அக்டோபர் 10: உலக மனநல நாள் சிந்தனைகள்! மனத்துக்கண் மாசிலன் ஆதல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

அக்டோபர் 10: உலக மனநல நாள் சிந்தனைகள்! மனத்துக்கண் மாசிலன் ஆதல்!

ஆசிரியர் கி.வீரமணி

மனம் தொட்டுக் காட்ட முடியாத ஒன்றுதான். ஆனால் விளங்கிக் கொள்ள முடியாத புதிர் அல்ல. மூளை என்ற நம் உடலின்  முக்கிய உறுப்புதான் இதற்கு மூலம். ‘உனக்கு மூளை இருக்கா?’ என்று கேட்டால் எந்த மனிதனுக்கு  தீரா  திடீர்க் கோபம் வெடிக்கிறது? புத்தி - அறிவு உள்ளம்  எல்லாம் அங்கிருந்தே முகிழ்க்கின்றன; முத்திரை  பதிக்கிறது.  மனவளம் என்பது பொருள் வளத்தைவிட மேலானது தேவையானது - அடிப்படையானது. 

மன அழுத்தத்தை - மாற்றுப் பாதையில் நிறுத்தி, பயணத்தை பயமின்றித் தொடரப் பழகிக் கொள்ள வேண்டும்.

வெறுப்பை உங்கள் இதயத்திலிருந்து விலக்குங்கள்.  கவலையை உங்கள் மனதிலிருந்து வெளியாக்குங்கள். எளிமையாக வாழக் கற்றுக் கொள் ளுங்கள். ஏராளம் மற்றவர்களுக்குக் கொடுங்கள்!     குறைவாக எதையும்  எதிர்பாருங்கள்!

உடலின் சக்தி  (Physical Energy) என்பதைவிட மிகவும் பலமானது (Mental Energy)  மனோசக்தி, அதுதான் உடலின் சக்தியை வழி நடத்திச் செல்லும் சக்தியாகும்.

பாறையைக் கூட அசைக்கலாம் என்ற மன எழுச்சிக்கு முன்னால் எவ்வளவு கடினமான பணியும் கூட சாதாரணம் தானே. 

மனம் தான் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் சரி, நோய்த் தடுப்பு, நோய் போக்கும் முறைக்கும் சரி, அடித்தளமாக இருக்கிறது. 

உடலை ஸ்கேன் செய்வதைவிட... உள்ளத்தை ஸ்கேன் செய்வதே முக்கியம், மனதை மகிழ்ச்சியில் வைத்துக் கொண்டு, நோய்த் தடுப்பு - நோய் எதிர்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பதும், இன்ப துன்ப உணர்வுகள் என்பதும் நமது மனத்தின் பக்குவத்தைப் பொறுத்தது.

நம்முடைய மன அழுத்தங்களுக்கு மூல காரணம் நமக்குச் சக்தியில்லையே, நம்மால் முடியவில்லையே என்கிற விரக்தியும், வேதனையும்தான். 

மனதிடமும், வைராக்கியமும் உள்ளவர் கள் வாழ்க்கையில் ஒருபோதும் பலவீனர்களுக்குப் பலியானதில்லை. தனது பலவீனம் எது என்று ஒரு மனிதன் அறிந்து கொண்டு நடப்பதுதான் அவனது பலம். 

வாழ்க்கையின்   வெற்றி - தோல்வி,  இன்ப - துன்பம்  எல்லாம்   மூளையின் விளைவாகவே முகிழ்த்துக் கிளம்பு கின்றன. மனவேகம் போலவே, மன ஆழமும் எளிதில் அளந்து கூற இயலாத ஒன்று. 

மனம் என்பது மூளை செய்யும் பணியின் உருவகச் சொல்தான். அறிவுக்கே முன்னிடம், உணர்ச்சியை நல்ல மனத்தவர் - மனதை ஆள்பவர்கள் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றலாளர்கள் ஆவார்கள்.

தூய மனதின் தொய்வில்லாச் செயல் ஒருவரை காக்கும், உயர்த்தும். படுத்தவுடன் தூங்கி, புத்துணர்வுடன் விழிப்புறச் செய்யும்.

மனம் என்பது உடலின் மூளையோடு இயைந்தது.

மனதில் மாசு இல்லாத அகவாழ்வு, நம்மிடம் உள்ள அஞ்சாமைப் பண்பைப் பெருக்கும் மிகப் பெரிய ஊற்று ஆகும்.

மனம் என்ற மூன்று  எழுத்து - எப்படி ‘நலம்’ என்ற மற்றொரு மூன்று எழுத்து கொண்டு நம்மை வாழ வைக்கிறது  என்பதை உணருங்கள். மனத்துக்கண் மாசிலனாக வாழ்ந்து, மனிதம் படையுங்கள், மாமனிதத்திற்கு உயர முயற்சியுங்கள். 

உள்ளம் தான் உடலை வழி நடத்துகிறது. நலமுடன் வாழ்வதே பலமுள்ள வாழ்வு. 

காசற்ற மனிதனாக இருப்பது கூடாது தான். அதனை உழைத்து பெற வேண்டியது அவசியம். ஆனால், அதை விட முக்கியம் மாசற்ற மனத்தின னாகி ‘மனிதர்களாக’ வாழ்வது.

திறந்த மனத்தோடு விருப்பு, வெறுப்பின்றி மற்றவர் சொல்வதை நாம் கேட்கப் பழகினோமேயானால், நல்ல முடிவுகளை நாம் எடுக்க முடியும்.

வயது ஏறஏற, அறிவுப் பெருக்கம் உள்ள அழகு மனம், நாளும் வளர்ச்சியை நேரிடை விகிதத்திலேயே வளர்க்கும் என்பது உறுதி.

ஏதாவது ஒரு எண்ணம் நமக்குள் ஒரு வகை வலியை உருவாக்கினால் நீங்கள் அந்த எண்ணத்தை மாற்றி, வேறு எண்ணங்களுடன் உறவாடுங்கள்.

மனம் என்பது ஒருகுளம் என்று நினைத்துக் கொண்டால், அதில் கற்கள் எறியப்படும்போது அங்கே அலைகள் சுழல், சுழலாக ஏற்படுவது எப்படித் தவிர்க்க முடியாதோ அதுபோன்றுதான் துன்ப சம்பவங்கள், துயரநிகழ்வுகள், பிரிவுகள் நமக்கு ஏற்படுகையில் அதன் தாக்க அலைகள் நம் வாழ்க்கையை வளைய வளையமாய் வட்டமிடுவதும் வாட்டுவதும் இயல்புதான்.

உலகத்தின் தண்டனையிலிருந்து ஒருவன் தப்பலாம்; மீளலாம்; ஆனால், உள்ளத்தின் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.

உடல் நலம் பெரிதும் மனநலத்தை பொறுத்தது.

உடலை அழகுபடுத்திக் கொள்வதை விட மிக மிக முக்கியம் நம் மனதை, உள்ளத்தை அழகுபடுத்திக் கொண்டு பிறர் மனத்தையும் மகிழ்வடையச் செய்.

உள்ளத்தில் அறிவை நட்டுக் கொண்டு மனத்தை அழகுபடுத்திக் கொள்வது மிகவும் தேவை. மனதை மதித்து வாழ்வது.

கடமை, உரிமை இரண்டையும் புரிந்து ஒன்றுக்காக மற்றொன்றை விட்டுக் கொடுக்காத மன உறுதி வேண்டும்.

No comments:

Post a Comment