் அறிவித்தது. இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 45 சதவீதத்துக்கும் அதிகமாக மழை பதிவாகியிருந்தது. வழக்கமாக தென் மேற்கு பருவமழையை விட, வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழையை தமிழ்நாடு பெறும். எனவே வடகிழக்கு பருவமழையை தமிழ்நாடு, புதுச்சேரி எதிர்பார்த்து இருக்கின்றன.வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 3-ஆவது வார இறுதியிலோ அல்லது 4-ஆவது வார தொடக்கத்திலோ தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.  

இந்த நிலையில், வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த 'சிட்ரங்' புயல் கரையை கடந்துவிட்டதால், வடகிழக்கு பருவமழை வருகிற 29-ஆம் தேதியையொட்டி (நாளை மறுதினம்), தமிழ்நாடு, புதுச்சேரியில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மய்யம் நேற்று  (26.10.2022) அறிவித்து இருக்கிறது. இதன் காரணமாக 29-ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


No comments:

Post a Comment