88 ஆண்டு விடுதலை ஏட்டின் 60 ஆண்டு கால ஆசிரியர் பணி தமிழர் தலைவர் ஆசிரியரை பாராட்டி பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் ஆய்வரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 26, 2022

88 ஆண்டு விடுதலை ஏட்டின் 60 ஆண்டு கால ஆசிரியர் பணி தமிழர் தலைவர் ஆசிரியரை பாராட்டி பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் ஆய்வரங்கம்

சென்னை,ஆக.26- தந்தைபெரியார் கொள்கை வழியில் தடம் மாறாமல் 88 ஆண்டுகளாக வீறு நடைபோட்டுவருகின்ற விடுதலை நாளேட்டில்  60 ஆண்டு  காலம் தொடர்ந்து ஆசிரியராக பணியாற்றிவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பாராட்டி பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் ஆய்வரங்கம் 27.8.2022 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெறுகிறது.

பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்து, ஜாதி அடுக்குகளைக் கொண்ட சமுதாயமாக்கி, காலம் காலமாக உழைக்கும் மக்களை சூத்திரர்களாக, பஞ்சமர்களாக இழிவுபடுத்தும் ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை தகர்த்திட பகுத்தறிவு பகலவன் தந்தைபெரியார் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றினார். 

அப்பாவி மக்கள் பக்தி, மதம், பழக்க, வழக்கத்தின்பெயரால் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தால் வாழ்வுரிமை இழந்தனர். கல்வி மறுக்கப்பட்ட சமுதாயமாக இருந்தது. அத்துணையையும் மாற்றும் புரட்சி வித்துக்களாக அவர்தம் கருத்துகள், கொள்கைகள் மக்களிடையே பரவவேண்டும் என்று இரவு பகல் பாராமல் கிராமந்தோறும் சுற்றி சுற்றி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர்தம் பேச்சுகள், எழுத்துகள் வரலாறு படைத்திடும் வகையில் ஏடுகளை உருவாக்கி மக்களுக்கான அறிவுப் புரட்சியைத் தொடர்ந்தார். குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, விடுதலை, உண்மை, ரிவோல்ட் (ஆங்கில ஏடு) என்று பல்வேறு இதழ்கள்மூலம் மக்களிடம் கருத்துகள் மக்களி டையே கொண்டு செல்லப்பட்டன. ஜாதியற்ற சமுதாயமாக தன்மானத்துடன், சமத்துவத்துடன் வாழ்ந்திட வேண்டும் என்று அயராது தொண்டாற்றினார். தந்தைபெரியார் நடத்திய ஏடுகள் அத்துணையும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தே வெளிவந்தன.

உலகத் தலைவர் தந்தைபெரியார் கொள்கைகளை உலக மயமாக்கிட பன்னாட்டளவில் மாநாடுகள், கருத்தரங்குகள் பெரியார் பன்னாட்டு அமைப்புமூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தந்தைபெரியார் கொள்கைகளை பரப்புவதில் அத்துணை செயல்பாடுகளுக்கும் உந்து சக்தியாக, வினை யூக்கியாக விடுதலை நாளிதழ் திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் தந்தைபெரியார் கொள்கை தாங்கி, பகுத்தறிவு நாளிதழாக ‘விடுதலை’ நாளிதழ் தொடர்ந்து 88ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது. விடுதலை நாளிதழின் ஆசிரியர் பொறுப்பை தந்தைபெரியார்  அவர்கள் விடுதலையை ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ஏகபோகத் துக்கு அளித்தார் என்றால், அவர் நம்பிக்கை வீண் போக வில்லை. உலகிலேயே ஒரு நாளிதழுக்கு ஆசிரியராக 60 ஆண்டு காலம் தொண்டாற்றி வருகிறார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். விடுதலையில் வெளியாகின்ற ஆசிரியர் அவர்களின் அறிக்கை சமூகநீதிக்களத்தில் நாட்டுக்கே வழிகாட்டுகிறது. தமிழ்நாட்டில் சமுதாய அரசியல் பணியாற் றும் எவரும் தம் வழிகாட்டியாக ஆசிரியரைக் கொண்டு செயல்படுகிறார்கள் என்றால் மிகையாகாது. உலகமே வியக்கும் ஆசிரியர் அவர்களின் பணியைப் பாராட்டி பத்திரி கையாளர்கள், எழுத்தாளர்கள் பலரும் உரையாற்றுகிறார்கள். 60 ஆண்டு கால ஆசிரியர் பணியைப் பாராட்டி 27.8.2022 அன்று மாலை ஆய்வரங்கம் நடைபெறுகிறது.

விழாவில் அனைவரையும்  ‘தி மாடர்ன் ரேசன லிஸ்ட்’ பொறுப்பாசிரியர் வீ.குமரேசன் வரவேற்கிறார்.

விடுதலை நாளிதழ் நிருவாக ஆசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெறும் விழாவில், ‘ஜனசக்தி' ஆசிரியர் தோழர் கே.சுப்பராயன், மூத்த ‘விடுதலை' வாசகர், திமுக மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், ‘ஃபரண்ட் லைன்' மேனாள் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜய்சங்கர், ‘நக்கீரன்' ஆசிரியர் ‘நக்கீரன்' கோபால், ‘கலைஞர் தொலைக்காட்சி' தலைமை செய்தி ஆசிரியர் எழுத்தாளர் ப.திருமாவேலன், ‘தீக்கதிர்' ஆசிரியர் தோழர் மதுக்கூர் இராமலிங்கம், ‘புதிய குரல்' எழுத்தாளர் ஓவியா ஆகியோர் ‘பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பார்வையில் 60 ஆண்டு கால ஆசிரியர் மானமிகு கி.வீரமணி’ என்ற பொதுத் தலைப்பில் உரையாற்றுகின்றனர்.

விழா நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை ஆற்றுகிறார்.

விடுதலை மூத்த செய்தியாளர் வே.சிறீதர் நன்றி கூறுகிறார். ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப் புரை வழங்குகிறார்.

88 ஆண்டு ‘விடுதலை’யின் 60 ஆண்டு ஆசிரிய ருக்குப் பாராட்டு விழா- ஆசிரியர் அவர்களுக்கு நன்றிப் பெரு விழாவாக இது நடைபெறுகிறது. 

விழாவில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், திராவிடர் கழக,  மகளிரணி, மகளிர் பாசறை, கலை இலக்கிய அணி பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம், இளைஞரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள்  பங்கேற்கின்றனர்.


No comments:

Post a Comment