தருமபுரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் முழுவதும் எழுச்சிக் கொண்டாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 25, 2022

தருமபுரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் முழுவதும் எழுச்சிக் கொண்டாட்டம்

 தருமபுரியில் தந்தை பெரியார் பிறந்த நாளில் சிலைக்கு மாலை அணிவிப்பு, கொடியேற்றுதல், பாட்டரங்கம், கருத்தரங்கம், கண் பரிசோதனை முகாம், விடுதலை மலர் வெளியீடு, 

பெரியார் பட ஊர்வலம், சிறப்பு விருந்து - நாள் முழுவதும் எழுச்சிக் கொண்டாட்டம்

தருமபுரி, செப். 25- தருமபுரி மாவட்டம் முழுவதும் தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், பள்ளி, கல்லூரி என சிறப்பாக எழுச்சியாகக் கொண்டாடப்பட்டதுடன் மாவட்டத்திலுள்ள 20 தந்தை பெரியார் சிலைகளுக்கு, படங்களுக்கு  பட்டி தொட்டியெங்கும்  மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும்  மேள தாளம் முழங்க ஊர்வலம் சென்று கழகக் கொடியினை ஏற்றி பெரியார் பிறந்த நாளை மாபெரும் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தருமபுரியில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின்  144 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் மன்றத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, சி.பி.அய் , சி.பி.எம்., ஆதித்தமிழர் பேரவை, அரசு ஊழியர்கள் சங்கம், ஆதிதிராவிட மகாஜன சங்கம் என பல்வேறு அமைப்புகள் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பெரியார் நூற்றாண்டு நினைவுத் தூண்

மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் சிலை மற்றும் கிருஷ்ணகிரி சாலையில் உள்ள பெரியார் நூற்றாண்டு நினைவுத் தூண் ஆகிய இடங்கள் மின் விளக் குகளால் அலங்கரிக்கப்பட்டன.  மாவட்டத்தின் பெரும் பகுதியில் தந்தைபெரியார் பிறந்த நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. காலை ஒன்பது மணிக்குள்ளாக கிராமப்பகுதியில் பெரியார் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.

தருமபுரி பெரியார் மன்றத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 10.30 மணி அளவில் மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி தலைமை ஏற்று கழகத் தோழர்கள் முழக்கமிட மாலை அணிவித்தார். அங்கு நிறுவப்பட்டுள்ள கொடிக்கம் பத்தில் கழக மகளிர் அணி தோழர்கள் முழக்கமிட மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி கழகக் கொடியினை ஏற்றினார்.  அதைத்தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அம்பேத்கர் சிலை அருகே நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பொதுக்குழு உறுப்பினர் க.கதிர் கழகக் கொடியை ஏற்றினார்.

பென்னாகரம் சாலையில்...

பென்னாகரம் சாலை பெரியார் மேம்பாலம் அருகே உள்ள மறைந்த பெரியார் பெருந்தொண்டர் கழகப் புரவலர் கே.ஆர். சின்னராஜ் நினைவாக நிறுவப்பட் டுள்ள கொடிக்கம்பத்தில் அவரது மகன் கே.ஆர். சி. ஆசைத்தம்பி மற்றும் தோழர் அண்ணாமலை ஆகியோர் இணைந்து கழகக் கொடியை ஏற்றிவைத்தனர். கொடியேற்று விழாவில் பங்கேற்ற தோழர்கள் அனைவருக்கும் ஆசைத் தம்பி தேநீர் விருந்து அளித்து மகிழ்வித்தார். தருமபுரி கிருஷ்ணகிரி சாலையில் பெரியார் நூற்றாண்டு நினைவு தூண் அருகே நிறுவப் பட்டுள்ள கொடிக்கம்பத்தில் மாவட்ட செயலாளர் பீம.தமிழ்பிரபாகரன் கொடியை ஏற் றினார். கொடி ஏற்றப்பட்ட இடங்களுக்கு கழகத் தோழர்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் மேளதாள  இசை முழங்க சென்றனர்.

சிறப்பு விருந்து!

பகல் 1 மணிக்கு  கழகத் தோழர்கள், பொதுமக்கள், அப்பகுதி வணிக நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், பெரியார் மன்ற பணியாளர்கள், என அனைவருக்கும் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

பாட்டரங்கம்!

பிற்பகல் 2 மணி அளவில் மாநில கலைத் துறை செயலாளர் மாரி.கருணாநிதி தலைமையில் சேலம் கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு பாட் டரங்கம் நடைபெற்றது. சமூகநீதி புரட்சிப் பாடகர் மாரவாடி இளங்கோ, மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா. சரவணன், மண்டல தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மண்டல ஆசிரியர் அணி அமைப்பாளர்  இரா.கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பெ.கோவிந்தராஜ், ஆகியோர் பகுத்தறிவு பாடல்களைப் பாடினர்.  வெதரம்பட்டி கழகத் தோழர் வினோத்குமார் அவர்கள் சிலம்பரசன் பாடிய பெரியார் பற்றிய திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடினார்.

கருத்தரங்கம்

பிற்பகல் 3 மணி அளவில் மாவட்ட மாணவர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பணியில் விஞ்சி நிற்பது என்னும் தலைப்பில் கருத்தரங்கம் மாவட்ட மாணவர் கழக தலைவர் சி.பூபதிராஜா தலைமையில் மாவட்ட மாணவர் கழக செயலாளர் ப.பெரியார் வரவேற்புரையுடன் நடைபெற்றது.  மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் கு.அரிகரன்,அ. பிர தாப், மோகன்குமார், சாய்குமார் ,நிதிஷ்குமார், சக்திவேல், ஏழுமலை, சாணக்கியன், நாகராஜன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். மண்டல திராவிடர் கழகத் தலைவர் அ.தமிழ்ச் செல்வன் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். கருத்தரங்க நடுவராக மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி ஒருங்கிணைத்து நடத்தினார். 

சமூகநீதியே!

கருத்தரங்கில் ‘சமூகநீதி லட்சியமே’ என்னும் தலைப்பில் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன், ‘மனித உரிமையே’ தலைப்பில் மாநில இளைஞ ரணி துணை செயலாளர் மா. செல்லதுரை, ‘ஜாதி மத மறுப்பே’ தலைப்பில் மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு.யாழ்திலீபன், ‘பெண்ணடிமை ஒழிப்பே’ எனும் தலைப்பில் விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சுதாமணி, ‘இட ஒதுக்கீடே’ தலைப்பில் மண்டல மாணவர் கழக செய லாளர் இ.சமரசம், ‘பகுத்தறிவுக் கொள்கையே’ தலைப்பில் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பெ.கோவிந்தராஜ், ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக ‘தந்தை பெரியார் பணியில் பெரிதும் விஞ்சி நிற்பது - சமூகநீதியே’  என்று நடுவர் தகடூர் தமிழ்ச்செல்வி தீர்ப்பளித்து கருத்தரங்கை முடித்து வைத்தார்கள். பாப் பிரெட்டிப்பட்டி தோழர் மோகன் குமார் நன்றி கூறினார்.                                                                                     

பெரியார் பட ஊர்வலம்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி பெரியார் பட ஊர்வலம் தருமபுரி பெரியார் நூற்றாண்டு நினைவுத் தூண் அருகில் இருந்து மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட கழகத் தலைவர்  வீ.சிவாஜி தலைமையில் மாவட்ட செயலாளர் பீம.தமிழ்பிரபாகரன் வரவேற்புடன் பொதுக்குழு உறுப் பினர்கள், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, கைத்தடி இதழ் சி.அறிவழகன்,  மண்டல ஆசிரியர் அணி அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் கு.சரவணன், மேனாள் மாவட்ட தலை வர் மு.பரமசிவம்,  விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.தனசேகரன், க.சின்னராஜ், செயலாளர்கள் கடத்தூர் வ.நடராஜன் ஆசிரியர்,சசுதாமணி,  கடத்தூர் ஒன்றிய பகுத் தறிவாளர் கழக அமைப்பாளர் தாழை சொ.பாண்டியன், மாவட்ட மகளிரணி தலைவர் த.முருகம்மாள், வேப்பிலைப் பட்டி கலா, சுசீலா,  காமலாபுரம் தோழர்கள் இரா.இராஜா, மு.சிசுபாலன், இரா.இராமசாமி, மாஸ்டர்மாணிக்கம், 

இரா. சின்னசாமி, ஜோதி, அன்பு சரவணன், பிரகாசம், எல்.அய்.சி.கிருஷ்ணன், தர்மபுரி பார் கிருஷ்ணன், வரகூர் சிவநாதன்  மாவட்ட ஆசிரியர் அணி செயலாளர் 

மு.பிரபாகரன், ஊமை காந்தி, காரல்மார்க்ஸ், அ.பிரபாகரன், தீ. ஏங்கல்ஸ்  ஆகியோர் பேரணியில் முன்னிலை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் சுபேதார், மனிதநேய மக்கள் கட்சி மேனாள் மாவட்ட தலைவர் யாசின் தென்றல் ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நான்கு சக்கர வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட தந்தைபெரியார் பட வாகனத்திற்கு முன்னதாக கழகத் தோழர்கள் கொடியேந்தி முழக்கமிட்டு பைபாஸ் சாலை, பெரியார் சிலை, கடைவீதி, கந்தசாமி வாத்தியார் தெரு, ராஜகோபால் பூங்கா, அப்துல் முஜிப்தெரு, வழியாக பெரியார் சிலை வந்தடைந்தது. கழகத் தோழர்கள் மேளதாளம் முழங்க முழக்கம் இட்டு ஆடிப்பாடி சென்றது தருமபுரியில் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

No comments:

Post a Comment