‘‘இல்லந்தோறும் பெரியார் உள்ளந்தோறும் பெரியார்!’’ சாமானியர்களுடைய தோள்கள்தான் நமக்குப் பலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 14, 2022

‘‘இல்லந்தோறும் பெரியார் உள்ளந்தோறும் பெரியார்!’’ சாமானியர்களுடைய தோள்கள்தான் நமக்குப் பலம்

ஒரு ஏட்டை 5 பேர் படிப்பது ‘விடுதலை’யைத்தான்

எங்கெங்கும் கொண்டு செல்வீர்! பரப்புவீர்!! திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் உரை

திண்டுக்கல், ஆக.14-  ‘‘இல்லந்தோறும் பெரியார் உள்ளந் தோறும் பெரியார்!’’ சாமானியர்களுடைய தோள்கள்தான் நமக்குப் பலம் ஒரு ஏட்டை 5 பேர் படிப்பது ‘விடுதலை’யைத்தான் -எங்கெங்கும் கொண்டு செல்வீர்! பரப்புவீர்!! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திண்டுக்கல் மண்டல கலந்துறவாடல்

கடந்த 12.8.2022 அன்று காலை 10.30 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெற்ற திண்டுக்கல், பழனி, தேனி, கம்பம், மதுரை, மதுரை புறநகர், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய கழக மாவட்டங்களின் கலந்துறவாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

திண்டுக்கல் மாநகரில் ஓராண்டிற்குள் மீண்டும் உங்களைச் சந்திக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்பு - விடுதலை சந்தா திரட்டல் என்ற இலக்கு நோக்கிய பயணம் என்ற அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட் டுள்ள இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தும், சந்தா திரட்டலை விரைவுபடுத்தியும், ஊக்கப்படுத்தியும் கடந்த பல நாட்களாக, வாரங்களாகத் தொடர்ந்து உழைப்புத் தேனீக்களாக உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய கழகத்தினுடைய பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களே,

மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களே,

அமைப்புச் செயலாளர்கள் தோழர் மதுரை செல்வம் அவர்களே, ஊமை.ஜெயராமன் அவர்களே,

பெரியார் பெருந்தொண்டர், பெரியார் சுயமரியாதை நிறுவன அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர் அய்யா மயிலை கிருட்டிணன் அவர்களே,

நம்முடைய அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் டாக்டர் நேரு அவர்களே,

திண்டுக்கல் மண்டலத் தலைவர் தோழர் நாகராசன் அவர்களே, திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தோழர் செயல்வீரர் வீரபாண்டி அவர்களே,

மதுரை மாநகர மாவட்டத் தலைவர் முருகானந்தம் அவர்களே, விருதுநகர் மாவட்டத் தலைவர் தோழர் இல.திருப்பதி அவர்களே,

மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் தோழர் தன பாலன் அவர்களே, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் தோழர் பால்.ராசேந்திரம் அவர்களே, செயலாளர் முனியசாமி அவர்களே,

மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் தோழர் த.எரிமலை அவர்களே, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆனந்தம் முனிராசன் அவர்களே,

பொதுக்குழு உறுப்பினர்கள் அய்யா நாராயணன் அவர்களே, ஆசிரியர் வீர.கலாநிதி அவர்களே, பெரியகுளம் அன்புக்கரசன் அவர்களே,

மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற மதுரை முனியசாமி அவர்களே, கம்பம் மாவட்ட செயலாளர் சிவா அவர்களே, மதுரை புறநகர் மண்டலத் தலைவர் சிவகுருநாதன் அவர்களே, செயலாளர் முருகேசன் அவர்களே,

தேனி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் அவர் களே, மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர் பாண்டியன் அவர்களே, மாநில இளைஞரணி துணைத் தலைவர் கமலக்குமார் அவர்களே, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் அவர்களே, பழனி மாவட்டத் தலைவர் தோழர் இரணியன் அவர்களே, விருதுநகர் மாவட்டச் செயலாளர் செயல்வீரர் ஆதவன் அவர்களே,

அருமை இயக்க முன்னணித் தோழர்களே, நண்பர் களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுப்பயணம்

குறுகிய காலத்தில் இந்த சுற்றுப்பயணத்தைத் தோழர் கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  தொடர் சுற்றுப்பயணம், நிகழ்ச்சிகள்பற்றிய செய்திகளையெல்லாம் பார்த் திருப்பீர்கள் ‘விடுதலை’யில்.

எல்லாத் தரப்பினரும் நம்மிடத்திலே அன்பும், பேரன்பும், பேராதரவும் காட்டுகிறார்கள்!

உடல் அசதி, அயர்வு இவையெல்லாம் இருந் தாலும், உங்களையெல்லாம் சந்திக்கின்ற உற்சாகத் தில், அவையெல்லாம் பறந்து போகின்றன. நாம் என்ன செய்யவேண்டும் என்கிற இலக்கு மட்டுமே நமக்கு நினைவிற்கு வருகின்றன.

மக்களைப் பொறுத்தவரையில், எல்லாத் தரப்பினரும் நம்மிடத்திலே அன்பும், பேரன்பும், பேராதரவும் காட்டுகிறார்கள்.

இந்த ‘விடுதலை’ சந்தா திரட்டல் என்பது இருக்கிறதே - இது ஒரு அளவுமானி. 

நமக்கு என்ன ஆதரவு இருக்கிறது?

நம்முடைய இயக்கக் கொள்கைகளை எப்படி பொதுவானவர்கள் எதிர்நோக்குகிறார்கள்?

நம்முடைய இயக்க லட்சியங்களின் வெற்றிக்கு என்ன வாய்ப்புகள் - எப்படியெல்லாம் உருவாக விருக்கின்றன, எங்கெங்கே தடைகள் இருக் கின்றன? என்பதையெல்லாம் நாம் ஒரு பரி சோதனை குழாயின்மூலமாக அறிந்து கொள் வதைப்போல, இது ஒரு நல்ல அளவீட்டு முறையாகும்.

அந்த அளவீட்டு முறையை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

 மதுரையில் நடைபெற்ற 

சிறப்பு வாய்ந்த பொதுக்குழு

மிகச் சிறப்பான வகையில் சொல்லவேண்டுமானால், கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி, மதுரையில் நடை பெற்ற சிறப்பு வாய்ந்த பொதுக்குழுவைப்பற்றிச் சொல்லவேண்டும்.

அந்த மதுரை மாநகரில் தோழர்கள் முருகானந்தம், முனியசாமி, நேரு, செல்வம் போன்றவர்களின் கூட்டு முயற்சியினால், மிக அற்புதமான வகையில் பொதுக் குழுவையும் நடத்தினார்கள்; பொதுக்குழுவினுடைய தீர்மான விளக்கப் பொதுக்கூட்டமும் மிகப்பெரிய அளவிற்கு வெற்றியடையக் கூடிய அளவிற்கு அமைந்திருந்தது. அதற்காக என்னுடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை புறநகர் மாவட்டத்தில், அதற்கு முதல் நாள் மணவிழா, பொதுக்கூட்டம். எங்கெங்கெல்லாம் எதிர்ப்பு கள் இருந்த பகுதிகளோ, அங்கெல்லாம் சென்றோம். ஆனால், அங்கே நல்ல வரவேற்பு; அன்புக்கரசன் கடிதம் எழுதுவதற்கு முன்பு - நீண்ட நாள்களுக்குப் பிறகு பெரியகுளத்திற்குச் சென்றோம். “கூட்டம் முடிந்ததும், பல பேர் என்னிடம் வந்து, கூட்டம் மிகச் சிறப்பாக இருந்தது; ஏன் அடிக்கடி கூட்டம் போடவில்லை என்று என்னிடம் சண்டை போட்டார்கள்; என்னைக் கண்டித்தார்கள்”  என்று தோழர்கள் கூறினர்.

நம்முடைய கொள்கைக்கு 

எங்கும் வரவேற்பு!

ஆகவே, நம்முடைய கொள்கைக்கு எங்கும் வரவேற்பு இருக்கிறது. அதற்குக் காரணம், அறி வாசான் தந்தை பெரியார் என்ற மிகப்பெரிய ஒரு பேராசான் அவர்களுடைய உழைப்புத்தான் நாம் இன்றைக்கு அறுவடைக் களத்தில் நிற்கின் றோம்.

இந்தக் கொள்கை எப்பொழுதுமே வெற்றி தரக் கூடிய கொள்கையாகும்.

நான் அடிக்கடி சொல்லுகின்ற உதாரணத்தை சுருக்கமாக சொல்கிறேன்.

இது ஒரு சமூக விஞ்ஞானம். விஞ்ஞானம் எப்பொழுதுமே தோற்றுப் போவதேயில்லை.

2ஜியிலிருந்து இப்பொழுது 5ஜிக்குப் போகுமே தவிர, அது எப்பொழுதுமே பின்னோக்கி போகாது.

60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்களைத் திரட்டவேண்டும் என்ற ஓர் இலக்கான தீர்மானம்

இந்த நேரத்தில், 60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக் களைத் திரட்டவேண்டும் என்ற ஓர் இலக்கான தீர் மானத்தை மதுரையில்தான் எடுத்தோம்.

எனவே, எல்லா தோழர்களைவிட, இந்தத் தீர்மானம் வெற்றியடையவேண்டும் என்பதில், அதிகமாக உழைக்கவேண்டியவர்கள் நியாயமாக மதுரை தோழர் கள்தான் - மிக முக்கியமாக. மற்ற தோழர்களுக்கு ஒன்றும் அவமானம் இல்லை.

வெற்றி பெற்றால், உங்கள் வெற்றி!

மதுரைத் தோழர்களுக்கும், மதுரையைச் சார்ந்த தென்மாவட்டத் தோழர்களுக்கும்தான் மிக முக்கியமான பொறுப்பு இருக்கிறது.

வெற்றி பெற்றால், உங்கள் வெற்றி!

தோற்றாலும், அது உங்கள் தோல்வி!

ஆனால், தோற்கமாட்டோம்; அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை.

அய்யா பெரியார் சொன்னதுபோன்று, ‘‘என்னுடைய வெற்றிகள் கொஞ்சம் தாமதமாகலாமே தவிர, அது தவிர்க்கப்படக் கூடியதாக இருக்காது’’ என்றார்.

அதுபோன்று, முழுக்க முழுக்க ஒரு நல்ல வாய்ப்பு இப்பொழுது நமக்கு.

60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்கள் என்று சொல்லும் பொழுது, நம்முடைய தோழர்கள் பெரும்பாலும், ‘‘ஆசிரியர் அவர்களுக்கு நன்றி காட்டுவதற்காக - அவர் ஆசிரியர் பொறுப்பேற்று 60 ஆண்டு காலம் ஆகியிருக்கிறது’’ என்றெல்லாம் சொல்கிறார்களே, அது வேறொன்றும் இல்லை - அது ஒரு குறியீடு!

‘‘இல்லந்தோறும் விடுதலை - 

உள்ளந்தோறும் பெரியார்!’’

அதைவிட, இப்பொழுது எல்லா பகுதிகளுக்கும் ‘விடுதலை’ போகவேண்டும்.

‘‘இல்லந்தோறும் விடுதலை -

உள்ளந்தோறும் பெரியார்!’’

இதை எதற்காகச் செய்கிறோம் என்றால், நம்முடைய எதிரிகள் அவ்வளவு வேகமாக வளர்ந்து கொண்டிருக் கிறார்கள். நம்முடைய எதிரிகளுடைய ஊடுருவல் - பல துறைகளில் - ரவுடிகளை வைத்துக்கொண்டு, பணத்தை வைத்துக்கொண்டு, ஊடகங்களை வைத்துக்கொண்டு -எல்லாவிதமான சாம, பேத, தான, தண்டம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிகப்பெரிய ஒரு வாய்ப்பை அவர்கள் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே, இந்தக் காலகட்டத்திலே ஒரு நல்ல ஆட்சியை நாம் அரும்பாடுபட்டு தமிழ்நாட்டில் ஏற் படுத்திய ‘திராவிட மாடல்’ ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. அதைக் கண்டு இந்தியாவே பெருமைப்படக்கூடிய அளவில் இருக்கிறது.

ராகுல் காந்தியின் கூற்று!

அதைக்கண்டு ஆத்திரம் தாள முடியாமல், தமிழ் மண்ணை, எப்படியாவது காவி மண்ணாக ஆக்கவேண் டும் என்று அவர்கள் எத்தனை சிரசாசனம் போட்டாலும், ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் சொன் னதைப்போல, ‘‘நூறு ஆண்டுகள் ஆனாலும், நீங்கள் தமிழ்நாட்டை ஒருபோதும் பிடிக்க முடியாது’’ என்றார்.

அவர் சொன்னது சரியான  வார்த்தை மட்டுமல்ல - அதற்கு அடையாளம் என்ன?

கருப்பைக் கண்டு பயப்படுகிறார் மோடி!

தமிழ்நாட்டுக் கருவிதான் - அவர்களை மிரட்டக் கூடியதாக இருக்கிறது - அவர்களை அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது.

அதற்கு அடையாளம்தான், நேற்று மோடி அவர் களுடைய அறிக்கை.

கருப்பைக் கண்டு பயப்படுகிறார்.

தமிழ்நாட்டிலேயே கருப்பு மிரட்டியது.

நேற்று ஈரோட்டில்கூட சொன்னேன்; இங்கேயும் தோழர்களுக்குச் சொல்கிறேன்.

தமிழ்நாட்டில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு பெரிய வெற்றி என்னவென்றால், அய்யா செய்கிற எல்லாவற்றிற்கும் முதலில் எதிர்ப்பு இருப்பது போன்று இருக்கும்; ஆனால், பிறகு எல்லோரும் அந்த வழிக்குத்தான் வருவார்கள்.

அதற்கு அடையாளம்தான் - எல்லாக் கட்சிக்காரர் களும் தமிழ்நாட்டில் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்திருக்கிறார்கள்.

அய்யப்பன் கோவிலுக்குப் போகிறவர்கள் போடுகிற கருப்புச் சட்டை என்பது சீசன். அதை நாம் கணக்கில் எடுக்கவேண்டிய அவசியமில்லை.

கருப்புச் சட்டைப் போட்டால்தான், போராட்டத்திற்கு அடையாளம்!

ஆனால், கட்சிக்காரர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் - போராட்டக் களம் - நீதி தேவை - நியாயம் தேவை - பரிகாரம் தேவை எந்தப் பிரச்சினையிலும் என்று நினைத்தால், அதற்காக அவர்கள் என்ன செய் கிறார்கள் - பல யோசனைகளை செய்துவிட்டு - கடைசியாக அவர்கள் வருகிற இடம் - கருப்புச் சட்டை அணிந்துகொண்டு போராட்டம் - கருப்புடை அணிந்து போராட்டம் என்று தமிழ் நாட்டில் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது தமிழ்நாடு தாண்டி, சோனியா காந்தி அம்மையார் கருப்புச் சேலை - அதே போன்று ராகுல் காந்தி கருப்புச் சட்டை - காங்கிரஸ் காரர்கள், கதர்ச்சட்டை அணிவதைவிட, கருப்புச் சட்டைப் போட்டால்தான், போராட்டத்திற்கு அடையாளம் என்று நடத்தியிருக்கிறார்கள்.

அது பிரதமர் மோடியை ஒரு கலக்குக் கலக்கி, மிகப்பெரிய அளவிற்கு ‘பிளாக் மேஜிக்கோ’ என்று நினைக்கக்கூடிய அளவிற்கு இருந்தது.

வித்தைக்காரரையே மிரட்டக் கூடிய அளவிற்கு இருக்கிற சக்தி - விடாது கருப்பு

அவரே வித்தைக்குப் பெயர் பெற்றவர்; வித்தைக் காரரையே மிரட்டக் கூடிய அளவிற்கு இருக்கிற சக்தி - விடாது கருப்பு என்பதுதான்.

காங்கிரஸ்  மூத்த தலைவர்களில் ஒருவரும், மேனாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அவர்கள், தன்னுடைய டுவிட்டரில்.

‘‘கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒரு போதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்

தந்தை ஈ.வெ.ரா. பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் (சனாதனவாதி களைத் தவிர) என்பதை நாடறியும் என்று பிரதமருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

ஆக, கருப்புக்கு மறுப்பு என்று சொன்ன காலம் போக - கருப்புக்குத்தான் சிறப்பு என்று சொல்லக்கூடிய அளவிற்கும், கருப்புதான் ஆக்ஜிசன் போன்று, இன்றைய காலகட்டத்தில் தேவைப்படுகிறது. 

தந்தை பெரியார் கொடுத்த போராயுதம்தான் ‘விடுதலை’ ஏடு

இதற்கெல்லாம் ஆயுதம் எது?

அந்த ஆயுதம் முழுக்க முழுக்க  ‘விடுதலை’ தான்.

‘விடுதலை’யினுடைய கருத்து, பேராயுதம் - நமக்குப் பேராயுதம் தந்தை பெரியார். அந்தப் பேராயுதமான தந்தை பெரியார் கொடுத்த போராயுதம்தான் ‘விடுதலை’ ஏடு.

அந்த ‘விடுதலை’யை நாம் பரப்பவேண்டும் என்று நினைப்பது - எனக்கு நன்றி காட்டவோ, பாராட்டவோ, 60 ஆண்டுகாலம் ஆசிரியராக இருந்தேன் என்பதற்காகவோ அல்ல.

அய்யா அவர்களின் தொண்டன் நான். அய்யா என்ன சொல்கிறார்களோ அதை கேட்பது என்னு டைய வேலை - அன்றும் - இன்றும் - என்றும்!

என்னையும் ‘விடுதலை’ விடப்போவதில்லை; ‘விடுதலை’யையும் நான் விடப்போவதில்லை

அப்படி இருக்கும்பொழுது, 60 ஆண்டுகாலம் ஆனால்  என்ன? 70 ஆண்டுகள் ஆனால் என்ன? அது சாதாரணம்தான்.

என்னையும் ‘விடுதலை’ விடப்போவதில்லை; ‘விடுதலை’யையும் நான் விடப்போவதில்லை.

அய்யா அவர்கள் வழிகாட்டி இருக்கிறார்.

என்னுடைய ஆயுள் உள்ள அளவுக்கும், மூச்சு உள்ள அளவுக்கும் என்று எழுதுவார்கள் எல்லோரும்.

ஆனால், அய்யா அவர்கள், 

‘‘எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்தப் பணிதான். நான் நினைவை இழக்கும் நேரம் வரை இந்தப் பணிதான்’’ என்று சொன்னார்.

எவ்வளவு ஆழமான கருத்து. எவ்வளவு உறுதியான, தெளிவான லட்சியப் பயணம்.

இவற்றையெல்லாம் நம்முடைய தோழர்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

எனவேதான், எதிரிகள் தங்களுடைய களத்தைப் பலமாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பணபலம், பத்திரிகை பலம், கூலிகள் பலம், துரோகி கள் பலம் இவையெல்லாம் சேர்ந்து - மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சியான திராவிட மாடல் ஆட்சியை, குலையச் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அதற்காக சில வித்தைகளைச் செய்கிறார்கள். எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்குவது; பலகீனமான வர்களை சேர்த்துக் கொள்வது போன்று. இதெல்லாம் வடநாட்டில் எடுபடும் - மற்ற இடங்களில் எடுபடும்.

மக்கள் அவர்களுக்குப் பாடம் கற்பிப்பார்கள்!

ஆனால், தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது. கட்சி மாறி யாராவது சென்றால், வெளியில் நடமாட முடியாத அளவிற்கு, மக்கள் அவர்களுக்குப் பாடம் கற்பிப்பார்கள்.

ஆகவேதான், தமிழ்நாட்டில் இதுபோன்ற வேலை களை அவர்களால் செய்ய முடியவில்லை. அதனால் என்ன செய்கிறார்கள் என்றால், ஆட்சியைப்பற்றி தவறான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு என்பதில் எவ்வளவு ஊழல்கள் நடைபெற்று இருக்கின்றன என்ப தெல்லாம்  ‘விடுதலை’ யில் கட்டுரைகள் வெளிவரும்.

அம்பானியிடம்தான் 5ஜி ஏலத்தைக் கொடுத்திருக் கிறார்கள். குறைந்த தொகைக்குத்தான் அவரிடம் கொடுத்திருக்கிறார்கள்.

2ஜி அலைக்கற்றை ஏலம் என்பதில் தேவையில்லாமல் ராசாவை சொன்னார்கள்; ராசாவையும், கனிமொழியையும் சிறைச்சாலையில் வைத்தார்கள்.

‘விடுதலை’யைத் தவிர வேறு கிடையாது

இதையெல்லாம் துணிந்து எழுதக்கூடிய ஒரு பத்திரிகை இருக்கிறது என்றால், அது ‘விடுதலை’யைத் தவிர வேறு கிடையாது.

தலைமை நீதிபதி ஒரு பொய் வயதைக் கொடுத்து பதவியில் இருக்கிறார். அவருடைய தம்பி சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடுகிறார்; அவரைவிட, அண்ணன் இளையவராக இருக்கிறாராம்.

தலைமை நீதிபதியையே 

விரட்டிய ஏடு ‘விடுதலை’

இதை சொன்னது ‘விடுதலை’  ஏடுதான்.

ஒரு தலைமை நீதிபதியையே விரட்டிய ஏடு ‘விடுதலை’ தான்.

ஆகவே இதுபோன்று பல செய்திகள் இருக் கின்றன.

2ஜிக்கு எதிராக ராசாவுக்கு எதிராக எல்லோரும் பிரச்சாரம் செய்தார்கள், இடதுசாரிகள் உள்பட.

யு.பி.ஏ. அரசாங்கத்தை ஒழிப்பது - தி.மு.க.வை மீண்டும் பதவிக்குவராமல் தடுப்பது போன்ற வேலைகளைச் செய்தார்களே, அவ்வளவையும் எதிர்த்து - எழுதி, மக்களிடம் உண்மையைச் சொன்ன ஒரே ஒரு இயக்கம் திராவிடர் கழகம்தான்.

நம்முடைய சுப.வீ. போன்றவர்கள் நம்முடன் வந்திருந்தார்கள்.

‘‘இறுதியில் சிரிப்பது யார்?’’

‘விடுதலை’ நாளிதழ்தானே பக்கம் பக்கமாக அந்தச் செய்திகளைப்பற்றி எழுதி, ஆதாரத்துடன் வெளியிட்டது. 

‘‘இறுதியில் சிரிப்பது யார்?’’ என்று பார்ப்போம் என்று சொன்னோம்.

தவறு நடந்திருக்குமோ என்று  தி.மு.க. தோழர் களையே நம்ப வைக்கக்கூடிய அளவிற்கு அவர் களுடைய பிரச்சாரம் - மாயை இருந்தது.

ஆனால், இல்லை என்று உறுதியாகச் சொன்னது நாம்தான்.  பொதுக்கூட்டம் நடத்தி சொன்னோம்.

பிறகு, 2ஜி வழக்கில் அத்தனை பேரும் வெற்றி பெற்று விடுதலை பெற்றார்கள்.

எப்பொழுதும் நியாயம் வெல்லும் என்பது நிச்சயம்!

நீதித்துறையில்கூட கருப்பு உடையைத்தானே அணி கிறார்கள். எனவே, கருப்பு மேஜிக் இல்லை - அவர் மேஜிக்காகப் பார்க்கிறார்; ஏனென்றால், அவர் மேஜிக் நடத்துகிறவர்.

அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது நண்பர் களே, ‘விடுதலை’யினுடைய முக்கியத்துவம், முன்பு எப்போதையும் விட, 2024 ஆம் ஆண்டு நடைபெற விருக்கின்ற தேர்தலை வைத்துப் பார்க்கும்பொழுது, இதைனுடைய முக்கியத்துவம் என்பது மிகமிக அவசிய மானதாகும்.

இந்தக் காலகட்டத்தில் நம்முடைய மக்களுக்கு அறிவுறுத்தவேண்டும்.

பெரிய ஆபத்து எப்படி உருவாகியிருக்கிறது என்று சொன்னால், போலிச் செய்திகள், விஷமச் செய்திகள், தவறான செய்திகளை சமூக ஊடகங்கள்மூலம் மிக வேகமாகப் பரப்புகிறார்கள்.

வேகமாக என்றால், சாதாரணமாக நாம் 10 மைல் வேகத்தில் நடந்தால், அவன் 150 மைல் வேகத்தில் நடக்கிறான்.

இதற்காக சம்பளம் கொடுத்து ஆட்களை வைத் திருக்கிறார்கள், பொய் செல்வதற்கு என்றே! ஒரு பேக்டரியை வைத்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாவற்றிற்கும் பதில் நம்முடைய தோழர்கள் ஓரளவிற்குக் கொடுத்தாலும், அதிகாரப்பூர்வ மாக அச்சில் கொடுப்பதற்கு ஒரே ஒரு ஏடு இருக்கின்றது என்றால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெளிவரும் ‘விடுதலை’ ஏடுதான்.

நெருக்கடி காலத்தில் அதிகமாகக் 

குறி வைக்கப்பட்ட ஏடுகள்!

இல்லையென்றால், எமர்ஜென்சி என்று சொல்லக்கூடிய நெருக்கடி காலத்தில், ‘முரசொலி’,   ‘தீக்கதிர்’, ‘விடுதலை’ நாளிதழ்கள்தானே மிக முக்கியமாகக் குறி வைக்கப்பட்டன. இதில் அதிகமாகக் குறி வைக்கப்பட்டது எந்த ஏடுகள்?

‘விடுதலை’யும், ‘முரசொலி’யும்தானே!

பெரியாருடைய ஏட்டில், ‘தந்தை பெரியார்’ என்று எழுதக்கூடாது என்று சொன்னால், என்ன அர்த்தம்?

சங்கராச்சாரி யார் என்று போட்டால், சங்கராச்சாரி என்று எழுதக்கூடாது; சங்கராச்சாரியார் என்றுதான் போடவேண்டும் என்று சொன்னார்கள்.

ஆகவே, இதையெல்லாம் தாண்டித்தான் நாம் வந்திருக்கின்றோம். எனவே, இந்தக் காலகட்டத்தில், ‘விடுதலை’யைப் பரப்புவது என்பது இருக்கிறதே, இது நமக்காக அல்ல!

மிகக் குறுகிய நாட்கள்தான் 

இருக்கின்றன!

நம்முடைய தோழர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன், இயக்கப் பொறுப்பாளர்கள் இங்கே இருக் கிறீர்கள் - இன்னும்  15 நாள்கள்தான் இருக்கின்றன. மிகக் குறுகிய நாட்கள்தான் இருக்கின்றன.

இந்தக் கட்டம்தான் மிகவும் முக்கியமானதாகும். நம்முடைய தோழர்கள் சென்று, அவர் சேர்ந்தாரா? இவர் சேர்ந்தாரா? என்பது முக்கியமல்ல. இங்கே அழ காகச் சொன்னார், நம்முடைய அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் அவர்கள்.

நம்முடைய தோழர்கள் ஒவ்வொருவரிடமும் செய் திறன் நிறைய இருக்கிறது; ஆனால், அந்தச் செய்திறன் வெளியே வரமாட்டேன் என்கிறது. இந்த நேரத்தில், நான் அதை வருத்தத்தோடு தெரிவிக்கிறேன்.

கவனமாக நீங்கள் எல்லோரும் சந்தாக்களைத் திரட்டவேண்டும்; இடையில் உள்ள ஒரு நாளைக்கூட வீணாக்கக் கூடாது. இழப்பதற்கு நமக்கு நேரமில்லை.

மற்றக் கட்சிக்காரர்களுக்கும் தெரியவேண்டும்; பொதுமக்களுக்கும் தெரியவேண்டும்

இதுவரையில் நம்முடைய தோழர்கள் பொதுக் கூட்டம் போடுவார்கள்; போராட்டம் என்றால் வருவார்கள்; ஆனால், ‘விடுதலை’ சந்தா திரட்டுவதோடு மட்டுமல்ல - நம்முடைய தோழர்கள் யார்? நம்முடைய பொறுப்பாளர்கள் யார்? என்பது மற்றக் கட்சிக்காரர் களுக்கும் தெரியவேண்டும்; பொதுமக்களுக்கும் தெரிய வேண்டும். அவர்களோடு மக்கள் தொடர்பு இருக்கவேண்டும்.

இந்த மக்கள் தொடர்பை ஏற்படுத்துவதுதான் ‘விடுதலை’ சந்தா இயக்கம். 

‘விடுதலை’ சந்தா இயக்கம்

மக்கள் தொடர்பை மேலும் புதுப்பிப்பதுதான் ‘விடுதலை’ சந்தா இயக்கம்.

இதற்கு எது தடை?

ஊமை.ஜெயராமன் பேசும்பொழுது சொன்னார்,

10 சந்தாவில், ஒன்று உங்களுக்கு -

மீதி ஒன்பது சந்தா -

ஒன்பதில் மூன்று உறவுக்காரர்களுக்கு -

மூன்று நட்புக்காரர்களுக்கு -

இன்னொரு மூன்று, அது பொதுநலத்திற்கு.

இந்த 10 சந்தாக்களைக் குறி வைத்தீர்கள் என்றால் போதும், வருகின்ற 10 நாள்களுக்கு.

நம்முடைய தோழர்கள் நாணயமானவர்கள்!

ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் களத்தில் இறங்கவேண்டும்; கூச்சப்படக் கூடாது. 

நம்முடைய தோழர்கள் நாணயமானவர்கள் - 

நம்முடைய தோழர்கள் நன்றியை எதிர்பார்க்காத வர்கள்-

நம்முடைய தோழர்கள் எந்தப் போராட்டத்திலும் களத்தில் நிற்கக்கூடியவர்கள் -

எந்தக் கைம்மாறையும் எதிர்பார்க்காதவர்கள் -

கட்டுப்பாட்டில் தலைசிறந்தவர்கள்-

இவையெல்லாம் கருப்புச் சட்டைக்காரரின் இலக் கணம்.

ஆனால், செயல் என்று வரும்பொழுது, தொடக் கத்தில் அளவு மானி என்று சொன்னேனே, அந்த வாய்ப்பை நீங்கள் நன்றாகப் பயன்படுத்தவேண்டும்.

அதற்கு எது தடை என்பதைப்பற்றி சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

ஒரு துறையைத் தவிர மற்ற எல்லாத் துறைகளிலும் உங்களுக்கு மதிப்பெண் உண்டு.

ஒரு துறையில் மட்டும் மதிப்பெண் பெறவில்லை. நான் ஆசிரியர் அல்லவா - மதிப்பெண் போடலாம்.

வெற்றி வேந்தன் எப்படி எல்லோரிடமும் போய் கதவைத் தட்டுகிறாரோ...

எந்தத் துறை என்றால், கூச்சமில்லாமல், வெட்கத்தை விட்டு, தரையில் இறங்கி, வெற்றி வேந்தன் எப்படி எல் லோரிடமும் போய் கதவைத் தட்டுகிறாரோ, அது போன்று - தெரிந்தவர், அறிந்தவர், தெரியாதவர்களிடம். நாம் அணுகும்போது, இல்லை என்று சொல்லி விட்டுப்போகட்டும்.

இந்த ‘விடுதலை’ சந்தாத் திரட்டலில், ஒன்று நமக்கு உற்சாகம் தரக்கூடிய, நம்பிக்கைத் தரக்கூடிய அம்சம் என்னவென்றால், 

நாம் போய் ‘விடுதலை’ சந்தா கேட்ட நேரத்தில், அது ஒரு பேப்பரா? அதற்கு எதற்கு சந்தா? போங்கய்யா என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா, என்றால், இல்லை.

சந்தாவா?

கொடுக்கிறேன்.

கொஞ்சம் தாமதமாகக் கொடுக்கிறேன் என்றுதான் சொல்கிறார்கள்.

முதல் வெற்றியை, 

முழு வெற்றியாக்க வேண்டிய பொறுப்பு உங்கள் உழைப்பு!

மறுப்புச் சொல்லாமல், அந்தப் பத்திரிகையினுடைய தேவையை உற்சாகப்படுத்தித்தான் இதுவரையில் சந்தா கொடுத்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றால், அது நமக்கு முதல் வெற்றி!

இந்த முதல் வெற்றியை, முழு வெற்றியாக்க வேண்டிய பொறுப்பு உங்கள் உழைப்பு. அந்த உழைப்பிற்கு எது தடையாக இருக்கிறது?

கூச்சம், வெட்கம், கொஞ்சம் அப்படியே பின்வாங்குவதுதான்.

இவையெல்லாம் இருக்கவேண்டிய அவசி யமே இல்லை.

நமக்காக கேட்கவில்லை; நான் அடிக்கடி சொல்லுகின்ற உதாரணம் உங்களுக்குத் தெரியும்.

அலங்காரத்திற்காகவோ, அழகிற்காகவோ அல்ல - பிச்சை எடுப்பதற்காகத்தான்

இந்தத் துண்டை ஏன் தோளில் போட்டிருக்கிறீர்கள் என்று என்னிடம் ஒருவர் கேட்டார்.

இது அலங்காரத்திற்காகவோ, அழகிற்காகவோ அல்ல - பிச்சை எடுப்பதற்காகத்தான் இந்தத் துண்டை தோளில் போட்டிருக்கிறேன்.

ஏனென்றால், அதை எனக்காக நான் கேட்க வில்லையே; எனக்கு சாப்பாடு போடுங்கள் என்று கேட்டால், அது தனிப்பட்ட முறையில் எனக்குப் பிச்சை.

‘விடுதலை’ செய்கின்ற பணியை வேறு எவரும் செய்ய முன்வருவதில்லை - 

செய்ய முடியாது!

ஆனால், இந்த சமுதாயத்தின் மான வாழ்விற்காக -

இந்த மக்களின் உரிமை வாழ்விற்காக -

சமத்துவத்திற்காக -

நம்மைவிட்டால் இந்தப் பணிக்கு யாரும் கிடையாது.

நம்முடைய தலைவர் என்ன சொல்லியிருக்கிறார்,

‘‘திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக இந்த மக்களை ஆக்கவேண்டும்‘‘ என்று சொல்லிவிட்டு,

இந்தப் பணிக்கு நான் தகுதியுள்ளவனா? என்று அவர் கேள்வி கேட்டுவிட்டு,

அதற்குப் பதிலை அவரே சொன்னார், ‘‘வேறு யாரும் இந்தப் பணியை செய்ய முன்வராததால், அந்த ஒரு தகுதி போதும் எனக்கு‘‘ என்று சொன்னார்.

அதேபோன்றுதான் ‘விடுதலை’ - 

‘விடுதலை’ செய்கின்ற பணியை வேறு எவரும் செய்ய முன்வருவதில்லை - செய்ய முடியாது.

ஒரு சிறிய உதாரணம் சொல்லுகிறேன்,

‘விடுதலை’ ஒன்றில்தான், ‘பார்ப்பான்’ என்று எழுத முடியும். வேறு எந்தப் பத்திரிகையிலாவது பார்ப்பான் என்று எழுத முடியுமா?

இந்தத் துணிச்சல் யாருக்கு இருக்கிறது?

அது நெருக்கடி காலமாக இருந்தாலும், நாம் பார்ப்பான் என்பதை பிராமணன் என்று மாற்றிக் கொண்டோமா என்றால், இல்லையே!

தந்தை பெரியாரின் கொள்கைகளை 

21 மொழிகளில் பரப்புவதற்காக...

தமிழ்நாடு அரசாங்கம், தந்தை பெரியாரின் கொள்கை களை 21 மொழிகளில் பரப்புவதற்காக ரூ. 5 கோடி நிதி ஒதுக்கி, குழு அமைத்தார்கள். அந்தக் குழுப் பொறுப் பாளர்கள் வந்து என்னை சந்தித்தார்கள்.

நான் அவர்களிடம் ஒரே ஒரு கருத்தைச் சொன்னேன் - மிகவும் மகிழ்ச்சி - பாராட்டுகிறோம் - திராவிட மாடல் அரசு நன்றாக செய்திருக்கிறது. ஆனால், பெரியாருடைய கொள்கைகளை, நாங்கள் ஏதோ இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றோம் - பெரியாருடைய எழுத்துகளை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றோம் என்று தவறான ஒரு மாயப் பிரச்சாரம் செய்கிறார்கள். நாங்கள் ஏன் அதைக் காப்பாற்றவேண்டும் என்று நினைக்கின் றோம் என்றால், மற்ற தலைவர்கள் போன்று, அரசு டைமை என்றால், யார் வேண்டுமானாலும், அப்படியே அச்சடித்துவிட்டுப்போகலாம் என்பது கிடையாது.

அர்த்தமே தலைகீழாக மாறிவிடும்!

பெரியாருடைய கருத்தில், உரையில், பார்ப்பனர் என்று அவர் பேசுகிற, எழுதுகிற இடத்தில், பார்ப்பனர் என்று சொல்லக்கூடாது - அதை பிராமணர் என்று மாற்றலாம் என்று மாற்றினீர்கள் என்றால், அர்த்தமே தலைகீழாக மாறிவிடும்.

ஆகவே, அரசாங்கத்திற்கு நான் வைத்த வேண்டு கோள் என்னவென்றால், பெரியார் என்ன வார்த்தை சொன்னாரோ, அதே வார்த்தையைத்தான் போட வேண்டும். நம்முடைய கருத்தை போடக்கூடாது. ஏனென்றால், அது பெரியார் கருத்து.

 காட்டுமிராண்டி, கடவுள் மறுப்பு என்று  தந்தை பெரியார் சிலையின்கீழ் இருக்கும் கல்வெட்டு குறித்து வழக்கு வந்தபொழுது உயர்நீதிமன்றத்தில் எடுத்துச் சொன்னோம் -

நீதிபதி எஸ்.எஸ்.இஸ்மாயில்!

அவ்வழக்கின் நீதிபதி எஸ்.எஸ்.இஸ்மாயில் அவர் கள் அழகாகக் கேட்டார் வழக்குத் தொடுத்தவர்களிடம்-

‘‘ஏன்யா, பெரியார் சொன்ன வாசகம்தானே இது!’’ என்று.

ஆமாம் என்றார் அவர்.

‘‘பெரியார் சொன்ன வார்த்தையை, பெரியார் சிலையின்கீழ் போடாமல், சங்கராச்சாரி வாசகத்தையா போடுவார்கள்’’ என்று.

அதுபோன்று, பெரியார் கருத்தை அப்படியே போட வேண்டும்; உங்களுடைய கருத்தையோ, என்னுடைய கருத்தையோ மாற்றிச் சொல்லலாம்.

ஆனால், ஒருவருடைய கருத்தை மேற்கோள் காட்டும்பொழுது, அப்படியே அந்தக் கருத்தைச் சொல்லவேண்டும்.

அதுபோன்று, ‘விடுதலை’க்கு மட்டும்தான் இந்தத் துணிச்சல் உண்டு.

மக்களை அணுகுவதற்கு கூச்சப்படாதீர்கள்!

ஆகவே, மக்களை அணுகுவதற்கு கூச்சப்படா தீர்கள். சந்தா கொடுங்கள் என்று கேளுங்கள்.

பேனர் வைத்துக்கொண்டு, கொடி பிடித்துக் கொண்டு ஒரு சிறு குழுவாக கடைவீதிகளுக்குச் சென்று ‘விடுதலை’ சந்தாக்களைக் கேட்கவேண்டும்.

எட்டு பேர் இல்லை என்று சொல்லட்டும்; இரண்டு பேர் ‘விடுதலை’ சந்தா கொடுக்கட்டும். 10 பேரிடம் விளம்பரம் ஆயிற்று நம்முடைய கொள்கை.

இதுதான் நம்முடைய கொள்கைக்கு இருக்கின்ற சிறப்பு.

நூற்றுக்கு நூறு அய்யாவிடமிருந்து அந்தப் பக்குவத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்!

நாமெல்லாம் பெரியாருடைய தொண்டர்கள் - முழுப் பக்குவம் பெற்றவர்களாக வேண்டும். ஆனால், அந்த முழுப் பக்குவம் நமக்கு இன்னும் வரவில்லை, நான் உள்பட.

அய்யாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் ஏராளம் இருக்கிறது.

ஆகவே, நூற்றுக்கு நூறு அய்யாவிடமிருந்து அந்தப் பக்குவத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும். அவர் ஒரு தத்துவ ஞானி.

அதற்கு என்ன அடையாளம் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

வரவேற்பு விழாவும் - அய்யாவின் செயலும்!

அரசாங்க வரவேற்பு விழா - அதில் தேநீர் விருந்து நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சியில் - அவ்வரவேற்பில், இனிப்பு, பலகாரங்களை வைத்துக் கொடுத்தார்கள். அய்யா, ஒன்று, இரண்டை சாப்பிட்டார். அய்யா அவர் கள்தான் சிறப்பு அழைப்பாளர், முக்கிய விருந்தினர்.

அந்த மேசையில் அவரவர்களுக்கான தட்டுகளில் (நான், புலவர் இமயவரம்பன் மற்ற தோழர்கள் அமர்ந்திருந்தனர்) உள்ளவற்றில் சிலவற்றை சாப்பிட்டு, மீதம் வைத்தனர்.

ஆனால், அய்யா அவர்கள், தன்னுடைய தட்டில் இருந்த தாளோடு எடுத்து மடித்தார்; எங்கள் தட்டில் இருந்தவற்றையும் எடுத்து அந்தக் காகிதத்தில் மடித்து வைத்துக் கொண்டார்.

இப்படி நாம் செய்வோமா?

அய்யா என்ன சொல்கிறார், எதையும் வீணாக்கக் கூடாது என்று.

அதை நடைமுறைப்படுத்துகிறார். அதற்கு எது தடையாக இருக்கிறது?

நம்முடைய கவுரவம், கூச்சம், போலித்தனம்தான்.

யாருக்காவது கொடுப்போம், அவர்கள் சாப்பிடுவார்கள் அல்லவா!

‘‘காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்’’

காரைக்குடியில் கூட்டம் - காமராஜரை கொலை செய்யும் முயற்சி - அவருடைய வீட்டிற்குத் தீ வைத்த தைப்பற்றியெல்லாம் ‘விடுதலை’யில் வந்ததையெல்லாம் சேர்த்து ஒரு புத்தகம் போடவேண்டும் என்று அய்யா சொன்னார்.

அதற்குப் பெயர் ‘‘காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்‘‘ என்ற தலைப்பில்.

அந்தப் புத்தகத்தை நாம் போடுவதைவிட, பொதுமக்கள் ஆதரவுடன் போடவேண்டும் என்று அய்யா சொன்னார்.

அய்யா திடீரென்று அறிவிக்கிறார்,

அந்தப் புத்தகத்திற்காக வீரமணியும், சிவகங்கை வழக்குரைஞர் சண்முகநாதனும், என்.ஆர்.சாமி ஆகி யோர் துண்டேந்தி வருவார்கள். உங்களால் முடிந்ததைக் கொடுங்கள் - உங்களுடைய ஆதரவோடு அந்தப் புத்தகம் வரவேண்டும் என்று சொன்னார்.

உடனே நாங்கள் மூவரும் துண்டேந்தி சென்றோம் - எல்லோரும் பணம் போட்டார்கள். இதுபோன்று பல ஊர்களில் நடைபெற்று இருக்கிறது.

அதில் ஒன்றும் எனக்கு கூச்ச நாச்சம் இல்லையே!

எம்.ஏ.,பி.எல்., படித்தவன் துண்டேந்துவதா? பிச்சை எடுப்பதா? என்று நான் நினைக்கவில்லையே!

எனக்காக இல்லையே!

ஒரு பெரிய நோபிள் காஸ்ட் - லட்சியம் என்பதுதான்.

ஆகவேதான், அணுகுமுறையில், எப்படி மற்ற தோழர்கள் - பொதுவாழ்க்கையில் நமக்கு எளிமையான வர்கள். நமக்கென்று கேட்கவில்லை.

பெரியாருக்குப் பிடித்த குறள் எது?

அதற்குத்தான் விளக்கம் - 1330 குறள்களிலேயே பெரியாருக்குப் பிடித்த குறள் எது?

மானம் பாராது தொண்டாற்றுவதுதான்.

அந்தக் கொள்கையை எடுத்துத்தான் தெளிவாகச் சொன்னார் -

‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்.’’

தவத்திரு குன்றக்குடி அடிகாளருக்கே ஆச்சரியம் - நான் திருக்குறளை நிறைய முறை படித்திருக்கிறேன். இப்படி ஒரு குறள் இருக்கிறது என்று எனக்கே தெரியாது. பெரியார் அய்யா சொன்ன பிறகுதான், அதனுடைய சிறப்பு என்னவென்று எனக்குத் தெரியும் என்று சொன்னார்.

ஆகவே, பொதுக்காரியம் என்று வரும்பொழுது, துண்டேந்தலாம், கையேந்தலாம், தெருவில் இறங்கிப் பிச்சை எடுக்கலாம் - அது ஒன்றும் பெரிதல்ல. இது நமக்காக அல்ல தோழர்களே, நாட்டிற்காக, இனத்திற்காக, சமுதாயத்திற்காக, வருங்கால சந்ததியினருக்காக.

எவ்வளவு பெரிய ஆபத்து நம்மை நோக்கி இருக்கிறது. இன்றைய எதிரிகள் மோசமான எதிரிகள்.

நம்முடைய காலத்தில் இருக்கின்ற எதிரிகள் மோசமான எதிரிகள்!

பெரியார் காலத்தில் இருந்த எதிரிகள், நாணய மான எதிரிகள். ஆனால், இப்பொழுது நம்முடைய காலத்தில் இருக்கின்ற எதிரிகள் மோசமான எதிரிகள் - வித்தைகள் எல்லாம் காட்டுவார்கள்.

அதையெல்லாம் நாம் அய்யாவிற்குப் பிறகு அதைத் தோற்கடித்துக் காட்டியிருக்கின்றோம். 

பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்காது என்று நினைத்தார்கள்.

பெரியார் காலத்தில் இருந்ததைவிட, களத்தில் நாம் அதிகமாக வெற்றி பெற்று இருக்கின்றோம்.

அய்யாவை ‘‘நெஞ்சில் தைத்த முள்ளோடுதான் அவரைப் புதைக்கிறேன்’’ என்று கலைஞர் நினைத்தார்.

அதற்கடுத்து நம்முடைய காலத்தில், அந்த முள்ளை அகற்றி, அர்ச்சகர் உள்ளே போகக்கூடிய அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால், 

பெரியார் ஒருபோதும் தோற்கமாட்டார்!

நம்முடைய கொள்கைகள் ஒருபோதும் தோற்காது - பெரியார் ஒருபோதும் தோற்கமாட்டார் என்பதற்கு அது அடையாளம்.

ஆகவேதான், மக்கள் தயாராக இருக்கிறார்கள்; நாம் தயாராக வேண்டும்.

இதற்கு யாரும் எதிர்ப்பு இல்லை. அப்படியே எதிர்ப்பு இருந்தாலும், அது நமக்கு லாபம்தான். 

ஏனென்றால், எதிர்ப்பில்தான் இந்த இயக்கம் வளரும்.

ஆகவே, தோழர்களே! உங்களை நான் அன்போடு வேண்டிக்கொள்வது - இந்தக் காலகட்டத்தில் - தென் மாவட்டத்  தோழர்களைப்பற்றி ஒரு தவறான கருத்து இருந்தது - அதை மதுரையில் நடைபெற்ற  பொதுக்குழு பொய்யாக்கிக் காட்டிற்று.

என்ன தவறான கருத்து என்றால்,  தென்மாவட்டங் களில் நமக்கு ஆதரவு இல்லை. திராவிடர் கழகத்திற்கு ஆதரவு இல்லை என்று.

தென்மாவட்டத்தில் நாம் களத்தில் சரியாக இறங்கவில்லையே தவிர,  நமக்கு ஆதரவு இல்லை என்று அர்த்தம் இல்லை.

எனக்குத் திருமணம் ஆகி 64 ஆம் ஆண்டு. என்னுடயை திருமணத்தை அய்யா ஏற்பாடு செய்து முடிவெடுத்த பிறகு - திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்விற்கு அய்யா தேதி கொடுத்திருந்தார்.

இரும்புக்கடை தோழர் சிதம்பரம்

இரும்புக்கடை நடத்திய சிதம்பரம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். அதேபோன்று கே.டி.ஒ.எஸ்., சிவசங்கரன், அவருடைய சகோதரர் போன்றவர்கள், மற்ற தோழர்கள்.

அந்தக் காலட்டத்தில் அன்பு நகரில் நடைபெற்ற திருமணத்திற்குத் தலைமை தாங்க பெரியார் வருகிறார். என்னுடைய திருமணத்திற்கு ஒரு வாரமோ, இரண்டு வாரமோ முன்பு நடைபெற்ற நிகழ்வு அது.

அன்றைக்கு திண்டுக்கல்லில் கமிட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் கமிட்டியில் 5, 6 பேர்தான் இருந்தார்கள். கே.டி.ஒ.எஸ். அவர்களுக்கு இயக்கத்திற்கு நேரிடையாக சம்பந்தம் இல்லை, ஆதரவாளர் அவ் வளவுதான்.

இரும்புக்கடை தோழர் சிதம்பரம்தான் தலைவர். சிவசங்கரன் போன்ற தோழர்கள் 6 பேர்தான்.

இன்றைக்கு இந்த திண்டுக்கல்லில் மூன்றாவது முறை ஒரே ஆண்டில் வரக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறேன்.

எந்த நிகழ்ச்சி என்றாலும், நடத்துங்கள் என்று சொன்னவுடன், கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் நடத்துகிற தலைவர் இருக்கிறார் என்றால், அவர் நம்முடைய வீரபாண்டியன் அவர்கள்தான்.

அதற்குக் காரணம் என்ன?

நாம் பதவிக்கு அப்பாற்பட்டவர்கள்; 

பதவியை நாடாதவர்கள்!

அவருக்கு ஒத்துழைக்கின்ற குழு - அவர் ஒரு கேப்டன் போன்று இருக்கிறார். எல்லா இடங்களிலும் மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள்; எல்லா அதிகாரிகளும், எல்லாக் கட்சிக்காரர்களும் மதிக்கிறார்கள். காரணம், நாம் பதவிக்கு அப்பாற் பட்டவர்கள். பதவியை நாடாதவர்கள். மானம் பாராத தொண்டு நம்முடைய பணி.

பெரியார் என்ற தத்துவமும், அந்தக் கொள் கையும் மிகப்பெரிய ஆயுதம் நமக்கு.

எனவே, அந்த அடையாளத்தை வைத்துக் கொண்டு நாம் பயன்படுத்தவேண்டும். அது நமக் காக அல்ல. இனத்திற்காக - இனத்தின் மீட்சிக்காக - இந்தக் கொள்கையினுடைய மீட்சிக்காக!

வெற்றி நமதே, 

அதிலொன்றும் சந்தேகமேயில்லை!

எனவே, இடையில் இன்னும் சில நாள்கள்தான் இருக்கிறது. ஆகவே, இந்த நாள்களை - ஒவ்வொரு மணிநேரமும் இழக்கக் கூடாத மணிநேரம் என்று நினைத்துக்கொண்டு களத்தில் இறங்குங்கள் - வெற்றி நமதே, அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

நம்முடைய தோழர்கள் சந்தாதாரர்கள் ஆகவேண் டும் என்பதுகூட எனக்கு இரண்டாம் பட்சம்தான்.

ஒரு பெரிய தொகையை, ஒரு பெரிய முதலாளியிடம் சென்று அய்ந்து கோடி ரூபாய் கொடுங்கள்;  10 கோடி ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்குகின்ற அரசியல் கட்சியல்ல நாம்.  அப்படி வாங்கினாலும், இந்த இயக்கம் வளராது.

இது ஏழைகள், சாமானியர்களுடைய இயக்கம்.

எனவே, ஒரு சாதாரண தோள்தான் இந்த இயக்கத் திற்குப் பலம்!

குறைந்தபட்சம் ஒரு வீட்டில் 

அய்ந்து பேர் படிப்பார்கள்

இரண்டாவதாக, ‘விடுதலை’க்கு இல்லாத சிறப்பு என்னவென்றால், 60 ஆயிரம் சந்தாக்கள் என்றால், குறைந்தபட்சம் அதை ஒரு வீட்டில் அய்ந்து பேர் படிப் பார்கள்; மற்ற பத்திரிகைகளுக்கு அந்த சிறப்பு கிடையாது. அய்ந்து நிமிடத்தில் போட்டுவிடுவார்கள்.

ஆனால், ‘விடுதலை’ அப்படியில்லை - ஒருவர் மருத்துவச் செய்திகளைப் படிப்பார்; இன்னொருவர் அரசியல் கருத்துக்காகப் படிப்பார்; இன்னொருவர் வாழ்வியல் சிந்தனைக்காகப் படிப்பார்கள்.

உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்; பல பேர், பார்ப்பன நண்பர்கள் வாழ்வியல் சிந்தனைகளுக்குப் பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் - எனக்கு ஆச்சரிய மாக இருக்கும்.

ஆகவேதான், பல அம்சங்கள் ‘விடுதலை’யில் இருக்கின்றன.

இன்னொரு மாறுதலையும் செய்யவேண்டும்!

60 ஆயிரம் சந்தா திரட்டலுக்குப் பிறகு, இன்னொரு மாறுதலையும் செய்யவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இன்றைய காலகட்டத்தில் தபால்கள்மூலம் ‘விடுதலை’ வருகிறது. ஆனால், இன்றைய ஒன்றிய அரசு தபால் துறையையே அழித்துவிட்டது. 

விநியோகக் குறைபாடுகளை நீக்குவோம்!

ஆகவேதான், நேரிடையாக ‘விடுதலை’ விநி யோகம் என்பது நடைபெறுவதற்கான ஏற்பாடு களை - தனி விற்பனையாளர்கள்மூலமும், பிரபல விற்பனையாளர்களோடு இணைந்து அதை செய்து, அவரவர் வீட்டிற்குள்ளே, அன்றாட ‘விடுதலை’ நாளிதழ் ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கக்கூடிய அளவிற்குச் செய்யக்கூடிய - விநியோகக் குறைபாடுகளை நீக்கி,  கருத்துகள் இந்த இரண்டு ஆண்டுகளில், பா.ஜ.க.விற்கும், ஆர்.எஸ்.எசுக்கும், இன எதிரிகளுக்கும் எப்படி பதில் சொல்லவேண்டுமோ  - அவ்வளவு சரக்குகளையும் மற்றவர்களுக்கு - மூலப்பொருள் பரப்புதல் போன்று, செய்யக்கூடியவர்களாக நாம் இருந்து ஏற்பாடு செய்கிறோம்.

எனவே, அதிலும் நாங்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம். வெறும் சந்தா சேர்ப்பது மட்டுமல்ல - உரியவர்களுக்கு, சரியான காலத்திற்கு ‘விடுதலை’ சென்றடைந்தால்தான், நம்முடைய நோக்கம் நிறைவேறும்.

கருத்துகள் பரவவேண்டும் 

என்பதற்காகத்தான்!

நம்முடைய நோக்கம் பணம் சேர்ப்பதோ, நன் கொடை வாங்குவதோ இல்லை. பத்திரிகையை பரப்ப வேண்டும் என்று நினைக்கின்றோம். ஏன் பத்திரிகை யைப் பரப்பவேண்டும் என்று நினைக்கின்றோம், கருத்துகள் பரவவேண்டும் என்பதற்காகத்தான்.

ஆகவேதான், இந்த சந்தா திரட்டுதல் என்பது இருக்கிறதே, கொள்கைப் பிரச்சாரத்தினுடைய தீவிர எழுச்சி!

எதிரிகளை மடக்குவது - அதுதான் மிகவும் முக்கியம்!

இந்தக் காலகட்டத்தில், இந்த மண்ணை, காவி மண்ணாக்க வேண்டும் என்று அவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

நேற்று ‘விடுதலை’யை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். பீகாரில் அரசியல் மாற்றம் எப்படி என்று இருக்கும். இந்தத் தகவல்கள் மற்ற பத்திரிகைகளில் இருக்காது.

பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சென்று அஸ்தி வாரத்தைப் போட்டுவிட்டு வந்தோம். அது இப்பொழுது வேலை செய்கிறது.

நடுவில் கொஞ்சம், அப்படி இப்படி என்று போனாலும் கூட, இறுதியில், அந்தத் தேர் சரியான நிலைக்கு வந்திருக்கக்கூடிய வாய்ப்பு வந்திருக்கிறது.

இரண்டு நாள்களுக்கு முன்பு கருநாடக மாநிலத்திற்குச் சென்றோம் - மூடநம்பிக்கைகளை வலியுறுத்தி, மாட்டுக் கறி சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்லி, அம் மண்ணை காவி மண்ணாக ஆக்கலாம் என்று நினைத் தார்கள்.

என்னை சந்தித்த அனைவரும் சொன்னார்கள்!

அதற்கு நேர் விரோதமாக அங்கே அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய தேர்தலில் சித்தராமையாதான் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லக் கூடிய அளவிற்கு - என்னை சந்தித்த ஓய்வு பெற்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள் என்று காலையில் இருந்து கூட்டத்திற்குச் செல்லுகின்ற வரையில் அரசாங்க விருந்தினர் மாளிகைக்கு வந்து சந்தித்த அனைவரும் சொன்னார்கள்.

ஆகவே, அங்கே ஒரு பீகார் போன்று, இங்கே ஒரு கருநாடகம் வரும்.

திருப்பத்தை ஏற்படுத்துகின்ற பணி 

நம்முடைய பணி!

‘திராவிட மாடல்’ ஆட்சிதான் இந்தியா முழுவதும் என்று சொல்லக்கூடிய ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தவேண்டும் என்றால், அந்தத் திருப்பத்தை ஏற்படுத்துகின்ற பணி நம்முடைய பணி.

மற்றவர்களுடைய பணி திருப்பணி - நம்முடைய பணி தெருப்பணி!

தெருக்கள்தோறும், வீடுகள்தோறும் - சளைக்காமல், சலிப்பில்லாமல், களைப்பில்லாமல் இலக்கை நோக்கிச் செல்லவேண்டும்.

ஆகவே, கூச்சப்படாதீர்கள், வெட்கப்படாதீர்கள்!

விஞ்ஞானிகள் எதைப்பற்றியும் கவலைப்படமாட் டார்கள்; அவர்களை ஜெயிலில் போட்டாலும், உலகம்  உருண்டைதான் என்று சொல்வார்கள். அதுபோன்றது தான் நம்முடைய பணி. அந்தப் பணியை சிறப்பாகச் செய்யுங்கள்.

ஒரு பெரிய சவாலை 

இந்தக் கூட்டத்தின்மூலமாக 

நீங்கள் ஏற்கிறீர்கள்!

நீங்கள் இதுவரை ஒத்துழைப்புக் கொடுத்திருக் கிறீர்கள். அதிகமாக வடமாவட்டங்களைவிட, தென் மாவட்டங்கள் எந்த வகையிலும் குறைந்த தல்ல என்று காட்டக்கூடிய பொறுப்பை - ஒரு பெரிய சவாலை இந்தக் கூட்டத்தின்மூலமாக நீங்கள் ஏற்கிறீர்கள் என்பதுதான் அதற்கு அடையாளம். 

ஆகவே, அந்த உறுதியை ஏற்றுக்கொள்ளுங்கள்!

எப்படி மதுரை பொதுக்குழு அவ்வளவு பெரிய வெற்றியடைந்தது. எல்லோருக்கும் வியப்பு - மதுரையில் அய்யா கம்பீரமாக இருக்கிறாரே!

அன்று கருப்புச் சட்டைப் படை மாநாட்டிற்கு தீ வைத்தார்கள் - இன்று கருப்புடை அணிந்து டில்லியில் போராட்டம் நடத்துகிறார்கள்!

கருப்புச் சட்டைக்காரன் ஒரு ஆள்கூட வரக்கூடாது என்று சொல்லி, அன்றைக்குக் காங்கிரஸ் என்ற பெயராலே இருந்த வைத்தியநாத அய்யர்கள் - காங்கிரஸ் பெயராலே இருந்த நண்பர்கள் அன்றைக்குத் தீ வைத்தார்கள் - 1946 இல் நடைபெற்ற கருப்புச் சட்டைப் படை மாநாட்டிற்கு!

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைக்கு அதே காங்கிரஸ் தலைவர், அதே காங்கிரஸ் தோழர்கள் கருப்புச் சட்டை அணிந்து டில்லியிலே போராட்டம் நடத்தக் கூடிய அளவிற்கு வந்தார்கள் என்றால், இந்தக் கருப்புச் சட்டைக்கு எவ்வளவு பெரிய வெற்றி என்பதை நினைத்துப் பாருங்கள்!

வரலாறு நம்மை வாகை சூட வைக்கும்!

இது பெரியார் பெற்ற வெற்றி அல்லவா!

வரலாறு என்றைக்கும் நம் பக்கம் இருக்கும்!

வரலாற்றை யாரும் மறைக்க முடியாது!

வரலாறு நம்மை வாகை சூட வைக்கும்!

நம்பிக்கையோடு நடங்கள் -

களமாடுங்கள் - 

இதுவரை நடமாடி வந்தீர்கள் - 

நாளைமுதல் களமாடுங்கள்!

வெற்றியைப் பெறுவோம் - வெற்றிக் கனியைப் பறிப்போம்!

தன்னம்பிக்கையின் சிகரமாக, 

தளர்ச்சியில்லாமல் நடைபோடுங்கள்!

வெற்றி நமதே! வெற்றியோடு 27 ஆம் தேதி விழாவினை - நாம் உலகளாவிய அளவில், எல் லோருக்கும் எடுத்துக்காட்டாகச் செய்வோம் என்ற தன்னம்பிக்கையின் சிகரமாக, தளர்ச்சியில்லாமல் நடைபோடுங்கள் தோழர்களே!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றி னார்.


No comments:

Post a Comment