இன எதிரிகளை மிரட்டக்கூடிய மிகப்பெரிய ஓர் ஆயுதம் 'விடுதலை!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

இன எதிரிகளை மிரட்டக்கூடிய மிகப்பெரிய ஓர் ஆயுதம் 'விடுதலை!'

தஞ்சைக்கு வரும்பொழுது  புது உற்சாகம் பெறுகிறேன்!

மன்னார்குடி கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

மன்னார்குடி, ஆக.26  அன்றும் சரி, இன்றும் சரி, ‘விடுதலை’ தான் இன எதிரிகளை மிரட்டக்கூடிய மிகப்பெரிய ஓர் ஆயுதம்.  அதுதான் நமக்குப் பலம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மன்னார்குடியில் நடைபெற்ற கலந்துரையாடல்

கடந்த 13.8.2022 அன்று மாலை 60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தா திரட்டுவது குறித்து மன்னார்குடியில் நடைபெற்ற மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களின் திராவிடர் கழக கலந்துரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

கருப்புச் சட்டை போட்ட அத்தனை பேரும், வருமான வரித் துறை அலுவலகம் முன்பு மறியல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்று சொன்னேன்.

என்ன சார், மிரட்டறீங்களா? என்றார்.

‘‘நான் மிரட்டவில்லை. பெரியாருடைய நோக்கம் - ஒரு அறக்கட்டளையை நிறுவி, அதனுடைய நோக்கத்தை எப்படி செயல்படுத்தவேண்டும் என்று சொன்னாரோ, அதை செய்யவேண்டியதுதானே எங்களுடைய பணி.  அதை மாற்ற முடியுமா? அதைத்தானே நாங்கள் செய்கி றோம்.  பெரியார் இல்லையே என்று நாங்கள் ‘விடுதலை’யை நிறுத்தக் கூடாது’’ என்று தெரிவித்தேன்.

எங்கள் தோழர்கள் எதற்கும் துணிந்தவர்கள்

‘‘பெரியாருடைய தொண்டர்கள் ஏராளம் இருக்கிறார் கள். அவர்கள்  எல்லாம் இங்கே வந்துவிடுவார்கள். ஆகவே, எங்கள் முடிவு இதில் ஒன்றும் இல்லை. எங்கள் தோழர்கள் எதற்கும் துணிந்தவர்கள்’’ என்றேன்.

ஆகவே, நீங்கள் சொல்வது எல்லாம் நடக்காது என்றேன்.

சரி, சரி நீங்கள் உங்கள் எண்ணப்படி செய்யுங்கள். சும்மா உங்களுக்கு ஒரு யோசனை சொன்னேன் என்று பின்வாங்கினார் அந்த அதிகாரி.

இதிலிருந்து என்ன தெரிகிறது? 

இன எதிரிகளை மிரட்டக்கூடிய 

மிகப்பெரிய ஓர் ஆயுதம்

அன்றும் சரி, இன்றும் சரி, ‘விடுதலை’தான் அவர்களை, இன எதிரிகளை மிரட்டக்கூடிய மிகப்பெரிய ஓர் ஆயுதம்.  அதுதான் நமக்குப் பலம். 

அந்த ஆயுதம் சாதாரணமான ஆயுதமல்ல. அந்த ஆயுதத்தைத்தான் நாம் இப்பொழுது மிகப் பெரிய அளவிற்குப் பயன்படுத்தவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

அய்யா பேசுகிறார்!

1925 இல் நாம் யாரும் பிறந்திருக்காத காலகட்டத்தில், இங்கே இருப்பவர்களில் ஓரிருவர் பிறந்திருக்கலாம்.

அய்யா சொல்கிறார்,

‘‘எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த ஒரு வேலையைத்தான் செய்து வருகிறேன். நினைவு தப்பும் காலம் வரும் வரை இந்த ஒன்றைத்தான் செய்வேன். எனக்குப் பிறகு நான் பேசிய ஒவ்வொரு பேச்சும் நான் எழுதிய ஒவ்வொரு சொல்லும் என் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்.

இதை எல்லாம் செய்ய நான் யார் என்றால்...? பலவற்றைப் படித்தவன் என்றோ பெரிய பண்டிதன் என்றோ மாபெரும் சிந்தனையாளன் என்றோ கருதிக்கொண்டு நான் பொதுவாழ்க்கைக்கு வந்து விடவில்லை. வேறு யாரும் கண்டுகொள்ளாததால், நானே இந்தப் பணியை எடுத்து மேலே போட்டுக் கொண்டு செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

இதில் விருதோ மதிப்போ கிடைக்காது என்று தெரியும். ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரையும் பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்; ஒவ்வொரு வரிடமிருந்தும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும் என்றும் தெரியும். தெரிந்தேதான் வந்தேன். நானே எழுதி, நானே அச்சுக்கோத்து, நானே அச்சடித்து, நானே படிக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை, எழுதுவோம் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். ஒருவர் காதிலும் விழாவிட்டாலும் பரவாயில்லை என்று வீதிக்கு நடுவில் நின்றுகொண்டு உரக்கப் பேச ஆரம்பித்தேன்.

ஒரு துளி கோபமோ, வெறுப்போ கொள்ளமாட்டேன்

நீங்கள் என்னை என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும் உங்கள் ஒருவர் மீதும் நான் தனிப்பட்ட முறையில் ஒரு துளி கோபமோ, வெறுப்போ கொள்ளமாட்டேன்.

என் சமுதாய மக்களே, நீங்கள் என்னை கேவலமாகப் பார்க்கலாம்; என்னைத் தூற்றலாம்; என்மீது கல்லை வீசலாம்; என்மீது அழுகிய முட்டையை வீசலாம்; என்மீது மலத்தை வீசலாம்; என்மீது செருப்பை வீசலாம்; என்னைக் கொச்சைப் படுத்தலாம், கேவலப்படுத்தலாம், திருடன் என்று சொல்லலாம்; பணத்தை அடித்துக்கொண்டு போகிற வன் என்று சொல்லலாம்; அல்லது இந்த வயதிலே இவன் இப்படி நடந்துகொண்டானே என்று கொச் சைப்படுத்தி, ஏதோ காம இச்சை உள்ளவன்போல, நீங்கள் அறிவிழந்து பேசலாம்.

வலிக்குமே என்று அஞ்சிக்கொண்டு இருக்காமல் ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடு கிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைச் சிகிச்சை செய்கிறாரோ அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு உங்களை எல்லாம் விமர்சிக் கிறேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் நான் அளவுகடந்து நேசிக்கி றேன். தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்டிவிடக் கூடாது என்பதற்காகத்தான் உங்களை எந்நேரமும் கவனித்து வருகிறேன்.

நாக்கில் தழும்பு ஏறும்வரை உங்களுக்காகப் பேசுவேன். கை சாய்ந்து கீழே தொங்கும்வரை உங்களுக்காக எழுதுவேன். கால்கள் துவளும்வரை உங்கள் பட்டித் தொட்டிகளில் எல்லாம் நடப்பேன். எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்புவதைப் போல், நீங்களும் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள். அந்த உண்மையைப் பாதுகாக்கப் போராடுங்கள். அது ஒன்று போதும்’’ என்றார்.

இப்பொழுது நம்முடைய கடமை என்ன?

பெரியார்தான் நமக்கு ஒளி - 

பெரியார்தான் நமக்கு வழி!

நமக்கு நினைவு தெரிந்த காலம் முதற்கொண்டு பெரியார்தான் தலைவர். நமக்கு நினைவு தப்பும் காலம்வரை பெரியார்தான் நமக்கு ஒளி - பெரியார் தான் நமக்கு வழி.

அவர் கண்ட ஆயுதம்தான் ‘விடுதலை.’ அவர் கண்ட ஆயுதத்தை வைத்துத்தான் நம்முடைய எதிரிகளை சந்திக்கவேண்டும்.

அந்த ஆயுதம் பலமான ஆயுதமாக இருந்தால், அது வீடுதோறும் பாய்ந்தால் - ஏவுகணை பாய் வதைப்போல, எதிரிகளை நிலைகுலையச் செய்யும். எதிரிகள் என்றால், நமக்குத் தனிப்பட்ட எதிரிகள் அல்ல.

ஏன் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று அய்யா சொன்னார். அந்த மொழியை ஒழிப் பதற்கா? காப்பாற்றுவதற்காக - திருத்துவதற்காகத்தான்.

தந்தை பெரியாருக்கு ஈடு, இணை கிடையாது

இதுதான் ஒரு தலைவருடைய, சிந்தனையாளருடைய ஒப்பற்ற சிந்தனையாகும். இதுபோன்று சிந்தித்தவர்களில் உலக வரலாற்றில் தந்தை பெரியாருக்கு ஈடு கிடையாது, இணை கிடையாது என்பதுதான் நமக்குப் பெருமை.

தன்னுடைய பிள்ளையைக் கெட்டுப்போகாதே என்று ஒரு தந்தை கண்டிப்பது தவறா?

அப்படிப்பட்ட ஒரு பேராயுதம், போராயும் ‘விடுதலை’.

இன்றைக்கு ஏராளமான பத்திரிகைகள் வெளிவரு கின்றன. கார்ப்பரேட் முதலாளிகள் நடத்துகின்ற பத்திரி கைகள் அவை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், காவி களுக்கும் இன்றைக்கு உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

அதற்கு ஒரே ஒரு உதாரணம் - கரோனா தொற்று காலகட்டத்தில் எல்லோரும் வேலையில்லை, சாப்பாடு இல்லை, தொழிற்சாலைகளையெல்லாம் மூடினார்கள். இவ்வளவும் நடைபெற்ற நேரத்தில், ஒரு மனிதன் இந்தியாவில், ஒரு நாளைக்கு ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தான்.

அவன் யார்?

அதானி!

இதைச் சுட்டிக்காட்ட யாராவது இருக்கிறார்களா? இதைப்பற்றி எழுதுவதற்கு ஆட்கள் இருக்கிறார்களா?

நாம், அதானியிடம் சென்று வேலை கேட்டோம்; அவர் இல்லை என்று சொல்லிவிட்டார்; அந்தக் கோபத்தினால் தான் இதனைச் சொல்லுகிறோமா, இல்லையே!

நம்முடைய விவசாயி ஒருவர், கடன் வாங்கி, ஒரு தவணையைக் கட்டவில்லை என்றால், அவருடைய நிலை என்ன?

ஆனால், கார்ப்பரேட்டுகளின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்கிறார்களே?

இதையெல்லாம் சுட்டிக்காட்டி எழுதுவதற்கு ‘விடுதலை’ ஏடுதானே துணிச்சலாக இருக்கிறது.

2ஜி, 2ஜி ஊழல் என்று சொல்லியே, நடக்காத ஊழலை, ராசாமீது, கனிமொழிமீது பழி சுமத்தி, திகார் சிறைச்சாலையில் வைத்தார்கள்.

அதன் முடிவு என்னாயிற்று?

அதற்கு ஆதாரமே இல்லை என்று தீர்ப்பு வந்ததே! அதை எதிர்த்து இன்றைக்கு மேல்முறையீடு செய்கிறார்கள்.

இன்றைக்கு 5ஜி அலைக்கற்றையை மிகக் குறைவான ஏலத்திற்கு விட்டிருக்கிறார்கள். அதுகுறித்து ‘விடுதலை’யில் மிகத் தெளிவான கட்டுரை வெளிவரும்.

கருத்துச் சுதந்திரம், கொள்கைத் துணிவு என்பதை எடுத்துப் பேசக்கூடிய ஏடு ‘விடுதலை’

இந்தச் செய்திகளையெல்லாம் விளக்கமாக, தைரியமாக வெளியிடுவது ‘விடுதலை’ ஏடாகும். மார்பில் ஈட்டி வந்தாலும் சரி, அதை வெளியிட்ட தற்காக தூக்கு மேடைக்கு அனுப்பினாலும் சரி, கருத்துச் சுதந்திரம், கொள்கைத் துணிவு என்பதை எடுத்துப் பேசக்கூடிய ஏடு ‘விடுதலை’யாகும்.

இவையெல்லாம் எங்களுக்காக இல்லை - உங் களுடைய பிள்ளைகளுக்காக - ‘நீட்’ தேர்வை எதிர்த்து யார் பேச முடியும்? கியூட் தேர்வு யாருக்காக? இதை யெல்லாம் எதிர்த்துப் பேசவேண்டும் என்றால், அதற்கு விழிப்புணர்வு தேவை. அதற்குப் பாதுகாப்புக் கருவிதான் ‘விடுதலை’ என்பதை மக்கள் இன்றைக்கு ஓரளவு உணர்ந்திருக்கிறார்கள்.

அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, நம்முடைய உழைப்பின்மூலம் அவர்களுக்கு விளங்க வைக்கவேண்டும்.

முகக்கவசம், தடுப்பூசி போன்றவற்றையே விளம்பரப் படுத்திதான் அதனுடைய அவசியத்தை சொல்லவேண்டி இருக்கிறது.

அதுபோன்றுதான், ‘விடுதலை’ சந்தா கொடுங்கள், ‘விடுதலை’ சந்தா கொடுங்கள் என்று கேட்டுத்தான் ஆகவேண்டும்.

உங்களுடைய உழைப்பு வீண் போகாது!

ஆகவே, நம்முடைய உழைப்பு வீண் போகாது; உங்களுடைய உழைப்பு வீண் போகாது.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்குப் பாதுகாப்பு கருவி ‘விடுதலை’யைத் தவிர வேறு இருக்க முடியாது.

‘விடுதலை’ சந்தா கொடுத்தேன்; நான்கு நாள்கள் சேர்த்துதான் வருகிறது என்றெல்லாம் சில குறைபாடுகள் இருக்கின்றன. அந்தக் குறைபாடுகள் நிவர்த்தி செய் வதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றோம்.

ஒரத்தநாடு தோழர்களைப் பாராட்டவேண்டும்; 33 ஆவது முறையாக தொடர்ந்து ‘விடுதலை’ சந்தாக்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்று ஒவ்வொரு பகுதி தோழர்களும் செய் தார்கள் என்றால், மிகச் சிறப்பாக இருக்கும். எல்லா கிராமங்களுடைய பட்டியல்களையும் படித்தார் ஊமை.ஜெயராமன் அவர்கள். ‘விடுதலை’ நாளேடு கிராமங் களுக்கும் சென்றால், அது சுகாதாரத் துறை வேலை செய்வதுபோன்றதாகும். அறிவுச் சுகாதாரம் இது. நம்முடைய இனத்தினுடைய பாதுகாப்பு - திராவிட மாடலுடைய பாதுகாப்பு என்று சொல்லக்கூடிய அளவில், இன்றைக்கு இந்தக் கொள்கைகள் பரவவேண்டும். அதற்காக நாங்கள் எந்தவிதமான கைம்மாறும் கருதாமல் அதனை செய்கிறோம்.

60 ஆயிரம் ‘விடுதலை’ சந்தா வழங்கும் விழா - மிகச் சிறப்பான நிகழ்ச்சியாக, 61 ஆயிரம் ‘விடுதலை’ சந்தாவாகக் கொடுப்போம் என்ற உறுதியை மேற்கொண்டிருக்கின்றீர்கள்.

தஞ்சைக்கு வரும்பொழுது 

புது உற்சாகம் பெறுகிறேன்!

தஞ்சைக்கு வரும்பொழுது எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கும். சுற்றுப்பயணத்தால் அலைச் சல், உடல்வலி, தூக்கமின்மை, அதற்கேற்றவாறு சாப்பாட்டை குறைத்துக் கொண்டாலும்கூட, இங்கே வந்து உங்களையெல்லாம் பார்க்கும்பொழுது, எனக்கு ஒரு புது உற்சாகம் வரும்.

அய்யா சொன்னதுபோன்று, ஒரு தராசு தட்டில் தஞ்சை மாவட்டத்தையும், மற்றொரு தராசு தட்டில் மற்ற மாவட் டங்களையும் இட்டால், தஞ்சை மாவட்டம் இருக்கின்ற தட்டு மேலேதான் இருக்கும். அவ்வளவு கனமாக இருக்கும்.

ஆனால், இப்பொழுது அது பெரிய கேள்விக்குறிக்கு - சவாலுக்கு ஆளாகியிருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. மற்ற மாவட்டத் தோழர்கள் உங்களைத் தாண்டக் கூடிய அளவிற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

போராட்டம் என்றால், தஞ்சை மாவட்டத் தோழர் கள்தான் ஏராளமாக வருவார்கள். நிதி சேர்ப்பா? அவர்கள்தான் முதலில் இருப்பார்கள்.

எடைக்கு எடை  பணம் கொடுத்த பெருமை தஞ்சைக்குத்தான்!

தந்தை பெரியாருக்கு முதன்முதலாக எடைக்கு எடை  நாணயங்கள் கொடுத்த பெருமை தஞ்சைக்குத்தான்.

ஆகவே ‘‘உங்களால் முடியாதது எதுவும் இல்லை.

நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது -

வேறு யாராலும் முடியாதது, நம்மால் மட்டுமே முடியும்!’’

என்கிற உறுதி நமக்கு உண்டு.

ஆகவே, அதில் வெற்றியடையலாம்; வெற்றி அடைய வேண்டும். அது நமக்காக அல்ல - இந்தப் பணி நம்முடைய இனத்திற்காக.

நம்முடைய குறிக்கோள் நிதி சேர்ப்பதல்ல - இந்தப் பணி நம்முடைய கருத்துகள் நாடெங்கும் பரவேண்டும் என்பதற்காகத்தான்.

கடைவீதிகளுக்குச் சென்று பிரச்சாரம்!

ஆகவே நண்பர்களே, நேற்று ‘விடுதலை’யில் ஓர் அறிக்கை வந்திருக்கிறது.

வருகின்ற 18, 19 20 ஆகிய நாள்களில் ‘விடுதலை’ 88 ஆண்டு சந்தா சேர்ப்பு இயக்கம் என்ற ஒரு பதாகையைப் பிடித்துக்கொண்டு, வாய்ப்பு நேரங்களில், அந்தந்த பெரு நகரங்களிலும், தலைநகரங்களில், மாவட்டத் தலைநகரங் களில், கழக மாவட்டத் தலைநகரங்களில் தோழர்கள், மாணவர் கழகம், மகளிரணி, இளைஞரணி, வழக்குரை ஞரணி, பகுத்தறிவாளர் அணி மற்ற எல்லா அணியினரும் சேர்ந்து குழுவாகச் சென்று,  ‘விடுதலை’யினுடைய சிறப்பைப்பற்றி  வந்திருக்கின்ற துண்டறிக்கைக் கொடுத்து, ‘விடுதலை’க்கு சந்தா கொடுங்கள் என்று கேட்கவேண்டும்.

இதை மக்கள் இயக்கமாக ஆக்கவேண்டும். ‘விடுதலை’ ஏட்டை வாங்குங்கள் என்று கடைவீதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும்.

இல்லந்தோறும் விடுதலை -

உள்ளந்தோறும் பெரியார் என்ற கருத்தை கடை வீதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்து நாங்கள் அறிவித்தோம்.

இங்கே நம்முடைய தோழர்கள் சந்தா திரட்டும்பொழுது ஏற்பட்ட அனுபவங்களை சொன்னார்கள். வசூல் செய்யும் அனுபவமே மிகவும் வித்தியாசமான அனுபவமாகும். யார் சந்தா கொடுப்பார் என்று நினைத்துச் செல்வோமோ, அவர் கொடுக்கமாட்டார்; கொடுக்கமாட்டார் என்று நினைத்துச் செல்லுவோம், ஆனால், அவர் சந்தா கொடுப்பார்.

சந்தாக்கள் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் நாம் செய்வது பிரச்சாரம்.

8 பேர் சந்தா இல்லை என்று சொல்லட்டும்; இரண்டு பேர் சந்தா கொடுக்கட்டும். ஆனால், 10 பேருக்கும் ‘விடுதலை’ ஏடு வருகிறது என்று தெரியும். இது ‘விடுதலை’ யினுடைய தேவை என்ன என்பதுபற்றிய பிரச்சாரம் ஆகும்.

பிரச்சார இயக்கத்தை வெற்றி பெறச் செய்தால், எதிரிகள் மிரளுவார்கள்!

எனவேதான், இந்தப் பிரச்சார இயக்கத்தை வெற்றி பெறச் செய்தால், எதிரிகள் மிரளுவார்கள். எதிரிகளை மிகப்பெரிய அளவிற்குச் சந்திக்கின்ற களத்தில், அது ஒரு காலகட்டம்; அது ஒரு குறியீடு என்ற அளவில், மிகச் சிறப்பான வகையில், நீங்கள் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

10 நாள்கள் இடையறாத உழைப்பு - அறுவடை - அறுவடை செய்தவற்றை பாதுகாப்பாக களத்து மேட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்பதில்தான் நம்முடைய வெற்றி அடங்கியிருக்கிறது.

வாழ்க பெரியார்!  வளர்க விடுதலை! வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


No comments:

Post a Comment