பெரியார் சிலையை உடைப்போம் என்போர் சிந்தனைக்கு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

பெரியார் சிலையை உடைப்போம் என்போர் சிந்தனைக்கு!

சிறீரங்கம் ரெங்கநாதன் கோயில் எதிரில் பெரியார் சிலை இருக்கலாமா? அதில் கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம் பெறலாமா? அந்தச் சிலையை உடைப்போம் என்று சங்கிகள் போர்வையில் சிலர் அவர்களுக்கே உரித்தான வன்முறையோடு வார்த்தைகளைக் கொட்டுகிறார்கள்.

அதன்மீது எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.

இன்று நேற்றல்ல; நீண்ட காலமாகவே இதனை சர்ச்சையாக்கி 'வீராவேசம்' (?) பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி உளறிக் கொட்டுபவர்களுக்கு உண்மையிலேயே கடவுள் நம்பிக்கை இருக்குமானால், அந்தக் கடவுள் சக்தியின்மீது நம்பிக்கை இருக்குமானால், பெரியார் சிலை விடயத்தில் கடவுள் பார்த்துக் கொள்ள மாட்டாரா? அப்படிக் கடவுளால் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் அதன் பொருள் என்ன? அங்கும் பெரியார்தான் வந்து நிற்கிறார். கடவுளாவது, வெங்காயமாவது- அடித்து வைக்கப்பட்ட கல்லு அல்லது உலோகம் என்ற விடைதானே கிடைக்கிறது.

கடவுளைக் காப்பாற்ற மனிதன் புறப்படுகிறான் என்கிற போது, அந்த இடத்திலேயே அந்த மனிதன் கடவுளைக் கைவிட்டான் என்று பொருளாகாதா?

இவர்கள் சொல்லுகிற சிவனோ, விஷ்ணுவோ, பிர்மாவோ இடைக் காலத்தில் திணிக்கப்பட்டது தானே! இந்தக் கடவுள் களுக்காக - இந்தக் கடவுள்கள் அடித்து வைக்கப்பட்டுள்ள கோயில்களைப்பற்றிய தல புராணங்களைப் படித்தால், அவற்றில் ஆபாசப் புழுக்கள்தானே நெளிகின்றன.

கடவுள் உருவமற்றவர் - அங்கு இங்கு எனாது எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவர் என்று சொல்பவர்களே - கடவுள்களுக்கு உருவம் செய்து வைப்பதும், கடவுளுக்கு மனைவிகள் - வைப்பாட்டிகள், பிள்ளைக் குட்டிகள் - என்று எழுதி வைத்திருப்பது எல்லாம் பச்சையான முரண்பாட்டின் மொத்த வடிவங்கள் அல்லவா!

கோயிலையும், கடவுளையும் வைத்து ஒரு கூட்டம் சுரண்டிப் பிழைப்பதல்லால், வேறு காரணங்கள் எவையாக இருக்க முடியும்?

இன்னொரு முக்கிய கேள்வி உண்டு. அர்த்தமுள்ள ஹிந்து மதத்தில் நாத்திகத்துக்கும் இடம் உண்டு என்று சந்தர்ப்பமும், நிர்ப்பந்தமும் ஏற்படும் போது பெருமையாகப் பேசும் இவர்கள், ஒரு கடவுள் மறுப்பாளரின் சிலையை ஓரிடத்தில் வைக்கும்போது தாண்டிக் குதிப்பது - ஏன்?

ஹிந்து மதத்தைப் பொறுத்தவரை வேத மறுப்பாளன் தான் நாத்திகனே தவிர, கடவுள் மறுப்பாளன் அல்லன்.

இதனை நாமாக இட்டுக் கட்டிக் கூறவில்லை. இவர்களின் மனுதர்ம சாஸ்திர நூலே கூறுகிறதே!

வேதம் (சுருதி), தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான் (மனுதர்மம் அத்தியாயம் - 2 சுலோகம் -11).

மனுதர்மத்தின் இந்தக் கூற்றை  வழிமொழியும் வகையில் மறைந்த மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியும் நூற்றுக்கு நூறு ஒப்புக் கொள்கிறார்.

"நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வர வாதம் என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டேகூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும்" அப்படிப்பட்ட  பல பேர் இருந்திருக்கிறார்களே. இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்.

வைதிக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் - என்பதே ஞானசம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது - ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல" என்ற சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்து வெறும் வாய் வார்த்தையில் அல்ல- அச்சுப் போட்டு நூலாகவே வெளி வந்துள்ளதே! ('தெய்வத்தின் குரல்' - இரண்டாம் தொகுதி 407 - 408).

இதை எல்லாம் மறுக்கப் போகிறார்களா? மனு தர்மத்தை எரிக்கப் போகிறார்களா? சங்கராச்சாரியாரின் கொடும்பாவியை எரிக்கப் போகிறார்களா? சங்கராச்சாரியார்களைவிட இந்தக் காவிகள் ஹிந்து மதத்தின் பாஷ்ய கர்த்தாக்களா? ஹிந்து மதத்தைக் காப்பாற்றக் கிளம்பி இருக்கிறார்களா?

கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று துதிபாடும் கூட்டத்தாரை நோக்கி இன்னொரு கேள்வி - கடவுள் பெரியார் சிலையிலும் இருப்பார் என்று ஒப்புக் கொண்டு ஓரம் போக வேண்டியதுதானே!

சர்ச்சுக்கு எதிரில் பெரியார் சிலை வைக்க முடியுமா? என்று புத்திசாலித்தனமாகக் கேட்பதாக நினைத்துக் கொண்டு கேட்கிறார்கள். திண்டுக்கல்லுக்குச் சென்று அவர்கள் பார்க்கட்டும் - புரியும்.

அய்யய்யோ, கடவுள் வாழும் கோயிலுக்குமுன் கடவுள் மறுப்பாளரான பெரியார் சிலை இருக்கலாமா? என்று வேட்டியை மடித்துக் கட்டும் ஆசாமிகள் - அந்தக் கடவுளைக் கும்பிடப் போகும் பக்தர்களை ஜாதிவாரியாகப் பிரித்து - கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட உரிமையற்றவர்கள் என்று ஆக்கியவர்கள் யார்?

அர்ச்சகர்களாக ஆகும் தகுதி பார்ப்பனர்களுக்கு மட்டும் தான் என்று கூறி உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடுவது ஏன்? அப்படியானால் கடவுளுக்கே ஜாதி நம்பிக்கை உண்டா? எல்லா உயிர்களையும் படைத்தவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே, தன் பிள்ளைகளைப் பாரபட்சமாகப் பார்த்து ஒதுக்கி வைத்தால், அந்தக் கடவுள் உண்மையான தந்தையாக இருக்க முடியமா?

தீண்டத்தகாதவர் என்று கடவுள் கருதுவார் என்றால் அந்தக் கடவுளைக் கடுமையாக விமர்சிக்கும் நிலை ஏற்படத்தானே செய்யும்?

சர்வ சக்தி கடவுள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் - அந்தக் கடவுள் திருட்டுப் போவது ஏன்? அந்தத் திருட்டில் கோயில் அர்ச்சகன் சம்பந்தப்பட்டு ஜெயிலுக்குப் போவது எல்லாம் ஏன் நடக்கிறது?

எல்லோருக்கும் பொதுவானவர் கடவுள் என்றால் திருப்பதி  ஏழுமலையானுக்கு  3 கிலோ தங்கத்தில் மறைந்த காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பூணூல் அணிவித்தது ஏன்? ('தினமலர்' 27.2.2014). அதே ஏழுமலையானுக்கு சிறீரங்கம் நாராயண ஜீயர் ரூ.50 லட்சத்தில் வைரப் பூணூல் சாத்தினாரே! (தினமணி 4.3.2007). திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமிக்கு ரூ.15 லட்சம் மதிப்பில்  ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்  தங்க பூணூல் சாத்தியது ஏன்? சிறீரங்கம் ரெங்கநாதனுக்கு ஜீயர் ரூ.52 லட்சம் செலவில் தங்கப்பூணூல் பூட்டியது ஏன்?

கடவுள்கள் எல்லாம் பார்ப்பன ஜாதியா? கடவுளுக்காக வக்காலத்து வாங்கும் 'சூத்திர' ஆசாமிகள் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

பெரியார் சிலையை உடைப்போம் என்று அலறும் 'சூத்திரர்கள்' கொஞ்சம் சிந்திக்கட்டும்!

சென்னை உயர்நீதிமன்றமே - தந்தை பெரியார் சிலைபற்றியும் அதில் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகம் பற்றியும் - தெளிவாகத் தீர்ப்புக் கூறி ஏற்றுக் கொண்டது எல்லாம் காவிகளுக்குத் தெரியுமா!

No comments:

Post a Comment