ஓர் ஏட்டுக்கு 60 ஆண்டு ஆசிரியராக இருந்த ‘நாட் அவுட்' பேட்ஸ்மேன் நமது ஆசிரியர் மட்டுமே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 5, 2022

ஓர் ஏட்டுக்கு 60 ஆண்டு ஆசிரியராக இருந்த ‘நாட் அவுட்' பேட்ஸ்மேன் நமது ஆசிரியர் மட்டுமே!

அவர் தலைமையில் நாம் ஒருங்கிணைந்து - அவர் காட்டும் வழியைத் தொடரவேண்டும்!

மூத்த பத்திரிகையாளர்  விஜய்சங்கர் விளக்கவுரை

சென்னை, செப்.5  ஓர் ஏட்டுக்கு 60  ஆண்டு ஆசிரியராக இருந்த ‘நாட் அவுட்’ பேட்ஸ்மேன் நமது ஆசிரியர் மட்டுமே! அவர் தலைமையில் நாம் ஒருங்கிணைந்து - அவர் காட்டும் வழியைத் தொடரவேண்டும் என்றார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜய்சங்கர் அவர்கள்.

88 ஆண்டு விடுதலையின் 60 ஆண்டுகால ஆசிரியருக்குப் பாராட்டு விழா!

கடந்த 27.8.2022 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடை பெற்ற ‘‘பத்திரிகையாளர்கள் - எழுத்தாளர்கள் பார்வை யில் 60 ஆண்டுகால ஆசிரியர் மானமிகு கி.வீரமணி; 88 ஆண்டு ‘விடுதலை'யின் 60 ஆண்டு ஆசிரியருக்குப் பாராட்டு விழா’’வில் ‘ஃப்ரண்ட் லைன்’ மேனாள் ஆசிரியர் ஆர்.விஜய்சங்கர்  அவர்கள் வாழ்த்துரை யாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

ஒரு நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் உரையாற்றுவது என்பது ஒரு பெரும் சோதனை.

உரையாற்றுபவருக்கும், கேட்டுக் கொண்டிருப்பவர் களுக்கும்.

ஒரு வாழும் வரலாற்றின் 60 ஆண்டுகால வரலாற்றை சொல்லச் சொல்வது....

அதிலும் 10 நிமிடத்தை ஒதுக்கிவிட்டு, ஒரு வாழும் வரலாற்றின் 60 ஆண்டுகால வரலாற்றை சொல்லச் சொல்வது என்பது அராஸ்மெண்ட். 

மற்ற பத்திரிகையாளர்கள் இங்கே சொன்னதுபோன்று, எங்களுக்கெல்லாம் பெருத்த ஆச்சரியம். இப்படி ஒரு ஆசிரியரா? என்பது.

நான் குறிப்புகளை வைத்துக்கொண்டுதான் பேசு வேன், எங்கே சென்றாலும்; இந்தக் கெட்டப் பழக்கத்தை நான் கற்றுக்கொண்டது - ஒன்று, கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக இருந்த என் தந்தையிடமிருந்தும், இன் னொன்று ஆசிரியர் அய்யாவிடமிருந்தும்.

எனக்கு 10 வயது இருக்கும்பொழுது பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்தில் வீரமணி அவர்கள் பேசுகிறார் என்று சொன்னார்கள்.

அப்பொழுதெல்லாம் நிறைய பொதுக்கூட்டங்கள் நடக்கும். பொதுக்கூட்டம் முடிந்து, கடைசியாக கச்சேரி நடத்துவார்கள். அதுவரை கூட்டத்தை கேட்போம்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப், இணைய தளத்திலேயே கூட்டங்கள் முடிந்துவிடுகின்றன.

எதையும் ஆதாரங்களோடு சொல்பவர் ஆசிரியர்

அந்தக் காலகட்டத்தில் உறையூர் கடைவீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்குச் சென்றிருந் தேன். ஆசிரியர் அவர்கள் பேசும்பொழுது, குறிப்புகள் மட்டுமல்ல, புத்தகங்களை நிறைய அடுக்கி வைத்துக்கொண்டு பேசுவார். 

ஆதாரங்களின் அடிப்படையில்தான் பேச வேண்டும்; அதுதான் அறிவுப்பூர்வமான செயல் பாடு. கூட்டத்தில் கைதட்டல் வாங்குவதற்காக பேசுபவர் அல்ல. நாம் அவர்களுக்கு அறிவு புகட் டிக் கொண்டே இருக்கவேண்டும்; பகுத்தறிவை சொல்லிக் கொண்டிருக்கவேண்டும்; உலக நடப்பை சொல்லிக் கொண்டிருக்கவேண்டும் என்பதற்காக நிறைய புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டு பேசும் ஒரு தலைவராக நான் ஆசிரியரைப் பார்த்திருக்கிறேன்.

அதைப் பார்த்ததிலிருந்து குறிப்புகள் இல்லாமல் என்னால் பேச முடியாது.

என்னுடைய முதல் இன்னிங்ஸ் முடிந்துவிட்டது

இங்கே பிரின்சு சொன்னதைப்போல, ஆசிரியர் அய்யா அவர்கள் 1962 ஆம் ஆண்டிலிருந்தே ஆசிரியராக இருக்கிறார்.

நான் பிறந்த ஆண்டு 1962. நான் பிறந்து, வளர்ந்து, படித்து ஒரு பத்திரிகையில் 36 ஆண்டுகள் பணி செய்து, 20 ஆண்டுகள்  ஆசிரியராக இருந்து, என்னுடைய முதல் இன்னிங்ஸ் முடிந்துவிட்டது.

ஆனால், 60 ஆண்டுகளாக, ஆட்டமிழக்காமல், ஒரு நாட் அவுட் பேட்ஸ்மேனாகவே அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

அணியின் தலைவராக இருந்துகொண்டு, 

நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருப்பது கடினம்

ஒரு வாரப் பத்திரிகையையோ, மாதமிருமுறை வருகின்ற பத்திரிகையையோ நடத்துவது சுலபமானது. ஆனால், ஒரு நாளேட்டை நடத்துவது என்பது மிகவும் கடினம்.

ஆசிரியர் அய்யா அவர்கள் நாட் அவுட் பேட்ஸ் மேன் மட்டும் கிடையாது; ஓர் அணியின் தலைவராக இருந்துகொண்டு, நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருப்பது கடினம்.

ஓர் அணியின் தலைவராக இருக்கும்பொழுது பொறுப்புகள் அதிகமாக இருக்கும். பல அணித் தலைவர் கள், எளிதில் அவுட்டாகி விடுவார்கள்.

ஆனால், அணித் தலைவராக இருந்துகொண்டு, ஆசிரியராக இருந்துகொண்டு, எங்களுக்கெல்லாம் ஊக்கச் சக்தியாக திகழும் ஆசிரியர் அய்யா அவர் களைப் பாராட்ட எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு மிகவும் நன்றி!

ஜி.கஸ்தூரி, 25 ஆண்டுகளாக ஆசிரியராக இருந்திருக்கிறார்

60 ஆண்டுகால ஆசிரியர் என்பது உலக சாதனை யாக இருக்கும் என்று நினைத்து, கூகுளில் தேடிப் பார்த்தேன்.

இந்தியாவில் அதிக நாள்கள் ஆசிரியராக இருந்தவர் ஜி.கஸ்தூரி, நான் பணியாற்றிய நிறுவனத்தின் ஆசிரியர். அவர் 1965 ஆம் ஆண்டிலிருந்து 1991 ஆம் ஆண்டுவரை 25 ஆண்டுகளாக ஆசிரியராக இருந்திருக்கிறார்.

சரி, உலக அளவில் இது ஒரு சாதனையாக இருக்கும் என்று தேடிப் பார்த்தேன்.

‘‘நாசே டிரிபியூன்’’ பத்திரிகை ஆசிரியர் 

54 ஆண்டுகளாக இருந்திருக்கிறார்

அப்பொழுது எனக்குக் கிடைத்த விவரம், இன்டர் நேஷனல் பிரஸ் இன்ஸ்டிடியூட் - ஒரு விருதை அறிவிக்கிறார்கள்.

அந்த விருதை - டிரினினாட் டோபாக்கோ நாட்டில் இருக்கும் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.

அவர் ‘‘நாசே டிரிபியூன்'' பத்திரிகை ஆசிரியராக 54 ஆண்டுகளாக இருந்திருக்கிறார்.

உலக சாதனைக்காக 

ஆசிரியருக்கு இன்னொரு பாராட்டு விழாவை நடத்தவேண்டும்

ஆகவே, 60 ஆண்டுகால ஆசிரியர் என்பது அநேக மாக உலக சாதனையாக இருக்கும். நாம் அதை உறுதி செய்துகொண்டு,  அதற்கொரு பாராட்டு விழாவை நடத்தவேண்டும்.

என் உரை தொடக்கத்தில், யாருடைய பெயரை யும் நான் சொல்லவில்லை; ஏனென்றால், அறி வார்ந்த அவையோரே என்று மட்டும்தான் சொல்வேன்.

அறிவார்ந்தவர் என்று நீங்கள் மட்டும்தான் நினைத் துக் கொண்டீர்கள் என்று ஒருவருக்கு சந்தேகம் வந்துவிட்டது.

நூறு ஆண்டுகளாக நாங்கள்தான் அறிவார்ந்த வர்கள்; நாங்கள்தான் உங்களைக் கேள்வி கேட்டுக் கொண்டிருப்போம். இன்றும் இந்த நாட்டிற்குள் உங்களை நுழைய விடாமல் அறிவார்ந்தவர்களாக இருப்பவர்கள் நாங்கள் தான்.

அந்தப் பெருமைக்கு 60 ஆண்டுகளாக, அதற்கு மேலாகவே இந்த இயக்கத்தில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் ஆசிரியர் அய்யா.

சமூகநீதி போராட்டமும், 

உரிமைப் போராட்டமும்...

‘விடுதலை' பத்திரிகையை தொடங்கிய ஆண்டு 1935. வாரம் இருமுறை காலணா.

1937 ஆம் ஆண்டு நாளேடாக, அரையணா.

‘விடுதலை’ தோன்றிய ஆண்டு இருக்கிறதே, அது சமூகநீதி போராட்டமும், சமூகநீதி அலையும், மொழி உரிமைப் போராட்டமும் எழுச்சிப் பெற்று, திராவிட இயக்கம் என்பது பேரெழுச்சி பெற்ற காலகட்டத்தில் தோன்றிய பத்திரிகைதான் ‘விடுதலை’

அந்தக் காலகட்டத்திலிருந்து, இன்றும் இது ‘விடுதலை’க்காக நிற்கிறது - நூறாண்டுகளுக்குப் பிறகு. இதே நூறாண்டுகளுக்கு முன்பு இன்னொரு இயக்கமும் தோன்றியது - அந்த இயக்கத்திற்குப் பெயர் ஆர்.எஸ்.எஸ்.

அந்த இயக்கத்தை, நான் பெரியாரைப்பற்றி பேசும் பொழுதெல்லாம் பல நேரங்களில் சொல்வது என்ன வென்றால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தோன்றிய அதே காலகட்டத்தில்தான், சுயமரியாதை இயக்கமும் தோன்றியது.

ஆர்.எஸ்.எஸின் அபாயத்தை அன்றே நமக்கு அடையாளம் காட்டியவர் பெரியார்

ஆனால், ஆர்.எஸ்.எஸின் அபாயத்தை அன்றே நமக்கு அடையாளம் காட்டியவர் பெரியார் அவர்கள்.

அதனால்தான், இன்றைக்கும் அந்த இயக்கத்தை எதிர்த்து நிற்கும் ஒரு சக்தியுள்ள இயக்கமாக திராவிடர் கழகம் இருக்கிறது. அதில் ‘விடுதலை’ பத்திரிகையின் பங்கு மிகவும் அதிகம்.

‘விடுதலை’யைப் பற்றி பெரியார் சொல்கிறார்

1964 இல் ‘விடுதலை’யைப் பற்றி பெரியார் சொல் கிறார்,

‘‘ஒழுக்கக்கேடானதும் மூட நம்பிக்கைகளை வளர்க் கக் கூடியதும் தமிழ் மக்களுக்குச் சமுதாயத்திலும் அரசியலிலும் உத்தியோகத் துறையிலும் கேடு அளிக்கக் கூடியதுமான காரியங்களை வெளியாக்கி அக்கேடு களைப் போக்குவதற்காகப் பாடுபடும் பத்திரிகை ‘விடுதலை.' ‘விடுதலை' பத்திரிகை இல்லாதிருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ஏன் என்று கேட்க நாதியே இல்லாமல் போயிருக்கும்.''

‘விடுதலை’ நாளிதழ் 88 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

‘பிராமணர்’ ‘கள்' சாப்பிடும் இடம் என்று எழுதினார்கள்

திராவிடர் கழகத்தின் சார்பாக நடைபெற்ற போராட் டத்தில் எல்லாவற்றிலும் ‘விடுதலை’க்குப் பங்கு இருக் கிறது.

வடவர் சுரண்டல் தடுப்பு அறப்போர்,

வகுப்புரிமை போராட்டம்,

விநாயகர் உருவ பொம்மை எரிப்புப் போராட்டம்,

குலக்கல்வித் திட்டம் எதிர்ப்புப் போராட்டம்,

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பல கட்டங்கள்,

உணவு விடுதிக்கு ‘பிராமணாள்' என்று பெயர் இருந்தால், அதை  அழிக்கும் போராட்டம்,

அந்தக் காலகட்டத்தில் ஒரு வேடிக்கை நிகழ்வு - ‘பிராமணர்கள்' சாப்பிடும் இடம் என்று இருந்ததை ‘பிராமணர்' கள் சாப்பிடும் இடம் என்று எழுதினார்கள். அதுவும் ஒரு எதிர்ப்புதான்.

அந்தக் காலகட்டத்தைத் தாண்டி, 1962 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் பெரும் மாற்றங்கள் நடைபெற்றன. பிரதமராக இருந்த நேருவுக்குப் பிறகு, நெருக்கடி காலகட்டம்.

அதற்குப் பிறகு கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிக முக்கிய மாற்றங்கள் எல்லாம் ‘விடுதலை’யில் பதிவாகியிருக்கின்றன.

கடந்த 60 ஆண்டுகள் 

மிக முக்கியமானவை

வரலாற்றைப் பதிவு செய்வது என்பதில், கடந்த 60 ஆண்டுகள் மிக முக்கியமானவை.

இன்றைய காலகட்டத்தில், சனாதன ஆட்சி, ஒன்றி யத்தில் அமர்ந்திருக்கிறது. இன்றைக்கும் அதே வலிமை யோடும், அதே உணர்ச்சியோடும், அதே வேகத்தோடும் செயல்படுகிறது ‘விடுதலை’ என்பது எங்களுக்கெல்லாம் ஓர் உத்வேகம் அளிக்கக்கூடியதுதான்.

இதைப்பற்றி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் எல்லாம் இங்கே சொன்னார்கள்.

உலகம் முழுவதும் எடுத்துக்கொண்டால், பத்திரிகை என்பது, அரசியல் சமூக செயல்பாட்டிற்கான ஒரு கருவி யாகத்தான் தொடங்கப்பட்டது. பிறகுதான், அது கமர்சிய லிசேசன் - விளம்பரங்கள் எல்லாம் வந்து, பத்திரிகையினுடைய நோக்கம் வேறெங்கோ போனது.

காரல் மார்க்ஸ் - லெனின்!

காரல் மார்க்ஸ் அவர்கள், இரண்டு பத்திரிகைகளை நடத்தியிருக்கிறார்.

லெனின், இஸ்க்ரா என்ற பத்திரிகையை நடத்தினார். அவர் பத்திரிகையைப் பற்றி சொல்கிறபொழுது, ‘‘ஒரு செய்தித் தாளின் பணி சிந்தனைகளைப் பரப்புவதும், அரசியல் கல்விப் புகட்டுவதும், அரசியல் பண்புகளை ஈர்ப்பது மட்டும் அல்ல. ஒரு செய்தித் தாள் என்பது, கூட்டுப் பிரச்சாரகன், கூட்டுப் போராளி என்பது மட்டுமல்ல, கூட்டு அமைப்பாளன்'' என்றார்.

லெனின் சொன்ன கூற்று, ‘விடுதலை’ நாளிதழுக்குப் பொருந்தும்.

இந்த இயக்கம் ஏன் இன்றும் இருக்கிறது என்றால், ஆசிரியர் போன்ற ஆர்கனைசர் கிடைத்ததினால்தான். இன்றைக்கும் ‘விடுதலை’ பத்திரிகை நிற்கிறது.

திராவிட இயக்கத்தினுடைய மிகப்பெரிய வெற்றி என்பது,  எந்த ஊடகம் புதிதாக வருகிறதோ, அந்த ஊடகத்தைக் கைகளில் எடுத்துக்கொண்டார்கள்.

அந்தக் காலத்தில் நாடகங்கள், அதற்குப் பிறகு பத்திரிகைகள், சினிமாமூலம் திராவிடக் கருத்துகளைக் கொண்டு சென்றார்கள்.

257 பத்திரிகைகள் திராவிட இயக்கப் பாசறைகளிலிருந்து வந்திருக்கின்றன!

திராவிட இயக்க இதழ்களைப்பற்றி க.திருநாவுக் கரசு அவர்கள் ஓர் ஆய்வு செய்திருக்கிறார்.

அந்த ஆய்வின்படி 257 பத்திரிகைகள் திராவிட இயக்கப் பாசறைகளிலிருந்து வந்திருக்கின்றன. இது ஒரு சாதாரண சாதனையாக இருக்க முடியாது. அதில் 18 பத்திரிகைகள் ஆங்கிலத்தில் வந்திருக் கின்றன.

இத்தாலிய மார்க்சிய அறிஞர் க்ராம்ஷி

ஆசிரியர் அவர்களைப் பார்க்கும்பொழுது, எனக்கு க்ராம்ஷி என்பவர்பற்றித்தான் ஞாபகத்திற்கு வருகிறது. க்ராம்ஷி என்பவர் இத்தாலிய மார்க்சிய அறிஞர். அவர் அருமையான ஒரு கருத்தாக்கத்தை முன்வைக்கிறார்.

அது மார்க்சியத்திலிருந்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போகும் கருத்தாக்கம்.

அமைப்பு சார்ந்த அறிவு ஜீவி.

அறிவு ஜீவி என்பது இரண்டு வகையாகும்.

ஒரு குறிப்பிட்ட துறையில், சட்டம் அல்லது கணக்குத் துறையில் அறிவு ஜீவிகளாக இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றால், ஒவ்வொரு வர்க்கத்திலிருந் தும் அறிவு ஜீவிகள் வருகிறார்கள். ஆனால், அவர்கள் தம் துறைச் சார்ந்த நிபுணர்களாக மட்டும்தான் இருக்கிறார்கள்.

அதற்கு ஓர் உதாரணம்,

அய்.அய்.டி. பேராசிரியர் ஒருவர், பரப்பு விசை விதிகளைப்பற்றி சொல்லிக் கொடுப்பவர். அவர் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று சொல்கிறார். பிள்ளையார் பால் குடிக்கும் நிகழ்வு அய்.அய்.டி. வளாகத்திற்குள்ளேயே நடைபெறுகிறது.

அவர் அறிவு சார்ந்த துறையில் பெரிய ஆளாக இருந்தாலும், அறிவியலில் பெரிய ஆளாக இருந்தாலும், பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று சொல்கிறார்.

பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை கொடுத்திருக்கவேண்டும்!

பிள்ளையார் பால் குடிப்பது எப்படி நடக்கிறது என் றால், பால் உறிஞ்சுவது போன்று தோன்றும்; ஆனால், உண்மையில் அப்படியில்லை. சரி, பிள்ளையார் உண்மையிலேயே சக்தி நிறைந்தவர் என்று சொன்னால், அவருக்குக் கொழுக்கட்டை கொடுத்திருக்கவேண்டும்; அப்படி சாப்பிட்டிருந்தால், அவர் சக்தி நிறைந்தவர் என்று ஒப்புக்கொண்டிருப்பேன்.

இதுதான் ஆர்க்கானிக் இன்டலெக்சுவலுக்கும், மரபு சார் இன்டலெக்சுவலுக்கும் உள்ள வேறுபாடு.

அதேபோன்று, ராக்கெட் ஏவுகணை தளத்திலிருந்து ராக்கெட்டை அனுப்புகிறார்கள்; அப்பொழுது தேங்காய் உடைக்கிறார்கள்.

இதை சமூகம் சார்ந்த ஒரு இன்டலெக்சுவலாக உள்ளவர்கள் அப்படி செய்யமாட்டார்கள்.

அறிவை வளர்க்கவேண்டும்; பகுத்தறிவை வளர்க்க வேண்டும் என்று சொல்வது ஆர்கானிக் இன்டலெக் சுவல்.
இதற்கு ஒரு பெரிய உதாரணம் தமிழ்நாட்டிலேயே இருக்கிறது.
ஒரு ஆடிட்டர் என்பவர், அவருடைய துறையில் அவர் வல்லுநர்.
ஆனால், அவர் எடிட்டர் ஆனால், என்னாகும் என்று நமக்கெல்லாம் தெரியும்.
ஆனால், ஆடிட்டர் எடிட்டர் ஆகும்பொழுது, அவர் ஆடிட்டிங்கில் பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால், எடிட்டிங்கில் மகாமட்டமான ஓர் ஆள் என்று நிரூபணமாகிவிட்டது.

ஆசிரியர் அய்யா அவர்கள் 
‘ஆர்கானிக் இன்டலெக்சுவல்'
ஆனால், ஆசிரியர் அய்யா அவர்கள் ஆர்கானிக் இன்டலெக்சுவல்.
தன்னுடைய துறை சார்ந்த அறிவு மட்டுமல்லாமல், இந்த சமுதாயத்திற்காக தன்னுடைய அறிவையும், தன்னுடைய ஆற்றலையும் பயன்படுத்துபவர்கள் ஆர்கானிக் இன்டலெக்சுவல்.
அதன்படி பார்த்தால், தமிழ்நாடு கண்ட மிகப்பெரிய  ஆர்கானிக் இன்டலெக்சுவல் யார் என்றால் பெரியார், அவர் வழி வந்த ஆசிரியர் அய்யா அவர்கள்.

60 ஆண்டுகளாக இருப்பதும், ஒரு நாளேட்டை நடத்துவது என்பதும் மிகக் கடினம்
ஆசிரியர் பணியில் 60 ஆண்டுகளாக இருப்பதும், ஒரு நாளேட்டை நடத்துவது என்பதும் மிகக் கடினமான பணியாகும். 
பத்திரிகை தொழில் என்பது, இன்று புதிதாய் பிறந் தோம் என்று சொல்வோம். ஒவ்வொரு நாளும் சவால் நிறைந்த பணியாகும்.
உலகம் முழுவதும் நடைபெறும் விஷயங்களைப் பார்க்கவேண்டும். அதற்கு எதிர்வினை புரியவேண்டும். தலையங்கம் எழுதவேண்டும். எழுத்துப் பிழைகூட வரலாம்; ஆனால், கருத்துப் பிழை வந்துவிடக்கூடாது. ஏனென்றால், உங்கள் எதிரிகள் உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். கருத்து ரீதியாக இவர் ஏதாவது தவறு செய்துவிடுவாரா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏனென்றால், திருக்குறளுக்கு ஒரு பரிமேலழகர் போன்று, இன்றைக்கு ரவிமேலழகர் வந்திருக்கிறார். அவர் திரிபுவாதம் செய்யும் திரிமேலழகர் அவர். அவர் ஒரு இன்டலெக்சுவல்.
அவர் நமக்கே இன்று திருக்குறளைப்பற்றி சொல்லிக் கொடுக்கிறார்.
இந்த நாட்டில் எல்லாமே மத ரீதியாகத்தான் வந்தது என்று சொல்கிறார்.
அரசமைப்புச் சட்டத்தை கோவில்கள் உருவாக்க வில்லை. அதற்காக அசெம்பிளி உருவாக்கி, அறிவார்ந்த வர்கள் அமர்ந்து, நாள் கணக்கில் பேசி உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கிப் பிடிக்கவேண்டிய வர்தான் ஆளுநர்.
ஆனால், அவர் மனுதர்மம் என்ற ஒன்று ஏதோ ஒரு காலகட்டத்தில் இருந்ததை, இன்று பேசுகிறார்.

ரவி என்கிற ஆளுநர் புதிய பரிமேலழகராக நமக்கு வந்து சேர்ந்திருக்கிறார்
பரிமேலழகர் எப்படி மனுசாஸ்திரத்தையொட்டி திருக்குறளை விளக்கியிருக்கிறார் என்று நாவலர் நெடுஞ்செழியன் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்தை நான் படித்தேன். மிக அருமையாக பிரித்துக் காட்டுகிறார்.
பரிமேலழகர் உரை என்பதே மனுநீதியை சார்ந்து தான் இருந்திருக்கிறது. ஆக, இப்பொழுது ரவி என்கிற ஆளுநர் புதிய பரிமேலழகராக நமக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.
இவ்வளவு மோசமான ஒரு சூழலில், ‘விடுதலை' பத்திரிகை யில் செய்திகள் எப்படி வருகிறது? என்று பார்க்கும்பொழுது, அதை செய்கின்ற பணி என்பது எளிமையான பணியே கிடையாது.

காபிரியல் கார்சிஜா மார்க்ஸ்
காபிரியல் கார்சிஜா மார்க்ஸ் என்கிற எழுத்தாளருக்கு நோபல் பரிசு கிடைக்கிறது.
அதற்கு ஓர் உதாரணம் சொல்கிறார், உலகிலேயே மிகச் சிறந்த கவிஞன் யார்? என்று நோபல் பரிசு உரையில் அவர் சொல்கிறார்,
‘‘உலகிலேயே மிகச் சிறந்த கவிஞன், கவிதை எழுதுபவன் அல்ல. ஒவ்வொரு நாளும், தன்னுடைய அடுமனைக்குச் சென்று, மாவை உருட்டி, ஒரு குறிப் பிட்ட பதத்தில் அவற்றை சுட வைத்து, ரொட்டிகளை மக்களின் சுவைக்கேற்றவாறு கொடுப்பவன்தான் உலகிலேயே மிகச் சிறந்த கவிஞன்'' என்கிறார்.
ஒரு பத்திரிகையாசிரியரின் பணியும் அதுதான்.
ஒவ்வொரு நாளும் கவனத்துடன், தன்னுடைய வாசகர்களை சென்றடைவதற்காக சிரமேற்கொண்டு செய்யும் அந்தப் பணிதான், அதுதான் உலகத்தில் சிறந்த பணியாக இருக்க முடியும். அந்தப் பணியில் ஆசிரியர் அய்யா அவர்கள், எங்களுக்கெல்லாம் உத்வேகமாக  இருக்கிறார்.
இன்று நமக்கு ஒரு பெரிய சவாலான சூழல் இருக்கிறது.
இன்றைக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றால், திராவிட இயக்கமும், இடதுசாரி இயக்கமும் நூறாண்டுகளாகப் பெற்ற எல்லா வெற்றிகளும் - மாநில உரிமைகள், மொழி உரிமை போன்றவை எல்லாம், இன்று அந்த உரிமைகளையெல்லாம் பறிப்பதற்கான சக்தி - ஒன்றிய அரசில் வந்திருக்கிறது.

‘விடுதலை’ போன்ற நாளிதழ்களின் 
பணி முக்கியமானதாகும்
இதை அறிவார்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், திராவிட இயக்கமும், இடதுசாரி இயக்கமும் வென்றெடுத்த பல விஷயங்கள் புரட்சியினால் வந்தது. இன்று, அதைத் திரும்பப் பெறுவதற்காக எதிர்ப்புரட்சி, மேட்டுக்குடிகளின் எதிர்ப்புரட்சி நடைபெற்றுக் கொண் டிருக்கிறது.
இந்த சூழலில்தான், ‘விடுதலை' போன்ற நாளிதழ் களின் பணி முக்கியமானதாகும்.

மறுபடியும் நாட் அவுட் பேட்ஸ்மேன்தான் எங்களுக்குத் தலைவராக இருக்கவேண்டும்
இன்றைக்கு மேடையில் பார்த்தீர்களேயானால், தீக்கதிர், ஜனசக்தி, முரசொலி, மேனாள் ‘ஃப்ரண்ட் லைன்' எல்லாம் சேர்ந்திருக்கிறது - இதற்கெல்லாம் இன்று யார் தலைமை ஏற்கவேண்டும் என்கிறபொழுது, மறுபடியும் நாட் அவுட் பேட்ஸ்மேன்தான் எங்களுக்குத் தலைவராக இருக்கவேண்டும்.
முன்பு ஒருமுறை இந்த மேடையில் உரையாற்றும் பொழுது, நாமெல்லாம் ஒன்றாகப் பணியாற்றவேண்டும் என்று சொன்னார்.
90 வயதுடைய ஒருவர், நாமெல்லாம் ஒன்றாகப் பணியாற்றவேண்டும் என்று சொல்லும்பொழுது அவருடைய குரலில் இருக்கும் உற்சாகம் என்றைக்கும் குறைந்ததில்லை.
நாங்கள் கலைஞர் அவர்களுக்காக சிறப்பிதழ் போட்டோம். அதை ஆசிரியர் அவர்களிடம் கொடுத்த பொழுது, அந்த சிறப்பிதழில் இருக்கும் தலையங்கத்தில் உள்ள ஒவ்வொரு வரியையும் அடிக்கோடிட்டார். அந்த உற்சாகம் அவருக்கு எங்கிருந்து வருகிறது?
எங்கிருந்து வருகிறது என்றால், அறிவுத் தெளிவில் இருந்து வருகிறது; சமூகப் பொறுப்பிலிருந்து வருகிறது; யாரை எதிர்க்கவேண்டும் என்ற -  உள்ளுக்குள் இருக் கும் அந்த வேகத்திலிருந்து வருகிறது. அந்த வேகம் குறையாமல் இருப்பது எங்களுக்கெல்லாம் உத்வேகம்.

என்னுடைய இரண்டாவது இன்னிங்சிற்கு 
நீங்கள் வழிகாட்டவேண்டும்
எனவே, எங்கள் அணியை நீங்கள்தான் மறுபடியும், தலைமையேற்று, நாட்அவுட் பேட்ஸ்மேனாக - என்னு டைய இரண்டாவது இன்னிங்சிற்கு நீங்கள் வழிகாட்ட வேண்டும் என்று  கூறி, என்னுரையை முடிக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு ‘ஃப்ரண்ட் லைன்’ மேனாள் ஆசிரியர் ஆர்.விஜய்சங்கர் அவர்கள்  வாழ்த்துரையாற்றினார்.

No comments:

Post a Comment