மனிதாபிமான செயல் அவதிப்படும் கக்கன் மகனுக்கு முதலமைச்சர் மருத்துவ உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

மனிதாபிமான செயல் அவதிப்படும் கக்கன் மகனுக்கு முதலமைச்சர் மருத்துவ உதவி

சென்னை, செப்.9 இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மறைந்த மேனாள் அமைச்சர் கக்கனின் மகன் பாக்கிய நாதனின் மருத்துவ செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாக தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

நேர்மை, எளிமையின் இலக்கணமாக திகழ்ந்தவர் கக்கன். இவர் இந்திய சுதந்திர போராட்ட வீரர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கன், காமராஜர் அமைச்சரவையில் பொதுப் பணித் துறை, மின்சாரத் துறை, தாழ்த்தப் பட்டோர் நலத் துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந் தார்.

கக்கனுக்கு உடல் நலம் பாதிக்கப் பட்டது. அப்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத் துக் கொள்வதை நாளிதழ்களில் பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனக்கு பரிசாக வந்த தங்க சங்கிலியை ஏலம் விட்டு அந்த பணத்தை தனியார் நிதி நிறுவ னத்தில் முதலீடு செய்து அதில் வரும் வட்டி கக்கனுக்கு கிடைக்க வழிவகை செய்தார்.

சில ஆண்டுகள் வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வந்த கக்கனுக்கு திடீரென உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டது.மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனது கட்சிக்காரர் ஒருவர் அனும திக்கப்பட்டிருந்ததை கேள்விப் பட்டு எம்.ஜி.ஆர். அங்கே சென்றார். கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு கிளம்பும்போதுதான், கக்கனும் அங்கே சிகிச்சை பெற்றுவருகிறார் என்று உடனிருந்தவர்கள் சொல்லி உள்ளனர். உடனே, எம்.ஜி.ஆர். பதற்றமடைந்து, ஏன் இதை முதலிலேயே சொல்லவில்லை என்று கேட்டு, கக்கன் எந்த வார்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று விசாரித்து அவரை சென்று பார்த்தார். சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்த கக்கனைக் கண்டதும் எம்.ஜி.ஆர். கண்கள் கலங்கின. அங்கிருந்த டாக்டர்களை அழைத்து கக்கனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட் டார். எனினும்  சிகிச்சை பலனின்றி கக்கன் 1981ஆம் ஆண்டு கால மானார். கக்கனின் மறைவுக்குப் பிறகும், அவரது குடும்பத்தினருக்கு இலவச வீடு, அரசு உதவித் தொகை, மருத்துவ வசதிகள் கிடைக்கும் படியும் எம்.ஜி.ஆர். செய்தார்.

தனது இறுதி மூச்சு வரை நேர் மையை கடைப்பிடித்த கக்கனை போன்ற இன்னொரு தலைவர் வருவாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. கடைசி வரை சொந்தமாக வீடு கூட இல்லாதவர் கக்கன். இந்த நிலையில் கக்கனுடைய மகனும் தந்தையை போல் ஏழ்மையான நிலையில் இருக்கிறார்.

கக்கனின் மகன் பாக்கியநாதனுக்கு  (75)  சிறுநீரகமும் இதயமும் பாதிக் கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க ரூ 4 ஆயிரம் தேவைப்படுகிறது. ஆனால் அதை செலுத்த முடியாத நிலையில் பாக்கியநாதன் குடும்பத்தினர் உள்ளனர் 

முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அடையாள அட்டையும் பாக்கியநாதனுக்கு இல்லை. அந்த அட்டையைப் பெற கக்கனின் பேரன் அதாவது பாக்கியநாதனின் மகன் முயற்சித்து வருகிறார். தனது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என பாக்கிய நாதனின் மனைவி சரோஜினிதேவி கோரிக்கை விடுத்துள்ளார். அது போல் கணவரின் மருத்துவ செல வையும் அரசே ஏற்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தேரணி ராஜன்  "கக் கனின் மகன் பாக்கியநாதன் ராஜீவ் காந்தி மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை பாதிப்பு குறித்து தகவ லறிந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் உடனடியாக எங்களை தொடர்பு கொண்டார். கக்கன் மகனை சிறப்பு வார்டிற்கு மாற் றுமாறு உத்தரவிட்டார். இத யத்திற்கு ஆஞ்சியோ உள்பட அனைத்து சிகிச்சைகளையும் இல வசமாகவும், தரமாகவும் அளிக்க உத்தரவிட்டுள்ளார். அவருக்கான சிகிச்சைக்கு ஆகும் செலவை தமிழ் நாடு அரசு ஏற்பதாகவும் முதல மைச்சர் தெரிவித்தார் என்றார்.

சென்னை சிஅய்டி காலனியில் இவரது குடும்பம் வசித்து வந்தது. இந்தக் காலனியில் பிளாட் எண்.35 ஆனது, கக்கனுக்கு 1971ஆ-ம் ஆண்டில் வாடகையின்றி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

1981இ-ல் அவரது இறப்பிற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் இங்கு வசித்து வந்தனர். அதேபோல, இங்குதான் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணுவும் குடியிருந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள அனைவருமே வீட்டை காலி செய்யும் சூழல் ஏற்பட்டது. அப்போது நல்ல கண்ணு, "எங்களுக்கு பரவாயில்லை. காமராஜர் காலத்தில் அமைச்சராக இருந்த கக்கனுக்கு, எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் வீடு தந்தாங்க. வாடகை இல்லாமலே இருந்தார். இப்போது அவர் குடும்பத்தினர் அங்கு இருக்கிறாங்க. அவங்களை வெளியேற்ற வேண் டாம்" என்று கேட்டுக் கொண்டது குறிப்பிடத் தக்கது.


No comments:

Post a Comment