பெண்களின் வலி ஆண்களுக்குத் தெரியுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

பெண்களின் வலி ஆண்களுக்குத் தெரியுமா?

பெண்களுக்கு ஏற்படுகின்ற இயற்கையான நிகழ்வான மாத விடாய் பெண்களை பெருமளவில் அவதிக்குள்ளாகி வந்தாலும் அதனை எதிர்கொள்ள துணிவு கொள்கிறார்கள். ஆனால், மதக்கண்ணோட்டத்தில் மாதவிடாய் ஏற்படும் பெண்களை ஒதுக்கிவைப்பதும், தீட்டு என்று இழிவாக நடத்துவதும், மாத விடாய் ஏற்படும் காலங்களில் பெண்களைப் பொதுவெளிகளில் செல்ல அனுமதி மறுத்து மூலையில் முடங்கச் செய்வதுமான பிற்போக்குத்தனங்கள் இருந்து வருகின்றன.

இயற்கையான நிகழ்வான மாதவிடாய்க் காலத்தில் பெண்களைத் தீட்டு என்று கூறி வழிபாட்டிடங்கள், பூஜைகள் போன்றவற்றில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இன்னமும் சிலர் வீட்டின் சமையலறைகளுக்குள் செல்லத் தடைபோடும் அவலமும் இருந்து வருகிறது.

பெண்கள் கல்வி பயின்று, பணிக்குச் சென்று முன்னேற்றப் பாதையில் செல்கையில், இயற்கையான நிகழ்வான மாதவிடாயை ஒரு பொருட்டாக எண்ணாமல், மதத் தடைகளைக் கடந்து, நாப்கின்களைப் பயன்படுத்தி இயல்பான வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். இருப்பினும், பொது வெளியில் அதுகுறித்துப் பேசுவதற்கு பலரும் தயக்கம் காட்டிவரும் சூழல் இருந்து வருகிறது.

அதுபோன்ற தடைகளைத் தகர்க்கும் வகையில் கேரளாவில் குறிப்பாகப் பெண்களின் மாதவிடாய் கால வலியை ஆண்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு மாத விடாய் கால வலியை ஏற்படுத்தும் கருவியை ஆண்களுக்கு பொருத்தி, பெண்கள் படும் வேதனையை ஆண்கள் உணரவேண்டும் என்று செயல்வடிவத்தில் நடைமுறைப் படுத்தியுள்ளார்கள்.

இதுகுறித்து பி.பி.சி. தமிழ் இணையத்தில் (31.8.2022) வெளியாகியுள்ள தகவல் வருமாறு,

"மாதவிடாய் மற்றும் அதனால் ஏற்படும் அசவுகரியங்கள், இந்தியாவின் பல பகுதிகளில் இன்னமும் வெளிப்படையாகப் பேசத் தடை செய்யப்பட்ட தலைப்பாக உள்ளது. ஆனால், கேரளாவில் அதை மாற்றும் நோக்கத்தோடு ஒரு பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த முன்முயற்சியின் ஒருங்கிணைப் பாளர்கள் - எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் மால்கள், கல்லூரிகளுக்கு மாதவிடாய் சிமுலேட்டர்களை (மாதவிடாய் வலியை செயற்கையாக ஏற்படுத்தும் கருவி) எடுத்துச் செல்கிறார்கள். மாதவிடாய் குறித்த விஷயங்களைப் பற்றிய உரையாடலை இயல்பாக்கும் முயற்சியாக ஆண்களுக்கு அந்த சிமுலேட்டரை பொருத்தி, மாதவிடாயின் வலியை அவர்கள் உணர வைக்கின்றனர்."

பிரச்சாரத்தின் சமீபத்திய காட்சிப் பதிவு ஒன்றில், ஆண்கள் மாதவிடாய் வலியால் துள்ளிக் குதித்து அலறுவதை பெண்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

"அது மிகவும் வேதனையானது. நான் அதை மீண்டும் அனுபவிக்க விரும்பவில்லை," என்று ஒரு மாலில் மாதவிடாய் சிமுலேட்டரை முயன்று பார்த்த சமூக ஊடக பிரபலம் ஷரன் நாயர் கூறுகிறார்.

இந்த சிமுலேட்டர், கப் ஆஃப் லைஃப் என்ற திட்டத்தின் ஒரு பகுதி. இது - மாதவிடாய் கப்களை இலவசமாக விநி யோகிப்பதையும் மாதவிடாயைப் பற்றிய கட்டுக்கதைகளை உடைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஹிபி ஈடன், மருத்துவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

பெண்களின் ஆரோக்கியம், குறிப்பாக மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள், இந்தியாவில் விவாதிக்கப்படாத தலைப்பாக உள்ளது. பல பகுதிகளில் பெண்கள் இன்னும் மாதவிடாய் காலத்தில் தூய்மையற்றவர்களாகவே கருதப்படுகிறார்கள். சமூக மற்றும் மத நிகழ்வுகளில் இருந்தும் சமையலறையில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.

நகர்ப்புறங்களில் இந்த மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருந்தாலும், பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிடாயைப் பற்றியோ அடிக்கடி ஏற்படும் கடுமையான வலியைப் பற்றியோ குடும்பத்திலுள்ள ஆண் உறுப்பினர் களிடமேகூட விவாதிக்கத் தயங்குகிறார்கள். உலகெங்கிலும் உள்ள சில நிறுவனங்கள் மாதவிடாய் விடுப்பு வழங்குகின்றன.

இந்தியாவிலும் சில நிறுவனங்கள் மாதவிடாய் விடுப்பு அளிக்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும் இது இன்னமும் ஒதுக்கி வைக்கப்படும் தலைப்பாகவே உள்ளது.

ஆனால், இந்தியாவின் மிகவும் முற்போக்கான மாநிலங் களில் ஒன்றாகக் கருதப்படும் கேரளாவில் ஒரு மாற்றத்தைத் தூண்ட முடியும் என்று இந்த பிரச்சாரத்தின் ஒருங்கிணைப் பாளர்கள் நம்புகிறார்கள். இது வரவேற்கத்தக்கது.

No comments:

Post a Comment