எழுச்சியூட்டும் அரியலூர் இளைஞர் அணி மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

எழுச்சியூட்டும் அரியலூர் இளைஞர் அணி மாநாடு

கடந்த ஜூலை 30ஆம் தேதி அரியலூரில்  இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பைப் பெற்றேன். 

காலை அமர்வில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அதில் விடுபட்டவை ஆசிரியரின் கவனத்திற்கு சென்று மீண்டும் வாசிக்கப்பட்டன.

யோக கலையைத் தாங்கள்தான் மீட்டெடுப்பு செய்வதுபோல் விளம்பரபடுத்திக் கொள்ளும் விளம்பர பிரியர்களுக்கு விடை கொடுக்கும் விதமாக நம்முடைய பாரம்பரிய கலைகளில் அதுவும் ஒன்று என்று நிரூபித்துக் காட்டினர் மாணவ செல்வங்கள். அதிலும் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழில் வாசகம் அமைத்து செய்து காட்டிய விதம் அருமை - ஆசிரியர் அவர்களின் உரையில் விடுதலை சந்தா சேர்ப்பு நம் இனத்திற்கு எவ்வளவு முக்கியம் மற்றும் ஒன்றிய அரசின் - மாணவ மாணவிகளுக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இறுதியில் வெற்றி அடைவது நாம் என்ற போர்க்குண போர்முரசு அரங்கம் அதிர கேட்டோம். 

மாலையில் பேரணி சங்பரிவாரங்களின் சங்கை நெரிக்கும் விதத்தில் அமைந்தது. பீறிட்டு எழுந்த இளைஞர்களின் எழுச்சி புதிய புத்தாக்கத்தை தந்தது. பெரியாரின் இராணுவக் கட்டுப்பாட்டுடன் புறப்பட்ட பேரணியில் மூடநம்பிக்கையை முறித்தெறியும் காட்சிகள் கண்டு ஆயிரக்கணக்கானோர் அசந்து போனார்கள். 

மாலை திறந்தவெளி மாநாடு சிறப்பான ஏற்பாடுகளுடன் தொடங்கிய வேளையில், எதிரிகளுக்கு இசைவு காட்டுவது போல் இயற்கை சற்று மிரட்டியது. ஆனாலும் கடைசியில் தோற்றது. 

அந்தப் பகுதியின் இயக்க முன்னோடிகளின் வாரிசுகள் இன்றைய சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெரு மக்கள் என்பதை அங்கு வந்துதான் அறிந்துகொண்டோம். நாங்கள் என்றைக்கும் கடவுள் மறுப்பாளர்கள் என்று பறைசாற்றிய கொள்கையின் மகரந்தமாக இருந்தது அவர்களின் உரை. சங்கி கூட்டம் கொடுக்கும் தொல்லைகளை எடுத்துக் கூறினார்கள். சிவன் கோவில் சுவரெழுத்திற்கு அமைச்சர் சிவசங்கரின் வீடு முற்றுகையாம் -  திராவிட மாடல் ஆட்சியின் மீது  எவ்வளவு வெறுப்பு இவர்களுக்கு. திராவிடர் கழக மாநாடு என்றால் வரலாற்றைக் கூறுவது மட்டுமல்ல வரலாறுப் படைக்கும் என்பதை நிரூபிக்கும் காட்சிகள் நிறைய உண்டு. மணமகன் - மணமகள் சம்மதத்தோடு திறந்தவெளி திருமணம், பெண்களின் அடிமை சின்னமாம் தாலியை சுய விருப்பத்தோடு அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி! ஆசிரியர் அய்யா அவர்கள் கூறியதுபோல் பெரியார் கொள்கை வெற்றிக்கனியை பறித்துக் கொண்டு இருக்கிறது என்பதில் அய்யமில்லை.

மிகக் குறுகிய காலத்தில் இப்படியொரு மாநாட்டை நடத்திக் காட்டிய அரியலூர் பொறுப்பாளர்கள் - கழகத்தின் பொதுச் செயலாளர்கள்  இவர்களின் உழைப்புக்கு ஈடே இல்லை என்று எண்ணுகிறேன். பண்டார சன்னதிகள் உலா வருவதை விலா வாரியாக காட்டும் தொலைக்காட்சிகள், செய்திதாள்கள் இப்படி ஒரு மாநாட்டை பற்றிய செய்தியை வெளியிட தயங்குகிறார்கள்  என்பது வருத்தமே!

- பா. நாகராஜன்

நகரச் செயலாளர், திருத்துறைப்பூண்டி

No comments:

Post a Comment