கனடா நாட்டு டொராண்டோ நகரில் சமூகநீதிக்கான பன்னாட்டு பெரியார் சுயமரியாதை மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 25, 2022

கனடா நாட்டு டொராண்டோ நகரில் சமூகநீதிக்கான பன்னாட்டு பெரியார் சுயமரியாதை மாநாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கிட 

தமிழர் தலைவர் தொடக்கவுரையுடன் வெகு சிறப்பாகத் தொடங்கியது

டொராண்டோ, செப்.25 - அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யம், ஆய்வு விசாரணை மய்யத்தின் கனடா கிளை, கனடா மனிதநேயர் மற்றும் டொராண்டோ மனிதநேயர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து சமூகநீதிக்கான பன்னாட்டு பெரியார் சுயமரியாதை மாநாட்டை சிறப்பாகத் தொடங்கின. கனடா நாட்டு டொராண்டோ நகரில் நடைபெறும் இரண்டு நாள் (செப்டம்பர் 24 & 25) மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் 24.9.2022 அன்று காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெற்றன. டொராண்டோ நகரில் உள்ள நூற்றாண்டு கல்லூரி மய்யத்தில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துரையினை ஒளியிழையில் பதிவு செய்து அனுப்பியிருந்தார். அவரது வாழ்த்துச் செய்தி முதல் நாள் நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.

முதல் நாள் நிகழ்ச்சியின் தொடக்க உரையினை தமிழர் தலைவர், சென்னை - பெரியார் திடலில் இருந்து காணொலி மூலம் வழங்கி சிறப்பித்தார்.

தமிழர் தலைவரின் தொடக்கவுரை

தமிழர் தலைவர் வழங்கிய தொடக்க உரையின் சுருக்கம்:

மனிதநேயர்கள் உலகமெல்லாம் இருக்கிறார்கள். ஆனால் ஜாதியை ஒழிக்கும் வழிமுறை என்பது பிற நாட்டில் வாழும் மனிதநேயர்களுக்குத் தெரியாது. மனிதரில் ஏழை - பணக்காரர் என்பது நிரந்தரம் அல்ல; இன்றைய ஏழை, நாளை பணக்காரர் ஆகலாம். இன்றைய பணக்காரர், நாளை பணமற்றவராக மாறலாம். ஆனால் ஜாதி அடிப்படையிலான உயர்வு - தாழ்வு மாறாதது; நிரந்தரமானது. ஜாதி முறை என்பது மனிதநேயமற்ற செயல் மட்டுமல்ல; மனிதநேயத்திற்கே எதிரானதாகும். ஜாதி என்பது மனிதரை மனிதமற்றவராக மாற்றவல்லது. உயர் ஜாதியினர் மட்டுமே மனிதராக மதிக்கப்படுகின்றனர். பிற ஜாதியினர் - உழைக்கும் மக்களான மண்ணின் மைந்தர்கள் மனிதராக நடத்தப்படுவதில்லை. ஜாதி என்பது  சூப்பர் மனிதனை - உப மனிதனை - மனித துவேஷத்தை வலியுறுத்துகிறது. 

அண்ணல் அம்பேத்கர் "ஜாதிமுறை என்பது ஒருவரது 'மன நிலையின் கருத்து' (Notion  of mind). ஜாதி ஒழிப்பிற்கான போர் வீதிகளில் நடைபெறுவதைவிட, மக்களின் மனங்களில் மாற்றம் பெற வேண்டும்" என்றார்.

கல்வி என்பது சமூகநீதித் தேவையாகும். ஜாதியினை ஒழிக்க சமூகநீதி என்பதுதான் ஒரே மருந்து. மனிதன் பொது நலத்திற்கானவன் மட்டுமல்ல; மனிதனை மனிதனாக மாற்றி நடத்திடும் மாபெரும் பணியினை முடிக்க வேண்டிய நிலையில் உள்ளான்.

ஜாதி என்பது அங்கு தொட்டு, இங்கு தொட்டு இன்றைக்கு அமெரிக்கா நாட்டு சிலிகான் பள்ளத்தாக்கு எனக் கூறப்படும் பகுதியில் பணிபுரியும் இந்தியாவிலிருந்து சென்றவர்களிடமும் நிலவத் தொடங்கியிருக்கிறது. 

ஜாதி என்பது ஒழிக்கப்பட வேண்டும். சரியான புரிதலே பாதி சிகிச்சையாகும். தந்தை பெரியாரின் சிந் தனைப்பற்றி அறிஞர் அண்ணா கூறியது;  "நூற்றாண்டுகள் பலவற்றை குப்பியில் அடக்கும் செயல்" - "Putting Centuries into capsules".  எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது விடுதலைக்கு நாம் கொடுக்கும் விலையாகும். ஜாதியினை ஒழித்திட தமிழ் இலக்கியம் கூறும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் மனப்பான்மை மக்களிடம் பெருகிட வேண்டும். அத்தகைய மனிதநேயப் பெருக் கத்திற்கு இந்த பன்னாட்டு மாநாட்டு முடிவுகள் கொண்டு செல்லப்பட வேண்டும். மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு தமிழர் தலைவர் தமது தொடக்கவுரையின் போது கூறினார்.

வரவேற்புரை

முதல் நாள் நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை கனடா மனிதநேயர் அமைப்பின் மனிதநேயர் மார்ட்டின் பிரித் வரவேற்றுப் பேசினார். அருள்செல்வி பாலகுரு இணைப்புரை வழங்கினார்.

அடுத்து மாநாட்டில் உரையாற்றுபவர்களை அறிமுகம் செய்து, பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் உரையாற்றினார்.

தொடக்க உரை முடிந்து தேநீர் இடைவேளைக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சியாக 'ஜோதிட மடமையினை புறந்தள்ளுவோம்' எனும் தலைப்பில் 'நாத்திக நட்புறவு' ஏட்டின் ஆசிரியர் ஹேமந்த் மேத்தா உரையாற்றினார்.

டொரண்டோ மனிதநேயர் சங்கத்தின் ரிச்சர்ட் டெவுசெட் 'பிற நாட்டிற்கு வாழ்வாதாரம் தேடி வரு வோரின் மனிதநேய விடைகள்' எனும் தலைப்பில் கனடா நாட்டில் நிலவிடும் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.

சென்னைப் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் வீ. அரசு - காணொலி வாயிலாக 'தமிழ்நாட்டின் சமூகநீதி- நேற்று, இன்று, நாளை எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

கனடா மனிதநேயர் அமைப்பினைச் சார்ந்த சிருஷ்டி ஹூக்கு 'மனிதநேயத்தின் மூலம் மகளிருக்கான உரிமை களை வென்றெடுப்பது எப்படி' என உரையாற்றினார்.

சிறீலங்காவில் 'ஜாதியின் சமூக அரசியல் & சமூகநீதி' எனும் தலைப்பில் பேராதனை, பல்கலைக் கழகப் பேரா சிரியர் முனைவர் எஸ். சிவசேகரம் காணொலி மூலம் உரை வழங்கினார்.

நண்பகல் உணவுக்குப் பின்னர் கோவை 'நக்கலைட்ஸ்' யூடியூப் குழு வினர் கருத்துடன் கூடிய நகைச்சுவை நிகழ்ச்சியினை நடத்தி,  பார்வை யாளர்களை கலகலப்பாக்கினர். அமெரிக்க நாட்டில் நிலவிடும் ஜாதி மனப்பான்மையினை படம் பிடித்துக் காட்டினர்.

திராவிடர் கழகப் பொதுச் செய லாளர் வீ. அன்புராஜ் ஏற்பாட்டால் 'பெரியார் உலகம்' பற்றிய காட்சிப் பதிவு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

மாலை உரை வீச்சாக, கனடா மனிதநேயர் அமைப்பின் மார்ட்டீன் பிரித், 'வாழ்வின் சடங்குகளில் சமூக நீதி' என்பதுபற்றி உரையாற்றினார்.

அடுத்துப் பேசிய திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், 'ஜாதி அமைப்பின் தனித்துவ விளக்கம் பற்றியும் - தந்தை பெரியார் கடைப் பிடித்த சமூகநீதி அணுகுமுறைகள் பற்றியும் உரையாற்றினார்.

பெரியார், அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் நண்பர்கள் 'மடமையும் உண்மையும்' விநாடி வினா - விடை நிகழ்ச்சியினை நடத்தினர்.

தேநீர் இடைவேளைக்குப் பின் துவங்கிய நிகழ்ச்சியில் 'திருவள்ளு வரும் சமூகநீதியும்' என்ற உரை வீச் சினை வடக்கு கரோலினா மாநிலத் தின் அமரன் கண்டியார் வழங்கினார்.

அடுத்து, 'பசிப்பிணிக்கு எதிரான சிறார்' திட்டத்தின்கீழ் உலகில் பசியில் சாகும் குழந்தைகள் பசியாற்றிட உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கும் பணியில் மாநாட்டில் பங்கேற்றோர் குழுவாக இயங்கினர்.

கலை நிகழ்ச்சிகள்

முதல் நாள் நிகழ்ச்சியின் நிறைவாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஈழத் தமிழர்கள் அஃகேனம் குழுவினரின் 'பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நாதஸ்வர - தவில் கலைஞர்கள் எம்.பி. நாகேந்திரன் - சூர்யகுமார் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலின் மெட்டுகளை நாதஸ்வரத்தின் மூலம் இசைத்தனர்.

அமெரிக்கா வாழ் பாடகர் சின்மயி  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலான 'தமிழுக்கு அழுதென்று பேர்' எனும் பாடலையும், இன்னும் சில பாடல்களையும் இசையுடன் பாடி மகிழ்வித்தார். நிறைவாக பரத நாட்டியக் கலைஞர் டில்ஷாவின் நிகழ்ச்சி நடைபெற்றது. 

அனைத்துக் கலைஞர்களும் பாராட்டப்பட்டனர். முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று  மாநாட்டு வளாகத்திலேயே இரவு உணவும் வழங்கப்பட்டது.

செய்தித் தொகுப்பு: வீ. குமரேசன்


No comments:

Post a Comment