போராடிப் பெற்ற விடுதலை: எப்படிப் பாதுகாக்கப் போகிறோம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

போராடிப் பெற்ற விடுதலை: எப்படிப் பாதுகாக்கப் போகிறோம்?


-டாக்டர் மன்மோகன் சிங் 
இந்திய மேனாள் பிரதமர்

உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா விரைவில் உலகத்தி லேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகப் போகிறது. 75 ஆம் ஆண்டு விடுதலையைக் கொண்டாடும் அதே வேளையில் உலகளாவிய தரத்திற்கு ஏற்ப தனிமனித, கூட்டுச் சுதந்திரத்தைப் பாது காத்து முன்னே எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியப் பொறுப்பும் இருக்கிறது. ஒவ் வொரு இந்தியக் குடிமகனும் தலைநிமிர்ந்து வானை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் கொடிக்கு மரியாதை செலுத்தும் நேரத்தில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளாலான, உலகின் சக்திவாய்ந்த ஜனநாயக நாடான இந்தியாவின் தனிச்சிறப்பை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத் தில் எதேச்சாதிகார ஆணவத்தால் நம்மு டைய உரிமைகளும் சுதந்திரமும் பறிபோய் விடாமல் இருப்பதற்கும், தூண்டிவிடப்படும் வெறுப்பால் நமது ஒற்றுமை சீர்குலைந்து போய்விடுவதிலிருந்து இந்த நாட்டைப் பாதுகாப்பதும் நாம் மூவர்ண கொடிக்குச் செலுத்தக்கூடிய சிறந்த மரியாதையாகும்.

விலை உயர்ந்த ஒற்றுமை

காலனியாதிக்கத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்று, பிரிட்டிஷ் ஆட்சியில் பரந்து சிதறி இருந்த பிரதேசங்களையும், சமஸ்தானங்களையும் ஒன்றிணைத்து இந்தியாவை ஒரே நாடாக்கினோம். இந்த ஒற்றுமை ஒரே இரவில் மாயமாகத் தோன்ற வில்லை. மகாத்மா காந்தியினால் ஊக்குவிக் கப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸால் வழிநடத்தப்பட்ட விடுதலைப் போராட்டம் அந்நிய ஆட்சியை அகற்ற நாடு முழுவது முள்ள இந்தியர்களை ஒன்றிணைத்தது.

மொழி, மதம், ஜாதி, இனம், சமுதாய அந்தஸ்து போன்ற பல அடையாளங்களைக் கடந்த இந்தியர்களாக நம்மை ஒன்றி ணைத்த அந்த ஒற்றுமை விலைமதிக்க முடியாதது. இந்தியாவின் அடையாளமாகத் திகழும் அந்த ஒற்றுமையை வகுப்புவாத, மொழிவாத, பேரினவாத, ஜாதி வெறி சீர்குலைத்து இந்திய அடையாளத்தைத் துண்டு துண்டாகச் சிதைத்து விடக்கூடாது.

இத்தகைய சூழ்ச்சிகள் தற்காலிக அரசியல் இலாபங்களை ஈட்டிக் கொடுக் கலாம். ஆனால் இந்தியருக்கு எதிராக இந் தியரை உருவாக்குவதன் மூலம் தலை சிறந்த நாடாக இந்தியா வளர்ச்சியடையும் பாதையில் பள்ளங்களைத்தான் ஏற்படுத் தும்.

காலனியாதிக்கத்தால் நம்முடைய செல் வங்கள் சூறையாடப்பட்டன. விடுதலைக் குப் பிறகு வளரும் ஏழை நாடாக நம்முடைய வாழ்க்கையைத் தொடங்கினோம். அந்த நிலையிலிருந்து உலகத்தின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக உயர்ந் துள்ளோம். இந்த வளர்ச்சி உலகப் பொரு ளாதாரத்தின் நிலைத்தன்மையை உறுதிப் படுத்த பெருமளவில் உதவியது. 

1991- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகப் பொருளாதார, தாராளமயமாக்கல் கொள்கையினால் நம்முடைய பொருளா தார வளர்ச்சியில் பெரும் மாற்றம் ஏற்பட் டது. அதே நேரத்தில் வறுமைக் குறைப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வைச் சரி செய் வது போன்ற எல்லாருக்குமான பொதுநலக் கொள்கையின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை நாம் முன்னெடுத்துச் செல்லும் போது, வருமான இடைவெளிகள் விரிவ டைந்து கொண்டே இருக்கும்போது, குறிப் பிட்ட ஒரு சில தொழிலதிபர்கள் மட்டும் பொருளாதாரச் செழிப்பின் பலன்களை அனுபவிக்க நாம் அனுமதிக்கக்கூடாது.

பிரித்தாளும் கொடி அரசியல்

வேலையில்லாத வளர்ச்சி எந்தவொரு பொருளாதாரத்திற்கும் உகந்ததல்ல. வேலை யில்லாதத் திண்டாட்டம் நம்முடைய மனித வளத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தத் தடையாக இருப்பதோடு மட்டுமில்லாமல் சமூக முரண்பாடுகள், பிரிவினைவாத அர சியலை உருவாக்க வழிவகை செய்கிறது. விடுதலை இந்தியாவின் அடுத்த 25 ஆண்டு களை நோக்கி நாம் முன்னேறும்போது மக்கள் தொகையினால் குறிப்பாக இளம் தலைமுறையினால் ஏற்படும் நன்மைகளை முழுமையாகவும் சிறப்பாகவும் பயன் படுத்த வேண்டும்.

இதை அடைவதற்குக் கல்வி, திறமைக் குத் தகுந்த வேலை வாய்ப்பு இவற்றை ஏற்படுத்த வேண்டும். இளம் தொழில் முனைவோர், கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உதவ வேண் டும். நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சென்று கல்வி, வேலை பெறுவதற்கான எளிய வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இலகுவாகச் செல்வதற்கான பாதைகளில் வகுப்புவாத, மொழித் தடை களை ஏற்படுத்துவதனால் வளர்ச்சி பெரி தும் பாதிக்கப்படும்.

விடுதலை அடைந்த காலத்திலிருந்து இந்தியா அறிவியலில் உயர்வும் சிறப்பும் பெற்று முன்னேற்ற, வளர்ச்சிக்கான பாதையை அமைத்தது. தேசிய அறிவியல் கொள்கை முற்போக்கானது. அறிவியல் கற்றல், ஆராய்ச்சிக்கான பெரும் நிறுவனங் கள் நிறுவப்பட்டன. இந்தியாவின் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த நிறுவனங்களில் பயின்ற வர்கள் உலகளவில் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களை வழிநடத்துகிறார்கள். நமது விண்வெளி, கடலியல், அணுசக்தி திட் டங்கள் நம்மை உலகத்திலுள்ள அறிவிய லில் சக்திவாய்ந்த தொழில்நுட்பத்துறையில் சிறந்து விளங்கக்கூடிய நாடுகளின் வரிசை யில் இடம் பெறச் செய்துள்ளன.

நமது அறிவியல் நிறுவனங்கள், பல் கலைக் கழகங்கள், ஆராய்ச்சிக் கழகங்கள் ஆகியவை தகுதியற்ற தலைமையின் கீழ் செயல்படுவது மிகவும் வாய்ப்புக்கேடானது. ஏனெனில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் மேலிடக் கட்டளையினால் அவர்களின் கலாச்சாரத்தைப் புகுத்த முயற்சிப்பதனால் கல்வி, ஒழுங்கு, ஒருமைப்பாடு சீர்குலையும். இந்தியா பண்டைய காலத்திலிருந்து பெருமை மிக்க அறிவியல் பாரம்பரியமிக்க நாடாகத் திகழ்கிறது. ஆனால் அதுவே போலி அறிவியல் போர்வைக்குள் சிக்கி விடக் கூடாது. இதனால் நம்முடைய அறி வியல் சமூகத்திற்கு அவப்பெயரும், மதிப் பின்மையும் வந்துவிடக்கூடாது.

நட்பும் நல்லிணக்கமும் கொண்ட சர்வ தேச நாடுகளில் இந்தியாவுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. இதற்குக் காரணம் இந்தியா கொள்கை ரீதியான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு காலனி யாதிக்க ஆட்சியை எதிர்த்தது. இரு பெரும் சக்தி வாய்ந்த அணிகள் உலகை ஆதிக்கம் செலுத்த முயன்று கொண்டிருக்கும் வேளை யில் அணி சேரா நாடுகள் இயக்கத்தை இந்தியா வழிநடத்திச் சென்றது. மனித உரி மைகளுக்காகத் துணை நின்றது. அமை தியை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைத்தது. பெரும்பாலான நமது அண்டை நாடுகளு டன் நம்முடைய உறவு சுமூகமாக இருந்தது.

சில அண்டை நாடுகளுடன் மோதல் ஏற்பட்ட போதும், நாம் அவர்களுடன் நல்லுறவை உருவாக்கினோம். இதனால் அமைதி உருவானது. நாம் இந்த நிலைப் பாடுகளைப் பேணிக் காக்க வேண்டும். ஏனென்றால், உலகம் புதிய மோதல்களை யும் உடன்பாடுகளையும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. நம்மை ஒரு நம்பகமான, மரியாதைக்குரிய நண்பனாக உலகத்தி லுள்ள பெரும்பாலான நாடுகள் கருத வேண்டியது நமக்கு மிகவும் அவசியமானது. குறிப்பாக தெற்காசியா மரியாதையுடன் நம்மை நோக்க வேண்டும். ஒளிப்படக் கரு வியை நோக்கிச் செய்யும் ஒரு தனிப்பட்ட நபரின் சைகையின் மீது நம்முடைய வெளி யுறவுக் கொள்கையை தள்ளாட அனுமதிக் கக் கூடாது. மாறாக, அறிவார்ந்த விவேக முள்ள தலைமையின் மூலமாக தெள்ளத் தெளிவான புதிய திட் டங்களை திறமை யான இராஜதந்திரிகளின் உதவியோடு முன்னெடுக்க வேண்டும்.

இளைஞர்களின் நல்வாழ்வு

இளைஞர்களின் சுகாதாரம், கல்வி, திறமைகள், ஆற்றல்கள் மேம்பட இந்தியா கவனம் செலுத்த வேண்டும். அண்மையில் தேசிய குடும்ப நல சர்வே (ழிணீtவீஷீஸீ திணீனீவீறீஹ் பிமீணீறீtலீ ஷிuக்ஷீஸ்மீஹ் ழிபிதிஷி-5) குன்றிய வளர்ச்சி, ஊட்டச்சத்துக் குறைவு, இரத்த சோகை போன்றவை நம்முடைய குழந்தைகளை, கருத்தரிக்கும் வயதுடைய பெண்களைப் பெரும் அளவில் பாதிக்கிறது. குறிப்பிட்ட ஊட்டச்சத்துத் திட்டங்கள் உரியவர்களுக் குச் சென்றடைகின்றனவா என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

நமது சுகாதார அமைப்பில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை கோவிட்- 19 பெருந்தொற்று வெளிப்படுத்தியது. நோய் கண்காணிப்பு முதல் மருத்துவப் பாதுகாப்பு வழங்கும் வரை நாம் மருத்துவ சேவைத் திறனை வலுப்படுத்த வேண்டும். வெவ் வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவ அமைப்புத் திறனில் வித்தியாசங்களைக் கண்கூடாகக் காண முடிகிறது. மாநிலங்கள் சுகாதாரத்திற்காக அதிகளவில் செலவிட வேண்டியது அவசியமாகிறது. மேலும் சுகாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களுக்கு ஒன்றியத்தால் நிதியுதவி செய்யப்படும் திட்டங்களால் அதிகப் பயன் பெற வேண் டும். எல்லோருக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க, போதிய நிதியுதவி சென்றடைய வேண்டும். இது சமமாக நாடு முழுவதும் கிடைக்க முயற்சிக்க வேண்டும்.

குடிமக்களின் கவனத்திற்கு....

நான் பதினான்கு வயதுச் சிறுவனாக இருந்தபோது புதிதாகக் கிடைத்த விடுதலையின் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஒருபுறம் இருந்தது. மறுபுறம் நாட்டின் பிரிவினால் ஏற்பட்ட சோகங்கள் என்னை வேதனையில் ஆழ்த்தியது. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இந் தியா ஒரு வலுவான நாடாக வளர வேண்டும் என்பதே என் விருப்பம். இன்றைக்கு எனக் குப் பெருமையாக இருக்கிறது. இந்நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்ற முழுநம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. ஆனால் பிரிவினைவாத முழக்கங்கள், வகுப்புவாத அவதூறு பரப்புரைகள் எனக் குக் கவலையளிக்கின்றன. இதனால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு மக்கள் பிளவு பட்டு நிற்கின்றனர். இத்தோடு சேர்த்து ஜனநாயக நிறுவனங்கள் பலவீனப்படுத்தப் படுகின்றன. இந்த நிறுவனங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, நல்லாட்சி விதிமுறைகளை நிலைநிறுத்தி, பணபலம் கொண்ட அரசு நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து தேர்தல் அரசியலில் இழைக்கும் தாக்குதலுக்கு எதிரான கேடயமாகச் செயல் பட வேண்டும். 

கடுமையாகப் போராடிப் பெற்ற விடு தலையின் பலனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக் கிறது. மூவர்ணக் கொடியை ஏற்று மரி யாதை செலுத்தும் அதே நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அந்தக் கடமையைப் பறறிச் சிந்திப்போம்.

தமிழில்: ஜான் முஹம்மத்

நன்றி: “சமரசம்’’ 1-15.9.2022

No comments:

Post a Comment