அரசமைப்புச் சட்டத்தை சிதைப்பதா? பா.ஜ.க. மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

அரசமைப்புச் சட்டத்தை சிதைப்பதா? பா.ஜ.க. மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை,செப்.26- இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைப் பயணத்தை நடத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியது. அதன்பேரில் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப் பட்டோர் துறை, சிறுபான்மை பிரிவு உள்பட 8 அணிகள் சார்பில் இந்திய அரசமைப்பு பாதுகாப்பு நடைப்பயணம் நேற்று (25.9.2022) தொடங்கியது. 

இந்த பயணத்தின் தொடக்க விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் தலைமை தாங்கினர். 

தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர்கள் குமரி அனந்தன், சு.திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, பொருளாளர் ரூபி மனோகரன், தமிழ்நாடு காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார், ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மேனாள் ஒன்றிய அமைச்சர்கள் திக்விஜய் சிங், சல்மான் குர்ஷித், அகில இந்திய காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:

அரசியல் சாசனத்தை வடித்தது அரசியல் சாசன நிர்ணய சபை. இதில் 389 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்து மகா சபை, பாரதீய ஜன சங்கம், பா.ஜ.க.வில் தலைவர்களாக இருந்த வர்கள் யாருமே உறுப்பினர்களாக இருந்தது கிடையாது. ஆகவே தான் பல இடங்களில் அவர்கள் இந்த அரசியல் சாசனத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல் கிறார்கள். பா.ஜ.க.வுக்கு நாடாளுமன்ற மேலவையில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இல்லாததே இதனை தடுக்கிறது. இந்த தடை மட்டும் அகன்றுவிட்டால், நிச்சயமாக அரசியல் சாசனத்தை திருத்துவார்கள், சிதைப்பார்கள், மாற்றி எழுதுவார்கள். இதனை தடுக்க நாடு முழுவதும் உணர்வு வரவேண்டும். மிருக பலம், பெரும்பான்மையை வைத்து அரசியல் சாசனத்தை திருத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அனைத்து மாநிலங்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளுகிற சில திருத்தங்களை தவிர வேறு எதையும் திருத்தமாட்டோம் என்று பா.ஜ.க. சொல்லட்டுமே, சத்தி யம் செய்யட்டுமே செய்யமாட்டார்கள். இந்திய அரசமைப்பு சீரழிக்கப்படுவதை, சிதைக்கப்படுவதை காப்பாற்ற வேண்டும்.

-இவ்வாறு அவர் பேசினார். 

கே.எஸ்.அழகிரி பேசும்போது, 'இந்தியாவின் அரசியல் சட்டம்தான் மக்களை பாதுகாக்கின்ற அமைப்பு. இது சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை சொல்கிறது. இதனை சிதைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். எண்ணுகிறது' என்றார். 

திக்விஜய்சிங் பேசுகையில், ''மத நல்லிணக்கத்தை விரும்புபவர்கள் ஒன்றாக இணைய வேண்டும்'' என்றார். மூவர்ணத்தில் பலூன்களை பறக்கவிட்டு இந்த பயணத்தை தலைவர்கள் தொடங்கி வைத்தனர். இந்த பயணத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், எம்.எஸ்.திரவியம், ஆர்.டி.அய். பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன் உள்பட திரளான காங்கிரசார் பங்கேற்றனர். 

சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று தொடங்கிய நடைப்பயணம் சிறீபெரும்புதூரில் உள்ள மேனாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் (75 கி.மீ. தொலைவு) நாளை (செவ் வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது.


No comments:

Post a Comment