மனிதம் வளர்க்கும் மன்றல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 7, 2022

மனிதம் வளர்க்கும் மன்றல்!

பெரியாரியக் கொள்கையுடன் வாழ்பவர் அந்தத் தோழர்! திருமணம் செய்தால் "கைம்பெண் திருமணம் தான் செய் வேன்", என உறுதியாய் இருந்து ஒரு இணையைப் பெற்றார்! அதிலும் இரண்டு குழந்தைகளுடன்!

அந்த ஆண் தோழர் கள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்! அந்தப் பெண் தோழர் அருந்ததியர் வகுப்பைச் சார்ந்தவர்! 

இதன் உள்ளடக்கம் என்பது

1) ஒரு ஜாதி மறுப்புத் திருமணம்

2) ஒரு கைம்பெண் திருமணம்

3) அதிலும் குழந்தைகளுடன்

4) அந்த ஆண் தோழர், பெண் தோழரின் உறவினர்கள் வசிக்கும் பகுதியில் தான் வாழ்வேன் என இன்றுவரை அங் கேயே வசிப்பவர்.

நிற்க! 

மற்றொரு தோழரைப் பார்க்கலாம். இவரும் பெரியாரிஸ்ட்! 

இவர் நாவிதர் வகுப்பைச் சார்ந்தவர். இவரின் இணையர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். 

ஆக...

ஜாதியைச் சமாதியாக்கு! 

சகோதரனை மனிதனாக்கு!

என்கிற பொன்மொழிக்கு ஏற்ப, இந்த இரண்டு பெரியாரிஸ்டுகளும் எவ்வளவு சிறப்பான மனிதத்தை வேரூன்ற வைத்து உள்ளனர்! 

இந்நிலையில் தான் இவர்களின் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும். பொதுவாகவே திருமண ஏற் பாடுகளில் பல நடைமுறை சிரமங்களைக் கண்கூடாகப் பார்க்கிறோம்! 

அப்படியான நிலையில் ஜாதிகளை சல்லி, சல்லியாக உடைத்தெறிந்த இவர்களுக்குச் சிரமங்கள் இல்லாமலா போகும்? 

இந்த இடத்தில் தான் இணைப்புப் பாலமாக வந்து நிற்கிறது பெரியார் திடல்! ஆம்! அங்கே செயல்படுகிற பல்வேறு அமைப்புகளில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையமும் ஒன்று! அவற்றின் சார்பில் இணை தேடிக் கொள்ளும் பெரு விழாவை "மன்றல்" எனும் பெயரில்  தமிழ்நாடெங்கும் நடத்திக் கொண்டிருக்கிறது! 

அந்தச் சந்திப்புகளில் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டு, மேற்குறிப்பிட்ட இரண்டு பெற்றோர்களும் தத்தம் பிள்ளை களுக்கு நல்ல வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்!

"பெரியார் எந்த ஜாதியை ஒழித்தார்?", எனச் சில சில்லு வண்டுகள் கேட்பர். "பார்ப்பனர்கள் ஏன் ஜாதியை உருவாக் கினார்கள்?", என அந்த வாய்களுக்குக் கேட்கத் தெரியாது!

"திராவிடர் கழகத்தில், பெரியார் திடலில் அனைத்து ஜாதியினருக்கும் வாய்ப்புக் கொடுத்துள்ளீர்களா?", எனச் சில வாய்கள் கேட்கும்.

இவர்களுக்கு நாம் பதில் சொல்லப் போனால், யார்? யார்? எந்தெந்த ஜாதி எனக் குறிப்பிட்டு எல்லோருமே இங்கு இருக்கிறார்கள் எனப் பதில் எழுத வேண்டிவரும். ஆனால் நாங்கள் ஒருவரை மனிதராகப் பார்ப்போமே தவிர, ஜாதியால் அல்ல! மேலும் எங்களுடன் பழகும் எவருக்குமே எவரின் ஜாதியும் தெரியாது; அது தேவையும் இல்லை!

நீங்கள் ஒன்றை உயர்ந்த ஜாதி என்பீர்கள்; மற்றொன்றை தாழ்ந்த ஜாதி என்பீர்கள். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. 20 வயது இளைஞரையும், 80 வயது பெரியவர் அய்யா வாங்க! நலமா? என்று தான் கேட்பார். எங்கள் நாகரிகம் அது!

ஜாதியால் பொதுச் சமூகத்தில் ஒருவர் புறக்கணிக்கப் படலாம். அவரது உடம்பில் கருப்புச் சட்டை வந்துவிட்டால், அவருக்கான மதிப்பும், மரியாதையுமே வேறு! 

அதனால் தான் பெரியார், "சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு"! என்றார்.

மேற்கண்ட திருமணத்தில் ஜாதியைக் குறிப்பிட்டது என்பது ஒரு அடையாளத்திற்கு மட்டுமே! இப்படியான முற் போக்குச் சமூகம் தமிழ்நாட்டில் எப்போதுமே நீக்கமற நிறைந்துள்ளது! 

அதைத் தொடர்ந்து காத்திடுவோம்! நன்றி!

- வி.சி.வில்வம்


No comments:

Post a Comment