புதுக்கோட்டையில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

புதுக்கோட்டையில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை,ஆக.19- புதுக்கோட்டை மருத் துவக் கல்லூரியில் 50 இடங்களுடன் பல் மருத் துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மருத் துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில், மருத்துவமனை தினத்தை முன்னிட்டு பல் மருத்துவக் கண்காட்சி, ரத்த தான முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  17.8.2022 அன்று தொடக்கி வைத்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தமிழ்நாட்டில்  அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 1953-ஆம் ஆண்டு ஆக. 10-ஆம் தேதி தொடங்கப்பட்டது. 69-ஆவது ஆண்டு மருத்துவமனை ஆரம்ப தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு 100 இளநிலை மருத்துவ மாணவர்கள் என மொத்தம் 500 இளநிலை மருத்துவ மாணவர்களும், ஆண்டுக்கு 40 முதுநிலை மருத்துவ மாணவர்கள் என மொத்தம் 120 முதுநிலை மருத்துவ மாணவர்களும் இங்கு படித்து வருகின்றனர். ஆசியாவிலேயே மிக அதிக அளவிலான, ஆண்டுக்கு சுமார் 3.20 லட்சம் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பல் மருத்துவமனையாக இது விளங்குகிறது. 

புதிய பல் மருத்துவக் கல்லூரி: 

இந்த ஆண்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் 50 இடங்களுடன் பல் மருத்துவக் கல்லூரி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பி.பி.ராஜன், தென்னிந்தியாவில் பிரபலமான பல் அறுவை சிகிச்சை நிபுணரான ஜே.ஜி.கண்ணப்பன், பற்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த முதல் மருத்துவரான சி.கே.தனசேகரன், வாய்வழி நோயியல் நிபுணரான விஸ்வநாத், புகழ்பெற்ற பற்சீரமைப்பு நிபுணரான ரங்காச்சாரி, கருநாடகா மாநிலத்தில் உள்ள பாலாஜி பல் மருத்துவமனையின் முதல்வர் சதாசிவரெட்டி, பற்சீரமைப்பு பற்றி புத்தகம் எழுதிய முதல் இந்திய மருத்துவரான பிரேம்குமார் முதலியோர் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் படித்த, புகழ்பெற்ற மருத்துவர்களாவர்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது தீவிரப்படுத்தப்படும். இந்த கல்வி யாண்டில் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். கண் பரிசோதனைக்குப் பிறகும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மேல் சிகிச்சை அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. செவிலியர் படிப்பை தனியார் செவிலியர் கல்லூரிகளில் அதிகளவில் கற்பித்து வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் செவிலியர் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சியில் புதிதாக செவிலியர் கல்லூரி:

வரும் கல்வியாண்டில் திருச்சியில் புதிதாக செவிலியர் கல்லூரி தொடங்கப்படும். சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் எதிரில் 6 ஏக்கர் இடம் உள்ளது. அங்கு செவிலியர் படிப்பு அல்லது மருத்துவம் சார்ந்த படிப்புகளை தொடங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்றார் அவர்.


No comments:

Post a Comment