கருவில் உருவாகும்போதே எதிர்நீச்சல் போட்டது ‘விடுதலை’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

கருவில் உருவாகும்போதே எதிர்நீச்சல் போட்டது ‘விடுதலை’

  • ‘விடுதலை’யைப் பரப்புவது வியாபாரத்திற்கல்ல!
  • நம் இனத்திற்காக, இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதற்காக!
  • ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு வரும் எதிர்ப்புகளை எதிர்ப்பதற்காக!

எல்லாத் தரப்பினரையும் சந்தித்து சந்தாக்களை சேகரிப்பீர்!

கூச்சப்படாதீர்கள், பொதுத் தொண்டுக்காகவே இந்தப் பணி!

ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியர் தமிழர் தலைவர் கருத்துரை

ஈரோடு, ஆக.13 -  ‘விடுதலை’ பிறந்த ஈரோட்டில் இன்று நாம் கூடியிருக்கிறோம். நாம் ‘விடுதலை’க்கு சந்தா சேர்ப்பது வியாபாரத்துக்காக அல்ல - நம் இன நலனுக் காக, கொள்கையைப் பரப்புவதற்காக - ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு வரும் எதிர்ப்புகளை எதிர்ப்பதற்காக; எனவே, தோழர்களே அனைத்துத் தரப்பினரையும் கூச்சமின்றிச் சந்தித்து ‘விடுதலை’ சந்தாக்களை சேகரிப்பீர்! வெற்றி நமதே என்றார் ‘விடுதலை’ ஆசிரியர்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 11.8.2022 அன்று ஈரோட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

கோவை - ஈரோடு மண்டல கலந்துறவாடல்

அவரது உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடை பெறக் கூடிய கோவை மற்றும் ஈரோடு மண்டலங் களுடைய கலந்துறவாடல் - விடுதலை சந்தா திரட்டல் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற நம்முடைய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், நூறாண் டைத் தாண்டி, நமக்கெல்லாம் உற்சாகத்தோடு ஊக்க மளித்துக் கொண்டிருக்கக்கூடிய பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் மானமிகு அய்யா பொத்தனூர் க.சண்முகம் அவர்களே,

கழகத்தினுடைய பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் அவர்களே, மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்களே, அமைப்புச் செயலாளர்கள் ஈரோடு சண்முகம் அவர்களே, ஊமை ஜெயராமன் அவர்களே, பேராசிரியர்கள் முனைவர் தவமணி அவர்களே, முனைவர் காளிமுத்து அவர்களே,

கோவை மண்டலத் தலைவர் கருணாகரன் அவர்களே, செயலாளர் சிற்றரசு அவர்களே, ஈரோடு மண்டலத் தலைவர் நற்குணம் அவர்களே, செயலாளர் ராஜமாணிக்கம் அவர்களே, அவினாசி பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் ஆசிரியர் ராமசாமி அவர்களே, ஈரோடு மாவட்டத் தலைவர் சிற்றரசு அவர்களே, செயலாளர் மணிமாறன் அவர்களே, மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் தோழர் வேலுச்சாமி அவர்களே,

கோவை மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் அவர்களே, தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன் அவர்களே, செயலாளர் தோழர் சண்முகம் அவர்களே, கோவை மாவட்டச் செயலாளர் தோழர் செந்தில்நாதன் அவர்களே, திருப்பூர் மாவட்டச் செய லாளர் யாழ்.ஆறுச்சாமி அவர்களே,

கோவை மண்டல மகளிரணி செயலாளர் தோழர் கலைச்செல்வி அவர்களே, மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் பிரபாகரன் அவர்களே, கோவை மண்டல இளைஞரணி செயலாளர் தோழர் முனீஸ்வரன் அவர்களே,

வழக்குரைஞரணியினுடைய மாநில துணைத் தலைவர் வழக்குரைஞர் திருப்பூர் பாண்டியன் அவர் களே, நீலமலை மாவட்ட செயலாளர் தோழர் மகேந்திரன் அவர்களே, பெரியார் மருத்துவக் குழுமத்தினுடைய தலைவர் டாக்டர் கவுதமன் அவர்களே, நாமக்கல் மாவட்டத் தலைவர் தோழர் பெரியசாமி அவர்களே, கோபி மாவட்டத் தலைவர் தோழர் சிவலிங்கம் அவர்களே,

உழைப்புத் தேனீக்களாக ‘விடுதலை’ சந்தாக்களைத் திரட்டும் பணியில்...

மற்றும் இந்தக் கூட்டத்திற்கு ஏராளமாக வருகை புரிந்துள்ள அனைத்துப் பெரியவர்களே, தோழர்களே, செயல்வீரர்களே - உழைப்புத் தேனீக்களாக விடுதலை சந்தாக்களைத் திரட்டும் பணியில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அருமைத் தோழர்களே, நண்பர்களே, உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலாவதாக இந்த சந்திப்பு என்பது - நமக்கெல்லாம் - எனக்கும் சரி - உங்களுக்கும் சரி ஒரு நல்ல உற்சாக மூட்டக்கூடிய ஒரு மகிழ்ச்சிமிகுந்த சந்திப்பாகும்.

ஈரோட்டிலிருந்து தொடங்கிய பயணம் என்றைக்கும் தோல்வியுற்றதாக வரலாறே கிடையாது

இந்தப் பயணத்தை ஈரோட்டிலிருந்து தொடங்கு கின்றோம். நம்முடைய பயணமே ஈரோட்டிலிருந்துதான் எப்பொழுதும் தொடங்கும்.

அப்படிப்பட்ட இந்தப் பயணம் - ஈரோட்டிலிருந்து தொடங்கிய பயணம் என்றைக்கும் தோல்வியுற்றதாக வரலாறே கிடையாது.

தந்தை பெரியார் அவர்கள் அழகாகச் சொன்னார்கள், ‘‘என்னுடைய வெற்றி என்பது என்றைக்கும் அடைய முடியாதது அல்ல; கொஞ்சம் காலதாமதமானாலும் நிச்சயமாக நான் வெற்றியடைவேன்’’ என்று சொன்னார்.

அதையெல்லாம் நாம் நடைமுறையிலே பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

‘விடுதலை’யில் நான் பொறுப்பேற்று நேற்றோடு (10.8.2022) 60 ஆண்டுகாலம் நிறைவுகிறது என்று நினை வூட்டினீர்கள். 

நான் பெரியாரின் 

வாழ்நாள் தொண்டன்

அது ஒரு குறியீடு - அவ்வளவுதான்! அதற்கு மேல் அதில் ஒன்றும் முக்கியத்துவம் இல்லை.

அய்யா அழைத்தார் - 

நான் பெரியாரின் வாழ்நாள் தொண்டன்.

அன்றும் - இன்றும் - என்றும்!

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இந்தப் பணியை செய்வதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.

ஏனென்றால், இந்த 60 ஆண்டுகாலத்தில் ‘விடுதலை’ ஏட்டுக்கு எப்படிப்பட்ட வளர்ச்சி? சமுதாய மாற்றங்கள் - எந்த நோக்கத்திற்காக ‘விடுதலை’ தொடங்கப்பட்டதோ  - அவற்றை அடைந்தன என்பதைத்தான் நான் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கிறேன்.

அது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. அது அடைய வேண்டிய இலக்கு - தள்ளியிருந்தாலும் கூட - அது எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல. அது ஆழமான சமுதாய மாற்ற அளவுகோலைப் பொறுத்தது.

ஆங்கிலத்திலே ஒன்றைப்பற்றி அளவீடு செய்யக்கூடிய நேரத்தில், இரண்டு வகையான முறையைக் கையாளுவார்கள் - பொருளாதாரம் படித்தவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

ஒன்று, எண்ணிக்கை அடிப்படையிலான ஓர் ஆய்வு. அதை Quantitative Analysis என்று சொல்வார்கள். 

இன்னொன்று, அதனுடைய தன்மையைப் பொறுத்து இருக்கக்கூடியது. அதை   Qualitative Analysis   என்று சொல்வார்கள்.

‘விடுதலை’ செய்திருக்கின்ற சாதனையன்றி  வேறு எதுவுமே இல்லை!

அந்த வகையில் பார்க்கும்பொழுது, நம்முடைய ‘விடுதலை’, நம்முடைய இயக்கம் இவற்றிற்கெல்லாம் இருக்கின்ற தனித்தன்மை என்னவென்றால்,  இவற்றை எப்பொழுதுமே எண்ணிக்கை அளவிலே வைத்துப் பார்ப்பதில்லை. அதனுடைய குணத்தன்மையை வைத் துக்கொண்டு பார்க்கும்பொழுது, இவை செய்திருக்கின்ற சாதனையன்றி வேறு எதுவுமே இல்லை என்ற அளவில், நமக்குப் பெருமைத் தரக்கூடியன.

நான் இங்கே அமர்ந்து, மற்றவர்களின் உரையைக் கேட்கும்பொழுது, உற்சாகமாக இருந்தது.

இன்னுங்கொஞ்சம் தள்ளிப் போனால், கச்சேரி வீதியில் அன்றைய ‘குடிஅரசு’ அலுவலகம் - இப் பொழுது, அது ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுடைய இல்லம்.

நாங்கள் எல்லாம் பயிற்சி மாணவர்களாக இருந்த பொழுதெல்லாம், அந்த அலுவலகத்திற்குச் சென்று எட்டிப் பார்ப்போம். அந்த இடம் அறிவு ஊற்று. அந்த இடத்திற்கு ஒரு பெரிய வரலாறு உண்டு.

பேரறிஞர் அண்ணா அவர்கள் பெற்ற ‘விடுதலை’ யினுடைய ஆசிரியர் என்ற பாரம்பரியத்தைத்தான், தந்தை பெரியார் அவர்கள் ஒரு தொடர்ச்சியாக எனக்கு வழங்கியிருக்கிறார், வேறு ஆள் கிடைக்காத காரணத் தினால்.

அதேபோல, அம்மா அவர்கள் இங்கேதான் குடியிருந்தார்கள். ஏறத்தாழ 1938 ஆம் ஆண்டிலிருந்து 1949 ஆம் ஆண்டு வரையில், அய்யா அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, 1942 ஆம் ஆண்டு ‘திராவிட நாடு’ பத்திரிகையைத் தொடங்கிய காலகட்டம் வரையில், ‘விடுதலை’ க்கு அண்ணா அவர்கள்தான் ஆசிரியராக இருந்தார். அதற்கு முன்பு, பல அறிஞர் பெருமக்கள், சிதம்பரனார் போன்றவர்கள், பண்டித முத்துசாமி பிள்ளை, டி.ஏ.வி.நாதன் போன்றவர்கள் ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள்.

‘விடுதலை’யினுடைய வீர வரலாறு

இந்த இடத்தின் அருகில், ‘விடுதலை’யினுடைய வெளியீட்டாளராக இருந்த பெரியநாயக்கர் என்று இந்த ஊரிலே அழைக்கப்படக் கூடிய ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள். அய்யாவினுடைய அண்ணன் பதிப்பாளராக இருந்தார். அவர் கைது செய்யப்பட்டு, அரசாங்கத்தாலே எப்படியெல்லாம் கொடுமையாக நடத்தப்பட்டார் என் பதை ‘விடுதலை’யினுடைய வீர வரலாறு என்ற புத்தகம் வந்திருக்கிறது; அதைப் படித்தால் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

அதேபோல, இந்தத் தெருவிலிருந்துதான் மீண்டும் ‘விடுதலை’  வெளிவந்தது.

ஆகவே, உணர்ச்சிபூர்வமான ஒரு சூழல் இன்றைக்கு. ஒருபக்கம் நீங்கள் 60 ஆயிரம் சந்தாக்களைப்பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள்.

ஆனால், எப்படி உருவாயிற்று அது?

கருவில் உருவாகும்பொழுதே, மிகப்பெரிய அள விற்கு எதிர்நீச்சல் - அதுதான் இந்த ஏடு - இயக்கம். வேறு எந்த ஒரு ஏட்டிற்கும் இந்தப் பெருமை கிடையாது.

அது டிக்ளரேசன் வாங்குகின்ற நேரத்தில்கூட, அரசாங்கம் இதற்கு ஜாமீன் கட்டித்தான் வெளியே வரவேண்டும் என்று சொல்லிற்று.

எதிர்ப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஏடு - அன்றும் - இன்றும் ‘விடுதலை’

குழந்தை பிறப்பதற்கு முன்புகூட, அந்தக் குழந்தையினுடைய தன்மை எப்படி இருக்கும் என்று அச்சப்படக்கூடிய அளவில், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம், அன்றைய ஆச்சாரியாரு டைய ஆட்சி -  இவையெல்லாம் இருக்கக்கூடிய காலகட்டத்தில், எதிர்ப்பிலே பிறந்து, எதிர்ப்பிலே வளர்ந்து, எதிர்நீச்சல் அடித்து, எதிர்ப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஏடு - அன்றும் - இன்றும் ‘விடுதலை’  என்ற பெருமைக்குரிய ஏடாகும்.

எனவே, ‘விடுதலை’ சந்தாக்களை 60 ஆயிரம் தரப் போகிறேன் என்ற ஒரு அளவீடு வைத்தீர்கள் என்று சொன்னால், அது ஒரு 60 ஆண்டுகளைப் பயன்படுத்தியதற்கான ஒரு குறியீடே!

அவினாசி அய்யா ஆசிரியர் ராமசாமி

பகுத்தறிவாளர் கழகத்தினுடைய பொறுப்பாளர் அவினாசி அய்யா ஆசிரியர் ராமசாமி அவர்கள் சொன் னதைப்போல, இது பல மடங்காக இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

காரணம் என்னவென்றால், இதற்கு எப்படியெல்லாம் தோழர்கள் செயல்படப் போகிறார்கள் என்பதை எடுத்துச் சொன்னார்.

நண்பர்களே, நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்; ஒவ்வொருவரும் நாம் முயற்சி எடுத்தால், மக்கள்  மத்தியில் சென்றால், இதை ஒரு சர்வே போன்று பார்க் கின்ற நேரத்தில்,  எவ்வளவு பயன் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

நம்முடைய தோழர்கள் சந்தாக்களுக்காக பலரைப் பார்த்திருப்பீர்கள். நம்மைப் பொறுத்தவரையில், நம்மு டைய தோழர்கள் ‘விடுதலை’  சந்தாதாரராக ஆகவேண் டும் என்பது இரண்டாம் பட்சம். அது முக்கியமல்ல.

‘விடுதலை’யில் எழுதுகின்ற கருத்துகள், நமக்கு அப்பாற்பட்டவர்களைப் போய்ச் சேரவேண்டும்

நாம் ‘விடுதலை’யில் எழுதுகின்ற கருத்துகள், நமக்கு அப்பாற்பட்டவர்களைப் போய்ச் சேரவேண்டும்; பொதுமக்களைப் போய்ச் சேரவேண்டும். சாதாரண மக்களைப் போய்ச் சேரவேண்டும். அவர்களை சிந்திக்க வைக்கவேண்டும்; எல்லாத் துறைகளிலும் மாற்றம் வேண்டும். அந்த மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம்.

ஏதோ நன்றி காட்டுவது, பாராட்டுவது என்பதல்ல நண்பர்களே - அய்யா நம்முடைய நூறாண்டு கடந்த தலைவர் அழகாக ஒன்றைச் சொன்னார்கள்.

இப்பொழுது ஏற்பட்டு இருக்கின்ற ஆபத்து - நாட் டைக் கவ்விக் கொண்டிருக்கின்ற ஆபத்து - அதுவும் கடந்த எட்டாண்டுகளாக இந்த நாட்டையே காவி மண்ணாக ஆக்கவேண்டும் என்பதற்காக எவ் வளவு தலைகீழான முயற்சிகள்.

‘‘எல்லா இடங்களிலும் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்; ஆனால், தமிழ்நாட்டில்தான் எங்கள் வித்தைகள் நடைபெறவில்லையே! எப்படியாவது அந்த வித்தைகளை இங்கே நிறைவேற்றவேண்டும்‘‘ என்று சூழ்ச்சிப் பொறிகளை அமைத்த நேரத்தில்தான், இந்த 60 ஆயிரம் ‘விடுதலை’ என்பது  நமக்குப் பேராயுதம்.

‘விடுதலை’  என்பது காகிதமல்ல  - அது ஆயுதம் - அறிவாயுதம்!

‘விடுதலை’  என்பது காகிதமல்ல  - அது ஆயுதம் - அறிவாயுதம். அதைத்தான் ஒவ்வொருவரிடமும் எடுத்துச் சொல்லவேண்டும்; அதைத்தான் பரப்ப வேண்டும்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பல வித்தைகளை, பலவிதமான வேலைகளைச் செய்து அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் என்னாகும்? இந்த நாடு ஜனநாயக நாடாக இருக்கிறது என்பதை இன்றைக்கு பலரும் கவலையோடு உணர்ந்திருக்கின்ற காரணத்தி னால்தான், அங்கே சென்றவர்கள்கூட, உணர்ந்திருக் கின்ற காரணத்தினால்தான், இன்றைக்கு பீகாரில் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

இதற்கெல்லாம் பெரியாருடைய சிந்தனைகள் மிகவும் முக்கியம்.

பெரியார் தந்த ஆயுதம் - பெரியாரே ஒரு ஆயுதக் கிடங்கு - அறிவாயுதக் கிடங்கு.

அதுதான் நமக்கெல்லாம் பெருமை!

அதற்கு ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்லலாம் -

இன்றைக்கு ஒரு பெரிய பெருமை நம்முடைய கருப்புச் சட்டைத் தோழர்களுக்கு - நான் அடிக்கடி சொல்லுகிற உதாரணம்.

வேறு எந்த வண்ணத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு, இந்தக் கருப்பு வண்ணத்திற்கு உண்டு. 

விடாது கருப்பு என்பது மட்டுமல்ல - அதைவிட மிக முக்கியம் என்னவென்றால், அய்யாவினுடைய வழி முறை, இந்த இடத்தில்தான் அவர்கள் சிந்தித்தார்கள். கருப்பு உடை அணியவேண்டும் என்று குடிஅரசில்தான் அறிக்கை வந்தது.

அப்படிப்பட்ட அந்தக் கருப்பு உடை அணியக்கூடிய தத்துவம், சித்தாந்தத்தினுடைய வெளிப்பாடு இருக் கிறதே, அது திராவிடர் கழகத் தோழர்களைத் தாண்டி, எந்த அளவிற்கு வந்தது என்றால், எல்லாக் கட்சிக் காரர்களும் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்திருக் கிறார்கள்.

அவர்கள் தேவைப்படும்பொழுது போடுகிறார்கள்; நாம் எப்பொழுதும் போடுகிறோம்.

பாதுகாப்புக் கருவிகள் இருக்கின்றன என்றால், வீடுகளில் திருடன் வந்தால், அல்லது கொள்ளைக் காரர்கள் வந்தால், அப்பொழுது பயன்படுத்துவதற்கு, வீடுகளில் கருவிகள் இருக்கின்றன.

ஆனால், இராணுவ வீரர்களிடம் எப்பொழுதும் கருவிகள் இருக்கிறது; காவல்துறையினரிடம் எப் பொழுதும் கருவிகள் இருக்கிறது. அதுபோல, கருஞ்சட்டைக்காரன், எப்பொழுதும் கருஞ்சட்டைக்காரனாக இருக்கிறான். மற்றவர்கள் இருக்கிறார்களே, வித்தியாசமாக இருக்கிறார்கள்.

ஆனால், தேவைப்படும்பொழுது இந்தக் கருப்புச் சட்டையை அணிகிறார்கள்.

நாம் என்ன நினைத்துக் கொண்டிருந்தோம், தமிழ்நாட்டில்  மட்டும்தான் கருப்புச் சட்டை தைத்து வைத்திருக்கிறார்கள் என்று. இல்லை, டில்லியிலும் கருப்புச் சட்டை வைத்திருக்கிறார்கள் என்பதுதான்.

அதுமட்டுமல்ல நண்பர்களே, இதைவிட மிக முக்கியமான செய்தி என்னவென்றால், அகில இந்திய கட்சிகளிலும் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்திருக்கிறார்கள். அதிலும் காங்கிரஸ்தான் மூத்த கட்சி - நூறாண்டைத் தாண்டிய கட்சி அது.

கருப்புச் சட்டை பிரதமரையே ஒரு கலக்குக் கலக்கி இருக்கிறது

காங்கிரஸ், ‘‘டில்லி தலைநகரில், 75 ஆண்டுகால சுதந்திரத்தை நாங்கள் கொண்டாடவிருக்கின் றோம்’’ என்று சொல்லக்கூடிய ஒரு காலகட்டத் திலே, இன்றைக்குக் காங்கிரஸ் தலைவர்கள் அத்துணை பேரும், கருப்பு உடை அணிந்து, கருப்புச் சேலை, கருப்புச் சட்டை எல்லாம் அணிந் தவுடன், பிரதமரையே ஒரு கலக்குக் கலக்கி இருக்கிறது.

தோழர் வெங்கடேசன் அவர்களும் கருப்புச் சட்டை அணிந்திருந்தவர். அவர் எழுதுகிறார்,

‘‘நாங்கள் அன்றைக்கு ஒரு நாள் மட்டும் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தி னோம். ஆனால், அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆயிற்று; நாங்கள் அதை மறந்துவிட்டோம்; ஆனால், பிரதமர் மறக்கவில்லையே, இன்னமும் அதுபற்றி பேசிக் கொண்டிருக்கிறாரே!’’ என்றார்.

மோடிக்கு, மேனாள் ஒன்றிய நிதியமைச்சர்  ப.சிதம்பரம் அவர்களின் பதிலடி!

அதைவிட இன்னொரு மகிழ்ச்சி என்னவென் றால், கருப்புச் சட்டையைப் பார்த்து, ‘கருப்பு மேஜிக்’ என்றெல்லாம் சம்பந்தமில்லாமல் மோடி சொல்லியிருப்பதற்குப் பதிலடி கொடுத்திருக்கிறார் காங்கிரஸ்  மூத்த தலைவர்களில் ஒருவரும், மேனாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அவர்கள், தன்னுடைய டுவிட்டரில்.

‘‘கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒரு போதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்

தந்தை ஈ.வெ.ரா. பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் (சனாதனவாதிகளைத் தவிர) என்பதை நாடறியும் என்று பிரதமருக்கு நான் தெரிவித்துக் கொள் கிறேன்’’ என்று டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

கருப்பே இப்பொழுது மய்யப் புள்ளியாக ஆகிவிட்டது!

பெரியாருடைய வாழ்க்கையில் - கருப்புச் சட்டையை அணிந்தது - கருப்பே இப்பொழுது மய்யப் புள்ளியாக ஆகிவிட்டது.

இதுதான் விடாது கருப்பு - விரட்டக் கூடிய கருப்பு இது - சாதாரணமானதல்ல.

காவி மய்யப்புள்ளி இல்லை -

காவியைக் கண்டால் சில பேர் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள்.

கருப்புச் சட்டைக்காரன் சிறைச்சாலைக்குப் போனால், அவன் கொள்கைக்காகப் போவான்.

காவிக்காரன் சிறைச்சாலைக்குப் போனால், கொள் ளையடித்துவிட்டோ, கொலை செய்துவிட்டோ, அல்லது வேறு ஏதாவது குற்றம் செய்துவிட்டோ - குற்றவாளி களாகத்தான் செல்வார்கள் என்பதை நாம் நடை முறையில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இதற்கெல்லாம் அடித்தளமிக்க பாசறை ஏடு எது ‘விடுதலை’ என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.

‘விடுதலை’யினுடைய சிறப்பு என்னவென்று சொன்னால், இது ஒன்றே போதும்!

ஆகவே, இப்படிப்பட்ட ஏட்டுக்குச் சந்தா சேர்ப்பது என்பது ஓர் அற்புதமான ஒரு செயல்.

ஈரோட்டு மண்ணிலிருந்துதான் மீண்டும் ‘விடுதலை’ துளிர்த்தது 

இந்த மண்ணிலிருந்துதான் மீண்டும் ‘விடுதலை’ துளிர்த்தது; மிகப்பெரிய ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டது. எனவே, அது பரவவேண்டும் என்று நினைக்கின்றோம்.

தடுப்பூசி யாருக்காக?

மருத்துவருக்காகவா -

அல்லது மருந்தைக் கண்டுபிடித்தவருக்காகவா -

அல்லது அரசாங்கத்திற்காகவா -

பிரதமர் மோடிக்காகவா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காகவா என்றால், இல்லை - நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குத்தான்.

எல்லா இல்லங்களிலும் ‘விடுதலை’ என்ற பேராயுதம் போகவேண்டும்

அதுபோல, ‘விடுதலை’யை நீங்கள் படிக்கவேண்டும் - பரப்பவேண்டும் - எல்லா இல்லங்களிலும் ‘விடுதலை’ என்ற பேராயுதம் போகவேண்டும்.

ஏனென்றால், அது ஒன்றுதான் காவிக் கிருமிகளை அண்டவிடாமல் செய்யக்கூடிய மிகப்பெரிய தடுப்பூசி என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே, அப்படிப்பட்ட இந்த ஏட்டை, மிகச் சிறப்பான வகையில் பரப்பவேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கமாகும்.

நீங்கள் சோர்வடைய வேண்டிய அவசியமில்லை

சிறப்பாக நம்முடைய தோழர்கள், பொறுப்பா ளர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். எல்லா தோழர் களுடைய பிரதிநிதிகளாக வந்திருக்கிறார்கள்.

இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன 27 ஆம் தேதிக்கு. ஆனாலும், நீங்கள் சோர்வடைய வேண்டிய அவசியமில்லை.

ஒரு தெம்பூட்டக்கூடிய மகிழ்ச்சி - எனக்கு மிகவும் உற்சாகம் - உங்களுடைய வார்த்தை களைவிட, நான் ஒவ்வொரு முறையும், ஆங் காங்கே இருந்து வரக்கூடிய செய்திகளைப் பார்க்கும்பொழுது, என்னைத் தவிர, எல்லோரும் சந்தாக்களைத் திரட்டுவதற்கான பணியில் இறங்கிவிட்டார்கள்.

நான் மட்டும் சந்தா கேட்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக...

எல்லோரும் அந்தப் பணியில் இறங்கும்பொழுது, நான் மட்டும் சந்தா கேட்காமல் இருக்கக்கூடாது என்ப தற்காக, நான் முதலமைச்சரிடம் சென்று கேட்டேன்; அமைச்சர்களிடம் கேட்டேன்.

உடனே ‘விடுதலை’ சந்தாவை முதலமைச்சர் கொடுத் தார்; பொதுச்செயலாளர் துரைமுருகன் கொடுத்தார்; அமைச்சர் நேரு கொடுத்தார்.

தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி., க்கள், தி.மு.க.வி னுடைய முக்கிய பொறுப்பாளர்கள் அத்துணை பேரும் ‘விடுதலை’ சந்தாக்களைக் கொடுத்தார்கள்; கொடுக்கிறார் கள். இரட்டைக் குழல் எப்பொழுதும் தயாராக இருக்கும் என்பதற்கு மிகப்பெரிய அடையாளம் இது.

நம்முடைய முதல் வெற்றி எது தெரியுமா? 60 ஆயிரம் சந்தா இலக்கை அடைந்துவிட்டோமா? இன் னும் குறைகிறதே, எப்பொழுது அடைவோம் என்று யாரும் நம்பிக்கையின்மையைப் பெறவேண்டிய அவசியமில்லை.

நாம் பிரச்சாரத்திற்காகத்தான் செல்கிறோமே தவிர, பணத்திற்காக அல்ல...

ஒரே ஒரு அடையாளம் என்னவென்றால், இதுவரை யில் நன்கொடை திரட்டும் பணியில் நம்முடைய மகளிரணி, இளைஞரணி தோழர்கள் ஈடுபடும்பொழுது, சிலர் இல்லை என்பார்கள்; நாம் பிரச்சாரத்திற்காகத்தான் செல்கிறோமே தவிர, பணத்திற்காக அல்ல. அப்பொழுது கூட சில கேள்விகளைக் கேட்பார்கள்.

‘‘ஏன்யா, பெரியாரிடம் இல்லாத பணமா?

உங்கள் இயக்கத்தில் இல்லாத பணமா?’’ என்று.

உடனே நம்மாட்கள், ‘‘ஏங்க திருப்பதியில் இல்லாத பணமா? ஏங்க, மறுபடியும், மறுபடியும் உண்டியலில் பணம் போடுகிறார்கள்’’ என்று பதில் சொல்வார்கள்.

பிறகு, நாம் நன்கொடை திரட்டும் பணத்தால் என்னென்ன காரியங்களைச் செய்கிறோம் என்பதை நம்முடைய தோழர்கள்  அவர்களுக்கு விளக்கிச் சொல்வார்கள்.

கேள்வி கேட்டு, பதில் சொல்லி  வளர்ந்த இயக்கம்தான்!

நமக்குப் பணம் வருவது முக்கியமல்ல - இவ்வளவு விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கு அந்த வாய்ப்பை அவர் உண்டாக்கினாரே, அந்தக் கேள்வி கேட்டதின் மூலம்.

கேள்வி கேட்டு, பதில் சொல்லி வளர்ந்த இயக்கம்தான் - நம்முடைய இயக்கம் அன்றும் - இன்றும் - என்றும் - அதுதான் அறிவியக்கம்.

ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், ‘விடுதலை’ சந்தா கேட்டுச் சென்ற தோழர்களாகிய எல்லோரிடமும் நான் கேட்டேன்; ஒருவரும் எதற்காக ‘விடுதலை’ சந்தா கொடுக்கவேண்டும் என்று கேட்கவில்லை; எப்பொழுது கொடுக்கவேண்டும் என்றுதான் கேட்டிருக்கிறார்களே தவிர, எவ்வளவு கொடுக்கவேண்டும் என்றுதான் கேட்டிருக்கிறார்கள். 

இதுதான் முதல் வெற்றி - முதல் சுற்றில் நாம் அடைய வேண்டிய நம்பிக்கையும், நம்முடைய ஊக்கமும், உற்சாகமும் நம்மைத் தூண்டிவிடக் கூடிய அளவிற்கு இருக்கிறது.

சிறுதுளி பெருவெள்ளம்!

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு -

Rome was not built one day

ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்பட்டதல்ல.

சிறுதுளி பெருவெள்ளம்! அதைவிட மிக முக்கியம் - நம்முடைய பொதுச்செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், தோழர்கள் அழகாகச் சொன்னார்கள்.

‘விடுதலை’  சந்தாக்கள் திரட்டுவதைவிட, நம்முடைய தோழர்களுக்கு மக்கள் தொடர்பு - எல்லா மக்களுடைய தொடர்பு - எல்லாக் கட்சித் தலைவர்களுடைய தொடர் பும் கிடைக்கின்றது.

நகரங்களில், ஊர்களில், கிராமங்களில் வீடு வீடாகச் செல்லவேண்டும்; கூச்சப்படக் கூடாது.

புத்தருடைய தத்துவம் இருக்கிறதே -

பிச்சை எடுத்துக்கொண்டு போங்கள் என்றார்,

பிச்சை எடுத்துச் சாப்பிடுங்கள் என்று சொன்னார்.

உங்களுக்கென்று எதுவும் வைக்காதீர்கள் என்று சொன்னார்.

கிட்டத்தட்ட தந்தை பெரியாருடைய தத்துவமும், பெரியாருடைய தொண்டர்களும் அப்படித்தான்.

முதல் பகுத்தறிவுவாதி புத்தர்

புத்தர்தான் முதல் பகுத்தறிவுவாதி. அரசராக இருந் தவர் புத்தர். அதை விட்டுவிட்டு வந்ததின் நோக்கம் என்ன?

உணவு உண்பதிலும் சரி, மற்றவற்றிலும் சரி கூச்சப்படக் கூடாது. 

வெட்கம் போனால், தயக்கம் போனால், நாம் பொதுத் தொண்டிற்கு முழுத் தகுதி பெற்றுவிட்டோம் என்று அதற்குப் பொருள்.

நாம் கூச்சப்படக் கூடாது; நம்முடைய தோழர்கள் களத்தில் இறங்கவேண்டும்.

இதற்குமுன் நீங்கள் நடமாடினீர்கள்; ‘விடுதலை’  சந்தா இயக்கத்தின்மூலம் இப்பொழுது நீங்கள் களமாடுகிறீர்கள் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

‘விடுதலை’  சந்தாக்கள் என்பது நமக்காக அல்ல - நாட்டிற்காக - நம் இனத்திற்காக...

எனவே, ‘விடுதலை’  சந்தாக்கள் என்பது நமக்காக அல்ல - நாட்டிற்காக - நம் இனத்திற்காக - நம் கொள் கையைப் பாதுகாப்பதற்காக - இந்தக் கொள்கைகளுக் கெல்லாம் அரசியல் ரீதியாக ஒரு செயல் திட்டமாக இன்றைக்கு இருக்கிற ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு வருகின்ற தொல்லைகளையெல்லாம் நாம் தடுப்பூசியாக, தடுப்பு அணையாக இருக்கக்கூடிய வாய்ப்பை நாம் பெறுகிறோம் என்பதற்கு அடையாளம்.

ஆகவே நண்பர்களே, இது ஓர் அற்புதமான வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை நீங்கள் நழுவவிட வேண்டாம். 

வீட்டிற்கு வீடு செல்லுங்கள்; கடைக்குக் கடை செல்லுங்கள். ‘விடுதலை’ யினுடய பெருமைகளைச் சொல்லுங்கள். 

இந்த இயக்கம் என்ன செய்திருக்கிறது என்பதைச் சொல்லுங்கள்.

60 ஆண்டுகாலம் அல்ல - ‘விடுதலை’  தொடங்கிய காலத்திலிருந்தே எதிர்நீச்சல் அடித்துக்கொண்டு என்ன செய்திருக்கிறது என்பதற்குச் சான்றுகள் ஏராளம் உண்டு.

‘விடுதலை’ யினால் ஏற்பட்ட பலன்கள் ஏராளம்!

இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம் - என்னுடைய 60 ஆண்டுகாலத்தில் எத்தனையோ செய்திகள், ‘விடுதலை’ யினால் ஏற்பட்ட பலன்கள் உண்டு. இரண்டு, மூன்றை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன்.

பொய்ச்சான்று கொடுத்து தலைமை நீதிபதியாக இருந்த ராமச்சந்திர அய்யர்

ஒரு தலைமை நீதிபதி - அவருக்குப் பெயர் ராமச்சந்திர அய்யர்.

அவர் ஈரோட்டை சொந்த ஊராகக் கொண்ட வர். மகாஜனப் பள்ளி என்று, அய்யா தந்தை பெரியார் அவர்களே தலைவராக இருந்தார். அதுதான் பிறகு, சிக்கநாயக்கன் மகாஜன கல்லூரி என்ற அளவிற்கு வந்தது.

ராமச்சந்திர அய்யர் அவர்கள் வழக்குரைஞராக இருந்து, படிப்படியாக நீதிபதியாக, பிறகு தலைமை நீதிபதியானார்.

அவர் தன்னுடைய வயதை, பொய்யாகச் சான்று கொடுத்து தலைமை நீதிபதியானார்.

ஒரு சாதாரண நபர் - நான்காவது பிரிவில் இருக்கக்கூடிய அரசு ஊழியராக இருக்கும் நம்மு டைய தோழன், நம்முடைய இனத்துக்காரன் அதுபோன்று செய்திருந்தால், அவன்மீது குற்ற வியல் தண்டனை பாய்ந்திருக்கும்.

கருநாடகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் அதைக் கண்டுபிடித்தார். அவர் அடையாறு காந்தி நகரில் குடியிருந்தார். அந்த நீதிபதி செய்த தவறு குறித்து, பார்கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

அதற்காக அவரை அச்சுறுத்திக் கொண்டி ருந்தார்கள்.

ஒரு சம்பவத்தில் அந்த வழக்குரை தாக்கி நான் எழுதியிருந்தேன், வேறு ஒரு பிரச்சினைக்கு. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், நான் அவருடைய வீட்டிற்கே சென்றேன். நான் ‘விடுதலை’யினுடைய ஆசிரியர். இதுபோன்ற செய்தி கேள்விப்பட்டேனே, அது உண்மையா? என்றேன்.

ஆமாம், உண்மைதான் என்றார்.

அதற்கான ஆதாரங்களை நான் வைத்திருக் கிறேன் என்றார்.

யார் தவறு செய்தாலும், நாங்கள் அதைத் தட்டிக் கேட்போம்!

என்மேல் அவருக்கு சந்தேகம்; என்னை நம்பாமல் வேறொரு வழக்கில் என்னைத் தாக்கி எழுதியிருக் கிறீர்கள். இப்பொழுது நீங்களே வந்திருக்கிறீர்களே! என்றார்.

ஆமாம், யார் தவறு செய்தாலும், நாங்கள் அதைத் தட்டிக் கேட்போம் என்றேன்.

இப்பொழுது நீங்கள் எடுத்து இருக்கின்ற விஷயம் மிகப்பெரிய விஷயம் என்று சொன்னேன்.

ஆமாம், என்னால் இதை வெளியில் கொண்டுவர முடியாது - ‘விடுதலை’யில் இந்தச் செய்தியை வெளியிட்டீர்களேயானால்,  நிச்சயமாக பலன் இருக்கும் என்று சொன்னார்.

அவர் திரட்டிய ஆதாரங்களை வைத்து செய்தியை வெளியிட்டோம். அதனால் மிகப்பெரிய ‘பூகம்பம்‘ வெடித்தது.

திடீரென்று பதவி விலகிய நீதிபதி ராமச்சந்திர அய்யர்

நம் சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதியாக இருந்தால், அவரைக் கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தி இருப் பார்கள். ஆனால், அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பார்ப்பனர்கள் நினைத்தார்கள்.

திடீரென்று ஒரு நாள் அந்த நீதிபதி பதவி விலகினார்.

‘விடுதலை’யில் எப்படி எழுதினோம் என்றால்,

இவர் தம்பிக்கு (சஷ்டியப்த பூர்த்தி) 60 ஆவது விழா கொண்டாடி விட்டார்கள்; ஆனால், இவருக்கு அவரைவிட குறைவான வயது எப்படி என்பதை எடுத்துக்காட்டினேன்.

பொதுக்கூட்டத்தில் பேசினோம். தந்தை பெரியாரை அழைத்து, கடற்கரையில் ஒரு கூட்டம் போட்டோம்.

வழக்குரைஞர்கள், நீதிபதிகள் எல்லாம் என்னிடம் வந்து கேட்டார்கள். உண்மையைக் கேட்டவுடன், அதிர்ச்சி அடைந்தார்கள்.

பார்ப்பனர்கள் அவரைக் காப்பாற்றிவிட்டனர்

குற்றவாளியாக போகவேண்டிய அவர் - பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போனார். ஏனென்றால், பார்ப்பனர்கள் அவரைக் காப்பாற்றிவிட்டனர்.

எனவே, ஒரு தலைமை நீதிபதியே பதவியை விட்டு விலகக்கூடிய அளவிற்கு செய்த பத்திரிகை ‘விடுதலை’ பத்திரிகையாகும்.

அடுத்தபடியாக ஒன்றைச் சொல்கிறேன்.

2ஜி ஊழல் வழக்கு - மிகப்பெரிய ஊழல் என்று கொக்கரித்தனர் -  பொய்ப் பிரச்சாரம் செய்தனர்

முதலில் பழைய செய்தியை சொன்னேன். இப்பொழுது இந்தப் பகுதியையொட்டிய ஒரு செய்தி.

தோழர் ஆ.இராசா -

எப்படி அந்த ஆட்சியை வீழ்த்தினார்கள்?

ராசாவை எப்படி தோற்கடித்தார்கள்?

அதைக் காரணம் காட்டி, எப்படி காங்கிரஸ் ஆட்சியை, மன்மோகன்சிங் தலைமையில் இருந்த ஆட்சி மீண்டும் வராமல் எப்படி தடுத்தார்கள்?

2ஜி ஊழல் வழக்கு என்று சொன்னார்கள்.

மிகப்பெரிய ஊழல் என்று சொல்லி, 

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம் பூஜ்ஜியமாகப் போட்டார்கள்.

பார்ப்பனர்கள் திட்டமிட்டு, பிரச்சாரம் செய்தார்கள். யாரைப் பார்த்தாலும் என்ன சொன்னார்கள், ‘‘என்னங்க, ராசா இப்படி செய்துவிட்டாரே? மோசம் செய்துவிட் டாரே?’’ என்று கேட்கின்ற அளவிற்கு வந்தது.

ராசா அவர்கள் ஒன்றிய அமைச்சராக இருந்து சிறப்பாக சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றி இருக்கிறார். மற்ற மற்ற துறைகளில் சாதித்துக் காட்டியிருக்கிறார். எம்.எல். படித்த சட்ட நிபுணர்.

இடதுசாரிகள் மன்னிப்புக் கோரினார்கள்!

அப்படிப்பட்ட ஒருவருடைய பெயரைக் கெடுப்பதற்காகவும்; அவர் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு பெரிய இழிவை உருவாக்கி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற் காகவும்,

எல்லாக் கட்சியினரும் சேர்ந்து, நான் வருத்தத்தோடு சொல்கிறேன், நம்முடைய இடதுசாரிகளும் சேர்ந்து - பிறகு அவர்கள் மன்னிப்புக் கோரினார்கள் என்பது வேறு விஷயம்.

எல்லோரும் சேர்ந்து, எல்லா ஏடுகளும் பூஜ்ஜியம் பூஜ்ஜியம் பூஜ்ஜியமாகப் போட்டார்கள்.

விளக்கமாக எழுதிய ஒரே ஏடு  ‘விடுதலை’ ஏடுதான்!

ஒரே ஒரு ஏடுதான், ராசாவிற்காகப் பரிந்து நின்றது. இன்னுங்கேட்டால், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் மத்தியில்கூட சில பேருக்கு முழுமையான நம்பிக்கை வரவில்லை. 

அந்த நேரத்தில் துணிந்து சொல்லி, மேடைகளை ஏற்பாடு செய்து - விளக்கமாக எழுதிய ஒரே ஏடு ‘விடுதலை’ ஏடுதான்.

இது ராசாவிற்காகவோ - தி.மு.க.விற்காகவோ அல்ல! உண்மையைக் காப்பாற்றுவதற்காகத்தான்.

உண்மை விளக்கம்!

‘உண்மை விளக்க அச்சகம்‘ 

‘குடிஅரசு’ அச்சகத்திற்கு என்ன பெயர் தெரியுமா?

‘உண்மை விளக்க அச்சகம்‘ என்பதுதான்.

அவர் நடத்திய பத்திரிகைக்குப் பெயர் ‘உண்மை’

1907 - நாமெல்லாம் பிறக்காத காலம் - பெரியார் அவர்கள் வாலிபராக இருந்த காலம்.

இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவேண்டும்; மற்றவர்களுக்கும்

வெங்கட்ட நாயக்கர் மண்டி - இங்கேதான் இருக்கிறது - அந்த மஞ்சள் மண்டி - அதுதான் ராமசாமி நாயக்கர் மண்டி.

அப்படிப்பட்ட அந்த மண்டியை, இவருடைய பெயருக்கு மாற்றிய நேரத்தில், வரவு- செலவு கணக்கில் கையெழுத்துப் போடும்பொழுது, வெங்கட்ட நாயக்கர் என்று இவரே கையெழுத்துப் போட்டுவிட்டார்.

இந்தச் செய்தி இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவேண்டும்; மற்றவர்களுக்கும் சொல்லவேண்டும்.

இந்தச் செய்தியை மிகத் தெளிவாக, தந்தை பெரியாரே எழுதியிருக்கிறார்.

அந்தக் கையெழுத்தை எதிரிகள் காட்டி, இவர் பொய்யான கையெழுத்தைப் போட்டு, போர்ஜரி செய்துவிட்டார்; அப்பா கையெழுத்தை இவர் போட்டுவிட்டார் என்று வழக்குத் தொடுத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் ஜெயிலுக்குப் போவது அவமானம்

ஏறத்தாழ 120 ஆண்டுகளுக்கு முன்பு; வியாபாரியாக இருந்தவர், வசதி படைத்தவர் அந்த ஊரில். அன்றைய காலகட்டத்தில் ஜெயிலுக்குப் போவது அவமானம் என்று கருதப்பட்டது.

அவருடைய தந்தையார் வெங்கட்ட நாயக்கர் அவர்கள், ஒரு பெரிய வக்கீலை வைக்கிறேன், எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்று சொல் கிறார்.

நாம் எவ்வளவு பெரிய பெருமைக்குரிய ஒரு தலைவரின் கீழ் இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்துப் பெருமைப்படக் கூடிய ஒரு செய்தி என்னவென்றால்,

அன்றைய காலகட்டத்தில், அவர் ஒரு சாதாரண வாலிபர்; இயக்கம் எதுவும் தொடங்கவில்லை அவர்.

அவருடைய தந்தையார் அழுதுகொண்டே, ‘‘இராமா, பெரிய வக்கீலை வைத்திருக்கிறேன். அந்த வக்கீல் சொல்வதுபோல் சொல்’’ என்று சொல்கிறார்.

அந்த வக்கீலோ பெரியாரிடம் சென்று, அந்தக் கையெழுத்தைப் போடவில்லை என்று சொல், நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.

முடியாது; அந்தக் கையெழுத்தை நான்தான் போட் டேன் என்று சொல்வேன், பொய் சொல்ல மாட்டேன் என்றார்.

அப்படி சொன்னால், நீ ஜெயிலுக்குத்தான் போவாய் என்று வக்கீல் சொல்கிறார்.

இவர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அதுவரை யில் கட்டிலில் படுத்தவர், தரையில் படுத்துப் பழகுகிறார்.

ஏன், திடீரென்று தரையில் படுத்திருக்கிறாய் என்று கேட்டால்,

‘‘நான் ஜெயிலுக்குப்போனால், தரையில்தானே படுக்கவேண்டும்; அதற்காக இப்பொழுதே நான் பழக ஆரம்பித்துவிட்டேன்’’ என்று சொன்னார்.

தந்தை பெரியாரின் நேர்மையும்  வெள்ளைக்கார நீதிபதியின் வியப்பும்!

திருச்சியில் அந்த வழக்கு நடைபெறுகிறது.

வெள்ளைக்கார நீதிபதி விசாரணை நடத்துகிறார்.

வழக்குரைஞர் இவருக்காக வாதாட வருகிறார்.

வேண்டாம்; வக்கீல் சொல்வதை ஏற்காதீர்கள்; எனக்கு வக்கீல் வேண்டாம்; நான் உண்மையைச் சொல் கிறேன் என்கிறார்.

அவருக்கோ ஆச்சரியம்; இப்படி ஒரு ஆள் இருப்பாரா? என்று.

நீதான் இராமசாமியா?

ஆமாம், இராமசாமி நாயக்கன் நான்தான்!

கையெழுத்து யார் போட்டது?

நான்தான் போட்டேன்.

யார் பெயரில்?

என்னுடைய அப்பா பெயரில்.

என்ன விஷயம், ஏன் போட்டாய்?

‘‘தொடர்ச்சியாக எங்க அப்பாவால் கையெழுத்துப் போட முடியாது; நடுக்கம் இருக்கிறது. வியாபாரத்தில் ரசீது கொடுப்பதற்காக அந்தக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பேன். இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை; யாருடைய பணத்தையும் நான் எடுக்கவில்லை. இதுபோல் பலமுறை நடந்திருக்கிறது - இதுதான் உண்மை’’ என்று எடுத்துச் சொன்னார்.

வழக்குரைஞர் எழுந்து, அது அவருடைய கையெழுத்து இல்லை என்று ஆரம்பித்தார்...

இல்லை, இல்லை. நான்தான் கையெழுத்துப் போட் டேன் என்று பெரியார் சொல்கிறார்.

வெள்ளைக்கார நீதிபதி ஆச்சரியப்படுகிறார்.

கையெழுத்துப் போட்டது தவறுதான் - ஜெயிலுக்குப் போவார்கள் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டி ருந்தார்கள்.

ஆனால், பெரியார் அவர்கள், அதற்குத் தயாராக இருந்தார். 

இதுதான் பகுத்தறிவுவாதி - தவறு செய்தால், தண்ட னையிலிருந்து தப்பக்கூடாது - அதனை ஏற்கவேண்டும்.

வெள்ளைக்கார நீதிபதியின் தீர்ப்பு!  

அதற்காக உண்மையைச் சொல்லிய நேரத்தில்,

அந்த வெள்ளைக்கார நீதிபதி தீர்ப்பு கொடுக்கிறார்.

‘‘அவர் உண்மையைச் சொன்னதற்காகப் பாராட்டுகிறேன். இதனால் பாதிப்பு இருந்தால்தான் குற்றம். யாரும் பாதிக்கப்படவில்லை. இது வழமை யாக நடைபெறக்கூடிய  வியாபாரத்தில் ஒரு முறை என்பதை ஆதாரப்படுத்தி இருக்கிறார். ஆகவே, அவரை விடுதலை செய்கிறேன்’’ என்று தீர்ப்பளித்தார்.

இந்த சம்பவத்தை அய்யா அவர்கள் எழுதிவிட்டு, நம்முடைய போராட்டங்கள் எல்லாம் உண்மையாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்.

அதற்கு இந்த உதாரணத்தை அடிக்கடி ‘விடுதலை’ யில் எழுதியிருக்கிறார்.

அப்படி ஒரு பாரம்பரியம் நமக்கு உண்டு.

எனவே, உண்மையைச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் 2ஜி பிரச்சினையில் போராடினோம்.

இன்றைக்கு என்னாயிற்று?

அன்றைக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் என்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம் பூஜ்ஜியமாகப் போட்டார்கள்.

வெறும் 30 மெகாவாட் என்று சொல்லக்கூடியது; அன்றைக்கு இவ்வளவு இழப்பு - நட்டம் என்று சொன்னார்கள்.

5ஜி அலைக்கற்றையின் அவலம் குறித்து விரிவாகவும், தெளிவாகவும் எழுதுவோம்!

அண்மையில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் விட்டிருக்கிறார்கள்; இதுகுறித்து விளக்கமாக ‘விடுதலை’யில் செய்திகள் வரும். ஒவ்வொரு கூட்டத்திலும் அதனுடைய தோலை உரித்து - அது எப்படிப்பட்டது என்பதை எடுத்துச் சொல்வோம்.

5ஜி என்று சொல்லி, ஜியோவிற்கு - அம் பானிக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

50 மடங்கு கூடுதல் வேகம்; இன்னுங்கேட்டால், பி.எஸ்.என்.எல். என்ற நிறுவனத்திற்கே 4ஜிதான் வந்திருக்கிறது. இன்னும் 5ஜி வரவில்லை.

ஒரு பொத்தானை அழுத்தியவுடன், கிடைக் காத தகவல்கள்கூட உடனடியாக வரும். அதுதான் 5ஜி அலைக்கற்றை - அவ்வளவு வேகம் - அதிவேகம் - 50 மடங்கு அதிகம்.

‘செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை’

ஒரு இராணுவத்திலிருந்து வாங்கி, அதற்கு லாபத்தை ஏற்பாடு செய்த ராசா குற்றவாளி; சம்பந்தமே இல்லாத கனிமொழி குற்றவாளி; திகார் ஜெயிலில் ஒரு ஆண்டிற்குமேல் இருந்தார்கள்.

‘செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை’ என்பதுபோன்று அவர்கள் சிறையில் இருந்தார்கள்.

உச்சநீதிமன்றமே தவறு செய்திருக்கிறது என்றுதானே அர்த்தம்

2ஜி ஊழல், 2ஜி ஊழல் என்று - அப்போது நடந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக கோயம்புத்தூருக்கு வந்த பிரதமர் மோடி பேசினார்.

ஆனால் நடந்தது என்ன?

உச்சநீதிமன்றம் என்ன சொல்லிற்று?

ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷைனி எழுதிய தீர்ப்பில் என்ன கூறினார்? அப்படியென்றால், உச்சநீதிமன்றமே தவறு செய்திருக்கிறது என்றுதானே அர்த்தம்.

இதைத் துணிச்சலாக எழுதிய ஒரே ஏடு ‘விடுதலை’ ஏடுதான் நண்பர்களே, இதை நன்றாகப் புரிந்துகொள் ளுங்கள்!

தந்தை பெரியார்பற்றி கவியரசர் கண்ணதாசன்!

“நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார்

நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்தி வைப்பார்

ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கி

சாகடித்த பெருமை கைத்தடிக்கே உண்டு!

ஆக்காத நாள் இல்லை ஆய்ந்து தேர்ந்து

அளிக்காத கருத்தில்லை அழுத்தமாக

தாக்காத பழைமையில்லை தந்தை நெஞ்சில்

தழைக்காத புதுமை இல்லை தமிழ் நிலத்தில்!”

     - தந்தை பெரியார் பற்றி 

கவியரசர் கண்ணதாசன் அழகாக எடுத்துச் சொன்னார்.

மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவேண்டும்

அதுபோன்று, ‘விடுதலை’ ஏட்டிற்குப் பெருமை உண்டு. இதையெல்லாம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவேண்டும்.

நம்முடைய தோழர்கள் ‘விடுதலை’ சந்தாதாரராக ஆகவேண்டும் என்பது முக்கியமல்ல. நமக்கு அப்பாற் பட்டு ‘விடுதலை’ போகவேண்டும்.

பணம் திரட்டுவது முக்கிய நோக்கம் அல்ல. மற்ற ஏடுகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு ‘விடுதலை’ ஏட்டிற்கு உண்டு.

மற்ற ஏடுகளை, அய்ந்து நிமிடத்தில் படித்துவிடு வார்கள். ஆனால், ‘விடுதலை’ ஏட்டை ஒவ்வொரு காலம் காலமாகப் படிப்பார்கள்.

‘விடுதலை’யை வேத புத்தகம் என்று சொன்னார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்!

உங்களுக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்,

கலைஞர் அவர்கள் ‘விடுதலை’யை வேத புத்தகம் என்று சொன்னார்.

அவர் தன்னுடைய தோழர்களுக்கு என்ன சொல்வார் என்றால், நான்கு ‘விடுதலை’ ஏடு அவருக்குச் செல்லும். 

ஒன்று, அறிவாலயத்தில்,

இன்னொன்று கோபாலபுரம் இல்லத்திற்கு,

இன்னொன்று சி.அய்.டி. நகர் வீட்டிற்கு,

இன்னொன்று முரசொலி அலுவலகத்திற்கு.

நான் இரவு படுக்கப் போகும்முன்பு, ‘விடுதலை’யை இரண்டாம் முறை படித்துவிட்டுத்தான் தூங்குவேன் என்று சொல்லியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, சில நேரங்களில் அவருக்கு நேரத்தோடு கிடைத்துவிடும் ‘விடுதலை’

உங்களுக்குப் பிறகுதான் எனக்கு ‘விடுதலை’ நாளிதழ் கிடைக்கும்!

‘விடுதலை’யின் தலைப்பைப் பார்ப்பார்; சில நேரங் களில் தவறு ஏதாவது இருக்கும்; உடனே என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொள்வார்.

‘‘என்ன ஆசிரியர், ‘விடுதலை’யில் தேதி தவறாக வந்திருக்கிறதே?’’ என்பார்.

‘‘நான் சிரித்துக்கொண்டே, இன்னும் எனக்கு ‘விடுதலை’ வந்து சேரவில்லை. நான் அடையாறு இல்லத்தில் இருக்கிறேன். நீங்கள் கோபாலபுரத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு முதலில் ‘விடுதலை’யைப் போடும் நபர்தான், அதற்குப் பிறகு எனக்குக் கொண்டு வந்து போடுவார்.  நீங்கள்தான் ஆசிரியர்’’ என்று நாங்கள் வேடிக்கையாகப் பேசிக் கொள்வோம்.

ஆகவே, இந்த ‘விடுதலை’ ஏடு சாதாரண ஏடு அல்ல.

வெளியூருக்குச் சென்றிருந்தால்கூட, ‘விடுதலை’யை பத்திரமாக எடுத்து வையுங்கள் என்று  பணித் தோழராக இருந்த செயல்மணி என்பவரிடம் சொல்வார்.

காரணம் என்னவென்றால், ‘விடுதலை’ வெறும் நாளேடு அல்ல. இது ஒரு ஆயுதம் என்பதோடு கருத்தியல்.

இதில் வரும் செய்திகள் எல்லாம் ஆதாரப்பூர்வமான செய்திகள். தவறான செய்திகளோ, மற்றவைகளோ இருக்காது.

இந்த சமுதாயத்தை மாற்றவேண்டும் என்பதுதான் குறிக்கோள்!

யார்மீதும் தனிப்பட்ட குரோத உணர்ச்சியோ, வெறுப்புணர்ச்சியோ நமக்குக் கிடையாது.

இந்த சமுதாயத்தை மாற்றவேண்டும் என்பதுதான்.

அதற்காகத்தான் லட்சங்கள் இழப்பு என்றாலும், லட்சியங்களிலே லாபம் என்ற முறையிலே நடந்து கொண்டிருக்கின்ற ஒரு ஏடு இந்த ‘விடுதலை’ ஏடு.

எனவே, இதற்காக நீங்கள் இன்னும் உழைக்க வேண்டும்.

முயற்சி - வெற்றித் திருவினையாக்கும்!

கூச்சப்படக் கூடாது; கடைகளுக்குச் செல்லவேண்டும்; அனைத்துக் கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட மக்களிடம் செல்லுங்கள்; விவசாயிகளிடம் செல்லுங்கள்; மாணவர்களிடம் செல் லுங்கள் - அதன்மூலமாக ‘விடுதலை’யைப் பரப்ப வேண்டும் என்ற முயற்சியை எடுத்துக்கொள் ளுங்கள்.

இந்த முயற்சி - வெற்றி திருவினையாக்கும் என்று சொல்வது போன்று, நமக்கு எந்தவிதமான சங்கடங்களும் இருக்கக்கூடாது.

ஜெயராமன் அவர்களின் விளக்கம்!

இங்கே ஜெயராமன் அவர்கள் அழகாகச் சொன்னார்-

10 ‘விடுதலை’  - அவர் பிரித்துச் சொன்னார்.

ஒன்று உங்களுக்காக - 

அதேநேரத்தில் உறவுக்காக மூன்று -

நட்புக்காக மூன்று -

நடப்புக்காக மூன்று என்று சொன்னார்.

நண்பர்கள் மூன்று பேரைப் பிடிக்கவேண்டும் - அவர்களிடம் ஆண்டு சந்தா வாங்கவேண்டும்.

அதேபோன்று நம்முடைய உறவுக்காரர்களுக்கு அந்தச் செய்தி போய்ச் சேரவேண்டும்.

‘விடுதலை’ நாளிதழ் பொதுவானவர்களிடம் போகவேண்டும்!

பொதுவானவர்களிடம் போகவேண்டும் - அது தேநீர்க் கடைகளாக இருக்கலாம்; அது முடிதிருத்தும் கடைகளாக இருக்கலாம்; மக்கள் கூடுகின்ற இடமாக இருக்கலாம்.

வருமானத்திற்காக அல்ல - இனமானத்திற்காக - தன்மானத்திற்காக...

எனவேதான், உங்களுடைய நோக்கம் 60 ஆயிரம் சந்தா என்ற இலக்கை வைத்துக்கொண்டு நாம் அலையவேண்டும் என்று சொல்வது, வசூலுக்காக அல்ல நண்பர்களே - வருமானத்திற்காக அல்ல - இன மானத்திற்காக - தன்மானத்திற்காக - இந்த சமுதாயத்தை நாம் காப்பாற்றவேண்டும் என்பதற்காகத்தான்.

எனவேதான், இந்தப் பணியை நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

எனவே, இதில் கொஞ்சம்கூட சுணக்கம் இல்லாமல் நீங்கள் உழைக்கிறீர்கள். இந்த உழைப்பைக் கொஞ்சம் நீட்டுங்கள்.

60 ஆயிரம் சந்தாக்கள் நிறைவு பெறுகின்ற வரையில்... ஆனால், ஒன்று நிச்சயம்!

60 ஆயிரம் சந்தாக்கள் நிறைவு பெறுகின்ற வரையில், நான் விழாவிற்கு ஒப்புக்கொள்ளமாட்டேன் என்பதை மட்டும் சொல்லி, என்னுரையை நிறைவு செய்கிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.


No comments:

Post a Comment