சந்தா வழங்கும் விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

சந்தா வழங்கும் விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை

 ‘விடுதலை' இன்று நாளேடாக நடக்கிறது என்றால் அதற்குக் காரணம் நமது தலைவர் ஆசிரியர் அவர்கள்தான்!

கோடானுகோடி மக்கள் சார்பில் நன்றி கூறுவோம்! 

சென்னை, செப்.27 ‘விடுதலை'யை வார ஏடாக நடத்திட தந்தை பெரியார் முடிவு செய்த நிலையில், அது நாளேடாக வந்துகொண்டு இருக்கிறது என்றால், அதற் குக் காரணம் நமது ஆசிரியர் அவர்கள் பொறுப்பேற்க முன்வந்ததால்தான் என்றார் திராவிடர் கழக துணைத் தலைவர்  கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.

‘விடுதலை' சந்தா வழங்கும் விழா!

கடந்த 6.9.2022 அன்று மாலை  சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற 60 ஆண்டுகால ‘விடுதலை' ஆசிரியருக்கு கழகத் தோழர்கள் திரட்டிய ‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் திராவிடர் கழக துணைத் தலைவர்  கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மிகவும் மகிழ்ச்சி என்பதைவிட, ஓர் உணர்ச்சிகரமான நிகழ்ச்சி என்று சொல்லுகின்ற அளவிற்கு நடைபெறக் கூடிய இந்த நிகழ்ச்சியில், பங்குகொண்டிருக்கின்ற பல்வேறு சமூக, அரசியல் கட்சிகளினுடைய தலைவர் களுக்கு முதலாவதாக நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்ததைவிட - ‘விடுதலை' சந்தா பெற்றுக்கொள்வதில்தான் மகிழ்ச்சி!

நம்முடைய தலைவர் அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயங்கள் கொடுத்திருக்கின்றோம்; எடைக்கு எடை தங்கம் கொடுத்திருக்கின்றோம். ஆனால், அவற்றைக் கண்டு மகிழ்ந்ததைவிட, நம் முடைய தலைவர் அதிக மகிழ்ச்சி அடைவது ‘விடுதலை' சந்தாவைப் பெறுவதில்தான்.

அவருக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடவேண்டும் என்று ஒரு முயற்சி எடுத்தபொழுது, அவர் சுலபமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

50 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்களைக் கொடுக்கி றோம் என்று சொன்னபொழுது, உடனே ஏற்றுக் கொண்டார்.

முன்பு ஒருமுறை அவருடைய பவள விழாவைக் கொண்டாடவேண்டும் என்று ஆசைப்பட்டோம்; ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆசிரியரின் பவள விழாவிற்கு 

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அழைப்பு

கலைவாணர் அரங்கில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிரியர் அவர்களும் கலந்துகொண்டார்கள்; பல்வேறு தலைவர் களும் கலந்துகொண்டார்கள். அந்த விழாவில், நான் ஒரு துண்டு சீட்டில், ஆசிரியர் அவர்களுக்குப் பவள விழாவைக் கொண்டாடவேண்டும் என்று கழகத் தோழர்கள் ஆசைப்படுகிறார்கள். ஒருக்கால் நீங்கள் மனது வைத்தால், அவர் ஒப்புக்கொள்ளலாம் என்று கையெழுத்துப் போட்டு, முத்தமிழ் அறிஞர் அவர் களிடத்தில் நான் கொடுத்தேன்.

அந்தச் சீட்டை அவர் வாங்கி வைத்துக்கொண்டு, அவர் உரையாற்றும்பொழுது, ‘‘கடைசியாக ஓர் அன் பான வேண்டுகோள், எனது  ஆருயிர் இளவல் வீரமணி யினுடைய பவள விழா என்னுடைய தலைமையில் நடைபெறும். அனைவரும் வந்திருந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்'' என்று சொன்னார்.

எந்த இடத்தில், எந்தப் பொத்தானை அழுத்தினால் என்ன சத்தம் வரும் என்ற முறையில் அதில் நாம் வெற்றி பெற்றோம்.

நம்முடைய தோழர்கள் அரும்பாடுபட்டு இருக் கிறார்கள். நமக்குத் தெரிந்தவரையில், ஒரு சந்தா வழங்குவதற்காக ஒரு பெரிய விழா என்பது இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று நிச்சயமாக சொல்ல முடியும்.

யார் யாருக்கெல்லாம் 

நன்றி தெரிவிக்கவேண்டும்?

கடந்த 27 ஆம் தேதி, இதே இடத்தில் ‘‘பத்திரிகை யாளர்கள் பார்வையில் ஆசிரியர்'' என்ற தலைப்பில், பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த பெருமக்கள் உரையாற்றினார்கள். அப்பொழுது ஒன்றை சொன்னேன்,

யார் யாருக்கெல்லாம் நன்றி தெரிவிக்கவேண்டும்; ஆசிரியர் அவர்கள் 60 ஆண்டுகாலம் ‘விடுதலை’ யினுடைய ஆசிரியராக இருக்கிறார் என்று சொல்லும் பொழுது, யார் யாருக்கெல்லாம் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று பட்டியல் வெளியிட்டேன். அதை விரிவாகச் சொல்ல விரும்பவில்லை.

முதலாவதாக அவருடைய வீட்டில், அவருடைய மூத்த அண்ணன் கோவிந்தராசு அவர்கள். அடுத்து, அவருக்கு மாலை நேர ஆசிரியராக இருந்த திராவிட மணி அவர்கள். அடுத்து தந்தை பெரியாரிடத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய டார்பிடோ ஏ.பி.ஜெனார்த் தனம் அவர்கள். அதற்கு அடுத்து, தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காணப்பட்டு, நமக்கு ஒரு நன்கொடையாகக் கொடுத்துச் சென்ற தந்தை பெரியார் அவர்கள். அன்னை மணியம்மையார் அவர்கள், தன்னுடைய மகனாக, நம்முடைய தலைவரை எவ்வளவு பாசம் பொழிந்து வளர்த்தார்கள்; அவர்களுக்கு நன்றி என்று சொன்னேன்.

நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்களுடைய உடலில் அறுவைச் சிகிச்சை செய்யப்படாத இடமே கிடையாது. உங்களுக்கு அதைச் சொன்னால், ஆச்சரியமாக இருக்கும். கண்ணில் ஆரம்பித்து, உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் அறுவைச் சிகிச்சை. நான்கு முறை இருதய அறுவைச் சிகிச்சை.

இருந்தாலும் 90 ஆம் ஆண்டை அவர் தொடுகிறார் என்றால், அதற்கு அடிப்படையான காரணம், நமது கண் ணுக்குத் தெரியாமல், மேடைக்கு வராமல், மண்ணுக்குள் இருக்கக்கூடிய அஸ்திவாரம் போல, அவருடைய வாழ்விணையர் சகோதரி மோகனா அவர்கள்.

‘விடுதலை' நாளேடாக இன்று நடக்கிறது என்றால், அதற்குக் காரணம் 

நமது ஆசிரியர்தான்!

‘விடுதலை' ஏட்டின் ஆசிரியராக இருந்தவர் விலகி னார். ‘விடுதலை'யை நடத்தவேண்டும் - அப்பொழுது கடலூரில் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடலூர் வீரமணி அவர்களை அழைத்து ‘விடுதலை' ஆசிரியர் பொறுப்பை ஏற்குமாறு கேட்டுக் கொண்டார் தந்தை பெரியார்.

ஈரோட்டிற்குச் சென்று வார ஏடாக நடத்துவேன்; நீங்கள் ஏற்றுக்கொண்டால், ‘விடுதலை’ நாளேடாகத் தொடரும் என்று சொன்னார்.

ஆகவே, இன்றைக்கு ‘விடுதலை’ நாளேடாகத் தொடருகிறது என்று சொன்னால், அதற்குக் காரணம், நம்முடைய ஆசிரியர் அவர்கள்தான். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த ஏடு என்ன செய்யும் என்பதற்கு அதிகமான விளக்கம் தேவையில்லை.

பாளையங்கோட்டை சிறைவாசியின் 

ஓர் அஞ்சலட்டை

பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஓர் ஆயுள் கைதி ஒரு கடிதம் எழுதினார், 1980 ஆம் ஆண்டு. அவருடைய பெயர் பக்கிரி முகமது.

நான் 12 ஆண்டுகாலமாக பாளையங்கோட்டை சிறையில் இருக்கிறேன். உங்களுடைய பிரச்சார பயணத் திற்காக ஒரு வாகனம் கொடுப்பதாக அறிந்தேன். அதற் காக ஆயுள் கைதியாகிய நான், 15 ரூபாயை அனுப்பி வைக்கிறேன்.

எனக்கு விடுதலை கிடைக்கிறதோ இல்லையோ, நாள்தோறும் நீங்கள் அனுப்புகின்ற ‘விடுதலை' கிடைக்கிறது.

அதுவே எனக்கு ஒரு விடுதலை உணர்ச்சியை உண்டாக்குகிறது என்று ஒரு அஞ்சலட்டையில் ஒரு தோழர் எழுதிய கடிதத்தையும் நினைத்துப் பார்க்கிறோம்.

நெருக்கடி காலத்தில் 

‘விடுதலை'க்குச் சோதனை!

ஆகவே, விடுதலை என்பது 88 ஆண்டுகாலம் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது சாதாரண மானதல்ல. எவ்வளவோ எதிர்ப்புகள்; நெருக்கடி காலம் என்ற காலகட்டத்தில் இதை ஒழித்துவிடுவது - இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று திட்டம் தீட்டினார்கள். மூன்று பார்ப்பனர்கள் தணிக்கை அதிகாரிகள். நண்டைச் சுட்டு நரியைக் காவலுக்கு வைத்ததுபோன்று.

தந்தை பெரியார் அவர்கள் என்று போடக்கூடாது. ஆனால், சங்கராச்சாரியார் என்றுதான் போடவேண்டும்; சங்கராச்சாரி என்று போடக்கூடாது.

இப்படி ஒரு காலம் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் தலைவர் ஆசிரியர் அவர்கள் மிசா கைதியாக மத்திய சிறைச்சாலையில் இருந்தார். அன்னை மணியம்மையார் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்தார்கள்.

ஆனால், அவருடைய உறுதியும், அவருடைய வழிகாட்டுதலாலும், அந்த ஓராண்டு ‘விடுதலை'யை நடத்தக் கூடிய வாய்ப்பு எங்களுக்கெல்லாம் கிடைத்தது.

தலைவர் ஆசிரியர் அவர்களோடு 48 ஆண்டு காலம் பயணித்தவன் என்ற முறையிலே நான் சொல்கி றேன்; அந்த ஓராண்டு காலம் என்பது, நம்முடைய இயக்க வரலாற்றிலே, மிகக் கடுமையான காலகட்டமாகும்.

‘விடுதலை'யை ஒழிக்க 

வருமான வரித்துறையினரின் சூழ்ச்சி

அப்பொழுது இருந்த வருமான வரித் துறையினர், பெரியார் திடலுக்குள் நுழைந்தார்கள். நீங்கள் கட்ட வேண்டிய வருமான வரிக்குரிய தொகையெல்லாம் எங்களுக்குக் கொடுக்கவேண்டும்; உங்களுக்கு எங்கெங் கெல்லாம் வருவாய் வருகிறதோ, கட்டடங்களிலிருந்து வாடகை வருகிறதோ, அவற்றையெல்லாம் வருமான வரித் துறைக்குச் செலுத்தவேண்டும் என்று சொன் னார்கள்.

அவர்களுடைய நோக்கம் என்னவென்றால், பெரியார் இயக்கத்தினுடைய ‘விடுதலை' வெளிவரக் கூடாது; கல்வி நிறுவனங்கள் இயங்கக்கூடாது என்ற திட்டத்தோடு வந்தார்கள். ஆனால், அதையும் சமாளித்து அன்னை மணியம்மையார் அவர்கள் ‘விடுதலை'யைத் தொடர்ந்து நடத்தினார்கள்.

ஆசிரியர் அவர்கள் வெளியில் வந்தார். வெளியில் வந்ததற்குப் பின்னர், வருமான வரித் துறை அதிகாரி களைச் சந்திக்கின்றார். 

நாங்கள் பல்வேறு நிறுவனங்களை நடத்துகின்றோம்; நாள்தோறும் ‘விடுதலை' இதழை நடத்துகின்றோம்; இவற்றிற்கெல்லாம் வருமானம் தேவைப்படுகிறது. நாங்கள் வருமான வரித் துறைக்குச் செலுத்தவேண்டிய தொகையை செலுத்துகின்றோம். செலுத்தமாட்டோம் என்று சொல்லவில்லை; மாதாமாதம் செலுத்துகின்றோம். ஆனால், நீங்கள் முழுமையாக ‘விடுதலை'க்கு வரக் கூடிய அந்த வருவாயை முடக்கியிருக்கின்றீர்கள்; அந்த முடக்கத்தை நீக்கவேண்டும் என்று கேட்டபொழுது,

அந்தப் பார்ப்பன அதிகாரியான வருமான வரித் துறை அதிகாரி என்ன சொன்னார் என்றால்,

‘‘அதெல்லாம் சரிங்க மிஸ்டர் வீரமணி. நாங்கள் சொல்வதை செய்தால், நீங்கள் சொல்வதை செய்கிறோம்'' என்றார்.

அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வமாக அவரைப் பார்த்தார் ஆசிரியர்.

‘விடுதலை'யை நிறுத்தி விட முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள் என்றார்.

அப்படியென்றால், அவர்களுடைய கண்களை உறுத்துவது, அவர்கள் பேரபாயமாக நினைப்பது ‘விடுதலை'யைத்தான் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

அந்த ‘விடுதலை'க்கு 60 ஆண்டுகாலம் ஆசிரியர் என்றால், அது சாதாரணமானதல்ல.

ஆரியூர் மக்களின் நன்றிக் காணிக்கை!

விழுப்புரம் மாவட்டம் ஆரியூர் கிராமத்திலிருந்து இங்கே வந்தார்கள். மூன்றாவது தவணையாக ‘விடுதலை’ சந்தாக்களைக் கொடுத்தார்கள். இதுவரை 526 ‘விடுதலை’ சந்தாக்களை அவர்கள் கொடுத்திருக் கிறார்கள்.

நாம் யாரும் அவர்களிடம் சென்று சந்தாக்கள் கேட்கவில்லை. அவர்களாகவே முன்வந்து, வீட்டுக்கு வீடு சென்று, ‘விடுதலை’ சந்தாக்களை சேர்த்தார்கள்.

அதில் ஒரு செய்தியை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். 

யார் யாரெல்லாம் ‘விடுதலை’ சந்தாக்களை கொடுத் தார்கள் என்பதை மட்டும் சொல்லி என்னுரையை முடிக்கின்றேன்.

நரிக்குறவர்கள் 6 பேர்

சுய உதவிக் குழு பெண்கள் 17 பேர்

இருளர்கள் 8 சந்தாக்கள்

புரதவண்ணார் 11 சந்தாக்கள்

கிராமக்கோவில் பூசாரிகள் 9 பேர்

டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ சங்க ஓட்டுநர்கள் - 12 சந்தாக்கள்

துப்புரவு பணியாளர்கள் 9 பேர்

தேநீர்க் கடை வைத்திருக்கும் 2 பேர்

அறிஞர் அண்ணா சுமை தூக்குவோர் சங்க தொழிலாளர்கள் 3 சந்தாக்கள்

இப்படி அவர்கள் சந்தாக்களை சேகரித்துக் கொடுத்தார்கள், அவர்களாகவே முன்வந்து. நம்முடைய தோழர்கள்கூட அங்கே செல்லவில்லை.

ஆகவே, ‘விடுதலை’ என்பதற்கு எந்த எதிர்ப்புகள் வந்தாலும், அதைத் தாங்கிப் பிடிக்கின்ற மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். ஏனென்றால், ‘விடுதலை’யால் பயனடையாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

‘விடுதலை'யின் பெட்டிச் செய்திக்குக்கூட 

உடனடி பலன் உண்டு

‘விடுதலை’யில் ஒரு பெட்டி செய்தி வந்தால்கூட போதும் - அதற்கு நடவடிக்கை கண்டிப்பாக இருக்கும்.

சில நாள்களுக்கு முன்பாக ஒரு செய்தி - மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட நீதிபதிக்கு - மத சம்பந்தமான வழக்குகள் எல்லாம் அவரிடம்தான் போகும். விநாயகர் சதுர்த்தி சம்பந்தமான பல வழக்குகளும் அந்த ஒரு குறிப்பிட்ட நீதிபதியிடமே சென்று கொண்டிருந்தது. அவர் அரைக்கால் சட்டை போட்ட ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். அவருடைய தீர்ப்பு எப்படி இருக்கும் என்று நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

அந்த நேரத்தில் நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள், குறிப்பிட்ட வழக்குகள் மட்டும் ஒரே நீதிபதியிடம் செல்வதற்குக் காரணம் என்ன? இது சரியானதல்ல என்று ‘விடுதலை’யில் அறிக்கை எழுதினார்.

அன்று இரவே அந்த நீதிபதியிடமிருந்து அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன என்ற வரலாறு ‘விடுதலை’க்கு உண்டு.

இதுபோன்ற ஏராளமான செய்திகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நம்முடைய ஆசிரியர் அவர்கள் 60 ஆண்டுகாலம் தன்னுடைய உழைப்பை சிந்தியிருக்கிறார்கள்.

நூற்றாண்டும் கண்டு, அவர் இந்த நாட்டிற்கு தொண்டு செய்யவேண்டும் என்று கேட்டு, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment