அரியலூர்: திராவிடர் கழக இளைஞரணி திறந்தவெளி மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

அரியலூர்: திராவிடர் கழக இளைஞரணி திறந்தவெளி மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் உரை

 பகுத்தறிவு, விஞ்ஞான மனப்பான்மை கூடாது என்று சொல்வதற்குப் பெயர்தான் சனாதனம்!

அரியலூர், ஆக.19 - ‘‘பகுத்தறிவு, விஞ்ஞான மனப் பான்மை கூடாது என்று சொல்வதற்குப் பெயர்தான் சனாதனம்'' என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அரியலூர்: திராவிடர் கழக இளைஞரணி 

திறந்தவெளி மாநில மாநாடு

கடந்த 30.7.2022 அன்று அரியலூரில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி திறந்தவெளி மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

12.8.2022 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த உரையின் தொடர்ச்சி வருமாறு:

ஒன்று, ‘‘கடவுள் பெயரால்’’ உறுதிமொழி எடுப்பது; இன்னொன்று ‘‘மனச்சான்றுபடி’’ என்று.

நம்முடைய அத்துணை சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்பட எல்லோரும் உறுதிமொழி எடுத்தார்கள் என்றால்,

கடவுளை மறுப்பவர்கள் என்பது வேறு; ‘‘நாங்கள் கடவுளை ஏற்காதவர்கள்தான் பதவிக்கு வந்திருக் கின்றோம்’’ என்று ‘‘மனச் சான்றுபடி’’ உறுதிமொழி எடுத்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுள் இருக்கிறது; எங்களுக்கு அதைப்பற்றி கவலையே இல்லை.

‘கடவுளை மற' என்று சொல்லிவிட்டு, அடுத்ததாக ‘மனிதனை நினை' என்று சொன்னாரே தந்தை பெரியார் அவர்கள்.

தொடக்கூடாத மனிதன் என்றால், 

அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

‘தொடக்கூடாத மனிதன்’ என்று ஒரு கடவுள் சொன்னால், அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா? கடவுள் சொன்னார் என்று சொல்கிறார்கள் - இன்னமும் போராடுகிறார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதைப் பற்றி அமைச்சர் அவர்கள் சொன்னாரே, அதை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடு கிறார்களே, இன்னமும் வழக்கு இருக்கிறதே - அய்ம்பது ஆண்டுகளாக!

அய்யாயிரம் ஆண்டுகள் இருந்த அக்கிரமத் தைப் போக்கவேண்டும் என்பதற்காகப் பெரியார் அவர்கள் பாடுபட்டு, கலைஞர் அவர்கள் மூன்று முறை அதற்காக சட்டம் கொண்டு வந்து, சட்டத் திருத்தம் கொண்டு வந்தாரே!

கோவில்கள் கட்டியது யார்?

நம்மாள்கள்தான்!

சிதம்பரம் கோவிலை யார் கட்டினார்கள்?

இன்றைக்கு 14 ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருக் கின்றன - அங்கே தீட்சதர்கள் உட்கார்ந்துகொண்டு, நம்மவர்கள் தேவாரம், திருவாசகம் பாடக்கூடாது; தமிழ் மொழி உள்ளே போகக்கூடாது என்று சொல்கிறார்கள்.

அதை எதிர்த்து ஏன் என்று கேள்வி கேட்கக்கூடாது; நாங்கள் எப்படி வேண்டுமானாலும் கொள்ளையடித்துக் கொண்டிருப்போம் என்று சொன்னால், அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

இதையெல்லாம் கேட்பதற்கு, இந்த இயக்கத்தைத் தவிர, வேறு இயக்கம் உண்டா? என்று அருள்கூர்ந்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

மனிதநேயத்திற்காகப் பாடுபடுகின்ற இயக்கம் திராவிடர் இயக்கம்!

எனவேதான், நாங்கள் எங்களைப்பற்றி கவலைப்பட வில்லை. எங்கள் வாழ்வு முடிந்துவிட்டாலும் அதைப் பற்றி கவலைப்படவில்லை என்று - மனிதநேயத்திற்காகப் பாடுபடுகின்ற இயக்கம் திராவிடர் இயக்கம்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டினுடைய தன்மை ஏன் வித்தியாசமாக இருக்கிறது?

இங்கே மதவெறி உண்டா?

கிடையாதே!

இங்கேதானே இஸ்லாமிய சகோதரர்களாக இருந் தாலும், கிறிஸ்தவ சகோதரர்களாக இருந்தாலும் வேறுபாடு இல்லையே!

அழகாகச் சொன்னார்களே, நாமம் போட்டவராக இருந்தாலும், விபூதி பூசுகிறவராக இருந்தாலும் நாம் அவர்களை அணைத்துக் கொள்கிறோம். கொள்கை மாறுபாடு இருக்கலாம், அது வேறு விஷயம்.

ஆனால், நமக்குள் வெறுப்பு அரசியலை நடத்துவ தில்லையே! மனிதன் இன்னொரு மனிதனைப் பார்த்து, எட்டி நில், கிட்டே வராதே என்று நாம் ஒரு நாளும் இருந்தது கிடையாதே!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், இந்தியா முழுவதும் மதக் கலவரங்கள் ஏற்பட்ட நேரத்தில், ஒரே ஒரு மாநிலம் அமைதிப் பூங்காவாக இருந்தது என்றால், அது தமிழ்நாடுதான் என்பது வரலாறு.

‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’  நாளிதழில் வெளிவந்த கட்டுரை

அந்தக் காலகட்டத்தில், ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் ஒரு மூத்த எழுத்தாளர் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள காவல்துறையினரைத்தான் பிற மாநிலங்களுக்கு அனுப்பினார்கள். இந்தியா முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது; தமிழ்நாடு அமைதியாக இருப்ப தற்குக் காரணம் என்னவென்றால், திராவிடர் இயக்கம் - திராவிடக் கொள்கைகள் - திராவிட சித்தாந்தம் - பெரியார் அதற்குக் காரணம். இங்கே மதவெறி உள்ளே நுழைய வாய்ப்பில்லை என்று மிகத் தெளிவாக அவர் அந்தக் கட்டுரையில் மிகத் தெளிவாக சொல்லியிருந்தார்.

காந்தியார் கொல்லப்பட்ட நேரத்தில்கூட, பார்ப்பனர் களுக்குப் பாதுகாப்பு கொடுத்தவர் பெரியார்.  தமிழ் நாட்டில் ஒரு கலவரமும் நடைபெறவில்லை. 

இன்றைக்கும் ஜாதிக்கலவரங்கள் கிடையாது - நாளைக்கும் ஜாதிக்கலவரம், மதக்கலவரம் நடைபெறாத ஒரு மாநிலம் இருக்கிறது என்றால், இந்தியாவிலேயே அது தமிழ்நாடுதான் என்று சொல்லக்கூடிய பெருமை இருக்கிறது என்றால், அதைக் கட்டிக் காக்கின்ற ஆட் சிக்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்’ ஆட்சியாகும்.

இந்தப் பணியை நாங்கள் யாருக்காகச் செய்கிறோம் என்றால், மக்களுக்காக!

இன்னொன்றை உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

நாங்கள் பொதுக்கூட்டம் நடத்தப் போகிறோம் என்றால், காவல்துறைக்கு ஒரு சிலர் கடிதம் எழுது வார்கள்; வீரமணி  இங்கே கூட்டம் போடவிருக்கிறார்; அவர் இந்து மதத்தைப்பற்றி பேசுவார் என்று.

யானைக்கு மதம் பிடித்தாலே ஆபத்து; மனிதனுக்கு மதம் பிடித்தால் 

அதைவிட மிகப்பெரிய ஆபத்து

இந்து மதம் என்றால் என்ன? வேறு எந்த மதம் என்றால் என்ன? மனிதனுக்கு மதம் பிடிக்கக்கூடாது; யானைக்கு மதம் பிடித்தாலே ஆபத்து; மனிதனுக்கு மதம் பிடித்தால் அதைவிட மிகப்பெரிய ஆபத் தாகும்.

நீ மதத்தை வைத்துக்கொண்டிருக்கிறாய், அது உன்னோடேயே இருக்கட்டும்; ஆனால், அந்த மதம், என்னை சூத்திரன் என்று சொன்னால், என்னுடைய தாயை விபச்சாரி என்று சொன்னால், நான் படிக்கக் கூடாது என்று சொன்னால், அந்த மதத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஒருவருடைய தந்தை இறந்து போனால், தாய் விதவை ஆகிறார்; எந்தக் காரியங்களுக்கும் தாய் முன்னால் வரக்கூடாது என்று சொல்லி, அந்தத் தாயை வாழ்நாள் முழுவதும் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறாயே, இதுதானே உன்னுடைய சனாதனம்!

‘‘அறியப்படாத இந்து மதம்’’ 

ஒரு செய்தி உங்களுக்குச் சொல்கிறேன்.

அண்மையில் வெளிவந்துள்ள ஒரு புத்தகம் ‘‘அறியப்படாத இந்து மதம்’’ என்பது அந்தப் புத்தகத்தின் தலைப்பு.

இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ்நாட்டுக்காரர். அவருடைய பெயர் செ.தி.ஞானகுரு.

இந்த புத்தகத்தில் ஒரு செய்தியைச் சொல்கிறார் - திராவிட இயக்கத்தினுடைய பெருமை என்ன என்பது எப்படி பரவுகிறது என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் நண்பர்களே,  இதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தப் புத்தகத்தில், 

சமஸ்கிருதம் உள்பட அப்படியே ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உள்ள புத்தகங்களில் உள்ளவற்றை அப்படியே அச்சடித்திருக்கிறார். அவர் ஒரு ஆராய்ச்சியாளர், அந்த ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு போட்டுவிட்டு,

தரும விமர்சனம் என்று சொல்லி,

சனாதனத்தின் மீட்சியே நீட் தேர்வு -

‘‘அந்தணன், க்ஷத்திரியன், வைசியன் ஆகிய வர்களில் ஒருவன், நல்ல குலத்தில் தோன்றியவன். தக்க பருவத்தில் உள்ளவன், சாஸ்திர முறைப்படி நடந்துகொள்ளக் கூடியவன், சூரன், உடலும், மனமும் தூய்மையாகக் கொண்டவன், நன்னடத் தையைப் பின்பற்றுபவன், புலனடக்கம் உள்ளவன், வரும் பொருளைக் கண்டறிந்து, சாஸ்திர அர்த் தங்களை நன்கு உணர்ந்துகொள்ளும் சாமர்த்தியம் உள்ளவன், நல்ல அமைப்புடன் கூடிய நாக்கு, உதடுகள், பல்வரிசைகள் முதலியவற்றைக் கொண் டவன், தெளிவான சிந்தனை, சொல், செயல்கள் உடையவன், கஷ்டங்களைப் பொறுத்துக் கொள் ளும் தன்மை கொண்டவன் எனுமிவர்களை மருத் துவக் கல்வியை உபதேசம் செய்ய  (உபநயனம்) அருகில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

‘‘ஸுசுருத, ஸம்ஹிதை’’ - ஆயுர்வேத நூல்.

ஆயுர்வேதத்தின் தந்தை என்றும், உலகின் அறுவைச் சிகிச்சையின் தந்தை என்று ஸுசுருதர் போற்றப்படுகிறார். இவரது பெயரில் வழங்கிவரும் ‘‘ஸுசுருத ஸம்ஹிதை’’ எனும் நூலானது ஆயுர் வேத நூல்களில் தலைசிறந்தது.

பிராமணர், க்ஷத்திரியர், வைசியர்களுக்கு அந் தணரும், க்ஷத்திரிய வைசியருக்கு க்ஷத்திரியரும், வைசியர்களுக்கு வைசியரும் உபநயனம் செய்யத் தக்கவராவர்.’’

எனவே, டாக்டர்களாக சூத்திரர்கள், பஞ்சமர்கள் வரக்கூடாது என்பதுதான் ஸுசுருத, ஸம்ஹிதை.

இதற்காகத்தான் அன்றைக்கு சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை திராவிட இயக்க ஆட்சியில் எடுத்தார்கள்.

ஆனால், இப்பொழுது அது மறுபடியும் வேறு உருவில் வருகிறது. அதற்குப் பெயர்தான் நீட் தேர்வு.

அன்றைக்கு குலக்கல்வியை ஒழித்தோம் என்று மகிழ்ச்சியடையும்போது, வேறொரு உருவில் வருகிறது - அதற்குப் பெயர் தேசிய புதிய கல்விக் கொள்கை என்பது.

‘பழைய கள், புது மொந்தை’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோன்று இதைச் செய்கிறார்கள்.

தமிழ்நாடுதான் நீட் தேர்வின் கொடுமைகளைச் சொல்லிற்று என்று அமைச்சர் சிவசங்கர் அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார்கள்.

காரணம் என்ன?

பெரியார் என்ற கண்ணாடி - பெரியார் என்ற நுண் ணாடி - அது மைக்ரோஸ்கோப்.

சாதாரண கண்களுக்கு அந்தக் கிருமிகள் தெரியாது; நுண்ணாடியில்தான் கிருமிகள் தெரியும்.

புதிய கல்விக் கொள்கை என்று பழைய குலக்கல்விக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்

ஆகவேதான், அந்தக் கிருமிகள் எங்கே இருக்கிறது என்று புரிந்துகொண்டுதான் போராடவேண்டிய கட்டத் தில் இருக்கின்றோம்.

ஆகவேதான் நண்பர்களே, அவர்கள் புதிய கல்விக் கொள்கை என்று பழைய குலக்கல்விக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

புதிய கல்விக் கொள்கை மிகப் பிரமாதமாக இருக் கிறது; தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக் கிறார்கள் என்று சிலர் புரியாமல் சொல்கிறார்களே,

தாய்மொழிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறீர்கள்?

இந்தி மொழிக்கு ஒதுக்கிய அளவிற்கு நிதி ஒதுக்கி யிருக்கிறீர்களா?

சமஸ்கிருதம் செத்த மொழியல்லவா - அந்த மொழியை நாட்டில் எவ்வளவு பேர் பேசுகிறார்கள்?

செம்மொழி தமிழ்மொழி - கலைஞர் போராடி பெற்றுத்தந்த அந்த உரிமை இருக்கிறதே - அதனால் தானே அதற்கு அந்த வாய்ப்பு.

இந்த இயக்கம், இந்தக் கொள்கை, இதைத் தத்துவார்த் தமாகக் கொண்டு செயல்படக்கூடிய ஓர் ஆட்சி- இவை அத்தனையும் இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படு கிறார்கள் மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள். ஏனென்றால், பெரியார் அங்கே பிறக்கவில்லை.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக காமராஜர் அளித்த பேட்டி

காமராஜர் அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த நேரத்தில், அகில இந்திய அளவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவிட்டு, திரும்பி வந்தார்.

அவர் குடியிருந்த சென்னை திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள வீட்டில், முதன்முதலாக அவர் பேட்டியளித்தார். 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக அகில இந்திய மாநிலங்களுக்குச் சென்று வந்திருக்கிறீர்களே, உங்களுடைய அனுபவத்தைப்பற்றி சொல்லுங்களேன் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

உடனே காமராஜர் அவர்கள், ‘‘அங்கே போய் பார்த்த பிறகுதான் தெரியுதுன்னேன் -

அங்கே இருப்பவர்களைத் திருத்துவதற்கு ஒரு பெரியார் அல்ல; நூறு பெரியார் தேவை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு பெரியார் தேவை!

ஒவ்வொருவனும் ஜோசியக்காரனைக் கேட்டுக் கொண்டுதான் சட்டையே போடுகிறான்.

எங்க ஆளுகளே ஜோசியக்காரனைக் கேட்டுத்தான், எந்தக் கலர்ல சட்டை, என்னைக்குப் போடவேண்டும் என்கிறான்.

இவனுகளைத் திருத்துவதற்கு என்ன செய்ய முடியும்? அப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது; பெரியாருடைய வேலை எவ்வளவு முக்கியமானது என்று மிகத் தெளிவாகத் தெரிந்தது’’ என்று சொன்னார்.

பகுத்தறிவு, விஞ்ஞான மனப்பான்மை கூடாது என்று சொல்வதற்குப் பெயர்தான் சனாதனம்!

ஆகவேதான், நேற்றுகூட நம்முடைய முதல மைச்சர் அவர்கள் அருமையாக சொன்னாரே!

எவ்வளவு லாவகமாக, எவ்வளவு நாசூக்காக, எவ்வளவு நாகரிகமாக, நயத்தக்க நாகரிகமாக - சாதாரண நாகரிகமல்ல - பிரதமர் மோடியும், அவருக்குப் பக்கத்தில் சேடி ஒருத்தர் இருக்கிறார் பாருங்கள் -  நம்முடைய கவர்னர்.

அவர்தான் சனாதனத்தைப்பற்றி பேசியவர்; மற்றவற்றைப் பேசியவர்.

அவர்களை வைத்துக்கொண்டு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், பகுத்தறிவுப் பிரச்சாரம், விஞ்ஞான மனப்பான்மை பற்றிக் கூறினார்.

அந்தப் பகுத்தறிவு, விஞ்ஞான மனப்பான்மை கூடாது என்று சொல்வதற்குப் பெயர்தான் சனாதனம்.

மாற்றமே கூடாது - மாற்றவே முடியாது.

உங்களால் முதலில் செய்ய முடிந்ததா?

நீங்களே தோற்றுப் போயிருக்கிறீர்களே!

இன்றைக்கு ஒரு பழங்குடியினப் பெண்மணியை குடியரசுத் தலைவராக நியமித்து, அதில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள்.

(தொடரும்)


No comments:

Post a Comment