ஆத்தூர் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

ஆத்தூர் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்

 நமக்கென்று நாம் கேட்டால்தான்  கூச்சப்படவேண்டும்; வெட்கப்படவேண்டும்

நமக்காக ‘விடுதலை’ சந்தாக்களை கேட்கவில்லை; நம்முடைய சொந்த வாழ்வை 

உயர்த்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகக் கேட்கவில்லை!

உங்களுக்காக - உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக!

ஆத்தூர், ஆக.30 நமக்கென்று நாம் கேட்டால்தான் கூச்சப்பட வேண்டும், வெட்கப்படவேண்டும். நமக்காக ‘விடுதலை' சந்தாக்களை கேட்கவில்லை; நம்முடைய சொந்த வாழ்வை உயர்த்திக் கொள்ளவேண்டும் என்ப தற்காகக் கேட்கவில்லை; உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஆத்தூரில் நடைபெற்ற கலந்துரையாடல்

கடந்த 14.8.2022 அன்று காலை 10 மணியளவில் 60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தா திரட்டுவது குறித்து சேலம் ஆத்தூரில் நடைபெற்ற ஆத்தூர், சேலம், மேட்டூர், கல்லக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஆளுங்கட்சியாக இருந்தாலும், இந்த அளவிற்கு வேகமாக வர முடியாது.

ஆகவே, நமக்கு என்ன கவலை என்றால், நாம் இன்னொருவருக்கு உதவி செய்வதாக தயவு செய்து நினைக்கவேண்டாம். ஆளுங்கட்சிக்கு நாம் உதவி செய்கிறோம் என்கின்ற எண்ணத்தில் நாம் இதனை செய்யவில்லை.

திராவிட இயக்கத் தலைவர்கள் 

உரிமைகளை வாங்கித் தந்தார்கள்

நம்முடைய இயக்கத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள், நீதிக்கட்சித் தலைவர்கள், திராவிட இயக்கத் தலைவர்கள் அரும்பாடுபட்டு சமூகநீதி, வேலைவாய்ப்பு, கல்வி ஆகிய உரிமைகளை வாங்கித் தந்தார்கள்.

இவை அத்தனையையும் காணாமல் போகும்படி செய்து, பழைய மனுதர்மத்தைக் கொண்டு வந்து சிம்மாசனத்தில் ஏற்ற வேண்டும் என்கிற முயற்சிகள் நடைபெறுகின்றன.

‘விடுதலை’ போன்ற ஏடு - ஒரு விழிப்புணர்வை உண்டாக்கக்கூடிய ஏடு இல்லையென்றால், பழைய கருப்பனாகவே மீண்டும் நாம் திரும்பிப் போகவேண்டும்.

அப்படியென்றால், அந்த அவமானம் யாருக்கு?

தோழர்களே, உங்களுடைய கடமை என்பது என்ன? நம்முடைய கடமை என்பது என்ன?

இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன என்றெல் லாம் சொல்கிறோம்; பணம் வாங்குவதற்கா? நன்கொடை திரட்டுவதற்கா? என்றால், இல்லை.

‘விடுதலை’யை நாம் விற்பதில்லையே! நிறைய பேருக்குத் தெரிய வேண்டிய விஷயம்.

மற்ற பத்திரிகைகளை வாங்கிப் பாருங்கள்; விலை 6 ரூபாய், 7 ரூபாய் என்று போடப்பட்டிருக்கும்.

வருகின்ற ஆபத்துகளைப்பற்றி 

சொல்கிறோம்

‘விடுதலை’ பத்திரிகையை வாங்கிப் பாருங்கள்; எங்கேயாவது விலை என்று போடப்பட்டிருக்கிறதா? என்றால், இல்லை. நன்கொடை என்றுதான் போடப்பட்டிருக்கும். புத்தகங்களில்கூட நன் கொடை என்றுதான் இருக்கும். நட்டத்தில் நடக்காமல் இருப்பதற்காகத்தான்.

அந்த ‘விடுதலை’யை நாம் பாதுகாப்பு செய்கி றோம்; எங்கெங்கே கண்ணிவெடி இருக்கிறது என்று எச்சரிக்கை செய்து, அவற்றை அகற்றிக் கொண்டு போகிறோம். வருகின்ற ஆபத்துகளைப் பற்றி சொல்கிறோம்.

நீட் தேர்வின் ஆபத்தைப்பற்றியும், கியூட் ஆபத்தைப்பற்றியும் நாம்தான் முதலில் சொல்கி றோம். புதிய கல்விக் கொள்கையின் ஆபத்து களைப்பற்றி நாம்தான் பேசுகிறோம். சமூகநீதி ஆபத்து என்றாலும், அதை நாம்தான் முதலில் எடுத்துச் சொல்கிறோம்.

நெய்வேலியில் அநீதியா? உடனே போராட் டத்தை நடத்தி அதை மக்களுக்கு உணர்த்து கின்றோம்.

மொழித் திணிப்பா? அவற்றை எதிர்த்துக் குரல் கொடுக்கிறோம்

சமஸ்கிருத மொழித் திணிப்பா? வடமொழித் திணிப்பா? இந்தித் திணிப்பா? அவற்றை எதிர்த்துக் குரல் கொடுக்கிறோம்.

இவை அத்தனையும் எதிர்த்து தந்தை பெரியார் போராடி, வெற்றி பெற்றதினால்தான், துண்டு நம்முடைய தோளில் இருக்கிறது; வேட்டியை நாம் முழங்காலுக்குக் கீழே கட்டக்கூடிய அளவிற்கு நமக்கு யோக்கியதை வந்திருக்கிறது.

இதை மாற்றவேண்டும் என்பதுதான் இன்றைய சனாதனம் - அதுதான் ஆர்.எஸ்.எஸ்.

அரசியல் ரீதியாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துவிட்டோம் என்று சொல்கிறார்கள்.

இந்த அவமானம் யாருக்கு?

இந்தக் கேள்வியை நாம் கேட்கிறோம்.

நம்முடைய தலைவர்கள் போராடி வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள். குலக்கவித் திட்டம் நீங்கிற்று - எங்கே பார்த்தாலும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் இன்றைக்கு இருக்கின்றன.

ஆனால், மும்மொழித் திட்டத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்; நம்மாள் சில பேர், வருமானத்திற்காக என்ன சொல்கிறார்கள் என்றால், ‘‘மூன்று மொழி அல்ல, ஏழு மொழிகளைக் கூட கொடுங்கள்; எங்களுக்கு கஜானா நிரம்பினால் போதும்'' என்று நினைக்கிறார்கள். காசுக்காக எதையும் செய்வோம் என்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் என்ன விலை? என்று அவர்கள் பார்க்கிறார்கள். யார் யாருக்கு என்னென்ன பலகீனம் என்று பார்க்கிறார்கள் அவர்கள்.

ஆகவே, நம்முடைய பணி என்னவென்றால், உண்மையிலேயே கவலையோடு இந்தப் பணியை நான் செய்கிறேன்.

சுற்றுப்பயணத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்று கேட்டால், வருங்கால வரலாற்றில், நமக்குப் பழி ஏற்படும்.

அது என்னவென்றால், ‘‘பெரியார் பெற்றுத் தந்தார்; இவர்களால் காப்பாற்ற முடியவில்லை. மறுபடியும் ஆரியம் வெற்றி பெற்றுவிட்டது; மறுபடியும் அவர்களு டைய சூழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டது'' என்ற நிலை வரக்கூடாது.

நம்முடைய வாழ்க்கையையே இதற்காகத் தியாகம் செய்துதான், இந்தக் கருப்புச் சட்டையைப் போட்டிருக் கிறோம்.

பெரியார் உலகமயம் - 

உலகம் பெரியார் மயம்

இன்றைக்குக் கருப்புச் சட்டை டில்லியை வென்றி ருக்கிறது. ஒருபக்கம் உலகளாவிய அளவிற்குத் தந்தை பெரியார்; உலகம் முழுவதும் பெரியார்.

பெரியார் உலகமயம்

உலகம் பெரியார் மயம் என்று போய்க் கொண்டி ருக்கிறது.

ஆனால், உள்ளூரில் இதற்குக் கீழறுப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்கு ஆபத்துகள் ஏற்பட்டு இருக்கின்றன. அதைத் தடுக்கவேண்டுமானால், கரோனா தொற்றுக்கு முகக்கவசம் எவ்வளவு முக்கி யமோ, தடுப்பூசி எவ்வளவு முக்கியமோ அதுபோன்று ‘விடுதலை’ பரவுவது என்பது மிகவும் முக்கியம்.

அதற்காகத்தான் நான் சொல்கிறேன். இது எனக் காகவோ, உங்களுக்காகவோ அல்ல - நம்முடைய வருங் கால சந்ததியினருடைய வாழ்வைப் பாதுகாக்க - நம்மு டைய இனத்தினுடைய உரிமைகளைக் காப்பாற்ற - மாநில அரசு - ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று சொல் லக்கூடிய ஓர் ஆட்சி நிலைநாட்டப்பட்டு இருக்கக்கூடிய இந்த சூழலில், ‘விடுதலை'யின் பணி அவசியமான ஒன்று.

நாம் நமக்காக கேட்கவில்லையே!

ஆகவே நண்பர்களே வருகின்ற 10 நாள்களும் நீங்கள் கடுமையாக உழைக்கவேண்டும். இவ் வளவு நாள்களும், சந்தா புத்தகங்களைக் கொடுத் திருக்கிறோம்; அதைப் போய் வாங்கிவிடுவோம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். ஒவ்வொருவருக்கும் கூச்ச நாச்சம் வரக்கூடாது. இதில் வெட்கப்படுவதற்கு என்ன இருக்கிறது?

நமக்காக கேட்கவில்லையே! நமக்காக கேட்டால், பிச்சை எடுக்கின்றோம் என்று அர்த்தம். ஆனால், நமக்காக கேட்கவில்லையே!

நாட்டிற்காக நாம் கேட்கிறோம்; நம்முடைய இனத்திற்காக நாம் கேட்கிறோம்; நம்முடைய பண் பாட்டைப் பாதுகாப்பதற்காகத்தான் நாம் கேட்கி றோம்.

நண்பர்களிடம் கேளுங்கள்; அவர்கள் இல்லை என்று சொன்னால், நமக்கு என்ன கவுரவம் குறைந்துபோய்விடும்?

 ‘விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்'

நம்மிடம் மொத்தம் 65 மாவட்டங்கள் இருக்கின்றன;  இந்த மாவட்டங்களில் உள்ள தலைநகரமாக இருக்கின்ற இடத்திலோ அல்லது நீங்கள் விரும்புகின்ற இடத்திலோ அல்லது ஒரே மாவட்டத்தில் இரண்டு இடம், மூன்று இடத்தில் செய்தாலும் ஆட்சேபணையில்லை. மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, தொழிலாளரணி, மற்ற அணிகளையும் சேர்த்து வருகின்ற 18, 19, 20 ஆகிய நாள்களில் கடைவீதிகளில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி, ‘விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கத்தை' நடத்தி, அய்யா சந்தா கொடுங்கள் என்று வியாபாரிகளிடம் கேட்கலாம்; வழக்குரைஞர் களிடம் கேட்கலாம்; டாக்டர்களிடம் கேட்கலாம்; நீங்கள் கேட்கின்றவர்களில் 8 பேர் சந்தா இல்லை என்று சொல்லட்டும்; 2 பேர் சந்தாக்கள் கொடுக்கலாம். ஆக, பத்து பேருக்கு ‘விடுதலை' பத்திரிகை வெளிவருவதும், அதனுடைய தேவையும் விளம்பரமாகும் இல்லையா!

எதிரிகளுக்கு ஒரு கலக்கம் வந்துவிடும்!

சந்தா வருவதைவிட, ‘விடுதலை' சந்தா சேர்ப்பிற்காக இப்படி ஒரு செயலை செய்கிறார்கள் என்றாலே, எதிரிகளுக்கு ஒரு கலக்கம் வந்துவிடும்.

எனவேதான், தோழர்களே உடனடியாக இந்த ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

வருகின்ற 10 நாள்களில், ஒரு நாளைக்கூட நாம் வீணாக்கக் கூடாது. வேறு பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, எப்படி ஓர் உழவன், வயல்வெளியில் அரும்பாடுபட்டு உழைத்து, அறுவடை காலத்தில் அந்த நெற்பயிர்களை அறுவடைச் செய்து, பாதுகாப்பாக களத் துக்கு மேட்டுக்குக் கொண்டுவந்து நெல்மணிகளாக்கு வார்களோ அதுபோன்ற பக்குவத்தில் நாம் பணிகளைச் செய்யவேண்டும்.

சந்தாக்களை  நமக்காகக் கேட்கவில்லை; நாட்டுக்காக, இனத்திற்காகத்தான். இதனால், நம்முடைய சுயமரியாதை ஒன்றும் இதில் பாதிக்கப்படாது.

உறவுக்காரர்களுக்கு மூன்று சந்தா

நண்பர்களுக்கு மூன்று சந்தா

பொதுவானவர்களுக்கு மூன்று

நமக்கு ஒன்று

ஆக மொத்தம் 10 சந்தாக்களை மிக எளிதாக நீங்கள் சேர்த்துவிடலாம்.

இதுவரை ‘விடுதலை’யைப் படிக்காதவர்களிடம் போய்ச் சேரவேண்டும்

பணம் சேர்ப்பது இதனுடைய நோக்கம் அல்ல. நாம் எழுதுகின்ற கருத்தும், எழுத்தும் புதிதாக இதுவரை ‘விடுதலை'யைப் படிக்காதவர்களிடம் போய்ச் சேரவேண்டும்.

‘விடுதலை'க்கு ஒரு தனிச் சிறப்பு என்னவென் றால், மற்ற பத்திரிகைகளை 5 நிமிடமோ, 10 நிமி டமோ தலைப்புகளைப் பார்த்துவிட்டுத் தூக்கிப் போடுவார்கள். ஆனால், ‘விடுதலை' நாளிதழ் அப்படிப்பட்டதல்ல. பாதுகாத்து வைக்கப்படக் கூடியது மட்டுமல்ல- அதில் வெளிவரும் புள்ளி விவரங்களாக இருந்தாலும் சரி, மருத்துவத் தகவல் களாக இருந்தாலும், வாழ்வியல் சிந்தனைகளாக இருந்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் படிப்பவர்கள் தெரிந்துகொள்வதற்கு உதவும்.

‘விடுதலை’யின் தனிச் சிறப்பு

மற்றவர்கள் சொல்ல முடியாத கருத்தை எடுத்து சொல்லுகிறோம் என்ற அளவில் வருகின்ற காரணத் தினால்தான், ‘விடுதலை'யின் தனிச் சிறப்பை நன்றாக உணரவேண்டும்.

மருந்து கொடுப்பது போன்றதுதான் - கொஞ்ச நாள்கள் மருந்து கசப்பாக இருப்பதுபோன்று இருக்கும். ஆனால்,  10 நாள்கள் ‘விடுதலை’யைத் தொடர்ந்து படித்துவிட்டால், பிறகு அவர்களே ‘‘என்னங்க, ‘விடுதலை’ வரவில்லையே, இன்னும் வரவில்லையே'' என்று கேட்பார்கள்.

ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன்,

பால்யூ என்கிற பாலசுப்பிரமணியம் என்ற  ஒரு நண்பர். அவர் ஒரு பார்ப்பனர். இப்பொழுது அவர் இல்லை, இறந்துவிட்டார்.

எல்லோரிடமும் இயல்பாகப் பழகுபவர். ஒரு வங்கியில் பணியாற்றியவர். ‘குமுதம்' பத்திரிகையில் ‘பார்ட் டைமாக' பணியாற்றியவர்.

அவர் பேட்டி எடுப்பார்; அய்யாவைப்பற்றி செய்தி களைப் போடுவார். அந்த நண்பர் என்னிடம், ‘விடு தலை’யை எனக்கு வீட்டிற்கு அனுப்பினீர்கள் என்றால் வசதியாக இருக்கும் படிப்பதற்கு என்றார்.

அவருடைய வீட்டிற்கு ‘விடுதலை’ நாளிதழை நாள்தோறும் கிடைக்கும்படி செய்தோம். அவருடைய துணைவியாரும் ‘விடுதலை’யைப் படிக்கின்ற வாய்ப் பைப் பெற்றார். பத்திரிகையாளர்கள் குடியிருப்பில் தான் அவர் வீடு.

‘விடுதலை’ பத்திரிகையில், இராமாயணப் புரட்டு, சுந்தர காண்டத்தில் இராமன் எப்படி இருந்தான்? என்றெல்லாம் பெட்டிச் செய்திகள் வரும்.

‘திராவிடர் கழகத்துக்காரர்கள் ஆதாரத்துடன்தான் சொல்கிறார்கள்'

ஒரு நாள் அவர் என்னை சந்தித்தபொழுது, ‘‘சார், ‘விடுதலை’யை நாள்தோறும் படிக்கும் என்னுடைய  வீட்டுக்காரம்மா உங்கள் கட்சியில் சேர்ந்துவிடுவார்கள் போலிருக்கிறதே? ‘விடுதலை’ இன்னும் வரவில்லையே, வரவில்லையே என்று வாசலையே பார்த்துக் கொண்டி ருக்கிறார்'' என்றார்.

அப்படி என்ன அந்த அம்மா சொன்னார்கள் என்றேன்.

அந்த அம்மா சொன்னதை அப்படியே என்னிடம் சொன்னார், ‘‘அவாள் சொல்றாங்க, சொல்றாங்க, என்று நாம் கோபித்துக் கொள்கிறோமோ, அவாள் சொல்றது ஆதாரப்பூர்வமாகத்தான் இருக்கிறது; இராமாயணத்தைப் பற்றி சொல்கிறார்கள், அதற்கு மறுப்பு எழுத முடியுமா? சுந்தரகாண்டத்தில் இந்தப் பக்கத்தில் இருக்கிறது என்று ‘விடுதலை’யில் வெளியிடுகிறார்கள். நானும் எடுத்துப் பார்த்தேன், அப்படியேதான் இருக்கிறது. பிறகு ஏன் அவர்கள்மேல் நாம் கோபப்படவேண்டும். சுந்தரகாண் டத்தை எழுதியவர்மேல்தானே நாம் கோபப்படவேண் டும்'' என்று சொல்கிறாங்க, என்றார் அவர்.

இதுவரையில் நம்முடைய கருத்துகளை மறுத்தவர்கள் 

யாரும் கிடையாது!

ஆகவே, இதுவரையில் நம்முடைய கருத்து களை மறுத்தவர்கள் யாரும் கிடையாது. அதில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம்.

போர்க் களத்தில் ஒரு போர் வீரன் நம்பிக் கையோடு நாம் வெற்றி பெறுவோம் என்ற துணிச்ச லோடு இறங்கவேண்டுமே தவிர, துப்பாக்கியைப் பிடிக்கும்பொழுதே, கைகள் நடுங்கினால் என் னாகும்? அந்தத் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொள்ளவேண்டும். ஆனால், நமக்கு அதுபோன்ற நிலை இல்லை.

இதுவரை நான் பங்கேற்ற கலந்துரையாடலில்...

உற்சாகத்தோடு இந்தப் பணியை செய்யுங்கள். அதில் ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், இதுவரை நான் பங்கேற்ற கலந்துரையாடலில் எல்லா தோழர்களும் அவர்களுடைய அனுபவத்தை சொன்னார்கள்; உங் களுக்கும் அந்த அனுபவம் இருக்கும். அது ஒன்றும் புதிதல்ல.

பொதுவானவர்களை நீங்கள் சந்தித்து ‘விடுதலை’ சந்தா கேட்கும்பொழுது, யாராவது ‘‘எதற்காக நாங்கள் சந்தா கொடுக்கவேண்டும் என்று'' கேட்டிருக்கிறார்களா?

இல்லை.

எவ்வளவு கொடுக்கவேண்டும் என்றுதான் கேட் கிறார்கள். 

முதல் வெற்றி ‘விடுதலை’ அடைந்திருக்கிறது என்பதற்கு இதுதான் அடித்தளம்.

‘‘பெரியாரிடம் இல்லாத பணமா?''

கட்சியில் நன்கொடை கேட்கும்பொழுது, ஒரு சிலர் நம் தோழர்களிடம், ‘‘பெரியாரிடம் இல்லாத பணமா? அவர்தான் எக்கச்சக்கமாக சேர்த்துவிட்டுப் போயிருக்கிறாரே? உங்கள் இயக்கத்தில் இல்லாத பணமா?'' என்று கேட்பார்கள்.

அப்பொழுது நம்முடைய தோழர்கள், ‘‘ஏங்க, திருப்பதி வெங்கடாசலபதியிடம் இல்லாத பணமா? ஏங்க, மறுபடியும், மறுபடியும் உண்டியல் வசூல் செய்கிறார்கள்; அந்தப் பணத்தை நாம் எடுக்க முடியுமா?'' என்று கேள்வி கேட்டு,

அதை ஒரு பிரச்சார வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஆனால், நாங்கள் எத்தனை பள்ளிக்கூடங்களை நடத்து கிறோம் தெரியுமா? பல்கலைக் கழகம் நடத்துகிறோம் தெரியுமா? குழந்தைகள் இல்லம் நடத்துகிறோம் தெரியுமா? முதியோர் இல்லம் நடத்துகிறோம் தெரியுமா? என்று இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கேள்வி கேட்பவரிடம் அடுக்கடுக்காக சொன்னதும்,

‘‘ஓ, இவ்வளவு இருக்கிறதா? சரி, சரி நன்கொடை வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று சொல்வார்கள்.

நன்கொடைக்கு அப்படி. ஆனால், இப்பொழுது நாம் கேட்பது நன்கொடையல்ல. அவர்களுக்குப் பத்திரிகை யைப் அனுப்புவதற்காக நாம் ‘கேன்வாஸ்' செய்கிறோம்.

மக்கள் தயாராக இருக்கிறார்கள்; 

நாம் தயாராக இல்லை!

அதேநேரத்தில், சந்தாக்கள் கேட்டு நாம் செல்பவர் களில் யாரும் முகம் சுளிக்கவில்லை. ஆக, இதிலிருந்து என்ன தெரிகிறது? குற்றம் யாரிடம் இருக்கிறது? நம்மிடம்தான் இருக்கிறதே தவிர, மக்களிடம் இல்லை. மக்கள் தயாராக இருக்கிறார்கள்; நாம் தயாராக இல்லை என்பதுதான்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, ‘விடுதலை’ ஆசிரியராக நான் பொறுப்பேற்று எத்தனை ஆண்டுகள் ஆயிற்று?

50 ஆண்டுகள்.

அப்பொழுது திராவிடர் கழகப் பொதுக்குழு திருச்சியில் நடைபெற்றது. அப்பொதுக்குவில், 50 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்களை கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்து, 50 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்களைக் கொடுத்தீர்கள் அல்லவா!

எப்பொழுது 10 ஆண்டுகளுக்கு முன்பு!

அன்றைக்கு இருந்த சூழ்நிலையும் - இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

நாம் வளர்ந்திருக்கின்றோமா? தேய்ந்திருக்கின்றோமா?

10 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் வளர்ந்திருக் கின்றோமா? தேய்ந்திருக்கின்றோமா? வளர்ந்துதானே இருக்கிறோம். குறைந்திருக்கின்றோம் என்று யாராவது சொல்ல முடியுமா?

பிறகு ஏன் தன்னம்பிக்கைக்குக் குறைச்சல்? 10 ஆண்டுகளுக்கு முன்பு 50 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக் கள் கொடுத்த ஓர் இயக்கம் - நியாயமாகப் பார்த்தால் லட்சம் ‘விடுதலை’ சந்தாக்களை கொடுக்கவேண்டும்.

மக்கள் மத்தியில் செல்லவேண்டும்; மக்களைச் சந்திக்கவேண்டும். அதற்கு யாரும் கூச்சப்படக்கூடாது.

என்னிடம் ஒருவர் கேட்டார், ஏங்க தோளில் துண்டு போட்டிருக்கிறீர்களே? என்று.

அது வேறு எதற்காகவும் அல்ல; பிச்சை எடுப்பதற் காகத்தான் போட்டிருக்கிறேன் என்றேன்.

எனக்காக அல்ல; இந்த இனத்திற்காகதான்.

புத்தருடைய தத்துவம் என்ன?

‘‘உனக்கென்றும் எதுவும் சேர்த்து வைக்காதே, சாப்பிடவேண்டும் என்றாலும், அவ்வப்பொழுது வாங்கி சாப்பிட்டுவிட்டுப் போ'' என்பதுதான்.

அதுதான் சமுதாய சிந்தனை!

நமக்காக கேட்கவில்லை!

அதுபோன்று நமக்கென்று நாம் கேட்டால்தான் கூச்சப்பட வேண்டும், வெட்கப்படவேண்டும். நமக்காக கேட்கவில்லை; நம்முடைய சொந்த வாழ்வை உயர்த்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகக் கேட்கவில்லை.

நீட் தேர்வாக இருந்தாலும், கியூட் தேர்வாக இருந் தாலும், அவற்றை ஒழிக்கவேண்டும் என்று சொல்கி றோமோ,  அது யாருக்காக? எங்களுக்காக அல்ல தோழர்களே, உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக என்றுதானே சொல்கிறோம்.

ஒரு மாநில மாநாடு போன்று நடத்தி, 

வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்துவோம்

இந்த உணர்வோடு நீங்கள் தன்னம்பிக்கையோடு இறங்குங்கள். செப்டம்பர் 6 ஆம் தேதி சந்தாக்கள் கொடுக்கும் விழா வெற்றிகரமாக நடைபெறும். அதனை ஒரு மாநில மாநாடு போன்று நடத்தி, வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்துவோம்.

இதுதான், காவி - கார்ப்பரேட் கூட்டணிக்கு சரியான பதிலடியாகும்!

‘விடுதலை’க்கு 60 ஆயிரம் சந்தாக்கள் என்பதுதான்.

ஆகவே, நீங்கள் நாளை முதல் நடைபெறக்கூடிய சந்தாக்கள் திரட்டும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

அதோடு, ‘விடுதலை’யில் ஒரு செய்தி கொடுத் திருக்கின்றோம்.

‘‘விடுதலை சந்தா சேருங்கள்!’’ என்ற 

தலைப்பில் பதாகை

யார் யாரெல்லாம் கார், வாகனங்கள் வைத்திருக் கிறீர்களோ, அவர்கள் அத்தனை பேரும், கார், வாகனங்களின் பின்னால், ‘‘விடுதலை சந்தா சேருங்கள்!'' என்ற தலைப்பில் பதாகைச் செய்திகளை ஒட்டுங்கள்! அந்த வாகனம் எங்கு சென்றாலும், ஒரு பிரச்சார யுக்தியாகத்தான் அது இருக்கும். இதைத் தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

‘விடுதலை’ பரவவேண்டும் என்று சொல்வதே பிரச்சாரத்திற்காகத்தான்

எனவேதான், நம்முடைய பிரச்சாரம் வெற்றியடைய வேண்டும். ‘விடுதலை’ பரவவேண்டும் என்று சொல் வதே பிரச்சாரத்திற்காகத்தான். அந்தப் பிரச்சாரத்தை நீங்கள் மிகச் சிறப்பாக செய்யுங்கள் என்று சொல்லி, இங்கே சந்தாக்களை கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

வாழ்க ‘விடுதலை!’

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment