அரசமைப்புச் சட்டத்தை மாற்றி மனுதர்மத்தைக் கொண்டு வரும் சதித் திட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 5, 2022

அரசமைப்புச் சட்டத்தை மாற்றி மனுதர்மத்தைக் கொண்டு வரும் சதித் திட்டம்!

தலைமுறை மாற்றப்படவேண்டும் என்பதே இந்தத் திருவாரூர் மாநாடு!

தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை

திருவாரூர் செப்.5  அரசமைப்புச் சட்டத்தை மாற்றி மனுதர்மத்தைக் கொண்டு வரும் சதித் திட்டம்! தலைமுறை மாற்றப்படவேண்டும் என்பதே இந்தத் திருவாரூர் மாநாடு என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

திருவாரூர்: சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு

நேற்று (4.9.2022) மாலை திருவாரூரில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அவரது நிறைவுரை வருமாறு:

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மாநாடு

சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு என்ற சிறப்புமிகுந்த இந்த மாநாடு - அன்றைக்கு நடைபெற வாய்ப்பில்லாமல் ஒத்தி வைக்கப்பட்டு, இன்றைக்கு ஒரு மகத்தான திருவிழா போன்று ஓர் எழுச்சி மாநாடாக - இந்த ஊர் வரலாற்றில் மட்டுமல்ல - தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு நடக்கக் கூடிய மாநாடாக அமைந்திருக்கக் கூடிய இந்த மாநாட்டில், சிறப்பாக வரவேற்புரையாற்றிய திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் நண்பர் மோகன் அவர்களே, சிறப்புரையாற்றி,  விடைபெற்று சென்றிருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் தோழர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே,

நான் எந்தக் கருத்தையெல்லாம் எடுத்து வைக்கவேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேனோ...

எனக்கு முன் உரையாற்றி, நான் எந்தக் கருத்தையெல்லாம் எடுத்து வைக்கவேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேனோ, அதே கருத்தை வேகமாக,  பழைய காலத்தில் பெரியார் திடலிலே அவர் கற்ற பாடங்களை யெல்லாம் நான் மறந்துவிடவில்லை, இப்போது மீண்டும் உங்கள் முன் நான் பேசிக் காட்டுகிறேன் பாருங்கள் என்று சொல்வதைப்போல, எடுத்துரைத்த என்னுடைய அருமை சகோதரர் மூன்றாவது குழல் என்று வருணிக் கப்படக்கூடிய  விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் எழுச்சித் தமிழர் மணிவிழா கண்ட நாயகர் தொல்.திருமா வளவன் அவர்களே, இந்திய கம்யூ னிஸ்ட்  மார்க்சிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வந்திருக்கக் கூடிய அந்த இயக்கத்தினுடைய முக்கிய தோழர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆய்வு மய்ய செயலாளர் தோழர் செந்திலதிபன் அவர்களே,

ஒரு முன்னோடியாக இருக்கக்கூடிய மாநாடு என்ற பெருமைபடைத்த மாநாடு

திராவிட முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்டச் செயலாளரும், இந்த மாநாடு ஒரு வரலாற்றுப் பிரசித்திப் பெற்று முத்திரைப் பதிக்கின்ற, அடுத்துத் தமிழ்நாட்டில் ஒரு போராட்டக் களமாக நிற்பதற்கு ஒரு முன்னோடியாக இருக்கக்கூடிய மாநாடு என்ற பெருமை இருக்குமேயானால், அந்தப் பெருமைக்கு திராவிடர் கழகம் எவ்வளவு உரிமை படைத்ததோ, அதைவிட கூடுதலாக இந்தத் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்டச் செயலாளருமான அருமைச் சகோதரர் பூண்டி கலைவாணன்  உரிமை படைத்தவர்கள் ஆவார்கள்; அப்படிப்பட்ட அருமைச் சகோதரர் கலைவாணன் அவர்களே,

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் துரைவேலன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழக நாகை மாவட்டச் செயலாளர் தோழர் என்.கவுதமன் அவர்களே, மேனாள் அமைச்சரும், எந்நாளும் சுயமரியாதை வீரரும், தமிழ்நாடு அரசு தாட்கோ தலைவருமான தோழர் மதிவாணன் அவர்களே, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் வாரை எஸ்.பிரகாஷ் அவர்களே, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தோழர் ஜெயக்குமார் அவர்களே, திராவிடர் கழக நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் அவர்களே, மாவட்டச் செயலாளர் பூபேஷ் குப்தா அவர்களே,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வை.செல்வ ராஜ் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்பாலச்சந்தர் அவர்களே, விடுதலை சிறுத்தைகள் செயலாளர் வடிவேலன் அவர்களே,

இந்த மாநாடு வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்த ஏராளமான இயக்கத் தோழர்களின் பட்டியல் இருக்கிறது; நேரத்தின் நெருக்கடியினால், அத்தனை பேரையும் அழைத்ததாக அவர்கள் கருதிக் கொள்ளவேண்டும் என்று சொல்லி, நன்றியுரையாற்றவிருக்கக் கூடிய திருவாரூர் மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்தராஜ் அவர்களே,

அருமைத் தாய்மார்களே, பெரியோர்களே, நண்பர்களே உங்கள் அனை வருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர்கள் முன்மொழிந்தக் கருத்தை, 

நான் வழிமொழிகின்றேன்

அதிகமாக பேசவேண்டிய அவசியமில்லை. மிக முக்கியமான சில கருத்துகளை மட்டும் - அவர்கள் சொன்னதை ஏற்று, எனக்கு முன் உரை யாற்றிய எழுச்சித் தமிழரானாலும், அத்துணை தோழமைக் கட்சித் தலைவர் களானாலும், அவர்கள் கூறிய அத்துணை கருத்துகளையும் அவர்கள் முன்மொழிந்ததாகக் கருதி, நான் வழிமொழிகின்றேன் என்று சொல் வதற்குத்தான் உங்கள் முன்னால் நான் நிற்கின்றேன்.

ஏனென்றால், எங்களுக்குள்ளே எந்தவிதமான மாறுபட்ட கருத்தோ அல்லது வேறுபாடோ கிடையாது.  ஏனென்றால், கொள்கையால் ஒன்றுபட்டு இருக்கக்கூடிய அணி இந்த அணி.

தேர்தல் நேரம் அல்ல - தேர்தல் பிரச்சார மேடையும் அல்ல - அழகாகச் சொன்னார் தோழர் முத்தரசன் அவர்கள்; மற்ற நண்பர்களும் இங்கே எடுத்துச் சொன்னார்கள்.

அடுத்த தலைமுறையைப்பற்றி 

சிந்திக்கின்ற கூட்டம்

இது தேர்தலைப்பற்றி சிந்திக்கின்ற அணியல்ல. அதைப்பற்றி சிந்திப்போம், சிந்திக்கவேண்டிய நேரத்தில். ஆனால், அதற்கு முன்பு அடுத்தத் தலை முறையைப்பற்றி சிந்திக்கின்ற கூட்டம் - மாநாடு இந்த மாநாடு.

சென்ற தலைமுறை எப்படி? இப்பொழுது இருக்கின்ற தலைமுறையினருக்கு ஏற்பட்டு இருக்கின்ற சவால்கள், அறைகூவல்கள் எப்படி?

அடுத்த தலைமுறை எப்படி இருக்கவேண்டும்?

திராவிடத்தை அழிப்போம், புரட்சிக்கருத்துகளை அழிப்போம் என்று சொல்கிறார்கள்!

அடுத்த தலைமுறையை மாற்ற சனாதன சக்திகள், ஆரிய சக்திகள், திராவிடத்தை அழிப்போம், புரட்சிக்கருத்துகளை அழிப்போம் என்று சொல்வதற்கு, அவர்கள் ஆயுதம் தாங்கியவர்களாக இருக்கிறார்கள். அந்த ஆயுதம்தான் சனாதனம் என்ற தத்துவம். ஒரு பெரிய தத்துவப் போர் நடந்துகொண்டிருக்கிறது. இது சாதாரணமானதல்ல; தனி நபர்களுக்கு எதிரானதல்ல. தத்துவ ரீதியாக இருப்பது. அதைத்தான் சகோதரர் எழுச்சித் தமிழர் அவர்கள் சற்று நேரத்திற்கு முன்பு, நான் நினைத்த கருத்துகளை அப்படியே அப்பட்டமாக மிகத் தெளிவாக சொன்னார்கள்.

நேரமில்லாத காரணத்தினால் சுருக்கமாக உங்கள் மத்தியில் விளக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

சனாதன எதிர்ப்பு மாநாடு போடுகிறோம் என்று சொன்னால் - கொள்கையின் காரணமாகத்தான்.

பாசத்தால் பிரிக்கப்பட முடியாதவர்கள்!

இந்த மாநாடு நடைபெறவிருந்த நாளில், மழையின் காரணமாக மாநாடு தள்ளி வைக்கப்பட்டது. அதுவும் நல்ல வாய்ப்பாகப் போயிற்று. காரணம் என்னவென்றால், அன்றைக்கு எழுச்சித் தமிழர் மலேசியாவில் இருந்தார். நான் அழைத்தபோது அவர் மறுக்கமாட்டார், எங்கே இருந்தாலும். 

அன்புக் கட்டளை என்று சொன்னால், இதைவிட வேறு என்னவேண்டும் எங்களுக்கு. பாசத்தால் பிரிக்கப்பட முடியாதவர்கள் என்பதற்கு இதுதான் அடையாளம்.

அன்றைக்கும் மழை உதவி செய்தது; 

இன்றைக்கும் மழை உதவி செய்கிறது

மழையால் மாநாடு தள்ளி வைக்கப்பட்டது. அந்த மழைக்கு நான் நன்றி சொல்லுகிறேன்.

திருமா வராமல், இந்த மாநாடு நடைபெறக்கூடாது என்பதற்காக, அன்றைக்கும் மழை உதவி செய்தது. இன்றைக்கும் மழை உதவி செய்கிறது.

இயற்கையும் எங்கள் பக்கம் இருக்கிறது.

திருவள்ளுவருடைய திருக்குறளில் மழையைப்பற்றி ஓர் அதிகாரம் உண்டு.

அதற்குப் பரிமேலழகர் உரை எழுதியிருப்பார்,

பெய்து கெடுப்பதும், பெய்யாமல் கெடுப்பதும் என்று.

இது அப்படியல்ல, பெய்து கொடுப்பதும், பெய்யாமல் கொடுப்பதும். அதுதான் மிக முக்கியம்.

அந்த வாய்ப்பில், பெய்து கொடுத்தார் அன்றைக்கு; பெய்யாமல் கொடுத்தது இன்றைக்கு.

இந்தச் சூழ்நிலையில், ஓர் அருமையான வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அருமையான விளக்கங்களைச் சொல்லியிருக்கிறார்.

தலைமுறை மாற்றப்படவேண்டும் 

என்பதற்காகத்தான் இந்த மாநாடு!

எங்கள் இளைஞர்கள் - இந்த இளைஞர்கள் எல்லாம் கூலிக்கு வந்தவர்களா? கூலி பெற்று, கூலிக்காக உழைக்கின்ற அன்றாடக் கூலிகளாக இருக்கின்ற எங்கள் இளைஞர்கள். இந்தத் தலைமுறை மாற்றப்படவேண்டும்.

மிகப்பெரிய அளவிற்குத் தலைமுறை மாற்றப்படவேண்டும் என்பதற்காகத்தான் தோழர்களே, இந்த மாநாடு.

சனாதன எதிர்ப்பு என்பது என்ன?

சனாதனம் என்றால், புரியவில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இந்த வாய்ப்புகளை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டாமா? தயவு செய்து எண்ணிப் பார்க்கவேண்டும்.

நிறங்கள் வேறாக இருக்கலாம்; வண்ணங்கள் வேறாக இருக்கலாம்; ஆனால், எண்ணங்களில் ஒன்றுபட்டு நாம் இன்றைக்கு இருக்கின்றோம்.

பா.ஜ.க.விற்கும் 

நன்றி செலுத்தவேண்டும்!

இரண்டே தத்துவம்தான் - ஒன்று சனாதன தத்துவத்திற்கு என்ன பெயர்?

மழைக்கு நான் நன்றி சொன்னேன்.

அடுத்து இன்னொருவருக்கும் நான் நன்றி செலுத்தவேண்டும். பா.ஜ.க.விற்கும் நன்றி செலுத்தவேண்டும்.

பாரதீய ஜனதா கட்சிக்கும் நன்றி செலுத்தவேண்டும். பாவம் அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை.

‘‘எத்தைத் தின்றால் பித்தம் தீரும்'' என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். அதுபோல, முழுப் பைத்தியத்தோடு இருக்கக்கூடியவர்களுக்கு சரியான மருந்துகள் கொடுக்கவேண்டும்.

அப்படித்தான், அந்த இயக்கத்தின் பேராலே, இந்த ஊர் செய்தியாளர் களையெல்லாம் கூட்டி, அல்லது வேறு எங்கிருந்தோ ஓர் அறிக்கை கொடுத்து - காவல் துறைக்கு ஓர் ஆணை கொடுப்பதைப்போல, வேண்டுகோள் வைத்து - சனாதன எதிர்ப்பு மாநாட்டைத் தடை செய்யவேண்டும் - அனுமதி கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

மாநாட்டை தடை செய்ய 

அறிக்கை கொடுத்தவர்களுக்கு நன்றி!

நம்முடைய மாநாட்டுச் செய்திகள் மற்ற ஏடுகளில் வருமோ, வராதோ - எனக்குத் தெரியாது. ஆனால் ,நாங்கள் மாநாடு நடத்தப் போகிறோம், அதைத் தடை செய்யவேண்டும் என்கிற செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வந்தது. அப்படி அறிக்கை கொடுத்த அந்தக் காவிகளுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன் காரணமாகத்தான், எல்லா இடங்களிலும் இருந்து மாநாடு எப்பொழுது நடைபெறப் போகிறது என்று கேட்டார்கள்.

நண்பர்களே, நாங்கள் எப்படி பயிற்சி பெற்றவர்கள் என்று தெரியுமா? எதிரிகளுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன் -

நம்முடைய எதிரியே நம்மை 

விளம்பரப்படுத்தப் போகிறான் என்பார் பெரியார்!

தந்தை பெரியார் இருக்கின்றபொழுது, கடைசியாக நடத்திய மாநாட்டிற்குக் கூட போஸ்டர் அடித்திருப்பதை, அவர் கண்ணில் காட்டமாட்டோம். தவறிப் போய் அய்யா பார்த்துவிட்டால், ‘‘ஏம்பா, இவ்வளவு பெரிய அளவிற்கு செலவு செய்து, இந்தப் போஸ்டர் போடவேண்டுமா? ஏன் அவசரப்படுகிறீர்கள்; இன்னும் 2 நாள் போனால், நம்முடைய எதிரியே நம்மை விளம்பரப்படுத்தப் போகிறான். அவன் செலவிலேயே  நம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதை விட்டுவிட்டு, நம்முடைய செலவில் ஏன் செய்யவேண்டும்'' என்று கேட்பார்.

அதேதான் திருவாரூர் மாநாட்டிற்கும் நடந்தது. பெரியார் சொல் எப்பொழுதும் பொய்த்ததில்லை. அவர் அனுபவக் களஞ்சியம்.

அரசமைப்புச் சட்டத்தை ஒழித்து மனுதர்மம், சனாதனம் ஆட்சி செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள்!

அதுபோல், இந்த மாநாட்டிற்கு உங்களையெல்லாம் அழைத்து நடத்தி யிருக்கின்றோம் என்றால், சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு என்று சொல்கிறோம் என்று சொன்னால், அது என்ன கற்பனையா? அழகாகச் சொன்னாரே, இன்றைய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துவிடவேண்டும்; அந்த இடத்தில் மனுதர்மம், சனாதனம் ஆட்சி செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று கலைவாணன் சொன்னாரே,

இங்கே இருக்கின்ற அருமைச் சகோதரர் முத்தரசன் மற்றும் நண்பர்கள் சொன்னதைப்போல, ஓர் ஆளுநர், நம்முடைய மக்கள் வரிப் பணத்தில் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, சனாதனத்திற்காக கச்சேரி நடத்திக் கொண்டிருக்கின்றார், பஜனை கச்சேரி போன்று.

அப்படிப்பட்ட சனாதனம் என்பதற்கு என்ன அடையாளம்?

யாருக்கு அந்த அடையாளம்?

இது என்ன திருமா தன்னுடைய கற்பனையில் சொன்னதா? அல்லது மேடையில் இருக்கின்ற வீரமணி உள்பட தலைவர்களுடைய சிந்தனையா? அல்லது ஒரு சார்பு நிலையா? இல்லை நண்பர்களே!

எதையும் ஆதாரத்தோடு 

சொல்பவர்கள் நாங்கள்!

சனாதன தர்மமா? வால்யூம் ஒன் - ஆதாரத்தோடு பேசிப் பழக்கப்பட்டவர்கள். எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இது எப்போது?

வாரணாசியில் இந்தியாவின் தலைநகரத்தை அமைப்போம்; இனி டில்லி தலைநகராக இருக்காது என்று சொன்னார்கள் அல்லவா! அந்தக் காசி பல்கலைக் கழகம் - இந்து பனராஸ் பல்கலைக் கழகம் கல்லூரியாக இருந்தபொழுது. நூறு ஆண்டுகளுக்கு முன்னால், அவர்கள் வைத்த பாடம் சனாதன தர்மம்.

இதை மறுக்கின்றவர்களுக்குத் தைரியம் இருந்தால், சனாதன எதிர்ப்பு மாநாட்டைத் தடை செய்யவேண்டும் என்று சொல்கிறீர்களே, அவர்களுக்குச் சொல்கின்றோம்.

சனாதனத்தினுடைய தத்துவம் யாருக்கு?

1916 இல் சென்ட்ரல் இந்து காலேஜ், பனாரஸ் அதுதான் பிறகு பல்கலைக் கழகமாக மாளவியாவால் மாற்றப்பட்டது.

அந்தப் பல்கலைக் கழகம், 106 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுது சனாதனம், சனாதனம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே, அந்த சனாதனத்தினுடைய தத்துவம் யாருக்கு? என்று சொல்கிறபொழுது, இந்த இடத்தை மட்டும் கவனியுங்கள்!

சகோதரர் திருமா அவர்களும், கூட்டணித் தலைவர்களும், மேடையில் இருக்கின்ற அத்துணை தலைவர்களும் பேசியது, வெறுப்பால் அல்ல; கோபத்தால் அல்ல; ஆத்திரத்தால் அல்ல - வெறும் உணர்ச்சிவயப்பட்டு அல்ல.

இதோ ஆதாரம்:

Sanatana Dharma an Elementary Text Book of Hindu Religion and Ethics

Sanatana Dharma means Eternal Religion ancient law and it is based on the Vedas. Sacred books given to many long ages ago.

ஜாதியைக் காப்பாற்றுவது வேதம். 

சனாதன மதம் என்றால் இந்து மதம் என்று அறிக்கை விட்டார் - இந்த மாநாட்டைத் தடை செய்யவேண்டும் என்று சொன்னவர். அவருக்கு நன்றி சொல்கிறோம்; இதுதான் மிக முக்கியம். இந்த ஒரு வாக்கியத்தை வைத்துக் கொண்டுதான் அழைக்க இருக்கிறோம். ஏனென்றால், இந்து மதத்தைப் பரப்புகிறோம் என்று சொல்வதற்குப் பதிலாக, ஆன்மிகம், சனாதனம் என்று வேறு வார்த்தைகளில் முகமூடி போட்டுக் கொண்டு வருகிறீர்கள். அந்த முகமூடியை நீங்களே கழற்றிக் காட்டுகிறீர்கள் என்பதற்கு அடையாளம் சொல்லும்பொழுது, இரண்டு தத்துவங்கள் என்று சொன்னார் அல்லவா, திருமா அவர்கள், இதோ:

This Religion was also be called Aryan Religion

உனக்கு புத்தகம் தெரியாது - 

செருப்புதான் தெரியும்!

இதை மறுப்பதற்கு யாருக்காவது தைரியம் இருந்தால், நாளைக்கு மேடை போட்டுச் சொல். உனக்கு புத்தகம் தெரியாது - செருப்புதான் தெரியும்.

செருப்பு எங்களை ஒன்றும் செய்யாது!

செருப்பு குறித்து நாங்கள் அவமானப்படுவதில்லை; செருப்பு எங்களை ஒன்றும் செய்யாது. எங்கள் தலைவர்மீது செருப்பு வீசியபொழுது, நான் சின்னப் பையனாக இருந்தேன்; அவர் சென்ற ரிக்ஷாமீது விழுந்தபொழுது, பக்கத்தில் நின்றவன், 1944 இல் - இன்னமும் உங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறோம், உங்களைச் சந்திக்கக் காத்திருக்கின்றோம்.

செருப்பு எங்களுக்குச் சாதாரணம்; ஒரு செருப்பை வீசியபொழுது, இன்னொரு செருப்பை எதிர்பார்த்தவர் எங்கள் தலைவர்.

சிவகங்கை ஊர்வலமும் - 

செருப்புத் தோரணமும்!

தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், சிவகங்கையில் ஊர்வலமாகச் சென்றுகொண்டிருந்தபொழுது, செருப்புத் தோரணத்தை குறுக்கே கட்டியிருந்தார்கள்; அந்தக் காலத்து சனாதனிகள்; அந்தக் காலத்து  அரசியல் வாதிகள்; அந்தக் காலத்தில் காங்கிரஸ் அப்படிப்பட்டவர்களின் கைகளில் இருந்தது. இந்தக் காலத்தில் அது மாறிவிட்டதினால்தான், ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

செருப்புத் தோரணத்தைப் பார்த்து, கழகத் தோழர்கள் ஆத்திரப்பட்டு, உடனடியாக அதை அறுத்தெறியப் போனார்கள்.

அதை பெரியார் அய்யா தடுக்கிறார். அறுக்காதீர்கள்; இதைவிட பெரிய வரவேற்பு வேறு என்ன இருக்க முடியும்? என்று சொன்னார்.

ஆத்திரப்பட்ட தோழர்கள் அந்தச் செருப்புத் தோரணத்தை அறுத் தெறிந்தார்கள்.

எனக்காக பழைய செருப்புகளைத் தேடித் தேடி கண்டுபிடித்திருக்கிறார்கள் பாருங்கள்

அப்பொழுது கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார் அவர்கள், சாதாரண மாக மாவிலைத் தோரணம் கட்டுவார்கள்; மா இலை எல்லா இடங்களிலும் கிடைக்கும். ஆனால், எனக்காக பழைய செருப்புகளைத் தேடித் தேடி கண்டுபிடித்திருக்கிறார்கள் பாருங்கள் என்று சொன்னார்.

எனவே, அப்படிப்பட்ட செருப்புதான் உனக்குத் தெரியும். ஆனால், நாங்கள் யார்?

தனி மனிதர்களைப்பற்றி நாங்கள் விமர்சிப்பதில்லை. ஆனால், இன் றைக்குத் தரம் தாழ்ந்த அரசியலைத் தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக் கிறீர்கள்.

நீ பெயரில் அண்ணாமலையாக இருக்கலாம்; நாங்கள் கொள்கையில் எரிமலை!

ஒரு நிதியமைச்சர் - எவ்வளவு சிறப்பு வாய்ந்த நிதியமைச்சர் - நுண்மான் நுழைபுலம் உள்ள ஒரு நிதியமைச்சர் - பாரம்பரியமிக்கவர் - என்னுடைய செருப்புக்கு சமம் என்று பேசக்கூடிய ஒரு தலைவர் இருக்கிறார் என்றால், நீ பெயரில் அண்ணாமலையாக இருக்கலாம்; நாங்கள் கொள்கையில் எரிமலை - அதை நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.

எரிமலை பக்கத்தில் நீங்கள் வரவே கூடாது. இன்னுங்கேட்டால், உங்களுக்குக் கிடைத்திருக்கின்ற அந்தப் பதவியே திராவிட இயக்கத்தின் எதிரொலியால் கிடைத்திருக்கின்ற பதவி என்பதை மறந்துவிடாதே!

ஏன் அந்த இடத்திலே ஒரு எச்.ராஜா இல்லை?

ஏன் அந்த இடத்திலே ஒரு சேகர் இல்லை?

ஏன் அந்த இடத்திலே, ஒரு கணேச அய்யர் இல்லை?

ஏன் அந்த இடத்திலே எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா, ராகவன்கள் இல்லை?

அதற்குப் பதிலாக யார் இருக்கிறார்?

இந்த இனத்திலே இருந்து விபீஷணரைப் பிடித்ததினால்தானே நீ வந்திருக்கிறாய்?

எப்படி அண்ணாமலை தேர்வானார்?

பெரியாருக்குப் பயந்து, திராவிடர் கழகத்திற்குப் பயந்து, விடுதலைச் சிறுத்தைகளுக்குப் பயந்து, கூட்டணிக் கட்சிகளுக்குப் பயந்து - ஒரு பிள்ளை பிடிப்பதுபோன்று, கும்கி யானையைப் பிடிப்பதுபோல, இந்த இனத்திலே இருந்து விபீஷணரைப் பிடித்ததினால்தானே நீ வந்திருக்கிறாய்?

அதை நீ எண்ணிப் பார்க்கவேண்டாமா?

எனவேதான், யாருக்காக சனாதன தர்மம். சனாதன தர்மத்தைப் பார்ப்பனர்கள் வேண்டுமானால், தூக்கிப் பிடிக்கட்டும். அவன் தலையிலே பிறந்த ஜாதி என்று பாலகிருஷ்ணன் சொன்னதைப்போல,

புரட்சிக்கவிஞர் கேட்டார், ‘‘ஏண்டா, தலையிலே பிறப்பார்களாடா, அட முண்டமே'' என்று.

தலையிலே, தோளிலே, கால்களிலே என்றால், தாய்மார்கள் மன்னிக்கவேண்டும். ‘பிரம்மா உருவத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், எப்படி இருக்கும்' என்று.

நீதிமன்றத்தில் ஆதாரத்தோடு 

சொல்லக்கூடிய வாய்ப்பைப் பெறுவோம்!

எங்கள் மனதைப் புண்படுத்திவிட்டார் வீரமணி என்று வழக்குத் தொடுப்பார்கள். வழக்குப் போடு - ஏனென்றால், நீதிமன்றத்தில் சொல்லக் கூடிய வாய்ப்பு கிடைத்தால் - வீதிமன்றத்தைவிட, நீதிமன்றத்தில் ஆதாரத்தோடு சொல்லக்கூடிய வாய்ப்பைப் பெறுவோம்.

 The first families of these people settled in the northern part of the land now called India, and that part in which they first settled was named Aryavarta, because these Aryans lived in it.

நீங்கள் வந்தேறிகள்; நாங்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். எங்களுடைய உழைப்பினால் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

சனாதனத்தை மீண்டும் உண்டாக்கவேண்டும் என்று அவர்கள் வந்திருக்கிறார்கள்

கேட்டாரே அருமையாக திருமா அவர்கள், யாருக்கு நெய்  சொந்தம் என்று. மாட்டு உதையை வாங்கிக்கொண்டு, சாணி எடுத்து, கறக்கிறவன் நம்மாள், கடையறவன் நம்மாள்; உருக்குவது நம்மாள் - சாப்பிடுவது அவாளா? என்று அழகாகக் கேட்டார்.

எனவே, ஆரியருடைய சனாதனம் என்பது இருக்கிறதே, இதுதான் என்பதை மிகத் தெளிவாக உங்களுக்கு எடுத்துச் சொல்லி, அந்த சனாதனத்தை மீண்டும் உண்டாக்கவேண்டும் என்று அவர்கள் வந்திருக்கிறார்கள்.

இது எவ்வளவு பெரிய ஆபத்து?

இங்கே அழகாகச் சொன்னார் தோழர் திருமா அவர்கள். நான் நினைத்த கருத்தை - ஏனென்றால், இரண்டு, இரண்டு நான்கு என்றால், ஒழுங்காக மாணவர்கள் கூட்டினால் சரியாகத்தான் விடை இருக்கும்.

அது திருமா கூட்டினாலும் அதுதான், செந்திலதிபன் கூட்டினாலும் அதுதான், தோழர் முத்தரசன் கூட்டினாலும் அதுதான்; கலைவாணன் அவர்கள் கூட்டினாலும் அதுதான். கவுதமன் கூட்டினாலும் அதுதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடை வராது; அப்படி வந்தால், அது தவறான  விடை என்று அர்த்தம்.

அதுபோன்று முழுக்க முழுக்க இதனுடைய விளைவுகள் என்னவென்று எண்ணிப் பார்க்கவேண்டும்.

அவர்களுக்கு அரசமைப்புச் சட்டம்தான் எதிரி. அதற்குக் காரணம் என்ன?

பெரியாரும், அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

அரசமைப்புச் சட்டத்தை இயற்றும்பொழுது, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எவ்வளவோ சங்கடங்களுக்கு ஆளானார்.

திருவாரூருக்குப் பக்கத்தில் இருந்த ஓர் அய்யங்கார்கூட அந்தக் கமிட்டியில் இருந்தார். அவர் பெயர் எரிக்காட்டூர் கோபாலசாமி அய்யங்கார்.

அப்படிப்பட்ட அந்த அரசமைப்புச் சட்டத்தை இயற்றும்பொழுது அம்பேத்கர் அவர்கள் எவ்வளவோ எதிர்ப்புகளுக்கிடையே, சங்கடங்களை சந்தித்து முன்பகுதியை உண்டாக்கினார்.

இன்னாருக்கு இதுதான்; 

அதுதான் வருணாசிரம தர்மம் - அதுதான் மனுதர்மம்!

அந்த அரசமைப்புச் சட்டத்தினுடைய நோக்கம் - ஏனென்றால் இந்த சனாதன எதிர்ப்பு மாநாடு என்பது வெறும் உணர்ச்சிக்காக அல்ல. எப்படிப் பட்ட ஆபத்து வந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். இதிலே எத்தகைய அரசு இருக்கவேண்டும்; சனாதனம் என்று சொன்னால், இன்னா ருக்கு இதுதான்; அதுதான் வருணாசிரம தர்மம் - அதுதான் மனுதர்மம்.

மனுதர்மம்தான், இந்த சனாதன தர்மம் என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள். சனாதன மதம்தான் இந்து மதம் என்று அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள், அறிக்கையின்மூலமாக.

அப்படியிருக்கும்பொழுது, அதன் அடிப்படையில் மிக முக்கியமான ஒரு கருத்து என்னவென்றால், அதற்கு நேர் எதிரான சமத்துவத்தை உருவாக்குவது.

சமத்துவத்திற்கும், சனாதனத்திற்கும் நேர் எதிரான தத்துவங்கள்.

எல்லோரும் சமமல்ல; அதுதான் முகத்தில் பிறந்தவனுக்கு இருக்கின்ற உரிமை - காலில் பிறந்தவனுக்குக் கிடையாது.

வீரமணியோடு சேர்ந்து, திருமாவளவனும் கெட்டுப்போனார் என்று எழுதுவார்கள்!

அதுமட்டுமல்ல, ஏர் உழுகிறார்களா? என்று கேட்கிறேன்; நாளைக்கு இதைத்தான் பெரிதாகப் போடுவார்கள்; வீரமணியோடு சேர்ந்து, திருமாவளவனும் கெட்டுப்போனார் என்று எழுதுவார்கள்.

உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா?

இங்கே நிறைய விவசாயிகள் வந்திருக்கிறார்கள்.

விவசாயம் பாபகரமான தொழில் என்று சொல்கிறது மனுதர்மம்!

மனுதர்மத்தில், சனாதன தர்மத்தில் எழுதியிருக்கிறான், மனுதர்மத்தினு டைய சுலோகம், விவசாயத் தொழிலைப் போன்ற பாபகரமான தொழில் வேறு கிடையாது.

எனவேதான், ‘‘நம்முடைய பெரியவர்கள் அந்தத் தொழிலை பாபகரம் என்று நினைத்து, ஒதுக்கி வைத்துவிட்டார்கள்'' என்று சொன்னார்கள்.

யாராவது ஏர் பிடிக்கிறார்களா? என்று கேட்டேன்.

ஒரு சம்பவம் நடந்தது.

‘‘தமிழ்நாட்டில் காந்தி'' என்ற தலைப்பில் ஒரு புத்தகம், ஆயிரம் பக்கத்தில் இருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு எப்பொழுதெல்லாம் காந்தி வந்தாரோ, அந்தக் குறிப்புகள் எல்லாம் அந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு  ஒருமுறை காந்தி வந்தபொழுது, அவரிடம் ஒரு விண்ணப்பம் கொடுக்கிறார்கள். மன்னார்குடிக்குப் பக்கத்தில் இருக்கிற வடுவூர் கே.துரைசாமி அய்யர் என்றால் எல்லோருக்கும் தெரியும். அந்த ஊரில் உள்ள  விவசாயிகள் - நிலத்தில் இறங்கமாட்டோம் என்று சொல்லி, நம்முடைய தோழர்கள் மறுத்துவிட்டார்கள். அது பார்ப்பனர்களுக்குச் சொந்தமான நிலம்.

உடனே அவர் வீம்புக்காகவே நிலத்தை உழுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

ஆயிரம் பக்கங்கள் கொண்ட 

‘‘தமிழ்நாட்டில் காந்தி!’’ புத்தகம்!

உடனே எல்லா பார்ப்பனர்களும் சேர்ந்து, இது நம்முடைய சனாதன தர்மத்திற்கு விரோதமாக இவர் ஏர் பிடித்தார். அதற்காக வழக்குப் போட்டு, அதனுடைய மத்தியஸ்தம் எங்கே சென்றது என்றால், காந்தியாரிடம் சென்றது.

இந்தச் செய்தி ‘‘தமிழ்நாட்டில் காந்தி'' என்ற புத்தகத்தில் தெளிவாக இருக்கிறது.

எனவே, தவறிப் போய்கூட ஒருவர் செய்தால், சனாதன தர்மம் ஏற்றுக்கொள்ளாது,

திராவிட மாடல் என்றால் என்ன? ‘அனைவருக்கும் அனைத்தும்' என்று - ஒரே வரியில் சொன்னார்

பார்ப்பனர்கள் வழக்குப் போட்டார்கள். அப்படிப்பட்ட அந்த சமத்துவத்தை, எல்லோருக்கும் எல்லாம்; திராவிட மாடல் என்றால் என்ன? ‘அனைவருக்கும் அனைத்தும்' என்று - ஒரே வரியில் சொன் னார், நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் அவர்கள். இந்தியாவில் முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சராக சரித்திரம் படைக்கக்கூடிய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

‘அனைவருக்கும் அனைத்தும்' என்று சொன்னார். அதைத்தான் அரசமைப்புச் சட்டமும் சொல்கிறது. அதற்காகத்தான் பெரியாருடைய போராட்டமும் - வகுப்புரிமைக்கு.

அனைவருக்கும் அனைத்தும் என்றால், 

பார்ப்பனர்களுக்கும் சேர்த்துத்தான்!

அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லக்கூடிய நேரத்தில் நண்பர்களே, ஒன்றை நீங்கள் கோடிட்டுப் புரிந்துகொள்ளவேண்டும்.

அனைவருக்கும் - எங்களுக்கு மட்டுமல்ல. பார்ப்பனர்களுக்கும் உரிய பங்கு - 3 சதவிகிதமாக, அது உங்களுக்கும் உண்டு. உனக்கு உரிய பங்கை வைத்துக்கொள். பசியேப்பக்காரனை முன்னால் விடு; புளியேப்பக்காரனை பின்னால் தள்ளு. இதுதான் சமூகநீதி.

இந்த சமூகநீதி கூடாது என்று சொல்வதற்கு எந்த ஆட்சி வந்தாலும், எந்தக் கட்சி வந்தாலும், அந்த அடிப்படையை மாற்ற முடியாது.

அரசமைப்புச் சட்டத்தின் பீடிகை

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்த நேரத்தில், அதற்குத்தான் பீடிகை- பிரியாம்பிள் என்று சொல்லக்கூடிய முன்னுரிமை அரசமைப்புச் சட்டத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய தலைமையில், அரும்பாடுபட்டு சில தத்துவங் களை உருவாக்கி வைத்தார்.

இதுதான் அந்த முன் வாக்கியம்,

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens: 

Justice, Social, Economic and Political

முதலில் சமூகநீதி, இரண்டாவது பொருளாதார நீதி, மூன்றாவது அரசியல் நீதி.

இந்த மூன்றும் எங்களுக்குத்தான் இருக்கவேண்டும். மனுநீதி  இதற்கு நேர் எதிரானது.

அரசமைப்புச் சட்டத்தில் இது இருக்கிறது என்பதி னால்தான், அண்ணல் அம்பேத்கர் எழுதியதைத் தூக் கிப் போட்டுவிட்டு, அம்பேத்கருக்கு வேலை இல்லை; இந்த அரசமைப்புச் சட்டத்திற்கு வேலை இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, மனுநீதியை கொண்டுவர வேண்டும் என்று சொன்னார்கள்.

எப்பொழுது, இந்த அரசமைப்புச் சட்டம் வந்தவுடன், கோல்வால்கர், இந்துத்துவா என்று சொல்லக்கூடிய ‘ஆர் கனைசர்' என்கிற பி.ஜே.பி. பத்திரிகையில் எழுதியது - எங்களிடம் ஆதாரத்தோடு இருக்கிறது.

இன்றைக்கும் அதைத்தான் ‘நம்ம சென்சாரில்' போட்டிருக்கிறார்கள்; நண்பர்கள் அதை எடுத்துச் சொன்னார்கள்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்; இம்மூன்றும் சனாதனத்திற்கு எதிரானது!

அண்ணல் அம்பேத்கர் வரிசைப்படுத்தியிருக்கிறார் பாருங்கள்,

சமூகநீதியில் முதலில், இரண்டாவது பொருளாதார நீதி, மூன்றாவது அரசியல் நீதி.

அடுத்ததாக,

LIBERTY, EQUALITY, FRATERNITY

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - இதற்குமேல் விளக்கவேண்டியதில்லை.

நண்பர்களே, இந்த மூன்றும், சனாதனத்திற்கு எதி ரானது. 

இந்த மூன்றையும் வலியுறுத்துவதற்குப் பெயர்தான், திராவிட மாடல் ஆட்சி.

பெரியார் நினைவு சமத்துவபுரம் என்று ஏன் வந்தது?

சமூகநீதி நாள் - சமத்துவ நாள் என்று

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியை இன்றைய ஆட்சியில் இருக்கக்கூடிய நம்மு டைய முதலமைச்சர் அவர்கள் சமூகநீதி நாள் என்று அறிவித்தார்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை - சமத்துவ நாள் என்று அறிவித்தார்.

சமூகநீதியும், சமத்துவமும் நம்முடைய இரண்டு கண்கள்.

இந்தத் தத்துவங்களை அழிக்கவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இந்தத் தத்துவத்தை பாதுகாப்பது அரசமைப்புச் சட்டம் என்று சொன்னவுடன் நண்பர்களே,

இந்தத் தத்துவத்தை உருவாக்கக் கூடிய வாய்ப்பில், எவ்வளவு பெரிய ஆபத்து என்றால், சாமியார்கள் ஒரு பக்கத்தில் தீர்மானம் போட்டார்கள் என்று சொன்னார்கள் அல்லவா - அது ஒரு பக்கத்தில்.

அரசியல் புரோக்கர் சுப்பிரமணியசாமி

நேற்று வந்த ஒரு செய்தி - எத்தனை பேர் பத்திரிகை களில் அந்தச் செய்தியைப் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை.

சுப்பிரமணியசாமி என்ற ஒரு அரசியல் புரோக்கர் இருக்கிறார். அவர் எல்லா இடங்களுக்கும் வேகமாகச் செல்வார். அவர்கள் வெளிப்படையாகவே இவர்கள் ரகசியமாக என்னென்ன பேசிக் கொண்டிருக்கிறார்களோ, உச்சநீதிமன்றம் தங்கள் பக்கம் இருக்கும் என்று கரு தியோ, மிகப்பெரிய நீதிபதிகள் பெருமளவுக்குத் தங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்கின்ற எண்ணத்தினாலோ அல்லது வேறு என்ன காரணத்தினாலோ என்று தெரியாது.

உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்குத் தொடுத்திருக்கிறார்.

அரசமைப்புச் சட்ட ‘பிரியாம்பிளில்' உள்ள SOVEREIGN   SOCIALIST  SECULAR DEMOCRATIC  REPUBLIC

எந்த அரசாங்கமாக இருந்தாலும், இதை மாற்ற முடியாது. வழக்குரைஞர்கள் இங்கே இருக்கிறார்கள்; மேடையிலும் இருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டுமானத்தில் கை வைக்கக்கூடாது!

ஜீவாதார உரிமைகள் உள்பட இருக்கக்கூடிய நான்கு அத்தியாயம் வரையில், உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தீர்ப்புகள் அத்தனையும் வந்து, நெருக்கடி காலம் எல் லாம் முடிந்த பிறகு, அடிக்கட்டுமானம் - அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டுமானம் - இதில் கை வைக் கக்கூடாது; எந்த அரசாங்கம் வந்தாலும், திருத்தங்கள் கொண்டு வர முடியாது; திருத்தங்களே வர முடியாது - வந்தால் செல்லாது என்று தெளிவாகக் கொடுத்திருக் கிறார்கள்.

இதைப்பற்றி கவலைப்படாமல், மோடி அரசு வந்த வுடன், பொருளாதார அடிப்படை என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்கள். அதற்காக நாங்கள் எல்லாம் வழக்குத் தொடுத்திருக்கின்றோம்.

அதற்கடுத்தபடியாக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய் திருக்கிறார். அந்த மனுவில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்,

ஆரம்பத்தில் இந்த நாடே செக்குலர்தான் என்று விளக்கம் சொல்லியிருக்கிறார் அம்பேத்கர்

சோசியலிஸ்ட் என்கிற வார்த்தை பீடிகையில் இருக்கக்கூடாது; அதேபோன்று, செக்குலர் என்கிற வார்த்தை இருக்கக்கூடாது என்று சொல்வார்கள்.

சில படித்த அறிவு ஜீவிகள் சில பேர் சொல்லலாம்; செக்குலர் என்பதுகூட ஆரம்பத்தில் போடவில்லை என்று. ஆரம்பத்தில் இந்த நாடே செக்குலர்தான் என்று விளக்கம் சொல்லியிருக்கிறார் தெளிவாக அம்பேத்கர் அவர்கள்.

ஆகவே, அவர்களுடைய நோக்கம், சனாதனிகளு டைய நோக்கம் என்னவென்றால், இன்றைய பா.ஜ.க.வினுடைய நோக்கம் என்னவென்றால், முழுக்க முழுக்க ஜாதி மீண்டும் வரவேண்டும்.  வருணாசிரம தர்ம ஆட்சிதான் இருக்கவேண்டும் முழுக்க முழுக்க.

எனவேதான், அந்த அடிப்படையிலே நம்முடைய பிள்ளைகள் படிக்கக்கூடாது. அதைவிட மகிழ்ச்சி என்ன வென்றால், இங்கே காவல்துறை நண்பர்கள் வந்தார்கள். சற்று நேரத்திற்கு முன்பு நான் பார்த்தேன்; பெண் காவல்துறை அதிகாரிகள் வந்தார்கள்.

இதற்கு என்ன அர்த்தம்?

செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தீர்மானம்

1929 இல் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரி யாதை மாகாண மாநாட்டில் தீர்மானம் போட்டார்கள் - பெண்கள் உத்தியோகத்திற்கு வரும்பொழுது, காவல்துறையிலும், இராணுவத்திலும் பெண்கள் இருக்கவேண்டும் என்று.

அப்பொழுது கலைஞருக்கு 5 வயது. அப்பொழுது அவர் ஆட்சிக்கு வருவோம் என்று நினைக்கவில்லை. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன், முதன்முதலில் பெண் காவலர்களை உருவாக்கியது கலைஞருடைய ஆட்சி - திராவிட மாடல் ஆட்சி.

திராவிடத்திற்கும் - சனாதனத்திற்கும் 

என்ன வேறுபாடு!

நன்றாக நினைத்துப் பாருங்கள், இன்றைக்குக் காவல்துறையில் பணியாற்றும் சகோதரிகள், இவ்வளவு பெரிய கூட்டத்தில், ஆண்களாக இருந்தால் என்ன? ‘‘நகருய்யா'' என்று சொல்கிறார்கள்.

இந்தத் துணிச்சலைக் கொடுத்ததற்குப் பெயர்தான் திராவிடம். 

இந்தத் துணிச்சல் வரக்கூடாது, பெண்கள் வீட்டிற் குள்ளே முக்காடு போட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்று சொன்னதுதான் சனாதனம்.

பார்ப்பனப் பெண்கள் நாற்று நடுகிறார்களா? விறகு சுமக்கிறார்களா? என்று இங்கே கேட்டார்கள்.

அதைவிட முக்கியமான ஒரு செய்தி - சனாதனத்தை அவர்களே ஏற்றுக்கொள்ளவில்லையே!

தமிழ்நாட்டில் சதிமாதா கோவில் உண்டா?

சனாதனப்படி பார்த்தால், கணவனை இழந்த பெண் களை என்ன செய்யவேண்டும்? வடக்கே என்ன செய்கிறார்கள்? 

உடன்கட்டை ஏற்றுதல் நடைபெற்றதே - வெள்ளைக் காரன் வந்த பிறகுதானே, இராஜாராம் மோகன்ராயால் உணர்வு வந்தது. 

இன்னும்கூட வடநாட்டில் சதி மாதா கோவில் இருக் கிறதே - தமிழ்நாட்டிலே அப்படி ஏதாவது மாதாக்கள் உண்டா?

கணவனை இழந்தவர்களுக்கு திராவிட மாடல் ஆட்சியிலே அவர்களுக்குப் புது வாழ்வு என்று சொல்லக்கூடிய அளவிற்கு, உரிமைகள், வேலை வாய்ப்புகள் அத்தனையும் கிடைக்கிறது.

சிலப்பதிகாரத்தையே தூக்கிப் போட்டார் கலைஞர்; அவருக்கு மிகவும் பிடித்தது அது.

கணவனை இழந்தவர்களுக்குத் தனியே வீடு - வேலை வாய்ப்பைக் கொடுத்தார்!

‘கணவனை இழந்தோருக்குக் காட்டுவது இல்' என்று ஒரு வரி உண்டு சிலப்பதிகாரத்தில்.

கணவனை இழந்துவிட்டால், ஒன்றும் கிடையாது என்று.

ஆனால், கலைஞர் அவர்கள், பெரியாரிடம் பயிற்சி பெற்றவர் அல்லவா - கணவனை இழந்தவர்களுக்குத் தனியே வீடு கொடுத்து, வேலை வாய்ப்பு உதவிகளைச் செய்தார். அதுதான் திராவிட மாடல் ஆட்சி.

சனாதனம் இதற்கு நேர் விரோதமானது. ஆகவே, சனாதனம் என்பதை அவர்களே கடைப்பிடிக்க வில்லையே!

தனிப்பட்ட முறையில் பெண்களை, அவர்கள் இனத்துப் பெண்களாக இருந்தாலும்கூட, அவர்களை அவர்கள், ‘‘நமோ சூத்திரர்கள்'' என்றுதான் வைத்திருக் கிறார்கள்.

பெண்களை கொச்சைப்படுத்தக்கூடாது; அவர்களை மதிக்கவேண்டும்.

இன்றைக்கு எங்கேயாவது மொட்டைப் பாப்பாத்தியைப் பார்க்க முடியுமா?

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன், நூறாண்டு களுக்கு முன்பு மொட்டை பாப்பாத்தி என்று தலையை மொட்டையை அடித்துக்கொண்டு, முக்காடு போட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், இன்றைக்கு அதுபோன்று பார்க்க முடியுமா?

‘தசாவதாரம்' திரைப்படத்தில் பார்க்கலாமே தவிர, தெருவில் பார்க்க முடியுமா? நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

காரணம் என்ன?

சனாதனம் வீழ்ந்தது - திராவிடம் உள்ளே புகுந்தது. அதனால், அவர்களுடைய முக்காடு நகர்ந்தது - அவர்களும் மற்ற பெண்களைப்போல இருக்கிறார்கள்.

மறுபடியும் சனாதனம் வந்தால் என்னாகும்?

சனாதன எதிர்ப்பு என்பது - 

மனிதநேய ஆதரிப்பு!

எனவேதான் நண்பர்களே, இந்த சனாதன எதிர்ப்பு என்பது - மனிதநேய ஆதரிப்பு என்று அர்த்தம்; வளர்ச்சி என்று அர்த்தம்; மாறாதது என்று- முடியாது என்று சொன்னார்.

அவர் சொல்ல விட்டுவிட்டதை ஒன்று சேர்த்து சொல்கிறேன், விஞ்ஞானம் மாறாதது என்று - சொல்ல முடியாது.

அஞ்ஞானம் மாறாதது; விஞ்ஞானம் மாறக்கூடியது; வளர்ச்சிக்குரியது.

ஆகவே, இந்தத் தத்துவங்கள், திராவிடத் தத்துவங் கள், சுயமரியாதை இயக்கத் தத்துவங்கள், பகுத்தறிவு இயக்கத் தத்துவங்கள் முழுக்க முழுக்க சமூக விஞ்ஞானம்.

சமூக விஞ்ஞானம் - மார்க்சியமாக இருந்தாலும்.

நேற்று வரையில் இருந்த கருத்து, நிலைநாட்டப்பட்ட கருத்து, ஆனால், இன்றைக்குப் புதிய கருத்து வந்திருக் கிறது என்றால், மனந்திறந்து ஏற்றுக்கொள்வோம். அதுதான் முக்கியம்.

இந்த நிகழ்விலேதான், இன்றைக்கு நீங்கள் ஆட்டம் போடாதீர்கள்.

தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவரைக் 

கைது செய்தால், அதற்காகப் போராட்டமா?

இதுவரை, எதற்கெல்லாம் கூட்டம் சேர்த்து, போராட் டம் என்று நடத்துகிறார்கள். தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவரைக் கைது செய்தால், அதற்காகப் போராட்டமா?

இதுவரையில், அவர்களுடைய போராட்டம் என் றால், மக்களுக்குச் சம்பந்தமான போராட்டங்களை நடத்தியிருக்கிறீர்களா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லட்டும்.

போராட்டத்திற்கு ஆள்களைக் கூட்டிக் கொண்டு வருகிறீர்கள்; பணம் உங்களிடம் நிறைய இருக்கிறது.

ஏனென்றால், அதானிகளும், அம்பானிகளும், டாட்டாக்களும் உங்கள் பக்கத்தில் இருக்கிறார்கள்.

எங்களிடம் அன்னக்காவடிகள்தானே இருக்கிறார் கள். லட்சம் ரூபாய்  வசூல் செய்து, அவ்வளவு பேரிடமும் சந்தாக்கள் வாங்கி, தோழர்களிடம் கொடுத்திருக்கிறார்.

எங்கள் வாழ்நாளில், லட்சம் ரூபாயை முதன்முறை யாக, மொத்தமாக தொகையை பார்க்கின்ற ஆட்கள் கிடையாதே!

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கின்றபொழுது, தயவு செய்து நீங்கள் ஒன்றைச் சுட்டிக்காட்டவேண்டும்.

தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக நீங்கள் 

எந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறீர்கள்?

இதுவரையில் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்; சரி, உங்கள் கட்சியை வளர்ப்பதற்காகப் போராட்டம் நடத்தியிருக்கிறீர்கள்.

இதுவரையில், தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக நீங்கள் எந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறீர்கள்? சொல் லுங்கள் பார்ப்போம்.

தமிழ்நாட்டில், இன்னுங்கேட்டால், தமிழன் என்று சும்மா பெயரைப் போட்டுக்கொண்டால் போதுமா?

உண்மையாக தமிழராக இருந்தால், மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய செய்தி என்னவென்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவேதான் சொல்கிறோம், நீங்கள் வெற்றுப் போராட்டங்கள், ஆரவாரங்கள் செய்தால், மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்று நினைக்காதீர்கள்.

தெற்கு வீதிக்கு 

கலைஞர் பெயர் சூட்டவேண்டும்!

இந்தத் தெருவுக்கு, தெற்கு வீதிக்கு கலைஞர் பெயர் வைக்கவேண்டும் என்று சொன்னால், நீங்கள் எல் லோரும் ஏகோபித்த நிலையில், வரவேற்பீர்களேயானால், உங்கள் மனிதத்தன்மை வளர்ந்திருக்கும்.

ஆனால், உங்களுக்கு அது பழக்கம் இல்லை.

கலைஞருடைய விருப்பம், அண்ணாவிற்குப் பக்கத் தில் அடக்கம் செய்யவேண்டும் என்று சொல்லுகிற பொழுது, நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர் கள், அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர், அவருடைய குடும்பமே, அன்றைய முதலமைச்சராக இருந்த எடப் பாடி பழனிசாமி அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டார்கள்.

பரமபதத்தில் மேலே ஏணி ஏற்றிவிடும்; பாம்பு டக்கென்று கீழே இறக்கிவிடும். அதுதான் அ.தி.மு.க. அதை ஆட்டுகின்றவர்கள் டில்லியிலே கயிறை வைத்துக்கொண்டு பொம்மலாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட மனிதரிடம் சென்று, கையைப் பிடித்துக்கொண்டு கேட்கிறார்கள், அண்ணாவிற்குப் பக்கத்தில் கலைஞரை அடக்கம் செய்யவேண்டும் என்று. அதை ஏற்க மறுத்துவிட்டது அ.தி.மு.க. அரசு.

கலைஞரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றியவர்

அதற்குப் பிறகு நீதிமன்றம் சென்றார் தளபதி மு.க.ஸ்டாலின்; அனுமதி அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

கலைஞரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றியவர் இன்றைக்கு இருக்கின்ற நம்முடைய முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தத் தெற்கு வீதிக்கு, கலைஞர் பெயர் வைத்தால்தானா, அவருக்குப் புகழ் சேரப் போகிறது?

சிங்கராயர் என்றால், இந்த ஊர்த் தோழர்களுக்குத் தெரியும். அவர் சிங்கம் என்றுதான் கையெழுத்துப் போடுவார். அவர் வீடு இங்கேதான் இருக்கிறது. அவரு டைய வாழ்விணையர் சுந்தரலீலா சிங்கம், கவுன்சிலராக இருந்தவர்.

எனவே, சிங்கம், புலி, இப்பொழுது சிறுத்தை எல் லாமே சேர்ந்து மிகப்பெரிய அளவிற்கு  வாய்ப்புகளைப் பெற்றிருக்கக்கூடிய சூழ்நிலையில், இன்றைக்கு நான் சொல்கிறேன், தயவு செய்து நீங்கள் கிளர்ச்சி என்றெல் லாம் சொன்னதினால்தான், வேகமாக இந்த உணர்வு வந்திருக்கிறது. நீங்கள் வேகமாகத் தொடக்கி விட்டீர்கள்.

எனவேதான், இங்கே திருமா அவர்கள் சொன்னதை, மற்றவர்கள் எல்லாம் முன்மொழிந்ததை, வழிமொழி வதைப்போல, இந்தத் தெற்கு வீதிக்கு, கலைஞர் பெயர் சூட்டப்படவேண்டும்.

அந்த எண்ணம் இல்லாதவர்கள், நன்றி காட்டத் தெரியாதவர்கள் என்று அர்த்தம்.

ஓடாத தேரை ஓடவிட்டவரே கலைஞர்தான்!

என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால், தேர் ஓடுவது - ஓடாத தேரை ஓடவிட்டவரே அவர்தான். அதை எதிர்த்து சண்டை போட்டவர்கள் நாங்கள்.

உங்களுக்காகத்தான் விட்டார் தேரை - அவர் கும்பிடுவதற்காகவோ, மோட்சத்திற்கு செல்லவேண்டும் என்பதற்காகவோ அல்ல.

எந்த ஊரில் தேர் ஓடாமல் இருக்கிறது?

கலைஞர் வீதி என்று வந்துவிட்டால், தேரை நிறுத்திவிடுவார்களா?

பக்தி இருக்கின்ற வரையில் தேரை ஓட்டுவார்கள் - 

புத்தி வந்தால் தேரை நிறுத்தி விடுவார்கள்!

புத்தி வந்தால் நிறுத்துவார்கள், அவ்வளவுதான்! பக்தி இருக்கின்ற வரையில் தேரை ஓட்டுவார்கள் - புத்தி வந்தால் தேரை நிறுத்தி விடுவார்கள்.

ஆகவே நண்பர்களே,  அருமையான மாநாட்டினை நடத்துவதற்குக் காரணமான அத்தனை பேருக்கும் நன்றி! மீண்டும் நாம் சந்திப்போம்!

நாடே சனாதனத்தை எதிர்க்கக்கூடிய அளவிற்கு, தோழர்களே எவ்வளவு கலவரம் செய்கிறார்கள் என்ப தற்கு உதாரணம், கம்யூனிஸ்ட் கட்சியில், தோழர் மு.வீரபாண்டியன் அவர்களை உங்களுக்கெல்லாம் தெரியும்; அவர் வடசென்னையில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்குச் சென்றிருக்கிறார். இரண்டு பேர் கத்தியைக் கொண்டு குத்த முயற்சித்திருக்கிறார்கள்.

இது என்ன கொடுமை?

அதேபோன்று, நாங்கள் எல்லாம்கூட எந்த அள விற்குப் பாதுகாப்பாக இருப்போம் என்று சொல்ல முடியாது.

எங்களுடைய உயிர் எங்களுக்கு அல்ல - உங்களுக்காக!

ஆனால், ஒன்று,  நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரும்பொழுதே - அண்ணன் பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி பாணியில் சொன்னால், ‘‘எங்கள் கணக்கையெல்லாம் எழுதிவிட்டுத்தான் வருகிறோம். எதற்கும் நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். எங்களுடைய உயிர் எங்களுக்கு அல்ல. உங்களுக்காக இருப்பது என்ற நிலையில் இருக்கும்போது, எந்த நிலையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

எனவே, வன்முறைக்கு ஈடுபாடு வன்முறை அல்ல.

வன்முறைக்குப் பதில் கருத்தியல். அந்தக் கருத்தியலைக் கைக்கொள்ளுங்கள்.

வன்முறை அரசியல் கை கொடுக்காது 

எனவேதான், வன்முறை அரசியல் கை கொடுக்காது; ரவுடித்தனம் கைக் கொடுக்காது; ஆள்மாறாட்டம் கைக் கொடுக்காது - அதற்குப் பதிலாக நீங்கள் மனிதநேயத் தைப் பெறுங்கள் என்பதையும் இந்த சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் விளக்க மாநாட்டில் சொல்லிக் கொண்டு, விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

வீழ்க சனாதனம்! வெல்க திராவிட மாடல்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை யாற்றினார்.

No comments:

Post a Comment