மாணவர்களிடையே போதைப் பொருள் ஆபத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 12, 2022

மாணவர்களிடையே போதைப் பொருள் ஆபத்து!

பெற்றோர், ஆசிரியர், பொது நல அமைப்புகள் ஒருங்கிணைந்து

தடுத்து நிறுத்தும் அணுகுமுறையைப் பின்பற்றுவோம்!

நம்பியூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

நம்பியூர், ஆக.12 போதைப் பொருள் களை பள்ளிக்கூட மாணவர்கள் மத்தியில் திணிப்பதைத் தடுப்பது என்பது காவல்துறைக்கு மட்டுமே பொறுப்பல்ல; அல்லது பள்ளிக்கூடப் பொறுப்பாளர்கள் மட்டும் அதற் குப் பொறுப்பல்ல. ஒவ்வொரு பெற் றோரும், ஒவ்வொரு பொதுநல அமைப்புகளும் இதில் பெரிய ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்கிக் கொண்டு, இதைத் தடுத்து நிறுத்துவதில் தங்களுடைய பணியை செய்யவேண்டியது அவசர, அவசியமாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். . 

நேற்று (11.8.2022) நம்பியூரில் பள்ளிக்கூட விழாவில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

காமராஜர் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர் நாள் விழா

நம்பியூரில் மிகச் சிறப்பான வகையில் அய்யா கருப்புசாமி அவர்களுடைய அருட்கொடையினால் நடைபெறக்கூடிய காமராஜர் மேல்நிலைப் பள்ளியினுடைய நிறுவன ருக்குப் பாராட்டு விழா - நிறுவனர் நாள் விழா என்ற பெருமைக்குரிய நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருக்கின்ற நேரத்தில், மாணவர்கள் மத்தியில் இப் பொழுது சிறப்பாகப் பேசப்படுகின்ற பேச்சு - தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 'திராவிட மாடல்' ஆட் சியைப்பற்றித்தான்.

போதைப் பொருள்களை பள்ளிக் கூடங்களில் கொண்டு வந்து, மாணவர் களிடையே திணிப்பது - மாணவர்களை எப்படியாவது வசியப்படுத்துவது போன்ற மிகப்பெரிய தொல்லைகள் ஏற் பட்டிருப்பது - காவல்துறைக்கு மட்டு மல்ல - அரசாங்கத்திற்கு மட்டுமல்ல இந்த சவால் - இது நம்முடைய மாணவர்களின் எதிர்கால வாழ்வைக் குலைக்கக் கூடிய தாகும். அதைத்தான் நம்முடைய சகோதரர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களும் அவருடைய உரையில் சொன்னார்கள்.

அதைத்தான் ஒவ்வொரு பெற் றோரும், ஆசிரியரும் கவனமாகக் கண்காணிக்கவேண்டும்; தீய சக்திகள், பள்ளிக்கூட வளாகங்களில் வராமல், ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

மாணவச் செல்வங்களிடையே பல ரூபங்களில் கண்ணுக்குத் தெரி யாத அளவிற்கு அவை வரும்; ஏதோ மிட்டாய் கொடுப்பது போன்று அவர்களை வசியப்படுத்தி, அவர் களை ஏமாற்றக் கூடிய ஆபத்து இருக் கிறது.

ஆகவே, மிகப்பெரிய அளவில், இதைக் கண்காணிப்பது என்பது வெறும் காவல்துறைக்கு மட்டுமே பொறுப்பானதல்ல; அல்லது பள்ளிக் கூடப் பொறுப்பாளர்களுக்கு மட்டும் பொறுப்பானதல்ல. ஒவ்வொரு பெற் றோரும், ஒவ்வொரு பொதுநல அமைப்புகளும் இதில் பெரிய ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்கிக் கொண்டு, இதைத் தடுத்து நிறுத்துவதில் தங்களுடைய பணியை செய்யவேண்டியது அவசர, அவசியமாகும்.

பீகாரில் வரவேற்கத்தகுந்த திருப்பம்!

செய்தியாளர்: பீகார் அரசியல் நிலவரம் குறித்து தங்களது கருத்து என்ன?

தமிழர் தலைவர்: பீகாரில் நிதிஷ் குமார் அவர்கள் முதலமைச்சராகவும், ராஷ்ட்டிரிய ஜனதா தளத்தின் சார்பில் தேஜஸ்வி துணை முதலமைச்சராகவும் ஆகியிருப்பதை மிகப்பெரிய அரசியல் திருப்பமாக அதைக் கருதுகிறோம்.

வருகிற 2024 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கக் கூடிய நாடாளு மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்குப் போராடு கின்ற அந்த முயற்சிக்கு ஒரு புதிய திருப்பமாக, வரவேற்கத்தகுந்த திருப்பமாக நிச்சயமானதாக அது அமைந்திருக்கின்றது.

ஏற்கெனவே பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். எந்த வித்தையைக் கை யாண்டாளர்களோ, அது இப்பொழுது 'பூமாராங்' ஆகி, அவர்களுக்கு எதி ராகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.


No comments:

Post a Comment