60 ஆண்டு 'விடுதலை' பணியில் சில நினைவுகள் நிகழ்வுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 1, 2022

60 ஆண்டு 'விடுதலை' பணியில் சில நினைவுகள் நிகழ்வுகள்!

கி.வீரமணி

60 ஆண்டு பணியில் கடமையாற்றும்போது கிடைத்த அருமையான வாய்ப்புகளும், அனுபவங்களும் கல்லூரிகளிலோ, பல்கலைக் கழகங்களிலோ பெற முடியாத அற்புதப் பாடங்கள் - பயனுறு கல்வியும்கூட!

எத்தனை எத்தனையோ எனது நினைவுக் குதிருக்குள்!

அய்யாவின் அறிவாயுதமான 'விடுதலை' நாளேட்டின் தனிச்சிறப்பு அதன் துணிவு - யாருக்கும் அஞ்சாத அதன் லட்சியப் பயணம்! 

பல காலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அய்யாவின் 'விடுதலை' மேற்கொண்டது தனி வழிப்பயணமாக!

சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளேட்டின் சார்பாக அதன் தலைமைச் செய்தியாளர் "தேவா" என்பவர் 1968இல் அங்கு சென்ற என்னைப் பேட்டி கண்டபோது - (அது ஒரு நீண்டபேட்டி) கேட்ட பல கேள்விகளில் முக்கியமானது.

"ஏன் அய்யா தமிழில் எழுதும்போது எல்லோரும் 'ல' என்று கொம்புள்ள எழுத்தைப் பயன்படுத்துகையில் உங்கள் ஏடு மட்டும் 'விடுதலை' என்று ஒரு வகை புது எழுத்தைப் போட்டு - வழமையாக எழுதும் 'ல' போடாமல் போடுகிறீர்களே அது என்ன ஏட்டிக்குப் போட்டியாக எதையும் பேச வேண்டும் - எழுத வேண்டும் என்ற காரணத்தினால்தானா? பதில் தாருங்கள்" என்று கேட்கிறார்.

அப்படி அல்ல என்று அவருக்கு விளக்கியதுண்டு (அதன் மூலம் சிங்கப்பூர் வாழ் தமிழ்ச் சான்றோர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், 'தமிழ்முரசு' வாசக நேயர்கள் எல்லாருக்கும் விளக்கிடும் வாய்ப்பு கிடைத்தது) 1980இல் அதிமுக அரசு (தமிழ்நாட்டு எம்.ஜி.ஆர். தலைமையிலான).  தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தினை செயல்படுத்த தனி ஆணை போடுக என்று நாம் (திராவிடர் கழகம்) வற்புறுத்தியதால் - பெரியார் நூற்றாண்டு கொண்டாட்ட சாதனைகளில் ஒன்றாக அவர்  ஏற்று ஆணை -  அவ்வாறாக பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் என்பதைக் குறிப்பிட்டு ஆணை  பிறப்பித்த பிறகு, சிங்கப்பூர் நாட்டு அரசு, தமிழ்நாடு அரசு போட்ட ஆணை தமிழ்மொழி பயன்பாட்டில், அரசு, பள்ளி கல்வி நிலையம் எல்லாவற்றிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

'தமிழ்முரசு' நாளேடு - தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள் ஆசிரியர், நிர்வாகப் பொறுப்பேற்ற நாளேடும் - 1982க்குப் பிறகு புதிய தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையே ஏற்று தனது ஏட்டிலும் பின்பற்றியது!

அதன் பிறகு அதே முறை மலேசியா நாட்டிலும் கூட மலேசிய திராவிடர் கழகப் பொறுப்பாளர் வற்புறுத்தியும் மறுத்துவந்த 'தமிழ் நேசன்' போன்ற நாளேடுகள்உட்பட, மலேசிய அரசு பின்பற்றிய காரணத்தால், பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தினை ஏற்று செயல்படுத்தி வருகிறது!

தேவையற்ற கூடுதல் எழுத்துக்கள் குறைந்து பள்ளிக்கூடத்திற்கு சரியாகப் போகாதவர் என்று பெயரெடுத்த ஒப்பற்ற சுயசிந்தனையாளரான தந்தை பெரியார் அவர்களே இப்படி தமிழ் எழுத்துகளைக் குறைக்க முடிவு செய்து 1935 முதல் 'குடிஅரசு' வார ஏட்டில் தொடங்கி, பிறகு 'விடுதலை' நாளேட்டிலும் இந்த எழுத்து முறை தொடர்ந்து, எதிர்நீச்சலுக்குப் பிறகு, வெற்றி கிடைத்தது!

இடையில் ஓமந்தூரார் முதல் அமைச்சராக இருந்தபோது, அவரது அரசு இந்த எழுத்துச் சீர்திருத்தத்தை வரவேற்றது - செயல்படுத்த ஒரு குழுவும் போட்டது. ஆனால் அதற்கு அற்பாயுள் தான் இருந்தது!

தமிழ்மொழி ஆய்வறிஞர் அய்ராவதம் மகாதேவன் ஆசிரியப் பொறுப்பேற்று 'தினமணி' நாளேடும், பிறகு மற்ற ஏடுகளும் இந்த எழுத்துச் சீர்திருத்தத்தைப் பயன்படுத்தின.

'சுதேசமித்திரன்' நாளேடு, கொள்கையில் எதிர்க்கும் அந்த பார்ப்பன நாளேடு கூட இதற்காக பெரியாரைப் பாராட்டியது. 'தினமலர்' ஆசிரியர் மறைந்த ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்கூட பெரியாரின், 'விடுதலை'யின் இந்த எழுத்துச்  சீர்திருத்தத்தை வரவேற்றுப் பாராட்டியுள்ளார்.

நண்பர்கள், கொள்கை எதிரிகள் - அரசுகள் எல்லோரையும் ஈர்த்து வெற்றிகண்ட ஒரு நாளேடு என்ற பெருமை உள்ளது!

இன்றைய தமிழ் நாளேடுகளும், பாட நூல்களும் தமிழில் அச்சுக் கோர்த்து, அச்சடித்து, அச்சிடுவது - இன்று இணையத்தில் சமூக வலைத்தளங்களில் எழுத்து மூலம் அமைத்து - பெரியாரைக் கண்டனம் செய்கிறவர்கள்கூட, இந்த எழுத்துக்களை - 'விடுதலை'  - 'லை'யை மற்ற எழுத்துக்களையும்தான் இன்றியாமையாது பயன்படுத்துகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா?

இதைவிட பெரியாரின் பெரு வெற்றி - விடுதலை மூலம் கிடைத்த தனி வெற்றியே! வேறு ஏடுகளுக்குக் கிடைத்துள்ளதா?

இந்தப் 'பெருமைமிகு' என்பதை விட 'பயன்மிகு' தமிழ்மொழியை இணைய கணினி பயன்பாட்டில் பெரிதும் பயன்படும் தமிழ் மொழி வளர்ச்சிக்கென 'விடுதலை' ஆற்றிய தொண்டுக்கு ஈடேது?  இணை ஏது? 

யார் அங்கீகரிக்காவிட்டாலும் உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது வரலாறு அல்லவா -  அந்த 'விடுதலை'யின் பணியாளனுக்கு இதைவிட வேறு என்ன ஊதியம் தேவை?


No comments:

Post a Comment