விடுதலை வேட்கை ஸ்காட்லாந்து பிரிட்டனிலிருந்து பிரிந்திட பொது வாக்கெடுப்பு கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

விடுதலை வேட்கை ஸ்காட்லாந்து பிரிட்டனிலிருந்து பிரிந்திட பொது வாக்கெடுப்பு கோரிக்கை

 லண்டன், ஜூலை 3- பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பாக ஸ்காட்லாந்து மக்களிடம் கருத்து கேட்கும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப் போவதாக அந்த நிர்வாகத்தின் முதன்மை அமைச்சரான நிகோலா ஸ்டர்ஜன் அறிவித்துள்ளார். பிரிட்டனின் ஒரு பகுதியாக இருந்து  வரும் ஸ்காட்லாந்து பிரிந்து தனிநாடாக மாற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அரசியல் கட்சிகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் சுதந்திர நாடாக மாறுவதற்கான பிரச்சாரத்தைத் தொடர்ந்து  நடத்தி வருகிறார்கள். மக்கள் மத்தியிலும் கணிசமான பகுதியினர் ஆதரவு  தெரிவிப்பதால் பிரிவதற்கான வாய்ப்பு எப்போதுமே இருந்து வருகிறது. இந்நிலையில்தான் முதன்மை அமைச்சரான நிகோலா ஸ்டர்ஜன் 2023  ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியன்று பொது வாக்கெடுப்பு நடக்கும்  என்று அறிவித்துள்ளார். அவர் பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து தனிநாடாக மாறுவதை ஆதரிக்கும் ஸ்காட்டிஸ் தேசியக்கட்சியைச் சேர்ந்தவராவார். இதற்கான மசோதாவை விரைவில் முன்வைக்கப் போவதாக அறிவித்துள்ள அவர், இதைத் தடுப்பதற்கு பிரிட்டன் அரசு ஏதாவது தடைகளை ஏற்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு செல்லப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “நான் ஒரு விடயத்தைச் செய்ய விரும்பவில்லை. அதை ஒரு போதும் செய்ய மாட்டேன். ஸ்காட்லாந்தின் ஜனநாயகத்தை போரிஸ் ஜான்சனிடமோ அல்லது வேறு எந்தப் பிரதமரிடமோ சிறைக்கைதியாக இருக்க அனுமதிக்கமாட்டேன். பொது வாக்கெடுப்புக்கான அனுமதி கோரி போரிஸ் ஜான்சனுக்கு எழுதியுள்ளேன். ஆனால் வாக்கெடுப்புக்கான வேலைகளைத் தொடங்கி விட்டோம்” என்று  கூறியுள்ளார். 

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான அடுத்த தேர்தலில் ஸ்காட்லாந்துக்கு விடுதலை என்ற கோரிக்கையை முன்வைத்துப் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். 55 லட்சம் எண்ணிக்கையில் மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஸ்காட்லாந்தில் பிரிட்டனில் இருந்து பிரிந்துபோவது தொடர்பாக 2014ஆம் ஆண்டில் ஒரு பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் பிரிந்து செல்வதற்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இதனால் இந்தக் கோரிக்கை  கிடப்பில் இருந்தது. அய்ரோப்பிய மண்டலத்தில் இருந்து வெளியேறுவது பற்றிய வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் வெளியேறலாம் என்று வாக்களித்ததால் தற்போது அதில் பிரிட்டன் இல்லை. ஆனால் இந்த வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து மக்களில் பெரும்பாலானவர்கள் வெளியேறக்கூடாது என்று வாக்களித்தால், மீண்டும் தனி நாடு என்ற  கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். இதனால் பிரிட்டனுக்கு நெருக்கடி முற்றிக்கொண்டிருக்கிறது.


No comments:

Post a Comment