ஒரே நாடு ஒரே மொழி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 14, 2022

ஒரே நாடு ஒரே மொழி?

தந்தை பெரியார் 

மத்திய சட்டசபையில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும் போது மவுலானா ஆசாத் இந்துஸ்தானியில் சொன்னதாகவும், அவர் சொன்னது இன்னது என்று தெரியாமல் தென்னாட்டுப் பொறுக்கு மணிகள் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்து விட்டுப் பின் ஒவ்வொருவராக எழுந்து, இந்துஸ்தானியில் சொன்னது புரியவில்லை என்றும், இந்துஸ்தானி தெரிந்தவர்களுக் குக் கூட மவுலானாவின் (பண்டித) இந்துஸ்தானி புரியவில்லை என்று கூறியதாகவும், இதைக் கேட்டுச் சாந்த மூர்த்தியின் பிரதிநிதி என்று மதிக்கப்படும் முதல் மந்திரி தோழர் நேரு அவர்கள், இனி மேல் நான் பேசுவதெல்லாம் இந்துஸ்தானியில் தான் பேசப் போகிறேன்; இருப்பதற்குப் பிடித்தமாயிருந்தால் வாயை மூடிக்கொண்டு கப், சிப் என்று பேசாமலிருங்கள்; இல்லாவிட்டால் வெளியே போய்விடுங்கள் என்று மிகவும் சாந்தமான முறையில் சொன்னதாகவும், நேரு அவர்கள் இவ்வாறு சொல்வது பிரச்சினையைத் தீர்த்து விடுவதாகுமா? என்று தோழர் பட்டாபி அவர்கள் எடுத்துக்காட்டியதாகவும் ஒரு செய் தியும், இந்துஸ்தானியில் ஒருவர் கேள்வி கேட்க அதற்குத் தோழர் ஜான்மத்தாய் அவர்கள் மலையாளத்தில் பதில் சொன்னதாகவும், அதை வரவேற்றுப் பலரும் சிரித்தார்கள் என மற்றொரு செய்தியும், சமீபத்தில் வெளிவந்ததைத் தோழர்கள் பார்த்திருக்கலாம்.

இந்திய யூனியனின் பாராளுமன்றம் என்று சொல்லப் படும் மத்திய சட்டசபை இப்போதைய நிலையில் திராவிடர்களுக்குக் கொஞ்சமும் பயன்படமாட்டாது என்றும், திராவிடர்களை அவமதிப்பதற்கும், சிறுமைப் படுத்தவதற்கும், அடக்குவதற்கும், ஒடுக்குவதற்குமே அந்த சபை கருவியாக இருக்க முடியுமென்றும், நாம் நெடு நாளாய்க் கூறி வந்ததையே இந்தச் சம்பவம் வற்புறுத்துகின்றதென்றாலும், நமது கருத்தை முன்பு ஏற்றுக் கொள்ளாதவர்களும் கூட நேரிடையாக இந்த உணர்ச்சியை - ஆணவத்திற்கு அடங்கி அடிமை களாக இருக்க வேண்டிய பரிதாப நிலையை - உணர்ந்து அனுபவிப்பதற்கும் இந்தச் சந்தர்ப்பம் பயன்பட்டிருக்கிறது என்பதை எண்ணி வரவேற்கிறோம். முதன் மந்திரி நேரு அவர்கள் நான் இனிமேல் பேசுவ தெல்லாம் இந்துஸ்தானியில்தான் பேசப்போகிறேன் என்று முரட்டுத்தனமாகப் பதில் கூறிய பிறகு, தோழர் ஜான்மத்தாய் மலையாளத்தில் பதில் கூறினாரென்றால், அந்தச் சம்பவம் நமது தேசியத் தாள்கள் சொல்வது போல தமாஷுக்கு உரிய சம்பவமாகத்தான் இருக்க முடியுமா? என்றும், உன்னுடைய உரிமைக்கு என் னுடைய உரிமை குறைந்ததில்லை என்கிற உரிமை உணர்ச்சியைப் பிரதிபலிக்கவில்லையா? என்றும் கேட்கின்றோம். மேலும், தோழர் ஜவஹர் அவர்களுக்கு இந்துஸ்தானியில் பேசுவதற்கு எவ்வளவு உரிமையும், நியாயமும், இருக்கிறதோ அந்த உரிமையும், நியாயமும், ஏன் மற்றவர்களுக்கு இல்லாமல் போகுமென்றும், அதை எப்படி தோழர் ஜவஹர் அவர்கள் மறுக்க முடியும்? எனவும் எண்ணிய அடிப்படையின் மீதுதான், முதலாளிகளின் பாதுகாவலரான தோழர் ஜான்மத்தாய் மலையாளத்தில் பதில் சொல்லியிருக்க வேண்டுமென்று எவருமே எண்ண வேண்டும். இந்த உரிமை உணர்ச்சியை எவரும் குறை சொல்ல முடியாது.

ஆனால், நாட்டின் பல சிக்கல்களை அறுத்து, முடிவு கட்டுவதற்காகக் கூடியிருக்கும் இவ்வளவு பெரிய அறி வாளிகள், ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்கிற நியாயத்தைப் பின்பற்றாமல், தான் தோன்றித்தனமாய் ஒவ்வொருவரும் அவரவர்கள் மொழிகளில் பேசினார்கள் என்றால், இது எந்த நியாயத்திற்கு ஒத்ததாக இருக்க முடியும் எனவும், வாத்தியாராய் இருக்கும் தோழர் ஜவஹர் அவர்களே இப்படி வழி காட்டுவார்களேயானால், மாணவர்கள் ஸ்தானங்களிலே இருக்கும் மற்ற மெம்பர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் எனவும், அங்கேயே ஒருவர் சொல்லியது போல இது ஏகாதிபத்திய மனப்பான்மையைக் காட்டவில்லையா? எனவும், இந்தப் போக்குத்தானே நாட்டின் எல்லாப் பிரச்சினைகளிலும் கையாளப் படும் எனவும், நம் திராவிடத் தேசியத் தோழர் களைக் கேட்க ஆசைப்படுகின்றோம்.

பலமொழி பேசப்படும் ஒரு துணைக் கண்டத்திலுள்ள சட்டசபையில், இதுபோல மொழித்தகராறு வருவது ஆச்சரியப்படத்தக்கதல்ல என்றாலும், இந்த நிலைமையை வளர விடாமல் இருப்பதற்கு என்ன வழி? என்றால், சபைத்தலைவர் தோழர் மாவ்லங்கர் சொன்னது போல் எல்லோரும் இந்துஸ்தானியைக் கற்றுக் கொண்டுவிடுவதுதான் தகராறு தீரும்வழி என்று தேசியத் தலைவர்களால், தொண்டர்களால் கூறப்பட்டு வருகின்றது.

இந்தி அல்லது இந்துஸ்தானி அல்லது பல மொழிகளையும் கலந்து பேசப்படும் புதுக்கலவை மொழி என்கிற முறையில் ஏதேனும் ஒரு மொழி இந்தியா என்கிற துணைக் கண்டத்திற்குப் பொது மொழியாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும், பலவேறு மொழிகளும், நாகரிகப் பழக்க வழக்க மாறுபாடுகளும் நிறைந்து, குணச் செயல்களாலும் வேறுபட்டு விளங்கும் இந்தியாவை, ஒரே கலாச்சாரம் நிரம்பிய ஒரு நாடு என்று கொள்வது எல்லாப் பிரச்சினைகளையும் சிக்கலாக்கக் கூடிய ஒரு பெரிய தவறு என்பதையும், பல முறை விளக்கி வந்திருக்கிறோம். கனம் ஆச்சாரியாரவர்கள் இந்தியைக் கட்டாயமாக இத்திராவிடர் நாட்டில் புகுத்திய நேரத்தில் அதை எதிர்த்து நமது திராவிடத் தந்தை பெரியாரவர்களும், ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் சிறை புகுந்து, இருவரை உயிர்ப்பலி கொடுத்து, உலகத்திலேயே இம்மாதிரியான ஒரு போராட்டம் நடந்ததில்லை என்று பேசும்படியாகச் செய்து, அதை வெறுத்து ஒழித்திருப்பது உலகமே மறந்துவிட முடியாத சம்பவமாகும்.

திராவிடர்கள் இந்தி, இந்துஸ்தானி வேண்டாமென்று எதிர்ப்பதற்கு காரணம் என்ன? இந்துஸ்தானியை வைத்தே இவ்விந்தியத் துணைக் கண்டத்தை ஆள வேண்டுமென்று நினைப்பவர்கள் இதனை எண்ணிப் பார்க்க வேண்டும்.

திராவிட நாட்டில் கட்டாய இந்தி பரவக் கூடாது என்று கிளர்ச்சி செய்து வெற்றி பெற்றவர்கள், பகுத்தறிவுவாதிகள். இந்தி என்ற மொழியின் மீது ஏன் அவர்களுக்கு வெறுப்பு? மனதிலுள்ளதை வெளிப்படுத்தும் கருவிதான் எந்த மொழியுமே தவிர, எந்த ஒரு மொழிக்கும் தனிப்பட்ட தெய்வீக சக்தியோ, வேறு மகாத்தியமோ இருக்கிறது என்பதை நம்பாதவர்கள் - ஒப்புக் கொள்ளாதவர்கள் - பகுத்தறிவுவாதிகள். அப்படியிருக்க, அவர்கள் ஏன் கட்டாய இந்தியை எதிர்த்தார்கள்?

இதனை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒவ்வொரு நேரத்திலும், எண்ணுவதற்கே மறுத்துவரும் தேசியத் திராவிடர்கள் தயவு செய்து இப்போதாவது நினைத்துப் பார்க்க வேண்டுகிறோம்.

இந்தியத் துணைக் கண்டத்தை ஒரு நாடு என்றும், ஒரே கலாச்சாரம் நிரம்பியதென்றும், வடநாட்டுத் தேசியத் தலைவர்கள் எல்லாம் சொல்லி வருவதையே, இந்த நாட்டுத் தேசிய வீரர்கள் என்று பட்டங்கட்டிக் கொண்டிருக்கும் மற்றவர்களும் சொல்லி வருகிறார்கள். ஒரே கலாச்சாரம் என்பதன் உண்மையான யோக்கியதை என்ன?

எத்தனையோ நாடுகளின் கலாச்சாரங்கள் இந்த நாட்டில் வந்து கலந்தன. அவைகளையெல்லாம் தன்னுள் அடக்கித் தனது தனித்த உயர்வான கலாச்சாரம் விளங்க நிற்கிறது இந்தியா. இதைக் கண்டு நான் பெருமையடைகிறேன் என்கிறார் தோழர் ஜவஹர்லால். அவர் எந்தக் கலாச்சாரத்தை உயர்வானது என்று பாராட்டுகிறாரோ அந்தக் கலாச்சாரம் தான் திராவிடர்களைச் சூத்திரர்களாக்கி, தேவடியாள் பிள்ளைகளாகச் செய்து, சமுதாயத்தில் தாழ்வுறச் செய்து, ஒட்ட முடியாத பல ஜாதிகளாக்கி, கல்லையும் மண்ணையும் கடவுள்களாகக் கும்பிடச் செய்து, பார்ப்பனியம் மட்டும் உறிஞ்சிப் பிழைப்பதற்கும், மற்ற மக்கள் வாழ்வு எல்லாம் உறிஞ்சப்பட்டு வருவதற்குமாக ஆகிவிட்டது என்பதையும், அந்த ஒரு கலாச்சாரத்திற்கு இந்த நாடு இடங்கொடுத்ததால்தான் நெஞ்சு உறுதியும் நேர்மைத் திறமுமின்றி, வஞ்சகத்தை வீரம் என்றும், தந்திரத்தை அறிவுடைமை என்றும் கருதச் செய்து, காரண காரியத்தைக் கண்டறியும் சக்தியை, இழக்க செய்துவிட்டது என்பதையும்; அந்த ஒரு கலாச்சாரம் இன்னும் புனிதமானது என்று மதிக்கப்படுகிற நிலைமையினால் தான். இந்த நாடு முற்போக்குத் தன்மையை இழந்திருக்கின்றது என்பதையும், அந்த ஒரு கலாச்சாரம் தான் பார்ப்பனிய இந்துமதக் கலாச்சாரம் என்பதாகும் என்பதையும் நாம் பலமுறை எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம்.

இந்தியா ஒரு நாடு என்பதையும்,  அதற்கு ஒரு பொது மொழி தேவை என்பதையும் திராவிடர்கள் - பகுத்தறிவுவாதிகள் - ஒப்புக் கொள்ளாததை, எந்த அறிவுடையவனும் மறுக்க முடியாத விதத்தில் திராவிடர் கழகம் விளக்கி வந்திருக்கின்றது. விளங்கிக் கொள்ள மறுப்பவர்களுக்கு விளங்காமலிருக்க முடியுமே தவிர, மற்றபடி அவ்விளக்கங்கள் எந்த மனிதனுக்கும் விளங்காமலிருக்க முடியாது.

ஒட்டி வாழ முடியாத - வாழுவதற்கான இயல்பில்லாத - ஒன்றையொன்று வஞ்சித்தே வாழும்படியான இயல்பினையூட்டி வருகிற வருணாசிரம இந்து மதக் கலாச்சாரம், என்றைக்கு இந்த நாட்டை விட்டு ஒழிகிறதோ, ஒழிப்பதற்கு எப்பொழுது துணிவு பிறக்கிறதோ, அப்பொழுது தான் இந்தியாவை ஒரு நாடு என்று சொல்ல முடியும் என்பதையும், அதற்கு உபாயமாக எமது பெரியாரவர்கள் கூறியிருக்கும், காந்தி நாடு, காந்தி மதம் என்பதைக் கைக்கொண்டு அரசாங்கத்தின் மூலமாகப் பரப்பினால்தான், ஒரு நாடு என்கிற சித்தாந்தம் நிலைக்க முடியும்; பிரயோஜனத்தையும் கொடுக்குமென்பதையும், அந்த நிலையில் இந்த நாட்டிற்கு எந்த ஒரு மொழியையும், பொது மொழியாக்குவது தான் எளிது என்பதையும், உண்மையிலேயே நாட்டு முன்னேற்றத்தில் அக்கறையுடைய தேசியவாதிகள் என்பார்கள், விரைந்து தெளிவடைய வேண்டியனவாகும்.

ஜாதி பேதமற்ற - மத உணர்ச்சிக்கும் இடமில்லாத - சமதர்மக் குடியரசைக் காண்பதற்கான முயற்சி சிறிதும் இல்லை என்பதையும், மேலும் மேலும் இந்து மத சாம்ராஜ்ய ஆட்சியை நிலை நாட்டுவதற்குதான், சமதர்ம வீரர் ஜவஹர், ஜெயப்பிரகாசத்திலிருந்து சனாதனச் சாக்கடைச் சங்கராச்சாரி வரை முயற்சிக்கப்பட்டு வருகிறது என்பதையும், காந்தியவர் படுகொலை கூட இந்துமத பெருமையோடு அய்க்கியப்பட்டு விட்டதென்பதையும் பார்க்கும்போது, இந்தியாவை ஒரு நாடு என்பதும், இதற்கு இந்துஸ்தானியோ, இன்னொரு மொழியோ பொது மொழியாக இருக்க வேண்டும் என்பதும் வடிகட்டின வடநாட்டு ஏகாதிபத்தியத்தையும், வருணாசிரம ஆட்சியையும் புகுத்துகிற முயற்சியேயாகும். இம்முயற்சி, திராவிட உணர்ச்சியுடைய ஒருவன் உயிரோடு இருக்கும் வரையிலும் வெற்றிதராது என்பதை, இப்பொழுதும் வற்புறுத்திக் கூறுகிறோம்.

குடிஅரசு - தலையங்கம் - 28.02.1948


No comments:

Post a Comment