பெரியார் நுண்ணாடியைக் காட்டுவதுதான் ‘விடுதலை' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 7, 2022

பெரியார் நுண்ணாடியைக் காட்டுவதுதான் ‘விடுதலை'

எனக்கு எப்பொழுது இயற்கையில் விடுதலை கிடைக்கிறதோ அப்பொழுதுதான் இந்தப் பணியிலிருந்து ஓய்வு!

தேனீக்களாக உழைத்த தோழர்களுக்குப் பாராட்டு

எங்கள் பணி தொடர தலைவர்களே உங்கள் உதவி தேவை!

தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை - ஏற்புரை

சென்னை செப்.7  எப்பொழுது இயற்கையில் எனக்கு விடுதலை கிடைக்கிறதோ, அதுவரை என் ‘விடுதலை' பணி, இயக்கப் பணி, சமூகப் பணி தொடரும் என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர், இந்தப் பணிகளைத் தொடர்வதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களே, உங்களின் ஒத்துழைப்புத் தேவை என்றும், ‘விடுதலை' சந்தா சேர்க்கும் பணியில் தேனீக்களாக உழைத்த தோழர் களுக்கெல்லாம் பாராட்டு, நன்றி என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில்  தமிழர் தலைவர் ஆசிரியர் ஏற்புரை

நேற்று (6.9.2022) மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடைபெற்ற 88 ஆண்டுகால ‘விடுதலை' ஏட்டின் 60 ஆண்டுகால ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குத் தலைவர்கள் பங்கேற்கும் பாராட்டு விழா - ‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.

அவரது ஏற்புரை வருமாறு:

கொள்கைப் போரில், லட்சியப் போரில் போராயுதம்

மிகுந்த உணர்ச்சிமயமான இந்த அறிவுப்பூர்வமான நிகழ்ச்சியில், அதற்குக் காரணமாக இருந்து ஒரு மிகப் பெரிய கொள்கைப் போரில், லட்சியப் போரில் போரா யுதமாக, எளிதில் நமக்கெல்லாம் கிடைக்க முடியாத ஒரு பேராயுதமாக இருக்கும் - தந்தை பெரியார் அவர்கள் கொடுத்த மிகப்பெரிய அறிவாயுதம்தான் ‘விடுதலை' என்ற நம்முடைய அந்த அறிவாயுத நாளேடு.

உங்கள் மானத்தை நீங்கள் திரும்பப் பெறுவதற்காக, இழந்த உரிமைகளை நீங்கள் பெறுவதற்காக...

அந்த நாளேடு, அதன் 88 ஆண்டுகால பயணத்தில், ஓர் ஊழியன், அதற்குப் பணி செய்தான் என்பதற்காக, அவனை உற்சாகப்படுத்தவேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும், இந்தப் பணி தொடரவேண்டும் என்பதற்காக தங்களுடைய முக்கிய பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, உழைப்புத் தேனீக்களாக, நம்முடைய ரத்த நாளம் போன்ற, ரத்தவோட்டம் போன்ற தோழர்கள், உழைப்பாளிகள் உழைத்து, இன்றைக்கு முற்றிலும் வியக்கத்தக்க முறையில், மக்களிடம் சென்று ‘‘‘விடுதலை’யைப் படியுங்கள், அது ‘விடுதலை’க்காக அல்ல, உங்கள் விடுதலைக்காக, உங்கள் அறிவு விடுதலைக்காக, உங்கள் மானத்தை நீங்கள் திரும்பப் பெறுவதற்காக, இழந்த உரிமைகளை நீங்கள் பெறு வதற்காக'' என்று உணர்வுப்பூர்வமாக எடுத்துக் கூறி, மிகப்பெரிய உழைப்பை செய்துகொண்டிருக்கக் கூடிய அருமைத் தோழர்கள் ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்தில், சந்தா வழங்குகின்ற அருமையான உற்சாகம் மிகுந்த இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து, சிறப்பான முறையில் தலைமையேற்று ஏற்பாடு செய்த ‘விடுதலை’யினுடைய நிர்வாக ஆசிரியர் அருமைக்கும், பெருமைக்குமுரிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

எதிரிகள் பல ரூபத்திலே வருகிறார்கள்

இந்நிகழ்ச்சியில் நம்முடைய அனைத்துக் கூட்டணிக் கட்சித் தோழர்கள் என்று சொல்வதைவிட, இது ஒரு தேர்தல் கூட்டணி என்பதைவிட, அதைத் தாண்டி கருத்தியல், கொள்கைப் போரில் தளபதிகளாக நிற்கக் கூடிய இயக்கங்கள் என்ற அளவில் இருக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்று, அதன் சார்பாக இங்கே வந்து என்னை ஊக்கப்படுத்தி, ‘‘‘விடுதலை’யினுடைய தொண்டு தொடரவேண்டும்; இந்த இயக்கத்தினுடைய பணி தொய்வடையக்கூடாது; இந்தக் காலகட்டத்தில்தான் மிக முக்கியமாக எழுந்து நிற்கவேண்டும். காரணம், எதிரிகள் பல ரூபத்திலே வருகிறார்கள். அவர்கள் வியூகங்களை அமைத்துக் கொண்டிருக்கிறபொழுது, ‘விடுதலை’தான் அந்த வியூகங்களை உடைக்க முடியும்'' என்று வலியுறுத்தக் கூடிய அற்புதமான, சிறப்பான கருத் துரைகளை இங்கே எடுத்து வைத்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செய லாளர் அருமைத் தோழர் மானமிகு மல்லை சத்யா அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செய லாளர் அன்புத் தோழர் மு.வீரபாண்டியன் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவன தலைவரும், மாநில தலைவருமான சட்டப்பேரவை உறுப்பினர் அன்பிற்குரிய பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், எங்கள் அன்புத் தோழரும், எங்கள் மாவட்டத்துக்காரர் என்ற பெருமையை என்றைக்கும் நாங்கள் மறக்காமல் ஒன்று சேரக்கூடியவர்களாக இருக் கக்கூடிய அருமைத் தோழர் கே.பி. என்று அழைக்கக் கூடிய தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

என்றைக்கும் இரட்டைக் குழலைத் தாண்டி மூன் றாவது குழலாக இன்றைக்கு இருப்போம்; காரணம், இந்தக் குழல் இங்கேதான் உருவானது என்பதை வலியுறுத்தக்கூடிய எழுச்சித் தமிழர், முனைவர், நாடாளுமன்ற உறுப்பினர், எனது அருமைச் சகோதரர், உடன்பிறப்பு, என்றும் மாறாத கொள்கை உறவு படைத்த அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

பூஜ்ஜியங்கள்தான் உங்களுக்கு மிஞ்சுமே தவிர, ராஜ்ஜியங்கள் மிஞ்சாது

எத்தனைப் பொய்களைச் சொன்னாலும், எத்தனை பூஜ்ஜியங்களைப் போட்டாலும், பூஜ்ஜியங்கள்தான் உங்களுக்கு மிஞ்சுமே தவிர, ராஜ்ஜியங்கள் மிஞ்சாது என்பதை மிகத் தெளிவாக தன்னுடைய உண்மையான நிலைப்பாட்டின்மூலமாக எடுத்துக்காட்டிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஒப்பற்ற நாடாளுமன்ற உறுப்பினரும், சீரிய சுயமரியாதை வீரர், பகுத்தறிவாளர் அருமைச் சகோதரர் மானமிகு ஆ.இராசா அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு, அருமையாக வரவேற்புரை- முன்னிலை உரை வழங்கிய கழகப் பொதுச்செயலாளர்கள், உழைப்புத் தேனீக்களாக சந்தாக்களைச் சேர்த்த தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்களே, முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களே, அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களே, பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களே, மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் அவர்களே,

இங்கே சிறப்பாகக் குழுமியிருக்கக்கூடிய அத் துணைப் பெரியோர்களே, அத்துணை இயக்கத் தாய் மார்களே, தோழர்களே, சான்றோர்களே, ஊடகவிய லாளர்களே, 

இந்தப் பெருஞ்சுமையை, நான் சுகமாகக் கருதிடும் அளவுக்கு ஆக்கி - இந்தப் பயணத்தில், 60 ஆண்டுகால பயணத்தை எளிமையாக ஆக்குவதற்கு முழுக் காரண மாக இருக்கக்கூடிய என்னுடைய வாழ்விணையர், அன்பிற்கும், பாராட்டுதலுக்கும், நன்றிக்கும் உரிய அருமைத் தோழர் மோகனா அவர்களே,

மற்றும் இந்நிகழ்வில் குழுமியிருக்கக்கூடிய தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏன் தலைதாழ்ந்த என்று சொல்லுகிறேன் என்று சொன்னால், வெறும் அடக்கத்திற்காக அல்ல. அய்யா அவர்களுடைய தொண்டர்கள் என்று சொன்னால், எதிர்ப்பு வரும்பொழுது, அவர்களுடைய தலை நிமிரும்; தலை சாயாது. ஆனால், பாராட்டு, புகழ் என்று வருகிற நேரத்தில், தலை சாயத்தான் வேண்டும்; விரும்பி சாய்வதில்லை; இயல்பாகவே சாயக்கூடிய அளவிற்குத் தலை தாழ்ந்து, உங்களுடைய பாராட்டு என்பது, அது உண்மை என்று நான் சொல்லாவிட்டாலும்கூட, அதைத் தாண்டி உற்சாகம், ஊக்க மாத்திரை என்ற அளவிலே தருகிறீர்கள். நீங்கள் எந்த நம்பிக்கை வைத்துக்கொண்டு, மேலும் மேலும் நான் வாழவேண்டும் என்று சொன்னால், அதற்கு என்ன பொருள்?

உங்களுக்கு ஓர் உத்தரவாதம் தருகிறேன்!

மேலும் மேலும் எங்களுக்காக உழைக்க வேண்டும்; உழைப்பை நீங்கள் சுருக்கிவிடக் கூடாது என்று சொல்லக்கூடிய அளவில் இருக் கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களுக்கு ஓர் உத்தரவாதம் தருகிறேன்.

அய்யா அவர்கள் எழுதிய எழுத்து குடிஅரசில்.

எனக்கு எல்லாமே தந்தை பெரியார் அவர்கள் தான் வழிகாட்டி. எனக்கு சொந்த புத்தி தேவை யில்லை, பெரியார் தந்த புத்தி போதும் என்று சொல்லக்கூடிய பெரியார் தொண்டன் நான்.

அப்பொழுதுகூட சில நண்பர்கள் கேட்டார்கள், ஒரு பகுத்தறிவுவாதி இப்படி சொல்லலாமா? என்று கேட்டார்கள்.

எடுத்த எடுப்பிலே அந்தக் கேள்வியில் நியா யம் இருக்கிறது என்றுகூட சிலருக்குத் தோன்றலாம்.

நான் அதற்கு விளக்கம் சொன்ன பிறகு, தோழர் கள் என்னுடைய விளக்கத்தை மறுக்கவில்லை.

சொந்த புத்தி எனக்குத் தேவையில்லை; பெரியார் தந்த புத்தியே எனக்குத் தேவை!

நான் சொன்னேன், என்னுடைய சொந்த புத்தி எனக்குத் தேவையில்லை; பெரியார் தந்த புத்தியே எனக்குத் தேவை என்று நான் சொன்னதற்கு என்ன பொருள் என்று சொன்னால்,

சொந்தப் புத்திக்குக்கூட சில நேரங்களில் சபலங்கள் வரலாம்,

சொந்தப் புத்திக்குக்கூட சில நேரங்களில் தடுமாற்றங் கள் வரலாம்,

சொந்தப் புத்திக்குக்கூட சில நேரங்களில் துணி வின்மை ஏற்படலாம்,

பணியைத் தொடருவதற்கு, உங்களுடைய அன்பு, ஆதரவு மிக முக்கியம்!

ஆனால், பெரியார் தந்த புத்திக்கு ஒருபோதும் சபலங்கள் வராது; ஒருபோதும் துணிவின்மை ஏற்படாது; ஒருபோதும் தடுமாற்றம் இருக்காது என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றக் காரணத்தினால்தான் நண்பர்களே, இந்தப் பணியைத் தொடருவதற்கு, உங்களுடைய அன்பு, ஆதரவு இவையெல்லாம் மிக முக்கியம்.

இன்றைக்குத் தவணை முறையிலே நீங்கள் சந்தாக் களைக் கொடுத்திருக்கிறீர்கள். இது அவ்வளவும் உங் களுடைய உழைப்பு. நம்மிடம் அதானிகள் இல்லை; நம்மிடம் அம்பானிகள் இல்லை. இருக்கக்கூடாது; அப்படியே வந்தாலும், அவர்களுக்கு இங்கே இட மில்லை.

நம்மிடத்திலே டாடாக்களும், பிர்லாக்களும் இல்லை; சாதாரண தோழர்கள் இருக்கிறார்கள்.

இந்த சமுதாயம், ஜாதியால் பிளக்கப்பட்ட சமுதாயம். அந்தக் கொடுமை - சனாதனத்தை வேரறுப்போம் என்கிற குரல்கள் இன்றைக்கு எங்கும் ஓங்கி ஒலிக் கின்றன.

முதலில் ஹிந்துத்துவா, பிறகு ஆன்மிகம், இப் பொழுது புதிய அவதாரம் சனாதனம். ஒவ்வொரு காலகட்டங்களில் ஒவ்வொரு அவதாரங்கள். ஏனென் றால், தசாவதாரத்திற்குமேலே அவதாரங்களை எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

‘‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’’

அப்படி அவதாரம் தமிழ்நாட்டில். எடுத்துக்கொண்டி ருக்கின்ற நேரத்தில், இன்றைக்கு அவை தெளிவாக தோலுரித்துக் காட்டப்பட்டு வருகின்றன. வெளியே முழுக்க முழுக்க அவர்களே வந்துவிட்டார்கள்; முகமூடியை நாம் கழற்றுவதைவிட, அய்யா தந்தை பெரியார் சொல்லுவார்கள், ‘‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது'' என்று.

அதுபோல திருவாரூர் சனாதன எதிர்ப்பு மாநாட் டினை எதிர்த்து, ஓர் அறிக்கை கொடுத்தவர், அந்தப் பூனைக்குட்டியை வெளியே கொண்டு வந்தார், காவிக் கட்சியைச் சார்ந்த ஒரு நபர்.

சனாதனம் என்றால், ஹிந்து மதம்; ஹிந்து மதம் என்றால், சனாதனம்!

மாநாட்டினைத் தடைச் செய்யவேண்டும் என்று சொன்ன நேரத்தில், சொன்னார் - சனாதனத்திற்கு எதிர்ப்பு என்று போட்டிருக்கிறார்கள்; அப்படியானால், ஹிந்து மதத்திற்கு எதிர்ப்பு என்று அர்த்தம்; ஏனென்றால், சனாதனம் என்றால், ஹிந்து மதம்; ஹிந்து மதம் என்றால், சனாதனம். அதைத்தான் எதிர்க்கிறார்கள் என்று.

இந்த விடையைத்தான் உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்தோம்.

இந்த விடைதான் மிக முக்கியம்.

ஒருவர், ராஜ்பவனில் சனாதனத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்!

இப்பொழுது மக்களுடைய வரிப் பணத்தில் சம்பளத்தை வாங்கிக்கொண்டு ஒருவர், ராஜ்பவனில் சனாதனத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார் அல்லவா, ஒரு சனாதனவாதி; ஆர்.எஸ்.எஸ். பணியை செய்து கொண்டிருக்கின்றார் அல்லவா ஓர் ஆளுநர். அந்த ஆளுநர், பதவியேற்பதற்கு முன்பு, தலைமை  நீதிபதிக்கு முன்னால், அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற மதச்சார்பின்மையின்மீது உறுதிமொழி எடுத்துத்தானே அந்தப் பதவிக்கு வந்திருக்கிறார்.

அந்த அரசமைப்புச் சட்டத்தில், உறுதிமொழியில்  என்ன இருக்கிறது? பிரியாம்பிள்பற்றி சொன்னாரே சற்று நேரத்திற்கு முன்பு ஆ.இராசா அவர்கள்.

SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC   REPUBLIC 

என்ற வார்த்தை இருக்கிறதே, அதில்  SOVEREIGN SECULAR என்று வருகிறபொழுது, சமதர்ம, மதச்சார் பற்ற என்கிற இரண்டு சொற்களும் மிகவும் முக்கியம். இந்த இரண்டு சொல்லும் சனாதனத்திற்கு விரோத மானவை; நேர் எதிரானவை.

இன்றைக்கு ‘விடுதலை’யினுடைய தேவை பன்மடங்கு அதிகமாக இருக்கிறது

சனாதனம் மாறாதது என்றெல்லாம் விளக்கம் சொல்ல முடியாது. சனாதனம் என்றால், ஹிந்து தர்மம் - ஹிந்து தர்மம் என்றால், மனுதர்மம், குலதர்மம்.

ஆகவே, இதுபோன்ற ஒரு காலகட்டத்தில், ‘விடுதலை'யினுடைய தேவை பன்மடங்கு அதிகமாக இருக்கிறது.

கடந்த காலங்களில், நெருக்கடி காலம்பற்றி சொன்னார்கள்; நெருக்கடி காலத்தில், சிறைச்சாலையில் நாங்கள் எல்லாம் ‘மிசா' கைதிகளாக இருந்தோம். 

எங்கள் வீட்டில் இருந்தவர்களுக்கு நாங்கள் எங்கே இருக்கின்றோம் என்று தெரியாது.

சிறை சூப்பிரண்டெண்ட்டின் அச்சுறுத்தல்!

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ‘முரசொலி' மாறனையும், திராவிடர் கழகத்தைச் சார்ந்த என்னையும் சிறை சூப்பிரண்டெண்ட் வித்யாசாகர் அழைத்து,

‘‘நீங்கள் எல்லாம் இங்கேதான் இருக்கவேண்டும், வாழ்நாள் முழுவதும்; வெளியே போக முடியாது. வெளியில் சென்று வெளிச்சத்தைப் பார்க்கலாம் என்று நீங்கள் நினைக்க முடியாது. நீங்கள் எவ்வளவு காலத் திற்கு இங்கே இருப்பீர்கள் என்று உத்தரவாதம் சொல்ல முடியாது. நாளைக்கு உங்கள் கட்சியை தடை செய்ய உத்தரவு வரப் போகிறது. நாளைக்கு உங்கள் பத்திரி கைகள் எதையுமே நடத்த முடியாது; ஆகவேதான், அதற்கு இப்பொழுதே நீங்கள் தயாராகுங்கள்; நான் உங்களுக்கு நட்பு முறையிலே சொல்லுகிறேன்'' என்று, அதிகாரிகளுக்கே உரிய முறையில், அவர் கொஞ்சம் அச்சுறுத்தலைக் கலந்து அந்த முறையிலே, மிக லாவகமாக சொன்னார்.

உடனே தோழர் ‘முரசொலி' மாறன்கூட அமைதியாக இருந்தார். 

என்னைப் பார்த்து, ‘‘என்ன வீரமணி, நீங்கள் என்ன சொல்றீங்க?'' என்றார் சிறை சூப்பிரண்டெண்ட் வித்யாசாகர்.

இத்தனைக்கும் அவர் பிறப்பதற்கு முன்னால், அவருடைய அப்பாவிற்கும் - அம்மாவிற்கும் திருமணம் தந்தை பெரியார் தலைமையில், ஈரோட்டில் நடந்தது. அதுதான் மிகவும் முக்கியம்.

இந்த இனத்தின் கூறுபாடுகளில் அது மிக முக்கியம்.

அப்படி சொன்னவுடன், நான் வேறொன்றும் சொல்ல வில்லை.

உடனே நாங்கள் ஆகா, வெளியில் போகவே முடியாதா? என்று பயப்படவில்லை.

ஒரே ஒரு வார்த்தை சொன்னேன்; ‘‘இருக்கலாம், நீங்கள் சொல்வது உண்மையாகக்கூட இருக்கலாம். உங்களுக்கு வந்த தகவலை நீங்கள் எங்களுக்குச் சொல்லியிருக்கலாம், சரி. ஆனால், அரசியல் என்பது என்ன தெரியுமா? அதை உங்களுக்கு நான் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன். நாளை காலை என்ன எனத் செய்தி தெரியாததற்குப் பெயர்தான் அரசியல்; இதை நன்றாக நீங்கள் நினைவில் வைத்துக் கொள் ளுங்கள்; இரண்டும், இரண்டும் நான்கு என்றால், அது கணக்கில் சரியாக இருக்கும்; ஆனால், அரசியலில் இரண்டும் இரண்டும் நான்கு அல்ல;  இரண்டும் இரண்டும் எட்டு; இரண்டும் இரண்டும் பூஜ்ஜியம்; இரண்டும், இரண்டும் பதினாறு என்று எப்படி வேண்டு மானாலும் வரலாம்'' என்று சொல்லிவிட்டு,

‘‘என்ன இப்படி சொல்லுகிறேன் என்று நினைக் காதீர்கள்; தூக்கு மேடைக்குச் சென்ற முஜ்புர் ரகுமான், அடுத்த சில நாள்களில், சோனார்  பங்களா என்று சொல்லக்கூடிய அதிபராக அங்கே வந்திருக்கிறார் என்ற வரலாற்றையெல்லாம் நாங்கள் படித்தவர்கள்'' என்றேன்.

சிறைச்சாலையிலேயே எங்கள் வாழ்க்கை முடிந்து விடுகிறது என்றால், அதற்காக எங்களை அச்சுறுத்த வேண்டுமா? என்று நினைத்தோம்.

அதுபோன்று, ‘விடுதலை'யை நெருக்கடி காலத்தி லேயே முடக்கிவிடவேண்டும்; ‘முரசொலி'யை முடித்து விட வேண்டும்; கலைஞரை செயல்பட விடக்கூடாது என்றெல்லாம் நினைத்தார்கள்.

27,605 ‘விடுதலை' சந்தாக்கள்

அந்த ‘விடுதலைக்கு' இன்றைக்கு அத்துணைத் தோழர்களும் உழைத்து, மேடையில் 27,605 சந்தாக் களைக் கொடுத்திருக்கிறீர்கள்.

முதல் தவணையாக நீங்கள் தந்திருப்பதற்காக நன்றி யைச் செலுத்துகின்றேன். ‘விடுதலை' முடிந்துவிடாது; எங்கள் வாழ்க்கை முடியும் - அது இயற்கை. 

நீங்கள் ஆசையோடு சொன்னீர்கள், நான் நூறாண்டு வாழவேண்டும் என்று. பெரியார் அய்யாதான் சொல் லுவார், ‘‘என்னை சிக்கனக்காரன், கருமி என்றெல்லாம் சொல்கிறீர்கள்; நீங்கள் வாழ்த்தும்பொழுது, நூறாண்டு வாழுங்கள் என்று சொல்கிறீர்களே, சொல்றது தான் சொல்கிறீர்கள், ஒரு ஆயிரம் ஆண்டு வாழுங்கள் என்று சொல்லிவிட்டுப் போங்களேன்; நடக்கவா போகிறது. அதிலே என்ன உங்களுக்குக் கஞ்சப் புத்தி?'' என்று வேடிக்கையாக சொல்வார், அய்யா அவர்களை வாழ்த்தும்பொழுது.

அதுபோன்று நான் சொல்லமாட்டேன்; அதேநேரத் தில் உங்களுடைய நல்லெண்ணம் எப்படி இருந்தாலும்,

அய்யா சொன்ன வார்த்தை - பெரியார் தந்த புத்தி என்று அதற்குத்தான் சொன்னேன்.

தந்தை பெரியார் எழுதுகிறார்!

‘குடிஅரசு' தொடங்கிய நேரத்தில் தந்தை பெரியார் அவர்கள் எழுதுகிறார் தோழர்களே,

‘‘எனக்கு நினைவு தெரிந்த காலம் முதற்கொண்டு, எனக்கு நினைவு தப்பும் காலம்வரை இந்த உணர்வுதான் இருக்கும்'' என்று சொன்னார்.

ஆகவே, எனக்கு நினைவு தப்பினாலொழிய இந்தப் பணியிலிருந்து யாரும் என்னை தவிர்த்துவிட முடியாது; இந்தப் பணியும் என்னை தவிர்த்துவிட முடியாது.

எனக்கு எப்பொழுது இயற்கையில் விடுதலை கிடைக்கிறதோ, அப்பொழுதுதான் இந்தப் பணியிலிருந்து ஓய்வு பெறுவேன்!

ஆகவேதான் உங்களுக்கு உத்தரவாதம் சொல்லு கிறேன். நான் இந்தப் பணியை விடமாட்டேன்.

நானும் ‘விடுதலை'யை விடமாட்டேன்;

‘விடுதலை'யும் என்னை விடாது. எனக்கு எப் பொழுது இயற்கையில் விடுதலை கிடைக்கிறதோ, அப்பொழுதுதான் இந்தப் பணியிலிருந்து ஓய்வு பெறுவேன்; காரணம் இந்த இனத்திற்குக் கடைசி மூட நம்பிக்கைக்காரன் இருக்கிற வரையில், கடைசி எதிரி இருந்து, நம்மை சூத்திரனாக, பஞ்சமனாக, தீண்டாத வனாக, தொடக்கூடாதவனாக, படிக்கக்கூடாதவனாக ஆக்கி, நம்முடைய சகோதரிகளான பெண்களையெல் லாம், சரி பகுதியாக இருக்கக்கூடியவர்களை அடிமை யாக்கியுள்ள நிலை இருக்கின்ற வரையில், ‘விடுதலை'க்கு வேலை உண்டு.

முனை மழுங்காமல் இருக்க சானை பிடிப்பதுதான் சந்தா இயக்கம்!

‘விடுதலை' ஆயுதம் - சுழன்றுகொண்டே இருக்க வேண்டும்; இந்த ஆயுதம் முனை மழுங்கக்கூடாது; இதை அடிக்கடி சானை பிடிக்கவேண்டும்; அதுதான் சந்தா இயக்கம். 

சந்தா கொடுக்கவில்லை; சானை பிடித்துக் கொடுக் கிறீர்கள்; கூர் மழுங்கக்கூடாது என்பதற்காக.

‘விடுதலை' மட்டும் அல்ல நண்பர்களே, ‘முரசொலி' யாக இருந்தாலும், ‘தீக்கதிராக' இருந்தாலும், ‘ஜனசக்தி' யாக இருந்தாலும், மிகப்பெரிய அளவிற்கு ஒரு நிர் வாகத்தை நடத்துவது எளிதல்ல. ஆனால், மக்கள் இயக்கமாக இதை நடத்துகிற நேரத்திலே இது தேவைப் படுகிறது. அதைத் தொடர்ந்து செய்வோம். உங்களுடைய ஆதரவு மிகவும் முக்கியம்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் என்னிடத் தில், ‘‘ஏகபோகமாக ‘விடுதலை'யை ஒப்படைக்கிறேன்'' என்று சொன்னார்கள்.

நான் உழைப்பைத் தவணையில்லாமல், தவணை கேட்காமல் செய்துகொண்டே இருப்பேன்!

இந்த விழாவை, 60 ஆண்டு விழாவை - தவணையாக ஒரு தவணை கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் சந்தாவைத் தவணையாகக் கொடுத்தாலும், நான் உழைப்பைத் தவணையில்லாமல், தவணை கேட்காமல் செய்துகொண்டே இருப்பேன். அந்த உத்தரவாதத்தை இந்த நேரத்தில் தெளிவாக உங்களிடம் சொல்கிறேன்.

அப்படி சொல்லிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், ஏனென்றால், மற்ற எல்லா கால கட்டங்களையும்விட, ஏன், நெருக்கடி காலத்தை விட மோசமான காலகட்டத்தை ‘விடுதலை'யும், முற்போக்கு இயக்கங்களும் சந்திக்கின்றன.

ஒரே ஓர் உதாரணத்தைச் சொல்லுகிறேன், அழகாக இராசா அவர்கள் சொன்னார்.

ராகுல் காந்தியின் நடைபயணம்

ராகுல் காந்தி அவர்கள் நாளை நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார். அதற்கு என்ன தலைப்பு கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா?

‘‘அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவோம்'' என்று.

இதுவரையில், எதிர்க்கட்சிக்காரர்கள் அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவோம் என்று சொல்ல வேண்டிய அவசியமிருந்ததில்லை. யாரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்? எதிரிகளிடமிருந்து அல்ல; இன எதிரிகளிடமிருந்து அல்ல; ஆளுகின்றவர்களிடமிருந்து அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றவேண்டும்.

பார்ப்பனர்களின் விஷப் பல்லைப் பிடுங்கவேண்டிய கட்டாயம்!

அந்த அரசமைப்புச் சட்டத்தினுடைய முன் பகுதியை, இங்கே சற்று நேரத்திற்கு முன்பாக, நம்முடைய அருமைச் சகோதாரர் இராசா அவர்கள் சொன்ன பகுதியை - நடைமுறையில் இருக்கக்கூடிய, சட்டத்தில் அது தெளிவாக எழுதப் பட்டது மட்டுமல்ல; உறுதி செய்யப்பட்ட ஒன்றை, உடைத்தெறிவோம் என்று சொல்லக்கூடிய அள விற்குத் துணிச்சல்,  நூற்றுக்கு மூன்று பேராக இருக் கின்ற ஓர் ஆதிக்கக் கும்பலுக்கு, பார்ப்பனர்களுக்கு வருகிறது என்று சொன்னால், அவர்களுடைய விஷப் பல்லைப் பிடுங்கவேண்டிய கட்டாயம், அவசியம் உண்டு - ஜனநாயகத்தைக் கருதி. தனிப் பட்ட முறையில் அல்ல - நாம் வன்முறையை நம்பக்கூடியவர்கள் அல்ல. அதேநேரத்தில், சட்டம், மக்களை நம்புகின்றோம்.

இறையாண்மை எங்கே இருக்கிறது?

ஏனென்றால், இந்த அரசமைப்புச் சட்டப்படி, அதி காரங்கள் நாடாளுமன்றத்தில் இல்லை. இறையாண்மை எங்கே இருக்கிறது? நாடாளுமன்றத்திலா? குடியரசுத் தலைவரிடத்திலா? குடியரசு துணைத் தலைவரிடத்திலா? பிரதமரிடத்திலா? ஒன்றிய அமைச்சர்களிடத்திலா? ஆளுநர்களிடத்திலா? இல்லை நண்பர்களே - பின் யாரிடம் இருக்கிறது? அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரி, பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், புரட்சிகரமாக எழுதிய, அந்த அரசமைப்புச் சட்டத்தின் முன் பகுதி இருக்கிறதே, பீடிகை - பிரியாம்பிள் என்று சொல்வதில் எப்படி ஆரம்பிக்கிறார்?

WE, THE PEOPLE OF INDIA

நாம் பார்த்துக் கொடுக்கிறோம் அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்றம் பார்த்து நமக்குக் கொடுக்கவில்லை. நாம் பார்த்து உருவாக்கிக் கொடுத்த அரசமைப்புச் சட்டம். இறுதியில் யாரிடத்தில் உரிமை இருக்கிறது? யாரிடத்திலே அதிகாரம் இருக்கிறது?

மக்களாகிய நம்மிடத்திலே அதிகாரம் இருக்கிறது. இதைப் பறிக்க எந்தக் கொம்பனுக்கும் உரிமை இல்லை. யார் பறிக்க முயன்றாலும், அதைத் தடுக்க நமக்கு உரிமை உண்டு, ஜனநாயகப்படி, தத்துவப்படி, சட்டப்படி என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது.

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST  SECULAR  DEMOCRATIC   REPUBLIC and to secure to all its citizens

இறையாண்மையுள்ள, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு - 

நடைமுறையில் இதையெல்லாம் சொல்லிவிட்டு, ஒரு ஆள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்.

அன்றைக்கும் அவர் புத்தகத்தை விடவில்லை; இன் றைக்கும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். 

இன்றைக்கும் தேவைப்படுகிறதே. அவர் எழுதிய புத்தகம் - இதோ அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற வாசகத்தை உங்களுக்கு நான் சொல்கிறேன்.

Preamble of constitution has been framed with great care and deliberation, so that it reflects and delineate the ultimate purpose and noble objective of the makers of the constitution.

அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தை மாற்ற முடியாது!

இதுதான் அரசமைப்புச் சட்டத்தினுடைய தத்துவம். அழகாகச் சொன்னார் இராசா அவர்கள், 13 நீதிபதிகள் அமர்ந்து, கேசவானந்த பாரதி வழக்கில், அடிக்கட்டு மானத்தை மாற்ற முடியாது. நாடாளுமன்றம் எல்லாம் முனைந்து தீர்மானம் போட்டாலும், அடிப்படைக் கட்டு மானத்தை மாற்ற முடியாது என்பதைச் சொல்லி, இதில் எழுதியிருக்கிறார்கள்; தீர்ப்பும் தந்திருக்கிறார்கள். ஒரு தீர்ப்பல்ல, பல தீர்ப்புகள்.

நேரமில்லாத காரணத்தினால், ஒன்றை உங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறேன். ஏனென்றால், அறிவார்ந்த மக்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். நீங்கள் இதைத் திண்ணைப் பிரச்சாரமாக செய்யவேண்டும்; தெருப் பிரச்சாரமாக செய்யவேண்டும். 

‘விடுதலை' எதற்காக?

‘விடுதலை'யில் வருகின்ற கருத்துகள் ‘விடுதலை'க் காக அல்ல; உங்களுக்காக, மக்களுக்காக, புரியாதவர் களுக்காக - இங்கே இருக்கக்கூடிய வாய்ப்பு என்ன?

The objectives specified in the preamble contains the basic structure of the constitution.

இதில்,  objectives என்பதுதான் அந்த அய்ந்து வார்த்தை - SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC 

அய்ந்துத் தன்மைகள்.  அதுதான் அடிப்படையானது. 

Which cannot be amendment in excise of the power under article 368 of the constituion for the theory of the basic structure. 

எனவே, 368-க்குக் கீழே அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தலாம்; ஆனால், அந்தத் திருத்தம் இதற்குப் பொருந்தாது. இந்த அடிப்படையிலே பொருந்தவே பொருந்தாது. இவ்வளவு பச்சையாக எத்தனைத் தீர்ப்பு கள் இருக்கின்றன? ஏராளமான தீர்ப்புகள் இருக்கின்றன. அதையொட்டி பல தீர்ப்புகள் வந்துவிட்டன.

அரசியல் புரோக்கராக இருக்கின்ற ஒரு பார்ப்பனர்!

அதற்குப் பிறகு, உச்சநீதிமன்றத்தில், அரசியல் புரோக்கராக இருக்கின்ற ஒரு பார்ப்பனர், இதை எடுக்கவேண்டும் என்று வழக்குப் போடுகிறார் - செக்குலர் என்ற வார்த்தை இருக்கக்கூடாது; சோசியலிஸ்ட் என்ற வார்த்தை இருக்கக்கூடாது என்று சொல்வதற்கு யார் இவருக்கு உரிமை கொடுத்தது?

நண்பர்களே, அந்தத் தைரியத்திற்குப் பின்னால் எது இருக்கிறது? தெரியுமா?

நடைமுறையிலே அதை இன்றைக்குத் தூக்கிப் போற்றுகிறார்கள்.

சட்டப்படி அவர் கேட்கிறாராம்.   ‘‘நடைமுறையில் நாங்கள் வந்துவிட்டோம்; சனாதனம் என்பது அதுதான். சனாதனம் என்கிற ‘போர்' இருக்கிறது பாருங்கள்; அதை எங்கெங்கே எப்படி அவர்கள் உள்ளே வைத்திருக் கிறார்கள்'' என்பதை கவனிக்கவேண்டும்.

பெரியார் நுண்ணாடியைக் காட்டுவதுதான் ‘விடுதலை’ நாளேடு!

இதையெல்லாம் பார்க்கவேண்டுமானால், அந்த நுண்ணாடி இருக்கவேண்டும்; அந்த நுண் ணாடிதான், பெரியார் நுண்ணாடி. அந்த நுண் ணாடியைக் காட்டுவதுதான் ‘விடுதலை' நாளேடு. அதை செய்வதற்குத்தான் நாங்கள் இருக்கிறோம்.

நீங்கள் அடுத்தத் தவணையை, 90 வயதிலே நாங்கள் தருகிறோம்; இன்னும் சில மாதங்கள்தான் என்று சொன்னீர்கள். வரவேற்கிறோம்; உற்சாகப் படுத்துங்கள். ஏனென்றால், அது மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும். ‘விடுதலை'யில் வருகின்ற செய்திகள், மற்ற பத்திரிகைகளில் வராது.

எதைப்பற்றியும் கவலைப்படமாட்டோம்; எப்போதும் தயாராக இருப்போம்

இலக்கியத்தில் இருக்கின்ற சொல், பார்ப்பனர் என்பது. ‘‘பிராமணாள்'' என்கிற வார்த்தை திருக்குறளில் கிடையாது; பாரதியார்கூட ‘‘பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே'' என்றுதான் எழுதியிருக்கிறார்.

‘பார்ப்பான்' என்று எழுதுவதற்குக்கூட ‘விடுதலை' ஒன்றுதானே இருக்கிறது. மற்ற பத்திரிகைகள் எழுத முடியாதே; அதற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியுமே!

எங்களைப் பொறுத்தவரையில் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டோம்; எப்போதும் தயாராக இருப்போம்.

ஆகவே, ‘விடுதலை' தொடர வேண்டும் என்பதற்காக எந்த விலையையும் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நாங்கள் பிரகடனப்படுத்துகின்றோம்.

இரண்டாம் தவணையாகக் கொடுக்கும் ‘விடுதலை' சந்தாக்களை நீங்கள் இங்கே கொடுப்பீர்களே - அல்லது சிறைச்சாலையில் இந்த ஆசிரியர் இருக்கும்பொழுது ஒருவேளை அங்கே கொடுப்பீர்களோ - எங்கே நீங்கள் கொடுத்தாலும் சரி.

உரிமைப் போர்க் குரல் நடத்தக்கூடிய உணர்வுகளை உண்டாக்ககூடியவர்கள்!

நாங்கள் இருக்கின்றோமோ, இல்லையோ - ‘விடுதலை' இருக்கவேண்டும்; ‘விடுதலை' போன்ற ஏடுகள் இருக்கவேண்டும். அந்த உரிமைப் போர்க் குரல் நடத்தக்கூடிய உணர்வுகளை உண்டாக்ககூடியவர்கள் இருக்கவேண்டும். 

எனவேதான், 

அதுதான் நம்மை வாழ வைக்கும்; 

அதுதான் சமதர்மத்தை, 

அதுதான் ஜனநாயகத்தை, 

அதுதான் மதச்சார்பின்மையை, 

அதுதான் அனைவருக்கும் அனைத்தும் என்கின்ற திராவிட மாடல் ஆட்சியைக் காப்பாற்றும்.

பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும்கூட ‘‘நமோ சூத்திரர்கள்’’ என்றுதான் அழைக்கிறார்கள்!

இன்றைக்கும் எவ்வளவு பெரிய போர் நடந்துகொண் டிருக்கின்றது; எவ்வளவு அவதூறுகள் நடந்துகொண் டிருக்கின்றன. இந்த ‘திராவிட மாடல்' ஆட்சி இல்லையானால் - நேற்றைய பெண்கள் - இன்றைக்குப் புதுமைப் பெண்களாக வந்திருக்கிறார்களே, இந்தக் கொள்கை சனாதனத்திலே உண்டா?

பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும்கூட, அவர் களுக்கு மனுதர்மம், சனாதன தர்மம் என்ன சொல்கிறது - ‘‘நமோ சூத்திரர்கள்'' என்றுதான் அழைக்கிறது.

ஒரு புதிய சமுதாயத்தை, புத்துலக உருவாக்கவேண்டும்!

ஆகவே, சனாதனம் வீழ்த்தப்படவேண்டும் என்பது தனி மனிதர்களுக்காக அல்ல - மிகப்பெரிய அளவிற்கு உரிமைக் குரல். ஒலிக்கின்ற ஒரு புதிய சமுதாயத்தை, புத்துலகத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.

ஆகவேதான், ‘விடுதலை' என்று சொல்லும்பொழுது, 

மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை

பெண்ணடிமையிலிருந்து விடுதலை 

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை

ஜாதியிலிருந்து விடுதலை

தீண்டாமையிலிருந்து விடுதலை

என்று சொல்லுகின்ற குரல் தொடர்ந்து ஒலிக்கவேண்டும். 

என்னுடைய வாழ்விணையரையும் அழைத்து நீங்கள் பாராட்டியது என் நெஞ்சத்தைத் தொட்டது!

அந்தப் பணியை செய்வதற்கு நீங்கள் ஊக்கப் படுத்தியமைக்காக நன்றி என்று சொல்லி, இந்த நேரத்தில் என்னை மட்டும் பாராட்டாமல், என்னு டைய வாழ்விணையரையும் அழைத்து நீங்கள் பாராட்டியது இருக்கிறதே, அது என் நெஞ்சத்தைத் தொட்டது.

சாதாரணமாக அவர் வெளிச்சத்திற்கு வர மாட்டார்; தன்னைத் தானே முக்காடு போட்டுக் கொண்டு, தன்னை ஒதுக்கிக் கொண்டிருக்கக் கூடியவர்.

என்னுடைய பணியை நீங்கள் இன்னும் சுலபமாக்கியிருக்கிறீர்கள்!

குடும்பத்தைப் பொறுத்தவரையில், அவருக்குக் குருதிக் குடும்பம் மிக முக்கியம். கொள்கைக் குடும்பம் அப்புறப்படுத்தப்பட்டது அல்ல. அவரை நீங்கள் அழைத்து பாராட்டி, எனக்குத் தெம்பூட்டியிருக்கிறீர்கள். என்னுடைய பணியை நீங்கள் இன்னும் சுலபமாக்கி யிருக்கிறீர்கள். அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி!

இவ்வளவு நீண்ட நேரம் இருந்த உங்களுக்கு நன்றி கூறி, மீண்டும் சந்திப்போம்!

மீண்டும் இது ஒரு தொடர் பணி!

பிராண வாயுக் குழாய்தான்  ‘விடுதலை’ - இது என்றும் தயாராக இருக்கிறது!

மிகப்பெரிய அளவிற்கு, ஆபத்துகள் வருகின்றபொழு தெல்லாம், மூச்சுக் காற்று தேவை - பிராண வாயுக் குழாய் தேவை - அந்தப் பிராண வாயுக் குழாய்தான்  ‘விடுதலை' - இது என்றும் தயாராக இருக்கிறது என்று சொல்லி,

இவ்வளவு சிறப்பாக பாராட்டிய தோழர்களுக்கும், சந்தாக்கள் அளித்தவர்களுக்கும், திரட்டியவர்களுக்கும், உற்சாகப்படுத்தியவர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!! என்று கூறி முடிக்கின்றேன்.

வாழ்க பெரியார்!

வளர்க விடுதலை!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை யாற்றினார்.


No comments:

Post a Comment