3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 18, 2022

3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்

சென்னை, ஆக.18 காரைக்குடி அழகப்பா, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், வேலூர் திருவள்ளுவர் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த ராஜேந்திரனின் பதவிக் காலம் 2021-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி நிறைவடைந்தது. இதனால், துணைவேந்தரின் பணிகளை மேற்கொள்ள உயர்கல்வித் துறை செயலாளரான தலைமையில் பொறுப்புக்குழு அமைக்கப்பட்டது. புதிய துணைவேந் தரை தேர்வுசெய்ய விசாகப்பட்டினம் சட்டப் பல்கலை. மேனாள் துணைவேந்தர் சத்யநாராயணா தலைமையில் தேடுதல் குழுவும் அமைக்கப்பட்டது. இந்தக் குழு தகுதியான 3 பேரை தேர்வு செய்து அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரை செய்தது. அந்த 3 நபர்களையும் நிராகரித்த ஆளுநர், தேடுதல் குழுவை கலைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி, காரைக்குடி அழகப்பா பல்கலை.க்கு புதிய துணைவேந்தரை நியமிக்க யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தலைமையில் புதிய தேடுதல் குழுவை அமைத்தார். அந்தக் குழு பரிந்துரைத்த 3 பேரில் ஜி.ரவியை அழகப்பா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமனம் செய்து ஆளுநர் உத்தர விட்டுள்ளார். ஆசிரியர் பணியில் 27 ஆண்டுகளுக்கும் மேலான கற்பித்தல் அனுபவம் கொண்ட ஜி.ரவி, நிர்வாகப் பணியிலும் 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அழகப்பா பல்கலை.யில் தொழில்துறை முதல்வர், இயற்பியல் துறைத் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பிச்சுமணியின் பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது. புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படும் வரை பணியில் தொடர அவருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது தேடுதல் குழுவின் பரிந்துரையின்படி புதிய துணைவேந்தராக பேராசிரியர் என்.சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் பணியில் 35 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்ட என்.சந்திரசேகர், மனோன்மணியம் பல்கலை.யின் ஆராய்ச்சி துறைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிறுவன தோட்டக்கலைத் துறை தலைவராக உள்ள டி.ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கற்பித்தலில் 32 ஆண்டுகளும், நிர்வாகப் பணியில் 11 ஆண்டுகளும் அனுபவம் கொண்ட இவர், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். புதிய துணைவேந்தர்கள் பொறுப்பேற்றதில் இருந்து 3 ஆண்டுகாலம் பணியில் இருப்பார்கள். புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட 3 பேரும் ஆளுநர் ரவியை  சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


No comments:

Post a Comment