திருச்சி: தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் - நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 14, 2022

திருச்சி: தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் - நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர்

 பெரியார் என்ற பேராயுதத்திற்கு ஒரு தனித்தன்மை என்னவென்றால், அது ஓர் அறிவாயுதம்!

போர் ஆயுதம் போரின்போது மனிதர்களின் உயிரைக் கொல்லும்; அறிவாயுதம் மனிதர்களை வெல்லும்!

திருச்சி, அக்.14  பெரியார் என்ற பேராயுதத்திற்கு ஒரு தனித்தன்மை என்னவென்றால், அது ஓர் அறிவாயுதம். மற்ற ஆயுதங்களுக்கு பல நேரங்களில் வேலை கிடை யாது;  எல்லா நேரங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டிய தற்குப் பெயர்தான் அறிவாயுதம். அறிவாயுதத்தினால், ஆபத்து கிடையாது. ஆனால், போர் ஆயுதம், வெறும் ஆயுதம், இரும்பாயுதம் போர்க்களத்தில் பயன்படுத்தக் கூடிய கருவிகள் இருக்கிறதே, அந்தக் கருவிகள், போரின்போது மனிதர்களின் உயிரைக் கொல்லும்; ஆனால், அறிவாயுதம் மனிதர்களை வெல்லும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா- நூல்கள் வெளியீட்டு விழா

திருச்சியில் கடந்த 6.10.2022 அன்று  மாலை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் அவர்களின் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - நூல்கள் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது  சிறப்புரை வருமாறு:

பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெறக்கூடிய இந்தக் கூட்டத்தில், அய்யாவின் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - நூல்கள் வெளியீட்டு விழா என்பதை உள்ளடக்கிய இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், சிறந்த உழைப்பாளியும்,  குறுகிய காலத்தில் சொன் னாலும், நிறைந்த ஏற்பாட்டினை செய்வதற்கு முழுக் காரணமாக அமைந்த அருமைத் தோழர் மலர்மன்னன் அவர்களே,

இலக்கியச் செல்வர் 

கவிஞர் நந்தலாலா

இந்நிகழ்வில், சிறப்பான அளவிற்கு வரவேற்புரை யாற்றிய பேராசிரியர் திலகவதி அவர்களே, நிகழ்வில் கலந்துகொண்டு ஓர் அற்புதமான மகிழ்ச்சியை நமக்குத் தந்து, என்றைக்கும் நம்முடைய கருத்தாளராக, தோன் றாத் துணையாக இருக்கக்கூடிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான இன்றைக்குப் பாராட்டப்படக் கூடிய அளவிற்கு, ‘‘திருச்சிராப்பள்ளி ஊறும், வரலாறு'' என்ற ஒரு சிறந்த ஆவணத்தை நமக்கெல்லாம் வரலாற்றுப்பூர்வமாக அளித்திருக்கக்கூடிய இலக்கியச் செல்வர் அன்பிற்கும், பாராட்டிற்கும் உரிய கவிஞர் நந்தலாலா அவர்களே,

பெரியார் உயராய்வு மய்ய இயக்குநர் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களே,

திராவிடர் கழக மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் மதிவதனி எம்.எல். அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு முன்னிலை ஏற்றிருக் கக்கூடிய பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியன் அவர்களே,

நம்முடைய மாவட்டத் தலைவர் அருமைத் தோழர் ஆரோக்கியராஜ் அவர்களே, மாநில தொழிலாளரணி செயலாளர் சேகர் அவர்களே,

முனைவர் செந்தாமரை அவர்களே, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் இரா.மணியன் அவர்களே, பொறுப்பாளர் இளங்கோவன் அவர்களே,

திருச்சி மாவட்டச் செயலாளர் மோகன்தாஸ் அவர்களே, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

திராவிடர் கழகப் பொதுச்செயலளர் மானமிகு தோழர் ஜெயக்குமார் அவர்களே, மண்டலத் தலைவர் ஆல்பர்ட் அவர்களே, 

‘எங்கள் பேராயுதம் பெரியார்' என்ற தலைப்பில்  உரையாற்றிய குடந்தை தனிஎழிலன் அவர்களே, திருச்சி துறையூர் கோவிதா அவர்களே,

மண்டலச் செயலாளர் துறையூர் மணிவண்ணன் அவர்களே,

மாவட்டச் செயலாளர் அங்கமுத்து அவர்களே, மற்றும் எதிரில் அமர்ந்திருக்கக்கூடிய பேராசிரியர் பெரு மக்கள் உள்பட அறிஞர் பெருமக்களே, சான்றோர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமக்கு எதிர்பாராத மகிழ்ச்சி, போனஸ் மகிழ்ச்சி என்னவென்றால், அய்யா நந்தலாலா இந்நிகழ்வில் கலந்துகொண்டு மிக அற்புதமான உரையை வழங்கியிருக்கிறார்.

பெரியாரியலைப்பற்றி அழகாக 

எடுத்துச் சொன்னார்கள்

இங்கே உரையாற்றிய அனைவரும் மிகச் சிறப்பான வகையில், பெரியாரியலைப்பற்றி அழகாக எடுத்துச் சொன்னார்கள். வரவேற்புரையாற்றிய திலகவதியில் இருந்து இங்கே உரையாற்றியவர்கள் எல்லாம்.

எதிரே இருக்கக்கூடிய பேராசிரியர்களைப் பேச விட்டால், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால், ஒரு பெருங் கடலுக்குள் பயணம் செய்வது போன்றது பெரியாருடைய பெருந்தொண்டு. பெரியாருடைய கருத்தாழம் அப்படிப் பட்டது.

ஆகவே, சுருக்கமாக சில கருத்துகளை உங்கள்முன் வைக்க விரும்புகின்றேன்.

அய்யாவினுடைய 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை பகுத்தறிவாளர்கள் கொண்டாடுகின்றோம் என்றால், ஏதோ ஒரு சடங்காகவோ, சம்பிரதாயமாகவோ அல்ல. மாறாக, அவருடைய கருத்துகள் பரவவேண்டும். நாம் வெளியிட்டு இருக்கின்ற மலரை எடுத்துப் பார்த்தால்கூட, அது வெறும் மலர் என்று சொன்னால், சில நேரங்களில், வெறும் பாராட்டு என்றாகிவிடும். 

ஈரோட்டுக்குப் போனவர்கள் யாரும் பாராட்டை எதிர்பார்க்காதவர்கள்தான்

பெரியாருக்குப் பாராட்டுப் பிடிக்காது. பொதுவாக ஈரோட்டுக்குப் போனவர்கள் யாரும் பாராட்டை எதிர்பார்க்காதவர்கள்தான்.

அய்யா அவர்களிடம் சென்று, ‘‘இன்றைக்கு உங் களுடைய உரை மிக அருமையாகவும், சிறப்பாகவும் இருந்தது'' என்று சொன்னால்,

‘‘ஹூம்'' என்பார் அய்யா.

இன்னொரு முறை அவருடைய பேச்சினுடைய சிறப்பைப்பற்றி சொல்ல ஆரம்பித்தால்,

சரிங்க, அப்புறம் என்பார்.

அடுத்த வார்த்தையை பேச விடமாட்டார் அய்யா.

ஏனென்றால், ஒரு தத்துவ ஞானி போன்று அய்யாவின் அணுகுமுறை வித்தியாசமானது.

இதுவரையில், ‘‘ஜே, ஜே'', என்றும், ‘‘வாழ்க, வாழ்க'' என்றும் சொன்னார்கள் என்றால், பல தலைவர்கள் பூரித்துப் போவார்கள். ஆனால், அய்யா ஒருவர்தான் அதிலிருந்து மாறுபட்டவர்.

அவர் சொன்னார், ‘‘நீங்கள் வாழ்க என்று சொன்னால், நான் வாழ்ந்துவிடப் போவதில்லை. ஒழிக என்று சொல் வதினால், நான் ஒழிந்துவிடப் போவதில்லை. வாழ்க என்று நீங்கள் சொல்வதினால், நான் மகிழ்ச்சியடை பவனும் அல்ல'' என்பார்.

சிலர் என்னிடம் கேட்டார்கள், பெரியார் அவர்கள் மறைந்த பிறகுகூட, ‘‘பெரியார் வாழ்க'' என்று ‘விடுதலை'யில் வருகிறதே, இது பகுத்தறிவாளர்களுக்கு சரியாக இருக்குமா? என்று கேட்டார்கள்.

தனி மனிதர்களுக்குத்தான் 

மரணம் உண்டு; தத்துவங்களுக்கு மரணம் கிடையாது

அதற்கு மிகச் சுருக்கமாக நான் விளக்கம் சொன்னேன்.

‘‘பெரியார் என்ற தனி மனிதர்தான் மறைந்தாரே தவிர, பெரியார் மறையவில்லை. சித்தார்த்தன் மறைந்திருக்கலாம், புத்தர் ஒருபோதும் மறைய மாட்டார்'' என்றேன்.

தனி மனிதர்களுக்குத்தான் மரணம் உண்டு. தத்துவங்களுக்கு, அதிலும் சரியான தத்துவங் களுக்கு மரணம் கிடையாது. காலத்தை வென்றவை அவை.

அதனால்தான் தந்தை பெரியார் சொல்வார், வாழ்க என்பதற்காக நான் மகிழ்ச்சியடைந்தேன் என்றால், என்னை வாழ்க என்று சொல்பவர்களைவிட, ஒழிக என்று சொல்பவர்கள்தானே அதிகம்.

‘‘ஒழிக, ஒழிக'' என்று சொல்வதைக் கேட்கிறபொழுது, வாழ்க என்று சொல்லும்பொழுது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால், ஒழிக என்று சொல்லும்பொழுது நான் எந்த அளவிற்கு வருத்தப்படவேண்டும். மற்ற பணிகளை என்னால் செய்ய முடியாதே!

ஆகவே, இதைப்பற்றியும் நான் கவலைப்படு வதில்லை; அதைப்பற்றியும் நான் கவலைப்படுவதில்லை என்று சொன்ன ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்.

தத்துவ முறையில், எதிர்நீச்சல் அடித்துக் கொண் டிருப்பார்.

ஆகவே, அவரைப் புகழ்வதற்காக அல்ல - 

இன்றைக்கு நிறைய புத்தகங்கள், தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரைப்பற்றி இங்கே ஒவ்வொருவரும் கருத்தாழத்தோடு பேசினார்கள். நேரத்தின் நெருக்கடியினால், சுருக்கமாக உரையாற்றினார்கள்.

60 ஆண்டுகாலம் ‘விடுதலை’ மலரில்...

60 ஆண்டுகாலம் ‘விடுதலை' மலரில் வெளிவந்தி ருக்கின்ற தந்தை பெரியாரின் படங்கள் அற்புதமானவை.

எந்தத் தலைவருக்கும் 60 ஆண்டுகள் அட்டைப் படம் போடுகின்ற அளவிற்கு, சலிப்பில்லாமல் ஒவ்வொரு முறையும் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய அளவிற்கு, அவ்வளவு ஒரு கம்பீரமான தோற்றப் பொலிவு!

அவருடைய கொள்கையைக் கண்டு மயங்காத வர்கள்கூட, அவருடைய தோற்றத்தைக் கண்டு வசீகரிக்கப்படக் கூடிய அளவிற்கு இருப்பார். அதுதான் தந்தை பெரியாருக்கு உள்ள தனித்தன்மை.

பெரியாரின் தாடியைப்பற்றியே 

20 நிமிடம் உரையாற்றுவார் நாவலர்

அதைத்தான் புரட்சிக்கவிஞர் அவர்கள் அழகாகச் சொன்னார்,

தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும் என்று.

நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் உரையாற்றும் பொழுது, 20 நிமிடங்கள் தூய தாடிக்கே செலவு செய்பவர். தாடிக்கு பல வகை உண்டு; தூய தாடி என்பது சாதாரணமானதல்ல என்று.

தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும் - அவர்தாம் பெரியார்!

நான்கு வரியில் பெரியாரைப் படம் பிடித்திருப்பார் புரட்சிக்கவிஞர் அவர்கள்.

நம்முடைய இளைஞர்கள், ‘‘பெரியாரின் தனி வழி - அதேபோன்று கோவிதா, நம்முடைய பேராசிரியர் எழிலரசனுடைய மாணவி அவர்கள் பேசினார். இது போன்ற இளைய தலைமுறையினரை அறிமுகப் படுத்தவேண்டும்.

இளைஞர்களின் கைகளில்தான் பெரியார் தந்த அறிவுச் சுடர் இருக்கவேண்டும்!

சுடர் எங்கள் கையில் இருந்தால், இனிமேல் பயன்படாது. அவர்கள் கைகளில்தான், பெரியார் தந்த அறிவுச் சுடர் போகவேண்டும்.

இன்றைக்கு நிறைய இளைஞர்கள் இயக்கத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.

பெரியார் தலைமுறை கடந்தவர். 

தலைமுறை இடைவெளி கடந்தவர்.

இன்றைக்கு எல்லாத் தரப்பினரும் அய்யாவைப் பற்றித்தான் பேசுகிறார்கள். அவர்கள் பேசும்போது ஒரு கருத்தைச் சொன்னார்; அவருடைய தலைப்பு என்ன வென்று கேட்டால், ‘‘பெரியார் என்ற பேராயுதம்!''

இந்தப் பேராயுதம் என்பதை இன்றைக்கு எல்லோரும் கையாளுகிறார்கள். பெரியாரை உலகம் முழுவதும் ஒரு பேராயுதமாகக் கையாளுகிறார்கள்.

அழகாக விளக்கம் சொன்னோம் 

நாம் சொல்லும்பொழுது பெரியாருடைய பேராயுதம் என்பது வித்தியாசமானது; அது அறிவாயுதம் என்று அழகாக விளக்கம் சொன்னோம் பெரியார் தொண்டர் களான நாம்.

அறிவாயுதத்திற்கும், சாதாரண ஆயுதத்திற்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. அதுதான் பெரியாரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய, புரிந்து கொள்ளவேண்டிய ஒரு செய்தி. ஆழமாக யோசித்தால் உங்களுக்குப் புரியும்.

ஆயுதங்கள் என்று சொல்லும்பொழுது, உலகத்தி லேயே ஆயுதத்திற்குப் பூஜை போட்டவர்கள் நம்மாள் தான் - நம்முடைய நாட்டில்தான் இருக்கிறார்கள்.

ஆயுதம் பூஜை போடுவதற்கல்ல; 

போரிடுவதற்கு!

மற்றவர்கள் எல்லாம் அதனை போருக்குப் பயன் படுத்தியிருக்கிறார்கள்; நம்மாள், ஆண்டிற்கு ஒருமுறை பூஜை போடுகிறான். ஆயுதம் பூஜை போடுவதற்கல்ல; போரிடுவதற்கு.

போரிட வேண்டிய நேரத்தில், உள்ளே வைத்திருக் கிறான்; வேலையில்லாதபொழுது, வெளியில் எடுத்து பூஜை போட்டு உட்கார்ந்திருக்கின்றான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆயுதப் பூஜை போடு கிறார்கள்; மைக்கைக் கண்டுபிடித்தான், இன்றைக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. விமானத்தைக் கண்டுபிடித் தார்கள், பயனுள்ளதாக இருக்கிறது.

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொன்னார், பெரியார்தான் அழகாக சொன்னார் என்று.

கண்டுபிடித்த ஆயுதங்கள் எல்லாம் பயன்படக் கூடியதாக இருக்கின்றன. ஆனால், நம்மாள்கள் எதையும் கண்டுபிடிக்காமல், ஆயுதப் பூஜையைத்தான் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், பெரியார் என்ற பேராயுதத்திற்கு ஒரு தனித்தன்மை என்னவென்றால், அது ஒரு அறிவாயுதம். மற்ற ஆயுதங்களுக்கு பல நேரங்களில் வேலை கிடையாது; போர்க்காலங்களில் மட்டும்தான் பயன்படும். மற்ற நேரங்களில், வாள் என்றால், அது உறைக்குள்தான் இருக்கும்.

அறிவாயுதத்திற்கு 

ஓய்வு கிடையாது

ஆனால், அறிவாயுதத்திற்கு ஓய்வு கிடையாது - எல்லா நேரங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டியதற்குப் பெயர்தான் அறிவாயுதம்.

அறிவாயுதத்தினால், ஆபத்து கிடையாது. ஆனால், போர் ஆயுதம், வெறும் ஆயுதம், இரும் பாயுதம் போர்க்களத்தில் பயன்படுத்தக் கூடிய கருவிகள் இருக்கிறதே, அந்தக் கருவிகள், போரின் போது மனிதர்களின் உயிரைக் கொல்லும்; ஆனால், அறிவாயுதம் மனிதர்களை வெல்லும்!

பெரியாருடைய தத்துவம், யாரையும் கொல்வது கிடையாது; அது எதிரிகளாக இருந்தாலும்.

இரண்டே இரண்டு வார்த்தைத்தான் -

திருந்து அல்லது திருத்து.                

 (தொடரும்)


No comments:

Post a Comment