திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞரது முழக்கம் என்பது 'சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்!' எனது பாணி என்பது, - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞரது முழக்கம் என்பது 'சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்!' எனது பாணி என்பது,

 'சொல்லாததையும் செய்வோம் -சொல்லாமலும் செய்வோம்!' 

கட்சியில் இணைந்தோர் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சி, ஆக.25 திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞரது முழக்கம் என்பது, 'சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்'! எனது பாணி என்பது, 'சொல்லாதையும் செய்வோம் -சொல்லாமலும் செய்வோம்'! என்றார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள். 

நேற்று (24.08.2022) பொள்ளாச்சியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திராவிட முன் னேற்றக் கழகத்தில் இணையும் விழாவுக்குத் தலைமையேற்று எழுச்சியுரை ஆற்றினார்.

அதன் விவரம் வருமாறு:

மாற்றுக் கட்சியில் இருந்து நீங்கள் வந்துள்ளீர்கள் என்றோ - மாற்றாந்தாய் மக்கள் என்றோ நான் நினைக்கவில்லை.

நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வோடு உங்களை நான் அழைக்கிறேன்.

'இத்தனை லட்சம் பேரைத் தாங்குவதற்கு ஒரு வயிறு தாங்காது என்பதால் தனித் தனித் தாய் ஈன்றெடுத்த உடன்பிறப்பு என்று‘ என்று நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.

அந்த வகையில் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்.

எனவே, நீங்கள் வர வேண்டிய இடத்துக்குத்தான் வந்திருக் கிறீர்கள்.

சேர வேண்டிய இடத்தில்தான் சேர்ந்திருக்கிறீர்கள்.

இருக்க வேண்டிய இடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள்.

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பார்கள்.

அத்தகைய மனநிலையில்தான் நான் இருக்கிறேன்.

உங்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சியானது - எனது மனமகிழ்ச்சியைப் பன்மடங்கு உயர்த்தி விட்டது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் மறைவுக்குப் பிறகு, முதன் முதலில் 1971 இல் திருச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடு கூடியது. கலைஞர் அவர்கள், அந்த மாநாட் டில் அய்ம்பெரும் முழக்கங்களை வடித்துக் கொடுத்தார். அது இன்றைக்கும் நம்முடைய நெஞ்சில் பதிந்திருக்கிறது.

* அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

* ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!

* இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

* வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

* மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி!

- இந்த அய்ந்து முழக்கங்களுக்குள் எல்லாமே அடங்கி யிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் நாள், இதே கோவைக்கு பக்கத்தில் இருக்கும் கொங்கு மண்டலத்தைச் சார்ந்திருக்கும் ஈரோட்டில் நடந்த மாநாட்டில் நான் அய்ந்து முழக்கங்களை அறிவித்தேன்.

* கலைஞரின் கட்டளையைக் காப்போம்!

* தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம்!

* அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம்!

* மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்!

* வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம்!

- என்பவைதான் அந்த அய்ம்பெரும் முழக்கங்கள். இந்தப் பத்து முழக்கங்களுக்குள்தான் நமது இயக்கத்தின் மொத்தக் கொள்கைகளும் ரத்தினச்சுருக்கமாக அடங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளமைக்கும் - இந்திய நாட் டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் - எவை எல்லாம் சிறந்த கொள்கைகளோ அவை எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம்.

நம்மைப்போல வெற்றி பெற்றிருக்கும் கட்சி இந்த நாட்டில் ஒன்று இருக்க முடியாது. நம்மைப்போல் தோற்ற கட்சியும் இந்த நாட்டில் இருக்க முடியாது. இரண்டிலும் நமக்குத்தான் பெருமை.

நாம் அடையாத புகழும் இல்லை, நாம் படாத அவமானங்களும் இல்லை.

நாம் செய்யாத சாதனைகளும் இல்லை, அடையாத வேதனைகளும் இல்லை.

இவ்வளவுக்குப் பிறகும் இந்த இயக்கம் எழுபது ஆண்டு களைக் கடந்தும் நின்று நிலைத்து நீடித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் நாம் கொள்கைக்காரர்கள் என்ற காரணத்தால்.

அந்தக் கொள்கையைக் காப்பாற்றுவதற்காக உயிரையும் தருவதற்குத் தயாராக இருக்கிறோம் என்ற அந்த காரணத்தால்.

தீராத நோய் புற்றுநோய். அதற்கு மருத்துவமே கிடையாது. எவ்வளவோ சிகிச்சைகள் வருகிறது. விஞ்ஞான ரீதியாக என்னென்னமோ வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் அது ஒரு தீராத நோய். ஒரு கொடிய நோய் புற்றுநோய்.

அந்த புற்றுநோய்க்கு ஆளாக்கப்பட்டவர் அறிஞர் அண்ணா அவர்கள். அந்த நேரத்திலும், தமிழ்நாட்டு மக்களுக்கு மகத்தான திட்டங்களை தீட்டி கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

முதுமையின் காரணமாக உடல்நலம் தளர்ந்து இருந்தாலும் தமிழ்ச் சமுதாயத்துக்காக 95 வயது வரையில் செயல்பட்டவர் - பாடுபட்டவர் - பணியாற்றியவர் - உழைத்தவர் நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.

தங்களுக்காக இல்லாமல் - இந்த தமிழ்ச் சமுதாயத்துக்காகவே உழைத்த அந்த இருபெரும் தலைவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கத்துக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல, ஒரு கொள்கைக் கோட்டை!

இங்கே நீங்கள் கட்சிக்காரர்களாக அல்ல, கொள்கைக்கு சொந்தக்காரர்களாக நீங்கள் செயல்பட வேண்டும்.

திராவிடம் என்ற சொல்லுக்குள் நமது கொள்கைகள் அடங்கி இருக்கிறது.

திராவிடம் என்பது சமூகநீதி!

திராவிடம் என்பது சமதர்மம்!

திராவிடம் என்பது மனிதநேயம்!

திராவிடம் என்பது மொழிப்பற்று!

திராவிடம் என்பது இன உரிமை!

திராவிடம் என்பது மாநில சுயாட்சி!

திராவிடம் என்பது கூட்டாட்சித் தத்துவம்!

ஒட்டுமொத்தமாகச் சொல்வதாக இருந்தால், திராவிடம் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்று சொல்லும் கருத்தியல்!

அத்தகைய திராவிட மாடல் ஆட்சிதான் இப்போது தமிழ்நாட்டில் நடந்துகொண்டு இருக்கிறது.

இங்கு சொன்னார்களே, நேரமில்லா காரணத்தால், தலைப்புச் செய்திகளாக சில செய்திகளை சில சாதனைகளை இங்கு வந்து இணைந்தவர்களும், இங்கு இருக்கும் நம்முடைய மாவட்ட நிர்வாகிகளும், முன்னோடிகளும் சொன்னார்கள்.

இந்த ஆட்சி ஓராண்டு காலத்தில் நாம் செய்த சாதனைகள் - பெரிய பட்டியலே இருக்கிறது. இதுவரை எந்த ஆட்சியும் செய்யாத சாதனைகள்!

(திராவிட மாடல் ஆட்சியில் செய்த சாதனைகளை நீண்ட பட்டியலிட்டுச் சொன்னார்)

ஒரே நேரத்தில் கல்வியிலும், நல்வாழ்விலும், தொழில்துறை யிலும், சமூகநலத் துறையிலும் செய்து வரும் சாதனைகளைப் பார்த்து பலருக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

நெருங்கிய சிலர் என்னிடமே சொல்கிறார்கள் - “இந்தளவுக்கு ஆட்சி சிறப்பாக நடைபெறும் என்று நாங்கள் முதலில் எதிர்பார்க்கவில்லை அய்யா” என்று இப்போதும் சொல்கிறார்கள்.

நான் அவர்களுக்குச் சொல்வேன் - நான் சொல்லிச் செய்கிறவன் அல்ல, சொல்லாமல் செய்பவன்!

தலைவர் கலைஞரது முழக்கம் என்பது, 'சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்'!

எனது பாணி என்பது, 'சொல்லாதையும் செய்வோம் -சொல்லாமலும் செய்வோம்'!

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலம் முழுமைக்குமான பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். மாவட்டங்களுக்கு எனத் தனியாக ஒரு அறிக்கையை வெளியிட்டோம். அதில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குறுதிகளை நாம் நிறை வேற்றி இருக்கிறோம். மற்றவை என்ன? என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். உறுதியோடு சொல்கிறேன். மற்றவையும் படிப்படியாக அண்ணாமீது  ஆணையாக  சொல்கிறேன் அது  நிறைவேற்றப் படும்.

செய்து தரப்பட்டுள்ள திட்டங்களைப் பார்த்தீர்கள் என்றால் - நமது தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத பல திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோமா? இல்லையா?

இதுதான் சொல்லாமல் செய்யும் பாணி!

எனவேதான் எதிர்க்கட்சிகளின் அவதூறுகள், பழிச்சொற் களுக்கு பதில் சொல்வதற்கு எனக்கு நேரமில்லை.

அவர்களைப்பற்றி விமர்சித்து உங்களிடம் கைத்தட்டல் பெற நான் விரும்பவில்லை.

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதன் மூலமாகப் பாராட்டுகளைப் பெறவே நான் விரும்புகிறேன்.

ஏனென்றால் இதுதான் மக்களுக்கான இயக்கம்.

தமிழ்நாட்டு மக்களின் மேன்மைக்கான இயக்கம்.

அத்தகைய இயக்கத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள்.

உங்களை கருப்பு - சிவப்பு மனிதராக நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற நீங்கள் ஒப்படைத்துக் கொள்ளுங்கள்.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழர் கலைஞர் - திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தின் பெயர் - கருப்பு சிவப்பு கொடி - உதயசூரியன் சின்னம் ஆகிய ஆறும்தான் உங்கள் இதயத்தில் - சிந்தனையில் - செயலில் ஆறாக ஓட வேண்டும்.

இயக்கத்தில் வந்து சேர்ந்திருக்கும் அத்தனை பேரையும் வருக வருக வருக என மனதார வரவேற்று விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!

இவ்வாறு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

No comments:

Post a Comment