வடக்குப்பட்டு கிராமத்தில் அகழாய்வுப் பணி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

வடக்குப்பட்டு கிராமத்தில் அகழாய்வுப் பணி!

சென்னை, ஜூலை 8 காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றங்கரையோர பகுதியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் இறந்தவர்களை புதைக்க பயன்படுத்திய கல்திட்டைகள், மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து தொல்லியல் தடயங்கள் இருக்கும் இந்தப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ள தொல்லியல் துறை வடக்குப்பட்டு கிராமத்தில்அகழாய்வை தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், வாலாஜாபாத் வண்டலூர் சாலையில் உள்ள ஒரகடம் தொழிப்பேட்டையில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது வடக்குப்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் ஆதி தமிழர்களின் வாழ்விடத் தடயங்களான மணல் மேடு, கல் திட்டைகள் ஆகியவை காணப்படுகின்றன. இந்த மணல்மேடு பகுதியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.  

இந்நிலையில் தொல்லியல் துறை இந்தப் பகுதியில் ஆய்வைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து வாலாஜாபாத் வட்டார ஆய்வு மய்யத் தலைவர் அஜய்குமார் கூறும்போது, “இங்கு அகழாய்வு பணிகள் முடிந்தால் பாலாற்றங்கரை மக்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும். வட தமிழ்நாட்டில் சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு அகழாய்வு பணி நடைபெறுகிறது. இங்கு அந்த மக்கள் பயன்படுத்திய செங்கற்கள் மற்றும் சில பொருட்களும் ரோமானியர்கள் பயன்படுத்திய உலோகம் போன்ற ஒன்றும் கிடைத்துள்ளன. முழுமையான ஆய்வுக்கு பின்னர் இதுகுறித்து தெளி வான விளக்கங்கள் தெரியவரும்” என் றார். இதேபோல் தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு மய்யத்தின் அமைப்பாளர் வெற்றித்தமிழன் கூறும்போது, “செங்கல்பட்டு மாவட்டம் சாஸ்திரம்பாக்கம், வல்லம், தத்தலூர், புலிப்பாக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் பழவேரி, பினாயூர், கூடலூர், சிறுமயிலூர் உள்பட பாலாற்றை ஒட்டிய பல பகுதிகளில் பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் அதிக அளவில் உள்ளன. இந்தப் பகுதிகளில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் பாலாற்றங்கரை நாகரிகத்தின் உண்மைகள் வெளிவரும்” என்றார். இதுகுறித்து உதவி தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் கூறும்போது, “வரலாற்று தடயங்கள் உள்ள வடக்குப்பட்டு, சாஸ்திரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளோம். வடக்குப்பட்டு பகுதியில் 3 மாதங்கள் ஆய்வுகள் நடைபெறும். இதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

இந்த மணல் மேட்டில் சங்க காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள், கற்கருவிகள் உள்ளிட்டவை இருந்தன. இங்கு செல்லும் வழியில் பழைமை வாய்ந்த மணல் சிற்பம் ஒன்றும் இருந்தது. இந்த சிற்பம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள சிலைகளை போல் இருந்தன. இந்தச் சிலை பல்லவர் கால 7 அல்லது 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் தெரிகிறது. இதேபோல் வயல் வெளியில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு லட்சுமி சிலையும் இருந்தது. இது 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளதாக வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 2,500 ஆண்டு களுக்கு முந்தைய கல்திட்டைகளும் இங்கு காணப்பட்டதால், தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.


No comments:

Post a Comment